(தோழர் தியாகு எழுதுகிறார் 222 : காமராசர் பிறந்த நாள்-தொடர்ச்சி)

கல்வியுரிமை மாநாட்டுத் தீர்மானங்கள்

இனிய அன்பர்களே!

இளைஞர் அரண் கல்வியுரிமைப் பேரணி – மாநாடு, குடந்தை – 2023
2023 சூலை 16
மாநாட்டுத் தீர்மானங்கள் (வரைவு)


1) 2004 சூலை 16ஆம் நாள் குடந்தை நகரில் கிருட்டிணா பள்ளியில் பற்றிய கொடுந்தீயில் 94 குழந்தைகள் உயிரோடும் கல்விக் கனவுகளோடும் மாண்டு போன கொடுமைக்கு முழுமையாக நீதி வழங்க வேண்டும் என இம்மாநாடு தமிழக அரசைக் கேட்டுக் கொள்கிறது. ஒவ்வோராண்டும் சூலை 16ஆம் நாளைத் தமிழக அளவில் பள்ளிக் குழந்தைகள் பாதுகாப்பு நாளாகக் கடைப்பிடிக்கும் படித் தமிழக மக்களையும் தமிழக அரசையும் இம்மாநாடு வேண்டிக் கொள்கிறது.

2) இந்திய அரசின் புதிய தேசியக் கல்விக் கொள்கை – 2020 என்பது குடிமக்களின் கல்வியுரிமைக்குப் புறம்பானதாகவும், வணிக மயத்துக்கும் இந்து மயம் இந்திய நடுவணாதிக்க மயத்துக்கும் வழிவகுப்பதாகவும் இருப்பதால் அக்கொள்கையைத் தமிழக மக்கள் அடியோடு மறுதலிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. இந்த புதிய தேசியக் கல்விக் கொள்கைக்கு எதிர்ப்பு தெரிவித்து, தமிழ்நாட்டுக்குத் தனித்தன்மை வாய்ந்த கல்விக் கொள்கை வகுக்கும் தமிழக அரசின் முடிவை இம்மாநாடு வரவேற்கிறது.

3) அதே நேரத்தில் தமிழக அரசு அமைத்த குழு செயல்படாமல் முடங்கியிருப்பது குறித்தும், இதற்கிடையில் இந்திய அரசின் பிற்போக்கான கல்விக் கொள்கையின் சில கூறுகள் தமிழ்நாட்டில் மெல்ல மெல்ல செயலாக்கப்பட்டு வருவது குறித்தும் இம்மாநாடு கவலை தெரிவித்துக் கொள்கிறது. இந்திய அரசின் தேசியக் கல்விக் கொள்கையை அடியோடு மறுதலித்து அதனை எவ்வகையிலும் செயல்படுத்த மறுக்கும்படித் தமிழக அரசை இம்மாநாடு கேட்டுக் கொள்கிறது.

4) தமிழ்நாட்டுப் பலகலைக்கழகங்களின் தன்னாட்சியைக் கேள்விக்குள்ளாக்கும் வகையில் அனைத்துக் கலை அறிவியல் கல்லூரிகளுக்கும் பொதுப் பாடத்திட்டம் என்று தமிழ்நாடு உயர் கல்வி மன்றம் அறிவித்து இருப்பதைத் திரும்பப் பெறும்படி இந்த மாநாடு கேட்டுக் கொள்கிறது.

5) இந்திய அரசின் புதிய தேசியக் கல்விக் கொள்கையை எதிர்த்தும், தமிழ்நாட்டுக்குத் தனித்தன்மை வாய்ந்த கல்விக் கொள்கை வேண்டும் என்பதற்காகவும் மாணவர்கள், பேராசிரியர்கள், கல்வியாளர்கள், கல்விச் செயற்பாட்டளர்கள், மக்கள் கல்வி இயக்கங்கள் நடத்தி வரும் போராட்டங்களோடு இளைஞர் அரண் தோழமை கொள்கிறது. .

