(தோழர் தியாகு எழுதுகிறார் 239 : மணிப்பூர்க் கோப்புகள் காதை 14 தொடர்ச்சி)

இனிய அன்பர்களே!

கசேந்திரகுமார் பொன்னம்பலம் விட்ட அறைகூவல்!

தமிழீழ மக்களின் தேசியச் சிக்கலுக்கு அமைதியாகவும் பன்னாட்டுச் சட்டங்களின் படியும் குடியாட்சியத் தீர்வு காண ஒரே வழி பொதுவாக்கெடுப்புதான். ஈழத் தமிழர்கள், தமிழகத் தமிழர்கள், புலம்பெயர் தமிழர்கள், உலகத் தமிழர்கள் அனைவரும் இந்தக் கோரிக்கையில் ஒரே கருத்துடன் இருக்கிறோம்.

இனவழிப்புக்கு ஈடுசெய் நீதி என்றாலும், பூசல் நிலையிலிருந்து இணக்க நிலைக்கு நிலைக்குச் செல்வதற்கான நிலைமாற்ற நீதி என்றாலும் அது குற்றவியல் நீதியாக இருந்தால் போதாது, அரசியல் நீதியாகவும் இருக்க வேண்டும். குற்றவியல் நீதியின் சாறம் குற்றம் புரிந்தவர்களைத் தண்டிப்பதிலும் குற்றத்தால் தாக்குற்றவர்களின் தயரத்தைத் தணிப்பதிலும் அடங்கியுள்ளது.

அரசியல் நீதியின் சாறம் அதே குற்றங்கள் மீண்டும் நிகழ விடாமல் தடுப்பதற்கான கட்டமைப்பியல் மாற்றங்களில் அடங்கியுள்ளது. இனவழிப்பு உள்ளிட்ட குற்றங்களுக்கு வழிகோலிய அரசியல் கட்டமைப்பில் உரிய மாற்றங்கள் செய்வதாகும். எவ்வகையான மாற்றங்கள் செய்ய வேண்டும் என்பதைத் துயருற்ற மக்களே தீர்மானிக்க வேண்டும்.

இனவழிப்புக்கு ஆளான தமிழீழ மக்கள் அடைய வேண்டிய குற்றவியல் நீதிக்கான போராட்டம் பல தளங்களில் தொடர்கிறது. இனவழிப்புக் குற்றவாளிகளான சிங்கள அரசியல் – படையியல் தலைவர்களைப் பன்னட்டுக் குற்றவியல் நீதிமன்றக் கூண்டிலேற்றுதல், சிங்களப் பேரினவாத அரசு இழைத்த குற்றங்கள குறித்துத் தற்சார்பான பன்னாட்டுப் புலனாய்வு, வலிந்து காணாமலாக்கப்பட்டவர்களுக்கான நீதி, போர்ச் சிறையாளர் விடுதலை உள்ளிட்ட நீதிக் கோரிக்கைகளுக்கான போராட்டத்தில் தொடர்ந்து ஈடுபட்டுள்ளோம்.

சிங்களத்தோடு இணக்கம் காண்பதற்காக நீதிக் கோரிக்கைகளைக் கைவிடுவது அல்லது அடக்கி வாசிப்பது என்றொரு போக்கு சில தமிழர்களிடம் காணப்படுகிறது. இது அறியமையாகவோ நேர்மையின்மையாகவோதான் இருக்க வேண்டும். சிங்களர்கள் இணக்கம் வேண்டினால் தமிழர்களின் நீதிக் கோரிக்கையை ஆதரிக்க வேண்டும்.

நீதி இல்லையென்றால் இணக்கம் இல்லை [NO RECONCILLIATYION WITHOUT JUSTICE] என்பதில் தெளிவாக இருக்கிறோம். இணக்கம் அல்லது அரசியல் தீர்வு என்பது புதிய கட்டமைப்பைக் குறிக்கும். புதிய கட்டமைப்பு என்பதைத் தீர்மானிக்கத் தாயகத்திலும் புலம்பெயர் தமிழுலகிலும் வாழும் தமிழீழ மக்களிடையே பொதுவாக்கெடுப்பு நடத்த வேண்டும் என்பது நம் கோரிக்கை. இது தமிழீழத் தேசத்துக்குள்ள தன்-தீர்வுரிமையின் செயலாக்கமும், அரசியல் நீதிக்கான வழிவகையுமே ஆகும்.

பன்னாட்டுச் சட்டங்களும் பல நாடுகளின் அரசமைப்புச் சட்டங்களும் ஒப்புக் கொண்டுள்ள இந்தக் குடியாட்சிய வழிமுறையை சிங்களப் பேரினவாத அரசும் இந்திய வல்லரசும் ஏற்க மறுக்கின்றன. அவர்கள் ஏற்க மறுக்கிறார்கள் என்றால் நாம் அந்தக் கோரிக்கையைக் கைவிட வேண்டும் என்று பொருளாகாது. நாம் இன்னுங்கூட உறுதியாகப் போராட வேண்டும் என்றுதான் பொருள்.

வரலாற்றின் குப்பைத் தொட்டியில் வீசப்பட்டு விட்ட 13ஆம் திருத்தச் சட்டம் போன்றவற்றைக் காட்டித் தமிழர்களின் நீதிப் போராட்டத்தைத் திசைதிருப்பும் முயற்சிகள் குறித்துத் தமிழர்கள் அனைவரும் விழிப்புடன் இருக்க வேண்டும். தமிழ்நாட்டில் இந்த நோக்கில் மாநாடே நடத்தினோம். தொடர்ந்து பேசியும் எழுதியும் வருகிறோம்.

