(தோழர் தியாகு எழுதுகிறார் 34 தொடர்ச்சி)

“The woods are lovely, dark and deep

But I have promises to keep,

And miles to go before I sleep.”  

இப்படி எழுதியவர் அமெரிக்கப் பாவலர் இராபருட்டு (Robert Frost). இந்த வரிகளைத் தன் படிப்பு மேசையில் எழுதி வைத்து நமக்கெல்லாம் தெரிய வைத்தவர் பண்டித சவகர்லால் நேரு.

தமிழில் இப்படிச் சொல்லலாமா?

கானகங்கள் அழகானவை, அடர்ந்து இருண்டு ஆழ்ந்து செல்பவை

ஆனால் யான் காப்பாற்ற வேண்டிய உறுதிகள் உள,

உறங்குமுன் யான் கடக்க வேண்டிய காதங்கள் பல.”

நேரு பிரான் என்ன உறுதிகள் கொடுத்தார்? அவற்றில் எவற்றைக் காப்பாற்றினார்? (காசுமீரத்தை நினைத்துக் கொள்கிறேன்). அவர் என்ன இலக்கு நோக்கி நடந்தார்? எவ்வளவு தொலைவு கடந்தார்? இந்த வினாக்களுக்கு விடை தேடுவது வரலாற்று மாணவர்களின் வேலை.

நேருவை விடுங்கள்; இராபருட்டு ஃபிராசுட்டின்(Robert Frost) பா வரிகளை மட்டும் எடுத்துக் கொள்ளுங்கள். இந்த வரிகளின் கருத்தை உள்வாங்கி என் நிலைக்குப் பொருத்திப் பார்க்க வேண்டிய இடத்தில்தான் நான் இருக்கிறேன்.

தாழி மடலின் உள்ளடக்கம் உருவம் பற்றிய கருத்துப் பரிமாற்றத்தில் எனது இந்த நிலையைப் புரிந்து கொள்ள வேண்டுகிறேன்.

தாழி மடல் குறித்து ஒரு கோணத்தில் மதுரையிலிருந்து தோழர் இரவிச்சந்திரனும் வேறு ஒரு கோணத்தில் தோழர் நலங்கிள்ளியும்  எழுதியவற்றை நேற்று படித்திருப்பீர்கள். அடிப்படையில் இரவியின் பார்வை எனக்கு இசைவானதாகப் படுகிறது.

+++

தாழி மடல் நான் முதலில் எதிர்பார்த்தை விட நீண்டு செல்வது மெய்தான். அது என் நேரத்தையும் உழைப்பையும் கூடுதலாக விழுங்குவதும் உண்மை. ஆனால் மடல் என்ற வடிவத்துக்குள் ஒரு நாளேட்டையே வெளியிடும் நோக்கத்துடன்தான் தாழி மடலைத் தொடங்கினேன். இதை முன்பே எழுதியும் உள்ளேன்.

ஏன்? நாட்டின் அரசியல் சூழலுக்கு ஈடுகொடுக்கும் படியாக நாம் ஒரு நாளேடு நடத்துவதுதான் நியாயமாக இருக்கும். குறைந்த செலவில் அல்லது செலவே இல்லாமல் இதைச் செய்ய மின்னஞ்சல் நமக்கு உதவுகிறது. முக நூல் போன்ற குமுக ஊடகங்களைப் பயன்படுத்துவதில் உள்ள இடர் உங்களுக்கே தெரிந்ததுதான், முகநூலில் 16 நாள் 16 இடுகைகளாகத்தான் ஈழம் தொடர்பான விவாத நூலாகிய “ஈழம் மெய்ப்படும்” எழுதி முடித்தேன். ஆனால் இப்போது அந்த நிலை இல்லை. அவ்வப்போது முகநூல் வெளி நம்மிடமிருந்து பறிக்கப்படுகிறது. வேறு பயன் கருதி அந்த வெளியிலும் இயங்க வேண்டியுள்ளது. வலைத்தளம், வலைப்பூ போன்ற வேறு சில களங்களும் இருப்பதாக அறிகிறேன். ஆனால் நான் தொழில்நுட்ப அறிவுக்கு எட்டிய வரை மின்னஞ்சல்தான் எளிய வழியாக எனக்குக் கைவருகிறது. தாழி மடல் செய்திகளை அன்பர்கள் எடுத்து வேறு ஊடக வடிவங்களில் பரப்ப எந்தத் தடையும் இல்லை.

