(தோழர் தியாகு எழுதுகிறார் 225 : வழக்கறிஞர் மகாதேவன் உரை-தொடர்ச்சி)

அன்று ஈழத்தில், இன்று மணிப்பூரில் இனவழிப்பு

2008-09 காலத்தில் ஈழம் தந்த கவலையும் அதிர்ச்சியும் போல் இன்றைய மணிப்பூர் செய்திகள் அதிர்ச்சியும் கவலையும் அளிக்கின்றன.

இலங்கையில் நடந்தது தமிழினவழிப்பு என்றால் மணிப்பூரில் நடப்பது குக்கி இனவழிப்பு. தமிழினவழிப்புக்கு சிங்களப் பேரினவாத மனநிலை துணை நின்றது போல், குக்கி இனவழிப்புக்கு மெய்த்தி பேரினவாத மனநிலை துணை நிற்கிறது.

தமிழினவழிப்பை நிகழ்த்திய முதல் குற்றவாளி சிங்கள அரசே! குக்கி இனவழிப்பை நிகழ்த்தி வரும் முதல் குற்றவாளி இந்திய அரசே!

மணிப்பூர் செய்திகள் பாசக ஊதுகுழல்களால் மறைக்கவும் திரிக்கவும் படுகின்றன. இந்த மறைப்பையும் திரிப்பையும் மீறி, மணிப்பூர் பற்றி உலக அளவிலும், இந்தியத் துணைக்கண்ட அளவிலும், தமிழ்த் தேச அளவிலும் மக்களிடையே பரவியுள்ள நியாயமான கவலையும் அக்கறையும் மணிப்பூருக்கு அமைதியும் நீதியுமான வாழ்வு மீள்வதற்குத் துணை செய்ய வேண்டும் என்பது மட்டுமல்ல, நீதிக்காகவும் விடுமைக்காகவும் போராடிக் கொண்டிருக்கும் நம்மைப் போன்ற அனைவருக்கும் உரிய படிப்பினைகள் கற்றுக் கொடுப்பதாகவும் இருக்க வேண்டும்.

போரில் முதற்பலியாவது உண்மையே என்பர். உண்மையின் உயிரை மீட்டெடுக்க வல்ல தரவுகளை முதலில் தெரிந்து கொள்வோம். காசுமீர்க் கோப்புகள் (KASHMIR FILES) என்று பொய்த் தோரணம் கட்டிய அக்கினிகோத்திரிகள் மணிப்பூர்க் கோப்புகள் என்று படம் எடுப்பார்களா? எடுத்தால் அது மோதியின் ஆசிபெற்ற மணிப்பூர்ப் பொய்களாகத்தான் இருக்கும்.

நாம் இப்போதே மெய்யான மணிப்பூர்க் கோப்புகளை எழுத்தில் தொகுப்போம். இயன்ற வரை மெய்க் கதைகள் துயருற்ற மாந்தரின் வாய்மொழியாகவே வெளிப்படச் செய்வோம்.

நாளை முதல் மணிப்பூர்க் கோப்புகள்

(தொடரும்)
தோழர் தியாகு
தாழி மடல் 257