(தோழர் தியாகு எழுதுகிறார் 31 தொடர்ச்சி)

கரி-எரி பரவல் தடை

உலகம் அழிந்து போய் விடுமோ? என்ற அச்சத்துக்கு இரு முகன்மைக் காரணிகளாகச் சொல்லப்படுகிறவை: 1) அணு ஆய்தப் போர்: 2) காலநிலை மாற்றம்.

அணுக்குண்டின் அழிவாற்றலை இரோசிமாவிலும் நாகசாகியிலும் கண்டோம். மீண்டும் ஓர் அணுவாய்தப் போர் மூளக் கூடாது என்றால் அணுவாய்தங்களை அடியோடு அழித்து விட வேண்டும், புதிய அணுவாய்தங்கள் செய்யக் கூடாது. அணுவாய்தங்களுக்கு மூலப்பொருள் கிடைக்காமற்செய்ய வேண்டும் என்றால் அணுவாற்றல் இயற்றுவதைக் கைவிட வேண்டும். அணுவாற்றலை அமைதி வழியில் பயன்படுத்துவது என்ற பேச்சுக்கே இடமில்லை. அணுவாற்றலை அமைதி வழியில் பயன்படுத்துவதற்கும் ஆய்தம் செய்யப் பயன்படுத்துவதற்குமான பிரிவுக் கோட்டை அழித்து விடுவது அரசியல் முடிவுதான்.

எந்த நேரத்திலும் இந்தக் கோட்டை அழித்து விட முடியும் என்பதைப் பல நாடுகளும் மெய்ப்பித்துள்ளன. இந்தியாவே இதற்கு மிகச் சிறந்த எடுத்துக்காட்டு. அணுவாற்றலை அமைதிவழியில் மட்டுமே பயன்படுத்துவோம் என்று பண்டித சவகர்லால் அளித்த உறுதிமொழியை மதிக்காமல்தான் இந்திரா காந்தி பொக்குரானில் அணுகுண்டு சோதனை நடத்தினார்.

ஆனால் அணுவாய்தப் பேரழிவைத் தடுப்பது பற்றிய பன்னாட்டு உரையாடல் தொடங்கிய போது, வல்லரசுகள் தம்மிடமுள்ள அணுவாய்த இருப்புகளை அழித்து விட முன்வரவில்லை. புதிய அணுவாய்தங்கள் செய்வதைக் கட்டுப்படுத்திக் கொள்ளவும் முன்வரவில்லை. அணுவாய்தக் குழாத்தில் இணைந்து கொள்ள புதிதாகப் பல நாடுகளுக்கும் ஆசை துளிர்த்தது. இந்தப் பின்னணியில்தான் நீண்ட நெடிய முயற்சிக்குப் பின் 1970ஆம் ஆண்டு ஐநா மேற்பார்வையில் அணுவாய்தப் பரவல் தடை ஒப்பந்தம் ஏற்பட்டது. Treaty on the Non-Proliferation of Nuclear Weapons, சுருக்கமாக Non-Proliferation Treaty அல்லது NPT. இந்த ஒப்பந்தத்தில் 2016 வரை 191 நாடுகள் ஒப்பமிட்டுள்ளன. அணுவாய்தங்கள் வைத்திருந்த போதும் ஒப்பமிடாத நாடுகள் இந்தியா, பாக்கித்தான், இசுரேல்.  சேர்ந்து விட்டுப் பிறகு வெளியேறிய நாடு வட கொரியா.

அணுவாய்தப் பரவல் தடை ஒப்பந்தம் அணுவாய்த வல்லரசுகளுக்கும் மற்ற நாடுகளுக்கும் இடையே பாகுபாடு காட்டக் கூடியது என்பது உண்மைதான். ஆனால் அணுவாய்தப் பேரழிவை உலகம் அறிந்தேற்றிருப்பதன் அடையாளம் என்ற முறையில் இந்த ஒப்பந்தம் முகன்மையான ஒன்று. எல்லா நாடுகளும் இந்த ஒப்பந்தத்தில் இணைந்து அதன் பாகுபாடான கூறுகளை மாற்ற முயலலாம்.

