(தோழர் தியாகு எழுதுகிறார் 241 : மோதியும் இரணிலும் பேசியதும் பேசாததும் – தொடர்ச்சி)

இனிய அன்பர்களே!

தமிழீழம்: புதிய தலையாட்டிகள் 1 / 2

இராசீவ்-செயவர்த்தனா உடன்படிக்கையும் (1987) அமைதி காக்கும் படை என்ற பெயரில் இந்திய வல்லரசு தமிழீழத்தின் மீது நடத்திய படையெடுப்பும் இந்தியப் படை நடத்திய வன்கொடுமைகளும் தமிழர்கள் மறக்கக் கூடாத வரலாற்று உண்மைகள்.

ஆனால் இப்போது எழுந்துள்ள புதிய சூழலில் இந்த உண்மைகளை மறப்பதுதான் சரி என்று சிலர் கிசுகிசுக்கத் தொடங்கியுள்ளனர். இந்த உண்மைகளை மறைக்கவும் அழிக்கவும் கூட இவர்கள் முற்பட்டுள்ளனர்.

அரச தந்திரம் என்ற பெயரிலோ புவிசார் அரசியல் என்ற போர்வையிலோ இந்திய வல்லரசின் தயவைப் பெறுவதுதான் தமிழீழ மக்களுக்கு ஏதாவது நன்மை கிடைக்கப் பயன்படும் என்றும், பழைய வரலாற்றைக் கிளறுவது இந்த முயற்சிக்குத் தடையாகி விடும் என்றும் இவர்கள் உண்மையாகவே நம்புவதாக வைத்துக் கொள்வோம்.

அந்தப் பழைய வரலாற்றின் முகன்மை நிகழ்வுகளை மறந்து விடவேண்டும் என்றால் எதை எல்லாம் நினைவுத் திரையிலிருந்து அழிக்க வேண்டும்? 1987 சூலை 27ஆம் நாள் கொழும்பு நகரில் செயவர்த்தனாவும் இராசீவ் காந்தியும் ஒப்பமிட்ட இந்திய-இலங்கை உடன்படிக்கை, இந்தியப் பேய்ப் படைகள் (SATANIC FORCES) நிகழ்த்திய கொலைகளையும் பாலியல் வன்கொடுமைகள், இந்திய அரசு பரப்பிய பொய்கள்… எல்லாவற்றையும் மறந்து விட வேண்டுமாம்!

மறுபுறம் இந்திய வன்பறிப்புப் படைகளை எதிர்த்துத் தமிழீழ மக்களின் துணையோடு தலைவர் பிரபாகரன் தலைமையில் தமிழீழ விடுதலைப் புலிகள் நடத்திய வீரஞ்செறிந்த போரை மறந்து விட வேண்டுமாம்! இந்தியப் படையின் நட்பு முகத்திரையைக் கிழித்துப் பகையை பகையென்று உணர்த்திய ஈகச் சுடர் திலீபனின் பட்டினிப் போரையும், அன்னை பூபதியின் உயிரீகத்தையும் மறந்து விட வேண்டுமாம்!

அப்படியே ஆகட்டும். அப்படி ஒரு காலம் வந்து போயிற்று என்பதையே நிகழ் தலைமுறையின் நினைவிலிருந்து அழித்து விட்டு, வரும் தலைமுறைக்கும் அந்தக் காலத்தின் சுவடுகள் மிஞ்சியிருக்காத படி அழித்து விடுவோம்.

தமிழினத்தின் கூட்டு உளச் சான்றில் ஆறா வடுவாகப் பதிந்து விட்ட முள்ளிவாய்க்கால் பேரவலத்தையும் மறந்து விடுவோமா? முள்ளிவாய்க்கால் இனப் படுகொலையில் இந்திய வல்லரசின் முகன்மையான வகிபாகத்தைப் பேசாமல் தமிழினவழிப்பின் வரலாற்றைப் பதிய முடியாதே!

இந்தப் பதினான்கு ஆண்டுகளில் தமிழீழத் தாயகமும் தமிழ்நாடும் புலம்பெயர் தமிழ்ச் சமூகமும் ஈடுசெய் நீதிக்காக நடத்தியுள்ள போராட்டத்துக்கு இந்தியா துணைநிற்கவில்லை என்பதையும், ஐநா மனிதவுரிமைப் பேரவையிலும் பன்னாட்டுலக அரங்கிலும் இறுதிநோக்கில் சிங்கள அரசினைப் பாதுகாப்பதிலேயே குறியாக இருந்துள்ளது என்பதையும் கூட கண்டுகொள்ளக் கூடாதா?
சரி, இந்த வரலாற்று அழிப்புக்கு ஈடாக இந்தியாவிடம் நீங்கள் பெற்றிருப்பது என்ன? பெறப் போவது என்ன? ஈழத் தமிழினவழிப்பை இந்தியா அறிந்தேற்கச் செய்ய முடிந்ததா? இந்திய இலங்கை ஒப்பந்தப் படி வடக்கு கிழக்கு இணைப்பை சிங்கள அரசிடம் வற்புறுத்தும் படிச் செய்ய முடிந்ததா?
“நாங்கள் இந்தியாவைத்தான் நம்பியிருக்கின்றோம்” என்று சில ஈழத் தமிழர்கள் தொடர்ந்து சொல்லி வருகின்றனர். ஈழத் தமிழர்களும் சரி, தமிழ்நாட்டுத் தமிழர்களும் சரி, நீதிக்கான போராட்டத்தின் முடிவைத் தீர்மானிப்பதில் இந்தியா ஒரு முகன்மைக் காரணி என்ற புறஞ்சார் உண்மையை ஏற்றுக் கொள்கின்றனர். அதனால் என்ன? இந்தியாவின் அயலுறவுக் கொள்கையைத் தமிழீழ மக்களின் நீதிக் கோரிக்கைக்கு ஆதரவாக மாற்ற முயல வேண்டும் என்று புரிந்து கொண்டால் தவறில்லை. ஆனால் இந்தியாவின் புவிசார் அரசியல் ஆட்டத்தில் தமிழீழ மக்கள் கருவிகளாக ஆட்டுவிக்கப்பட இணங்கிப் போக வேண்டும் என்று பொருள் கொள்வது அபத்தம்.

இந்தியா வல்லரசு, அப்படித்தான் இருக்கும் என்று ஆய்வாளர் யதீந்திரா போல் வாதிடுவீர்களானால், தமிழீழம் முழுத்தகுதி பெற்ற ஒரு தேசம், அதிலும் இனவழிப்புக்கு ஆளான தேசம், இது இப்படித்தான் இருக்கும் என்று சொல்லும் தெளிவும் துணிவும் நமக்கு வேண்டும்.

“புவிசார் அரசியல் நோக்கில் சீனத்தை எதிர்க்க இந்தியா ஈழத் தமிழ் மக்களை ஆதரிக்க வேண்டும்” என்றும் சொல்லப்படுகிறது. இவ்வகையில் இந்தியாவுக்கு அயலுறவுக் கொள்கை பற்றிப் பாடம் எடுப்போரும் உள்ளனர்.

“நரேந்திர மோதி தலைமையிலான இந்திய அரசு இந்துமதச் சார்புடையதாக இருப்பதால், ஈழத் தமிழர்கள் பெரும்பாலும் இந்துக்கள் என்பதை மனத்திற்கொண்டு அவர்களுக்கு ஆதரவு தரும் என்று எதிர்பார்த்து மோதியின் மனங்குளிரப் பேசுவோரும் உள்ளனர். இவர்கள் கொக்கு தலையில் வெண்ணெய் வைத்துப் பிடித்து விட முடியும் என நம்புகிறவர்கள்.