புலம்பெயர் தமிழ் மக்களிடையேயும் இந்தியா சொல்வதைக் கேட்டு நடப்பதே அறிவுடைமை என்று “புவிசார் அரசியல்” பேசும் திறமைசாலிகள் இருப்பினும், மிகப் பெரும்பாலான மக்கள் 13ஆம் திருத்தம் விரிக்கும் வலையில் விழ மறுத்துப் பொது வாக்கெடுப்பையே விரும்புகின்றனர் என்பதில் ஐயமில்லை.

ஆனால் விடுதலை என்றாலும் நீதி என்றாலும் இறுதியாகத் தீர்வு செய்யப் போவது தாயகமே. பொது வாக்கெடுப்புக் கோரிக்கைக்கே தாயகத் தமிழர்களும் ஆதரவாக இருப்பினும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர்கள் இந்தக் கோரிக்கைக்கு ஆதரவாகக் குரல் கொடுப்பதில்லை. பொதுவாக இந்திய வல்லரசின் பகடைகளாக நகரவே அவர்கள் விரும்புகின்றனர்.

இதற்கு மாறாகத் தமிழீழத் தாயகத்தில் பொது வாக்கெடுப்புக்கு ஆதரவாக ஒரு குரல் ஓங்கி ஒலிக்கிறது. அதிலும் சிறிலங்கா அரசவை எனப்படும் நாடாளுமன்றத்திலேயே ஒலிக்கிறது. அந்தக் குரலுக்குச் சொந்தக்காரர் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் தலைவர் அன்பிற்கும் மதிப்பிற்கும் உரிய கசேந்திரகுமார் பொன்னம்பலம்.

கசேந்திரகுமார் சிங்கள ஆளும் தரப்புக்கு அறைகூவல் விட்டுள்ளார்:
“தமிழ் மக்கள் என்ன விரும்புகின்றார்கள்? அவர்கள் ஏற்றுக்கொள்ள விரும்புவது ஒற்றையாட்சி அரசா? கூட்டாட்சி அரசா? உங்களுக்கு முதுகெலும்பு இருக்குமானால், தமிழ் மக்களுக்குத் தனியரசு வேண்டுமா? என்று கேட்டுப் பொதுவாக்கெடுப்பு நடத்திப் பார்க்க அறைகூவல் விடுகிறேன்.” – 2023 சூலை 21ஆம் நாள் கசேந்திரகுமார் பொன்னம்பலம் நாடாளுமன்றத்தில் பேசியது.

இந்த உரை பொதுவாக்கெடுப்புக் கோரிக்கைக்கு வலுச் சேர்ப்பதாய் உள்ளது என உலகெங்கும் தமிழர்கள் பாராட்டியுள்ளனர். பொதுவாக்கெடுப்புக்கான இயக்கத்தின் சார்பில் அதன் ஒருங்கிணைப்பாளர் மருத்துவர் குமுதினி குணரத்தினம் பாராட்டு மடல் எழுதியுள்ளார். நாமும் அன்பர் கசேந்திரகுமாரின் இந்த உரையைப் பாராட்டுகின்றோம்.

சிங்கள அரசு நெருக்கடியில் விழுந்து இராசபட்சர்கள் ஓட்டமெடுத்த நிலையில் நாடாளுமன்ற உறுப்பினர்களிடையே வாக்கெடுப்பு நடத்தி அதிபருக்கான தேர்தல் நடைபெற்ற போது யாருக்கும் வாக்கில்லை என்று கசேந்திரகுமார் முடிவெடுத்தார். எந்த வேட்பாளரும் கிஞ்சிற்றும் தமிழ்மக்களின் கோரிக்கைக்கு ஆதரவாக இல்லை என்பதால் வேறு வழியில்லை என்று விளக்கமளித்தார். “We are left with no choice” என்ற அவரது விளக்கம் பொருத்தமாக இருந்தது. அவரது சொற்களை ஒட்டி “Tamils have no choice but to fight on” என்ற தலைப்பில் ஆபேல் மின்னிதழில் எழுதினேன்.

இப்போதைய நாடாளுமன்ற உரை மட்டுமல்ல, தாயகத்தில் சிங்களப் பேரினவாதத்தின் கடமைப்பியல் இனவழிப்பு முயற்சிகளுக்கு எதிராக அன்பர் கசேந்திரகுமார் பொன்னம்பலம் தலைமையிலான தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி முன்னெடுத்து வரும் அறப் போராட்டங்களும் நம்பிக்கையளிக்கும் படியாக உள்ளன.

தமிழ்த் தேசிய விடுதலை இயக்கம் தாயகத்தில் போராடும் உங்களோடு தோழமை கொள்கிறது. தமிழ்நாட்டின் தமிழீழ ஆதரவு ஆற்றல்களுக்கும் தாயக மக்களுக்கும் இடையே ஒருங்கிணைப்பு வளர உங்களோடு இணைந்து முன்முயற்சி எடுக்க விழைகிறோம்.
அன்பர் கசேந்திரகுமார் பொன்னம்பலம் உரைக்கு இணைப்பு:
https://twitter.com/tamilkingdom1/status/1682427840539533312?s=48&t=Bw53um4m51xaVuSC3kXD1w

(தொடரும்)
தோழர் தியாகு

தாழி மடல் 269