அணுவாய்தப் பேரழிவின் அச்சுறுத்தல் இன்றும் நீடிப்பதைத்தான் உருசிய-உக்கிரைன் போர் காட்டிக் கொண்டிருக்கிறது. மறைமுகமாக அணுகுண்டு மிரட்டல் விடுத்த உருசிய அதிபர் விளாதிமிர் புதின் பரவலான கண்டனத்துக்கு ஆளானார். ஆனால் அவரது மிரட்டலில் மாற்றமில்லை. இவ்வாறான மிரட்டலே மாந்தக் குலத்துக்குப் பகையான செயல் என்ற அனைத்துலகக் கூட்டுணர்வு வளர வேண்டும். வளர்க்கப்பட வேண்டும்.

அணுவாய்தப் பேரழிவின் அச்சுறுத்தல் பற்றியும், அதற்கெதிரான இயக்கம் பற்றியும் வேறு தருணத்தில் விரிவாகப் பேசுவோம். இப்போது நாம் பேச வேண்டியது அணுப்பரவல் தடை ஒப்பந்தம் போல் புதைபடிவ எரிபொருள் பரவல் தடை ஒப்பந்தம் ஒன்றின் தேவை பற்றித்தான்.

புவி வெப்பமாதலிலும், அதன் விளைவான காலநிலை மாற்றத்திலும் முதற்குற்றவாளி புதைபடிவ எரிபொருள் பயன்பாடுதான் என்பதறிவோம். புதைபடிவ எரிபொருள் பயன்பாட்டைக் கட்டுப்படுத்தாமல் புவி வெப்பமாகிச் செல்வதையும் காலநிலை மாற்றத்தையும் கட்டுப்படுத்த இயலாது. புதைபடிவ எரிபொருள் பயன்பாட்டை உடனே அடியோடு ஒழிக்க முடியுமா என்றால் முடியவே முடியாது. இப்பயன்பாட்டைச் சிறிது சிறிதாகக் குறைத்து வரம்பிடுவதுதான் ஒரே வழி.

காலநிலை மாற்றத்தைக் கட்டுப்படுத்துவதற்கான முதல் பன்னாட்டு உடன்படிக்கையான பாரிசு ஒப்பந்தம் (2015) புதைபடிவ எரிபொருள் பற்றிப் பேசவே இல்லை. அண்மையில் நடந்து முடிந்த கா.நி.மா.27(COP27)  மாநாடு கன்னெய் (பெற்றோல்), எரிவாயுபற்றிப் பேசவே இல்லை. இந்தக் கள்ள மௌனத்துக்கு என்ன காரணம்? புதைபடிவ எரிபொருள் பயன்பாட்டை விரிவாக்கிக் கொண்டே செல்லும் நாடுகளின் தன்னலமே காரணம்.

இத்தனைக்கும் புதுப்பிக்கவொண்ணாப் புதைபடிவ எரிபொருளுக்கு மாற்றான புதுப்பிக்கத்தக்க ஆற்றல்மூலங்கள் நிறைய இருப்பது இந்த நாடுகளுக்குத் தெரியும். புவி வெப்பமாதல், காலநிலை மாற்றம் பறியெல்லாம் உதட்டுச் சேவை செய்து கொண்டே, கரியுமிழ்வுக்குக் காரணமான புதைபடிவ எரிபொருள் பயன்பாட்டைக் குறைத்துக் கொள்ள மறுக்கும் இந்த நாடுகள் புதைபடிவ எரிபொருள் போதைக்கு அடிமைப்பட்டிருப்பதாக சூழலியலர் சொல்கின்றனர். இறுதி நோக்கில் இது கரி வெறியில்லை, ஆதாய வெறிதான்!

அணுப்பரவல் தடை ஒப்பந்தத்தில் 190க்கு மேற்பட்ட நாடுகள் ஒப்பமிட்டிருக்கக் கண்டோம். ஆனால் புதைபடிவ எரிபொருள் பரவல் தடை ஒப்பந்தம் (FOSSIL FUEL NON-PROLIFERATION TREATY) தேவை என்று வலியுறுத்தும் ஐநா உறுப்பரசுகளாக இருக்கும் நாடுகள் இரண்டே இரண்டுதான். ஒன்று: துவாலு! இரண்டு: வானுவாட்டு!!