 தாழி மடலில் வருகிற எல்லாச் செய்தியும் அனைவருக்கும் உரியதாக இருக்க முடியாது. ஒரு நாளேட்டில் பத்தாயிரம் வாசகர் படிக்க வேண்டியதும் இடம்பெறும். ஓராயிரம் பேர் படிக்க வேண்டியதுமிருக்கலாம். வெறும் நூறு பேருக்கு மட்டுமானதும் இருக்கலாம். தாழி மடலில் இடத்தை நிரப்புவதற்காகவே எதுவும் எழுதுவதில்லை என்பதில் உறுதியாக உள்ளேன். ஆனால் ஒரே ஓர் அன்பருக்காகப் பத்து பக்கம் எழுத வேண்டுமென்றாலும் எழுதுவேன்.

பெரும்பகுதி அனைத்து அன்பர்களும் படிக்க வேண்டியதாகவே இருக்கும் என்று உறுதியளிக்கிறேன்.

அறிவியல் கண்ணோட்டம் வளர்வதற்கான அரசியல் கல்வி புகட்டுவதுதான் தாழி மடலின் முதற்பணி. இந்தப் பணியை தாழி மடல் இப்போதுதான் மெதுவாகத் தொடங்கியுள்ளது. இராபருட்டு ஃபிராசுட்டு சொல்வது போல் இன்னும் கடக்க வேண்டிய காதங்கள் பல. இரண்டாவதாகக் கிளர்ச்சிப் பரப்புரை! இந்தப் பணியைச் செய்யாமல் தாழி  மடலின் வீச்சை விரைந்து விரிவாக்க முடியாது. இறுதியாக தாழி மடலை அமைப்புச் செயலியாக வளர்க்க வேண்டும். மா இலெனின் இசுக்குரா குறித்துச் சொன்னதுதான்! அரசியல் கல்வி, கிளர்ச்சிப் பரப்புரை, அமைப்பாக்கம் (EDUCATION, AGITATION AND ORGANIZATION) என்ற மூவழிப் பாதையைத் தோழர்கள் மறந்து விடக் கூடாது. இந்த முப்பெரும் கடமைகளை ஆற்ற தாழியால் மட்டும் முடியுமா? முடியாது. அது ஒரு கருவி மட்டுமே. கருவியை ஆள வேண்டிய கை நம்முடையது. இந்தக் கருவியைக் காத்துக் கூராக்கிச் செம்மையுறச் செய்வதைத் தாழி அன்பர்கள் தம் குமுகக் கடனாகக் கொள்ள வேண்டும்.

 எழுத்து, மொழியாக்கம், மீள் மொழியாக்கம், நூலாக்கம், சிறை இலக்கியம், செவ்வகராதி… என்று என்னிடம் எதிர்பார்க்கப்படும் பணிகளையெல்லாம் இரவிச்சந்திரன் பட்டியலிட்டிருந்தார். பெரும்பாலும் அப்படித்தான்! ஆனால் அவரது பட்டியலும் கூட முழுமையானதன்று. இத்தனையும் செய்து முடிக்க எனக்குக் காலம் இருக்குமா? தெரியாது. ஆனால் நான் கொடுத்த உறுதிகளுக்கு உண்மையாக இருக்க வேண்டும். எல்லாவற்றையும் ஒத்திப் போட இயலாது. இனி இயலாது. இன்னும் சில ஆண்டு, சில திங்கள், சில கிழமை, அல்லது சில நாள் மட்டும்தான் என்ற மனவுணர்வோடு பணியாற்றுவதையே கடமையாகக் கருதுகிறேன். எப்படியும் இது வாழ்வின் வசந்தப் பருவம் அல்லவே!

 மாணவப் பருவம் முதல் இந்த மாலைப் பருவம் வரை என் அரசியல் வாழ்வின் ஒரு முகன்மைக் கூறாகக் கருத்துச் சமர்கள் அமைந்துள்ளன. இந்த விவாதங்களின் களமாகவும் தாழி மடலை அமைத்துக் கொள்ள முடியும் என நம்புகிறேன். சில கணக்குகளை எனக்குத் தெரிந்த வரை முடித்தாக வேண்டும். எல்லையற்ற அறிவின் சில எல்லைக் கற்களையாவது தொடுவதுதானே அறிவியல்?

 தாழி மடலின் பயணம் நில்லாது தொடரும். குறுகத் தொடங்கிப் பின் அகன்று விரிந்து கிளைகள் பரப்பி வழிநெடுகப் பயன் விளைத்துச் செல்லும் காவிரி போல! பூம்புகார் வரை!

நலங்கிள்ளியும் மகிழனும் என் மீதும் தாழி மடல் மீதும் ஆழ்ந்த அக்கறையோடு சொல்லியிருக்கும் அறிவுரைகளின் உணர்வை உட்கொண்டுள்ளேன். ஆழத்தை விட்டுக் கொடுக்காமலே எளிமையும் சுருக்கமும் தாழி மடல் தனதாய்க் கொள்ள முயலும்.

இந்த உரையாடல் தொடரட்டும்!

(தொடரும்)

தோழர் தியாகு

தரவு :  தாழி மடல் 23