(தோழர் தியாகு எழுதுகிறார் : அமித்துசா வாயால் இனவழிப்பு பேசப்பட்டதா? – தொடர்ச்சி)

பொதுக் குடியியல் சட்டம்” – புரட்டும் புரளியும் ! (3)

காவிக் கூட்டத்தின் பொதுக் குடியியல் சட்டமும்

இசுலாமியப் பெண்ணுரிமையும்

பொதுக் குடியியல் சட்டம் பற்றிய தொடர் மடலுக்குச் செல்லுமுன்…

ஒருசில செய்திகளைப் பகிர வேண்டும்.

1) இந்த உரை யாடலில் சொத்துரிமை , வாரிசுரிமை போன்றவற்றுக்கான சட்டங்கள் பற்றிப் பேச வேண்டும் என்று விரும்பிய போது, தோழர் சமந்தா நக்குவெய்ன் மார்க்குசியப் பள்ளிக்குச் சென்று வந்த பின் அங்கு கற்றவற்றையும் பெற்றவற்றை யும் உரிமைத் தமிழ்த்தேசம் திங்களேட்டில் தொடராக எழுதினார்.

அந்தத் தொடரில் எழுதப்பட்ட 19ஆம் கட்டுரை “இந்திய முதலாளித்துவ வருக்கத்தின் சமூக-சட்ட அமைப்பு” பற்றியது. சிரசிரீ தாசுகுபுதா எடுத்த வகுப்பினை அடியொற்றி இக்கட்டுரையை சமந்தா எழுதியிருந்தார். நான் தாழி மடலில் இப்போதைய இந்தியக் குடியியல் சட்டத்தில் காணப்படும் இந்துச்சாய்வு பற்றி எழுதுவதற்கு முதன்மையாக அக்கட்டுரையில் கிடை க்கும் குறிப்புகளையே வழிகாட்டியாகக் கொள்கிறேன்.

2) உரிமை யியல் சட்டம் படித்த அன்பர்கள் நான் தந்துள்ள செய்திகளுக்குச் செறிவும் வலுவும் ஊட்டினால் நன்று. பிழைகள் இருந்து சுட்டிக் காட்டினாலும் மகிழ்வுடன் திருத்திக் கொள்வேன்.

3) முசுலிம் பெண்களில் ஒரு பிரிவினர் பொதுக் குடியியல் சட்டத்தை ஆதரிக்கிறார்களே? என்ற கேள்வியும் கேட்கப்படுகிறது. எதிர்ப்பது போலவே ஆதரிப்பதும் அவரவர் உரிமை . ஆனால் ஆதரிப்பதானாலும் எதிர்ப்பதானாலும் பொதுக் குடியியல் சட்டம் என்பதில் ஆர்எசுஎசு – பாசக சொல்ல வருவது என்ன? என்பதை முதலில் தெளிவாகத் தெரிந்து கொள்ளட்டும். ஏனென்றால் ஆர்எசுஎசு – பாசக, தாங்கள் முன்மொழியும் பொதுக் குடியியல் சட்டத்தின் வரைவு ஏதும் வெளியிட வில்லை . அது குறித்து முன்பின் முரணின்றிப் பேசவும் இல்லை . பொதுக் குடியியல் சட்டம் பற்றி வேண்டுமென்றே தெளிவின்றிப் பேசுகின்றார்கள் என்றுதான் கருத வேண்டியுள்ளது.

பொதுக் குடியியல் சட்டம் என்ற பெயரை மீண்டும் மீண்டும் உச்சரிப்பது மட்டுமே அது குறித்து ஒரு தெளிவான பார்வையை வெளிப்படுத்தி விடாது. இந்தப் பெயர் உச்சாடனத்தில் மயங்கிப் போன சிலரில் இசுலாமியப் பெண்களும் இருக்கட்டும். இசுலாமியத் தனியாள் சட்டம் குறையே இல்லாதது என்று நாம் கருதவில்லை . அந்தச் சட்டத்தில் என்ன திருத்தங்கள் வேண்டும் என்று இசுலாமியப் பெண்கள் உள்ளிட்ட முசுலிம் குடியாட்சிய ஆற்றல்கள் குரல் கொடுக்க வேண்டுமே தவிர தலையும் வாலும் தெரியாத ஆர்எசுஎசு-பாசக பொதுக் குடியியல் சட்டத்தை ஆதரிக்கத் தேவை இல்லை . இசுலாமியரல்லாத பொதுவான குடியாட்சிய ஆற்றல்களும் இசுலாமியத் தனியாள் சட்டத்தில் செய்ய வேண்டிய சீர்திருத்தங்களை முன்மொழியலாம். ஆர்எசுஎசு – பாசகவின் பொதுக்குடியியல் சட்டப் பேச்சை எதிர்க்க வேண்டும் என்பதற்காக எவ்வகை யிலும் இசுலாமிய அடிப்படை யியலை நியாயப்படுத்த வேண்டும் என்ற தேவையில்லை . நாம் பொதுவாக இசுலாத்துக்குள்ளிருந்து எழும் சீர்த்திருத்தக் குரலை ஆதரிக்கவே செய்கிறோம். அதே போது பாசிச ஆர்எசுