(தோழர் தியாகு எழுதுகிறார் 240 : கசேந்திரகுமார் பொன்னம்பலம் அறைகூவல்! தொடர்ச்சி)

இனிய அன்பர்களே!

மோதியும் இரணிலும்

பேசியதும் பேசாததும்

“தான் ஆடாவிட்டாலும் தன் தசை ஆடுமாம்!” இந்தியாவுக்கும் இலங்கைக்குமான உறவு குறித்து இப்படி மொழிந்திருப்பவர் இந்திய அயலுறவுத் துறை அமைச்சர் திருவாளர் செய்சங்கர். இலங்கைக்கு வந்துள்ள நெருக்கடியிலிருந்து அந்நாட்டை மீட்க இந்தியா எல்லா உதவியும் செய்யும் என்பதைத்தான் செய்சங்கர் இப்படிச் சொன்னார்.

இது ஒரு புறம் என்றால், இலங்கைத் தமிழர்களுக்கு இந்தியாவின் மோதியரசு அனைத்து வகையிலும் துணைநிற்கும் என்று தமிழ்நாடு பாசக தலைவர் அண்ணாமலை அள்ளி விட்டுக் கொண்டிருக்கிறார்.

செய்சங்கரையும் அண்ணாமலையையும் விட்டுத் தள்ளுங்கள். அவர்கள் இருவரும் யாரைக் காட்டி வாயளக்கிறார்களோ, அவர் – அதிகாரத்தின் உச்சியில் இருக்கும் இந்தியத் தலைமையமைச்சர் நரேந்திர மோதி – என்ன சொல்கிறார்? என்ன செய்கிறார்?

அண்மையில் அவருக்கொரு வாய்ப்பு வந்தது. சிறிலங்கா அதிபர் இரணில் விக்கிரமசிங்கா இந்தியத் தலைநகர் தில்லிக்கே வருகை புரிந்தார். இந்தப் பயணம் மிகுந்த விளம்பரத்துடன் மேற்கொள்ளப்பட்டது. சாரத்தில் சிங்கள அரசாக இருக்கும் இலங்கை அரசுடன் பல்வேறு துறைகள் சார்ந்த பல ஒப்பந்தங்களில் மோதி கையொப்பமிட்டார். பொருளியல் உறவுகளை மேம்படுத்த உடன்பாடாம்! குறிப்பாக விசைத் துறையில்!

இனக் கொலைகார உடன்பிறப்புகள் மகிந்த, கோட்டபாய இராசபட்சர்கள் சிங்கள மக்களால் துரத்தியடிக்கப்பட்ட பின் அவர்கள் தயவிலேயே அதிகாரக் கதிரையில் அமர்ந்த இரணில் அதன் பிறகு முதல் முறையாக இந்தியா வந்துள்ளார். நிதி நெருக்கடியில் மூழ்கிக் கொண்டிருந்த போது 4 பில்லியன் தாலர் கொடுத்துக் கைதூக்கிக் கரையில் விட்டதல்லவா தில்லி, அதற்கு நன்றி பாராட்ட வேண்டாமோ? நன்றி சொன்னால் போதுமா? இந்தியா இலவசமாக எதுவும் தராது (There is no free lunch) என்று அரசவையிலேயே சொன்னவர்தான் இரணில். ஷ்ய்லாக் போல தனக்கான இராத்தல் சதையைக் கேட்பார் மோதி என்பது இரணிலுக்கே தெரியும்.

இரு தலைவர்களும் பொருளியல் கூட்டாண்மைக்கான தொலைநோக்கு ஆவணம் ஒன்றை இயற்றியுளளார்களாம். இது கடலோரத் தொழில்களிலும் வான் பயணத்திலும் விசைத்துறையிலும் மக்களுக்கிடையிலான இணைப்பு வசதியிலும் கூட்டுறவை வளர்ப்பதற்காம்! சுற்றுலா, மின்சாரம், வணிகம், உயர்கல்வி, திறன் மேம்பாடு ஆகியவற்றை முடுக்கி விரைவுபடுத்துவதற்காம்!