ஈழத் தமிழர்களுக்கு சமய நம்பிக்கைக்கான முழு உரிமை உண்டு. அவர்கள் நம்பும் சமயம் சைவம் என்றாலும், இந்து என்றாலும், இசுலாம் என்றாலும், கிறித்துவம் என்றாலும், வேறு எதுவானாலும் அந்த சமயத்தைக் கடைப்பிடிக்கவும் பரப்பவும் அவர்கள் ஒவ்வொருவருக்கும் முழு உரிமை உண்டு. சமய மறுப்புக்கான நம்பிக்கைக்கும் இதே போல் உரிமை உண்டு. விடுமையும் இறைமையும் கொண்ட தமிழீழத் தனியரசு உலகிய (சமயச் சார்பற்ற) அரசாகவே இருக்கும் என்பதை வட்டுக்கோட்டைத் தீர்மானம் (1976) தெளிவாகப் பறை சாற்றுகிறது. இந்தச் சாற்றுரையைத் திருத்தி “நீயும் இந்து நானும் இந்து” என்று இந்திய அரசுக்கு ஓலை விடுவது இழிவானது.
இந்தியாவை இந்து தேசமாக மாற்ற இந்துத்துவ ஆற்றல்கள் முயல்வது உண்மைதான். ஆனால் இந்த நேரம் வரை அது இந்து தேசமன்று. இந்தியாவை இந்து தேசமாக மாற்ற இந்தியாவின் ஒடுக்குண்ட மக்கள் அனுமதிக்க மாட்டார்கள். மீறி அந்த மற்றம் வருமானால் இந்தியா உடையும். இந்தியாவை இந்து தேசமாக்க யார் ஒப்புக் கொண்டாலும் தமிழ்நாட்டு மக்கள் ஒப்புக் கொள்ள மாட்டார்கள். இந்தியாவை இந்து தேசம் என்று நம்பி தமிழீழத்தை இந்து தேசமாகக் காட்டி இந்திய ஆட்சியாளர்களின் தயவைப் பெற முயல்வீர்கள் என்றால், தமிழ்நாடு உங்கள் பக்கம் நிற்காது. எமது ஆதரவு வட்டுக்கோட்டைத் தீர்மானத்தில் கண்டபடி சமயச் சார்பற்ற தமிழீழத்துக்குத் தானே தவிர காவித் தமிழீழத்துக்கு ஒருபோதும் இல்லை. இல்லவே இல்லை.

தமிழீழத்திலும் தமிழ்நாட்டிலும் இந்தியாவிலும் பெரும்பாலான மக்கள் இந்து சமயம் என்று நம்பிக் கொண்டிருப்பதும் மோதி கும்பலின் இந்துத்துவ அரசியலும் ஒன்றில்லை என்பதை ஈழத் தமிழர்கள் தம் மனத்தில் ஆழப் பதித்துக் கொள்வது நன்று. அயல்நாடுகளிலிருந்து வந்தேறிய இந்து ஏதிலியர்க்கு முன்னுரிமை அடிப்படையில் குடியுரிமை வழங்க குடியுரிமைச் சட்டத்தைத் திருத்திய மோதியரசு ஈழத்து இந்து ஏதிலியர்க்கு அந்த முன்னுரிமையை வழங்க மறுத்து விட்டது என்பதிலிருந்து என்ன தெரிந்து கொண்டீர்கள்?
இந்திய வல்லரசைப் பொறுத்த வரை தமிழர்களின் இந்திய நம்பிக்கைகளைத் தனது புவிசார் அரசியலுக்கு மூலமுதலாகப் பயன்படுத்திக் கொள்வதில் குறியாக உள்ளது. இலங்கை என்னும் சதுரங்கப் பலகையில் தமிழ்த் தலைவர்களைப் பகடைகளாக உருட்டி வருகிறது.

சென்ற ஆண்டு (2022) ஏப்பிரல் 9ஆம் நாள் ஈழத் தமிழர் வாழ்வுரிமைக் கூட்டமைப்பின் சார்பில் கோரிக்கை மாநாடு நடத்தி, இனவழிப்புக்கு நீதி காணும் போராட்டத்தில் இந்திய அரசு செய்ய வேண்டியது என்ன? தமிழக அரசு செய்ய வேண்டியது என்ன? தமிழக மக்கள் செய்ய வேண்டியது என்ன? என்பதையெல்லாம் தெளிவான தீர்மானங்களாக வரையறுத்தோம்.

அடுத்த சில நாளில் நெடுமாறன், கவிஞர் காசி ஆனந்தன் போன்ற ஈழ ஆதரவுப் பாரம்பரியம் கொண்ட தலைவர்கள் முள்ளிவாய்க்கால் சுடரேந்தும் நிகழ்ச்சியில் பாசக மாநிலத் தலைவர் அண்ணாமலையுடன் கலந்து கொண்டு நரேந்திர மோதிக்கும் அண்ணாமலைக்கும் பாராட்டுத் தெரிவித்தார்கள். இதை வன்மையாக எதிர்த்த நான் “மோதிக்கு முதுகு சொறிந்தால் தமிழீழம் மலர்ந்து விடாது” என்று ஒரு செவ்வியில் சொல்லியிருந்தேன்.

(தொடரும்)
தோழர் தியாகு

தாழி மடல் 271