(தோழர் தியாகு எழுதுகிறார் 251 : மீண்டும் வெண்மணி! – தொடர்ச்சி)

பெரியகுளத்தில் நடப்பது என்ன?

இனிய அன்பர்களே!

சென்ற 2023 ஆகத்து 5 சனிக் கிழமை காலை 7 மணியளவில் தேனி மாவட்டம் பெரியகுளம் கும்பக்கரை சாலையில் ஒரு மாந்தோப்பில் மாரிமுத்து – மகாலட்சுமி இருவரும் தூக்கில் தொங்கும் சடலங்களாகக் கண்டெடுக்கபட்டதும், இது கொலையா? தற்கொலையா? என்ற கேள்வியுடன் நீதிக்கான போராட்டம் தொடர்வதும் தாழி அன்பர்கள் அறிந்த செய்திகளே.

மாரிமுத்து வாழ்ந்து வந்த பகுதியைச் சேர்ந்த மக்கள் காவல்துறையின் நீதிமறுப்பைக் கண்டித்து அவரவர் வீடுகளில் கறுப்புக் கொடி ஏற்றியுள்ளனர். இதையொட்டி, அந்தப் பகுதிக்குச் சென்று வந்த தோழர் மதியவன் இரும்பொறை உள்ளிட்ட தோழர்களைப் பெரியகுளம் காவல்துறை தளைப்படுத்தியுள்ளனர். இதைக் கண்டித்துக் காவல் சித்திரவதைக்கு எதிரான கூட்டியக்கம் சார்பில் நான் வெளியுட்டுள்ள அறிக்கை இதோ –
:::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::

  • பெரியகுளத்தில் சாதி ஆணவக் கொலைக்கு எதிராகப் போராடிக் கைது செய்யப்பட்ட தோழர் மதியவன் இரும்பொறை உள்ளிட்ட தோழர்களை உடனடியாக விடுதலை செய்!
  • சாதி ஆணவக் குற்றவாளிகளுக்கு எதிராக எஸ்சி எஸ்டி வன்கொடுமை வழக்குப் போடு!

காவல் சித்திரவதைக்கு எதிரான கூட்டியக்கம் கோரிக்கை!

சென்ற 2023 ஆகத்து 5 சனிக் கிழமை காலை 7 மணியளவில் தேனி மாவட்டம் பெரியகுளம் கும்பக்கரை சாலையில் ஒரு மாந்தோப்பில் மாரிமுத்து – மகாலட்சுமி இருவரும் தூக்கில் தொங்கும் சடலங்களாகக் கண்டெடுக்கபட்டனர்.

இது ஒரு சாதி ஆணவக் கொலை என்று மாரிமுத்துவின் பெற்றோரும் ஊராரும் சந்தேகப்படுகிறார்கள். மகாலட்சுமியின் உடல் அவசரமாக எரிக்கப்பட்டு விட்டது. ஆனால் மாரிமுத்துவின் உடலை வாங்க மறுத்து அவரது தாய்தந்தையரும், குடும்பத்தினரும், தோழர் மதியவன் தலைமையிலான போராட்டக் குழுவினரும் போராடி வருகின்றனர். மாரிமுத்துவின் சடலமும் நீதிக்காகப் போராடிக் கொண்டிருக்கிறது.

மாரிமுத்து பட்டியல் சாதியைச் சேர்ந்தவர் என்பதாலும் அவருக்கு எதிராகக் குற்றம் புரிந்தவர்கள் பட்டியல் சாதியைச் சேராதவர்கள் என்பதாலும் சட்டப்படி இந்த வழக்கைப் பட்டியல் சாதி பட்டியல் பழங்குடி வன்கொடுமை (தடுப்பு) சட்டப்படி பதிவு செய்ய வேண்டும். மாரிமுத்துவின் தாயார் மாலையம்மாள் கொடுத்த முறைப்பாட்டை இவ்விடம் எசுஎசுடி வன்கொடுமைச் சட்டத்தில் பதிய மறுத்து தேனி மாவட்டம் பெரியகுளம் காவல்துறையினர் போராடும் மக்கள் மீது அடக்குமுறையை ஏவி விட்டுள்ளனர்.

ஒரு வாரத்துக்கு மேலாகியும் நீதி கிடைக்காத நிலையில் ஊர்மக்கள் தங்கள் இல்லங்களில் கறுப்புக் கொடி ஏற்றியதைக் காட்டி இன்று காலை தோழர் மதியவன் இரும்பொறையும் போராட்டக் குழுவில் உள்ள 13 தோழர்களும் கைது செய்யப்பட்டுள்ளனர். குற்றவாளிகளைக் காக்கவும் பொதுமக்களை அச்சுறுத்தவும் காவல்துறை இந்த அடக்குமுறையைக் கைக்கொண்டிருப்பதாக நம்புகிறோம்.

கைது செய்யப்பட்ட மதியவன் இரும்பொறை உள்ளிட்ட தோழர்களை உடனே விடுதலை செய்யுமாறும் –

மாரிமுத்து – மகாலாட்சி ஆணவக்கொலை தொடர்பாகப் பட்டியலின வன்கொடுமைத் தடுப்புச் சட்டத்தில் வழக்குப் பதிவு செய்து குற்றவாளிகளைக் கைது செய்து கூண்டிலேற்றுமாறும் –

காவல் சித்திரவதைக்கு எதிரான கூட்டியக்கம் சார்பில் கேட்டுக் கொள்கிறோம்.

 தியாகு, தமிழக ஒருங்கிணைப்பாளர்,

 காவல் சித்திரவதைக்கு எதிரான கூட்டியக்கம் (தமிழ்நாடு-புதுவை)

 சென்னை, 13. 08.2023.

(தொடரும்)
தோழர் தியாகு

தாழி மடல் 282