இதற்கெல்லாம் மெய்ப்பொருள் காண்பது நமக்குக் கடினமில்லை. முதலாவதாக, இந்தத் துறைகளில் சீனத்துக்கு இடம் தரக் கூடாது, தந்தாலும் இந்தியாவுக்குக் கீழேதான் தர வேண்டும். இரண்டாவதாக இந்தியாவுடன் கூட்டாண்மை என்பது இந்தியப் பெருங்குழுமங்களுடன் கூட்டாண்மையைக் குறிக்கும். அதிலும் அதானி, அம்பானி வகையறாவைக் குறிக்கும். கடந்த காலத்தில் கோட்டபயாவே இதை வெளிப்படுத்தியுள்ளார். கொழும்பு துறைமுகத்தில் இரண்டில் ஒரு முனயம் இந்தியாவுக்கு என்றனர், அதானிக்குப் பெற்றுக் கொடுத்தனர். அரசியலில் இந்தியா என்றால் மோதி! பொருளியலில் இந்தியா என்றால் அதானி!

தமிழ்நாட்டுக்கு மட்டுமல்ல, இலங்கைக்கும் செல்லப் போகிறது மோதியின் புதிய தேசியக் கல்விக் கொள்கை என்பதன் அடையாளம்தான் உயர் கல்வி, திறன் மேம்பாடு பற்றிய குறிப்பு! தமிழர்கள் மட்டுமல்ல சிங்களர்களும் மோதி குறித்து எச்ச்சரிக்கையாக இருக்க வேண்டும்!

இந்துத்துவத்தின் அகண்ட பாரதக் கொள்கையும் அதன் செயலாக்கமும் தமிழர்களுக்கு மட்டுமல்ல, சிங்களர்களுக்கும் கேடு பயக்கக் கூடியது. மோதியின் இந்துத்துவமும் இரணிலின் சிங்கள பௌத்தமும் கைகோத்து வருவது இக்கரையிலும் அக்கரையிலும் வாழும் இசுலாமியர்களுக்கு மட்டுமல்ல. இந்து, கிறித்துவ சமுதாயங்கள் உட்பட தெற்காசியத் தேசங்கள் அனைத்துக்கும் ஆபத்தின் முன்னறிவிப்பு ஆகும்.

மோதி-இரணில் குலாவலில் இந்த முறை ஒரு புதிய பூதம் கிளம்பியுள்ளது. கடல் வழி, வான் வழி, கடலடிக் கம்பி வழி, கடலடிக் குழாய் வழி … இவற்றோடு இப்போது சாலைவழியும் சேரப் போகிறது. பாக் நீரிணைக்கு மேல் பாலம் அமைக்கத் திட்டமாம்! நல்லதுதானே எனத் தோன்றும். இரு கரையிலும் ஆதிக்க ஆற்றல்கள் ஒழிந்து விடுமைக் காற்று வீசும் போது அப்படியே கூட இருக்கலாம்! ஆனால் இப்போது? திருகோணமலை, கொழும்பு துறைமுகங்களுக்கு அணுகல் தேவைப்படுகிறதாம்! யாருக்கு?

தமிழ்த் தேசம் சிங்களத் தேசத்துக்கு அடங்கி வாழக் கூடாது என்பது மட்டுமன்று நம் விருப்பம். இந்த இரு தேசங்களும் சீனத்துக்கோ இந்தியாவுக்கோ அடங்கி வாழவும் கூடாது என விரும்புகிறோம். இந்திய-சீன வல்லரசுப் போட்டியில் இலங்கைத் தீவு சிக்கிச் சீரழிவது தமிழர், சிங்களர் இரு தரப்பினர்க்கும் கேடுதான்.

