(தோழர் தியாகு பேசுகிறார்: இந்துச் சட்டம் இந்தியச் சட்டமானது எப்படி? – தொடர்ச்சி)

“பொதுக் குடியியல் சட்டம்” – புரட்டும் புரளியும் ! (4)

இனிய அன்பர்களே!

பொதுக் குடியியல் சட்டம் தொடர்பான உரையாடலை அது வேண்டுமா? வேண்டாமா? என்ற விவாதமாகச் சுருக்கி விட முடியாது, ‘எடு அல்லது விடு’ என்று முடிவு காண முடியாது.

ஆர்எசுஎசு – பாசக கும்பல் பொதுக் குடியியல் சட்டம் என்று சொல்கிறதே தவிர, அதற்கு எவ்வித விளக்கமும் தரவில்லை. வரைவு ஏதும் வெளியிடவில்லை. அவர்களின் நோக்கமும் நமக்குத் தெரியாததில்லை. ஆனால் இதைச் சொல்வது மட்டுமே பொதுக் குடியியல் சட்டம் பற்றி நேர்மையாகப் பேசுவோருக்கெல்லாம் விடையாகி விடாது. பொதுக் குடியியல் சட்டம் என்ற உரையாடலை ஆர்எசுஎசு-பாசக அரசியல் சூழ்ச்சி என்ற வட்டத்துக்கு வெளியிலும் நடத்த வேண்டும்.

சில ஆண்டுகளுக்கு முன் முத்தலாக்கை எதிர்த்து நீதிமன்றத்தில் வழக்காடி வெற்றி கண்ட முசுலிம் பெண்கள் சிலரை வாழ்த்தி முகநூலில் நான் எழுதியிருந்தேன். அந்த நேரம் முசுலிம் அன்பர்கள் சிலர் என்னிடம் வருத்தப்பட்டுக் கொண்டார்கள். ஓரிருவர் அந்தப் பெண்களை ஆர்எசுஎசு கைக்கூலிகள் என்றெல்லாம் கடுமையாகச் சாடியிருந்தார்கள். அவர்கள் ஆர்எசுஎசு உறுப்பினர்கள் என்றே வைத்துக் கொள்வோம், அவர்களுக்கும் மனித உரிமைகள், பெண்ணுரிமைகள் உண்டுதானே? என்று வாதிட்டிருந்தேன்.

எப்படிப் பார்த்தாலும், தலாக் தலாக் தலாக் என்று கணவன் மூன்று முறை சொன்னால் போதும், உறவு முறிந்து விடும் என்று சொல்லும் முத்தலாக்கிற்கு இசுலாத்தில் இடமில்லை, அதற்குக் குரானில் அனுமதியில்லை என்னும் போது முத்தலாக்கை ஏன் இசுலாத்தின் பெயரில் நியாயப்படுத்த வேண்டும்?

நமது உரையாடலை ஆழ்விரிவாக்கும் நோக்கில் பொதுக்குடியியல் சட்டம் குறித்துப் பெண்களின் பார்வையை விளக்கி புகழ்பெற்ற வழக்கறிஞரும், எழுத்தாளரும், மாந்தவுரிமைச் செயற்பாட்டளருமான நந்தித்தா அக்குசர் எழுதி NEWCLICK இணையத்தளத்தில் வெளிவந்த கட்டுரையின் தமிழாக்கத்தைப் பகிர்கிறேன். (அடுத்த பகுதியில் காணலாம்.)

(தொடரும்)
தோழர் தியாகு
தாழி மடல் 288