தோழர் தியாகு எழுதுகிறார் 216 : கலைமகள் எனும் தொன்மம்
(தோழர் தியாகு எழுதுகிறார் 215 : காலுடுவெல் கலைவண்ணம்-தொடர்ச்சி)
தோழர் தியாகு எழுதுகிறார்
கலைமகள் எனும் தொன்மம்
இனிய அன்பர்களே!
தமிழ்த் தேசிய விடுதலை இயக்கத்தின் கொள்கை அறிக்கையில் தமிழ்த் தேசியத்துக்கும் சமூக நீதிக்குமான இடையுறவை விளக்கப்படுத்தப் பாவலர் பாரதிதாசனிடமிருந்து நான் எடுத்துக்காட்டிய கவிதை வரிகள் –
“சாதி ஒழித்தல் ஒன்று – நல்ல
தமிழ் வளர்த்தல் மற்றொன்று
பாதியை நாடு மறந்தால் – மற்றப்
பாதி துலங்குவதில்லை.”
பாரதிதாசனின் இந்த வரிகள் “பாரதி உள்ளம்” என்ற கவிதையில் இடம் பெற்றிருப்பது குறிப்பிடத்தக்க செய்தி.
இந்த வரிகளின் அடிப்படையில் பாரதியைச் சாதி ஒழிப்புக் கொள்கை கொண்டவர் என்று நான் கருதியதுண்டு. ஆனால் சாதிமறுப்பும் சாதிஒழிப்பும் ஒன்றல்ல என்ற புரிதல் ஏற்பட்ட பின் பாரதியைப் பற்றிய மதிப்பில் ஒரு மாற்றுக் குறைந்துதான் போயிற்று. பாரதியை அவரது பார்ப்பனப் பிறப்பின் அடிப்படையில் தூற்றுவதை நான் ஏற்பதில்லை. ஆனால் புறஞ்சார்ந்த ஆய்வு நோக்கில் பாரதியிடம் குறைகாண்பதில் எவ்விதப் பிழையும் இல்லை. இந்தியத் தேசியத்தின் இந்துத்துவ உள்ளடக்கம் பாரதியிடமும் தாக்கம் செலுத்திற்று என்பதில் ஐயமில்லை.
உணர்வுகளை வெளிப்படுத்த பாரதி துணைக்கழைத்த தொன்மங்களில் இந்துத் தெய்வங்களே ஆட்சி செலுத்தின. உருசியப் புரட்சியை மாகாளியின் கடைக்கண் பார்வையாகக் காட்டிய பாரதி பாரதத் தாயை தேவியாகவே வழிபட்டார்.
“கல்வி சிறந்த தமிழ்நாடு” என்று பெருமிதம் கொண்ட பாரதி… கல்வியைக் கலைமகள் அல்லது சரசுவதியாகவே உருவகித்தார். சரசுவதியை அவர் கல்விக் கடவுளாகக் கண்டதிலும் காட்டியதிலும் வியப்பில்லை. அதுதான் தொன்றுதொட்டு வரும் மரபு. ஆனால் அந்தத் தொன்மத்தை முன்னிறுத்தி பாரதி வெளிப்படுத்திய கல்விச் சிந்தனைகள் செறிவானவை, குமுக அறம் (சமூக நீதி) என்பதன் பாற்பட்டவை.
அனைவர்க்கும் கல்வி என்பதுதான் பாரதியின் கொள்கை. இதற்கு மாறானது வருண தருமம், மனு நீதி. பாரதி எந்தப் பக்கம்?
“வஞ்ச மற்ற தொழில் புரிந்துண்டு
வாழும் மாந்தர் குல தெய்வ மாவாள்,
வெஞ்சமர்க்குயிராகிய கொலலர்,
வித்தையோர்ந்திடு சிற்பியர், தச்சர்
மிஞ்ச நற்பொருள் வாணிகஞ்செய்வோர்
வீரமன்னர் வேதியர் யாரும்
தஞ்சமென்று வணங்கிடுந் தெய்வம்
தரணி மீதறிவாகிய தெய்வம்.”