புதுத் தாராளியத்தின் இரட்டை முகவர்கள்தாம் மோதியும் இரணிலும். மக்கள் நலனில் துளியும் அக்கறை இல்லாதவர்கள். தேசிய இனங்கள், மக்கள் சமூகங்கள் பற்றிய கவலையே இல்லாமல், வளர்ச்சி எனபதை வாகான துறைமுகங்கள். தோதான கடல்வழிகள், நெடிய விரைவுச் சாலைகள், வலைப் பின்னலான பாலங்கள், அகக் கட்டமைப்புகள் என்று மட்டுமே சிந்திக்கப் பழகியவர்கள்.

இருக்கட்டும். இலங்கைத் தமிழர்களுக்கு மோதி துணை நிற்பார் என்று வாயால் முழம் போட்டரே அண்ணாமலை? இரணிலிடம் பேசும் போது மோதிக்குத் தமிழர்கள் பற்றி ஏதாவது நினைவு இருந்ததா? 2009ஆம் ஆண்டு மோதி மட்டும் தலைமையமைச்சராக இருந்திருந்தால் முள்ளிவாய்க்கால் பெருங்கொடுமையே நிகழ்ந்திருக்காது என்றாரே அண்ணாமலையார், தமிழர்களுக்கு நீதி கேட்டரா மோதி?

மோதி உதிர்த்த முத்துக்கள் இதோ – “We hope that the government of Sri Lanka will fulfil the aspirations of the Tamils.”

அதாவது, “தமிழர்களின் வேணவாக்களை சிறிலங்கா அரசு நிறைவேற்றும் என நாம் நம்புகிறோம்.”

மீளிணக்கத்துக்கும் அதிகாரப் பகிர்வுக்குமான ஒரு முன்மொழிவை இரணில் விக்கிரசிங்கே மோதியிடம் கையளித்தாராம்!

தமிழர்களின் வேணவாக்கள் என்றால் என்ன? சொல்வாரா மோதி? வட்டுக்கோட்டைத் தீர்மானம், 1977 பொதுத் தேர்தல், நீண்ட நெடிய விடுதலைப் போராட்டம், பல்லாயிரம் மாவீரர்களின் ஈகம், முள்ளிவாய்க்கால் பேரழிவு, ஐநா அறிக்கைகள், தீர்மானங்கள், அவற்றின் இப்போதைய தகுநிலை எவை குறித்தாவது மோதி பேசினாரா? இரணில்தான் சொன்னாரா?

மாட்டுத் தரகர்கள் துண்டைப் போட்டு மறைத்துக் கொண்டு கைவிரல்களால் பேரம் பேசுவது போல் இரு தலைவர்களும் எண்ணி எண்ணிக் காட்டுகிறார்கள் – எத்தனை முறை எண்ணினாலும் அதே 13தான் வருகிறது – 13ஆம் சட்டத் திருத்தம்தான் தமிழர்களின் துயரங்களுக்கெல்லாம் ஒரே மருந்து! அதுதான் மந்திர எண் 13. இவர்கள் கேட்பார்கள்! கேட்டுக் கொண்டே இருப்பார்கள். தமிழர்களையும் அதே 13ஐக் கேட்கச் சொல்வார்கள்! தலையாட்டிகளும் கேட்பார்கள்!

1987 இந்திய-இலங்கை ஒப்பந்தம் என்னாயிற்று? வடக்கு கிழக்கு இணைப்பு என்னாயிற்று? இதைக் கேட்கத் துப்பில்லாமல் 13 எனும் வெற்றுப் பேச்சு ஏன்? அண்ணாமலையும் செய்சங்கரும் மோதிக்காகப் பேசுவதில் வியப்பில்லை. அது அவர்களுக்குத் தரப்பட்டுள்ள வேலை. தமிழர்களுக்கு வேறு வேலை உள்ளதே!

(தொடரும்)
தோழர் தியாகு

தாழி மடல் 270