6) பொதுநுழைவு(நீட்), பொ.ப.நு.தே.(cuet), தே.த.தே.( NExT) முதலான அனைத்திந்திய அளவிலான பொது நுழைவுத் தேர்வுகளைக் கைவிடும் படி இந்திய அரசை இம்மாநாடு கேட்டுக் கொள்கிறது. தமிழகச் சட்டப் பேரவை இயற்றிய நீட் விலக்குச் சட்டத்துக்கு இந்திய அரசு உடனே ஒப்புதல் அளிக்குமாறு இம்மாநாடு வலியுறுத்துகிறது. இவ்வகையில் தமிழக மக்களைத் திரட்டி இந்திய அரசுக்கு அழுத்தம் கொடுக்க முன்வரும் படி தமிழக அரசையும் அரசியல் கட்சிகளையும் இம்மாநாடு கேட்டுக் கொள்கிறது.

7) தமிழ்நாட்டுக்குத் தனித்தன்மை வாய்ந்த கல்விக் கொள்கையை வகுக்கும் முயற்சியில் தன்னளிப்புடன் உழைத்து வரும் கல்வியாளர் பேராசிரியர் சவகர் நேசன் அவர்களின் சலியா முயற்சிகளை இம்மாநாடு பாராட்டுகிறது. கல்விக் கொள்கையின் பரிமாணங்கள் என்ற அவரது ஆய்வறிக்கையைத் தமிழ்ச்சமூகம் ஆழ்ந்த கருத்தில் கொள்ள வேண்டும் எனக் கருதி, அவர்தம் முயற்சிகளில் அறிவார்ந்தும் உணர்வார்ந்தும் துணைநிற்க இளைஞர் அரண் உறுதி கொள்கிறது.

8) மாணவர்கள் மீதான ஒடுக்கு முறைகளும், ஆசிரியர்கள் மீதான சுரண்டல்களும், அடக்குமுறைகளும், தனியார் கல்வி நிறுவனங்களின் விதிமீறல்களும், பகற் கொள்ளைகளும், கல்வி வளாகங்களில் சாதிய ஒடுக்கு முறைகளும் இன்றைய சூழலில் மேலோங்கி வருவதாக இம்மாநாடு அஞ்சுகிறது. இந்த நிலையைச் சரிசெய்யத் தமிழக மக்களும் தமிழக அரசும் உடனே உரியவாறு செயல்பட வேண்டுமென இம்மாநாடு கேட்டுக் கொள்கிறது,

9) தமிழகத்தின் கல்விச் சூழல் கெட்டுக் கிடப்பதில் தமிழக அரசின் ஆசிரியர் அமர்த்தக் கொள்கைக்கு ஒரு பங்கிருப்பதாக இம்மாநாடு நம்புகிறது. ஆசிரியர் பணியிடங்கள் நிரப்பபடாமை, ஊதிய ஏற்றத்தாழ்வு, ஒப்பந்த ஆசிரியர் முறை, கௌரவ விரிவுரையாளர்களை முறைப்படுத்தாமல் நிரந்தரமாகவே தற்காலிக ஆசிரியர்களாக வைத்துக் கொள்வது, ஆசிரியர்களின் பணிப் பாதுகாப்பின்மை, ஆசிரியர்களை அமர்த்துவதில் இலஞ்ச ஊழல் ஆகிய இவை அனைத்தும் கல்விச் சூழலைச் சீரழித்திருப்பதாக இம்மாநாடு நம்புகிறது. இந்நிலைமைகளை உடனே சீர் செய்யத்தவறினால் தமிழ் நாட்டில் கல்வி செத்துப்போகும் ஆபத்து இருப்பதாக இம்மாநாடு எச்சரிக்க விரும்புகிறது.

10) மாணவர்களை வதைத்து பெற்றோரைச் சுரண்டி அறமும் அறிவும் சார்ந்த கல்வியை நாசமாக்கும் தன்நிதிக் கல்லூரிகள் உள்ளிட்ட தனியார் கல்விக் கூடங்களை அரசுடைமையக்க வேண்டும்; இதற்கிடையில் அவற்றின் மீது அரசு தீவிரமான கட்டுப்பாடுகள் செலுத்த வேண்டும் என இம்மாநாடு கேட்டுக் கொள்கிறது.

11) தமிழ்நாட்டில் ஒரு மாற்றுக் கல்வி இயக்கமாக உருப்பெற்றுள்ள தாய்த்தமிழ் பள்ளிகளை அரசு-உதவி பெறும் பள்ளிகளாக மாற்றி அவற்றைப் பாதுகாத்து வளர்த்தெடுக்கும் படி இம்மாநாடு தமிழக அரசைக் கேட்டுக் கொள்கிறது.

(தொடரும்)
தோழர் தியாகு
தாழி மடல்
 252