சரசுவதி – கலைமகள் – கல்வியின் தெய்வம். அவளே உழைக்கும் மக்களின் குலதெய்வம், அவர்கள் அனைவர்க்கும் கல்வி உரிமை உண்டு என்று பொருள். அனைவர்க்கும் கல்வி என்ற உரிமையை மறுக்கும் மனுதருமத்தை மறுத்துக் கொல்லர், தச்சர், வாணியர், சத்திரியர், வேதியர் என்று கீழிருந்து மேலாக இந்துச் சமூகத் தட்டுகளை வரிசையாகச் சொல்லி அனைவருக்குமான கல்வியை வலியுறுத்துகின்றார் முண்டாசுப் பாவலர். .
சரசுவதி துதி, கலைமகள் வழிபாடு என்றால் என்னவாம்?
“மந்திரத்தை முணுமுணுத்து ஏட்டை
வரிசையாக அடுக்கி அதன் மேல்
சந்தனத்தை மலரை இடுவோர்
சாத்திரம் இவள் பூசனையன்றாம்.”
வேறென்ன செய்வதாம்?
“வீடு தோறும் கலையின் விளக்கம்,
வீதிதோறும் இரண்டொரு பள்ளி,
நாடு முற்றிலும் உள்ளனவூர்கள்,
நகர்கெளுங்கும் பலபல பள்ளி,
தேடு கல்வியிலாத தொரூரைத்
தீயினுக் கிரையாக மடுத்தல்
கேடுதீர்க்கும் அமுதமென் அன்னை
கேண்மை கொள்ள வழியிவை கண்டீர்.”
கல்வியைக் “கேடில் விழுச்செல்வம்” என்றார் திருவள்ளுவர்.
“கேடுதீர்க்கும் அமுதம்” என்கிறார் பாரதியார்.
திருக்குறளைப் படித்தாரோ இல்லையோ, தெரியாது, கல்வியைக் குறளின்
குரலாகவே போற்றுகின்றார். கல்விக்காகப் பணி செய்ய மறந்த அரசினரைச்
சாடுகின்றார்:
“ஓங்கு கல்வி யுழைப்பை மறந்தீர்!
மான மற்று விலங்குக ளொப்ப
மண்ணில் வாழ்வதை வாழ்வென லாமோ?”
“விலங்கொடு மக்கள் அனையர் இலங்குநூல்
கற்றாரோடு ஏனை யவர்”
என்ற குறள்தான் நினைவுக்கு வரும். மானமிழந்து விலங்குகள் போல் வாழ்வதும் ஒரு வாழ்வாமோ? எப்படி ஆற்றித் தேற்றுகிறார் பாருங்கள்:
“போன தற்கு வருந்துதல் வேண்டா,
புன்மை தீர்ப்ப முயலுவம் வாரீர்!”
செய்ய வேண்டியது என்னவாம்?
“இன்ன றுங்கனிச் சோலைகள் செய்தல்
இனிய நீர்த்தண் சுனைகள் இயற்றல்
அன்ன சத்திரம் ஆயிரம் வைத்தல்
ஆலயம் பதி னாயிரம் நாட்டல்
பின்ன ருள்ள தருமங்கள் யாவும்
பெயர்வி ளங்கி யொளிர நிறுத்தல
அன்ன யாவினும் புண்ணியம் கோடி
ஆங்கோர் ஏழைக்கு எழுத்தறி வித்தல்.”
ஏழைக்கு எழுத்தறிவித்தல் என்றால் ஏழைத் தமிழ்நாட்டின் கல்வியுரிமை காத்தல் என்று பொருள் கொள்வோம்
.
(தொடரும்)
தோழர் தியாகு
தாழி மடல் 243
Leave a Reply