துவாலுவைப் பற்றி முன்பே தெரிந்து கொண்டோம். வானுவாட்டுவும் துவாலுவைப் போலவே பசிபிக் தீவுக் கூட்டம்தான்! கடலால் விழுங்கப்படும் பேரிடருக்கு முகங்கொடுத்து நிற்கும் இந்தச் சிறிய நாடுகளே புதைபடிவ எரிபொருள் பரவலைக் கட்டுப்படுத்தப் பன்னாட்டு ஒப்பந்தம் செய்யக் கோரி முன்னுக்கு நிற்கின்றன.

தொழில் வளர்ச்சி பெற்ற நாடுகள் எந்தப் பொறுப்புமின்றி நிலக்கரியும் கன்னெய்யும்(பெற்றோலும்) எரிவாயுவும் பயன்படுத்தி வருவது மட்டுமன்று, புதிதாகத் தோண்டியெடுக்கும் முயற்சியிலும் அயராது ஈடுபட்டுள்ளன. இதே போக்கு தொடர்ந்தால் புவி வெப்பமாதலை 1.5 வெம்பாகை(செல்சியசு பாகை)க்குள் கட்டுபடுத்துவதெல்லாம் வெறுங்கனவாகி விடும். காலநிலை மாற்றத்தைக் கட்டுக்குள் கொண்டுவர அனுமதிக்கத்தக்க அளவைப் போல் ஏழு மடங்கு வேகத்தில் உலக அளவில் புதைபடிவ எரிபொருள் பரவலாக்கம் நடைபெற்று வருகிறது. 

புதைபடிவ எரிபொருள் பரவல் தடை ஒப்பந்தம் ஏற்படுமானால், அது மூன்று கூறுகளைக் கொண்டதாக இருக்கும்: 1) புதைபடிவ எரிபொருள் தேடலுக்கு ஆய்வுகள் நிறுத்தப்பட வேண்டும்; 2) 1.5 பாகை என்னும் காலநிலை இலக்குக்குப் பொருத்தமாக புதைபடிவ எரிபொருள் பயன்பாடு படிப்படியாகக் குறைக்கப்பட வேண்டும்; 3) நியாயமான மாறுதல்: புதைபடிவ எரிபொருள் பயன்பாட்டுக்கு மாற்றான ஆற்றல் வழிகளுக்கு ஆட்களும் குமுகாயங்களும் நாடுகளும் சரளமாக மாறிச் செல்ல வழிவகை செய்ய வேண்டும்.

அணுவாய்தப் பரவல் தடை போல் புதைபடிவ எரிபொருள் பரவல் தடை வேண்டும் என்று இரண்டு சிறு நாடுகள் மட்டுமே முன்மொழிந்திருப்பினும் எழுபது உள்ளரசுகள் (மாநில அரசுகள், மாநகராட்சிகள் போன்றவை) இதற்கு ஆதரவு தெரிவித்துள்ளன. 1,800 குடியியல் சமூக அமைப்புகள் ஆதரவு தெரிவித்துள்ளன. அறிவிலியர்களும் கல்வியாளர்களுமான 3,000க்கு மேற்பட்ட அறிஞர்கள் ஆதரவு தெரிவித்துள்ளனர். நோபல் பரிசு பெற்ற 101 அறிஞர்கள் ஆதரவு தெரிவித்துள்ளார்கள். ஐரோப்பிய நாடாளுமன்றமும் உலக நலவாழ்வு அமைப்பும் ஆதரவு தெரிவித்துள்ளன. ஆனால் இது ஒரு பெரும் மக்களியக்கமாக வளர்ந்தால்தான் உலகைக் கொதிக்க வைக்கும் அரசுகளை வழிக்குக் கொண்டுவர முடியும்.

(தொடரும்)

தோழர் தியாகு

தரவு :  தாழி மடல் 23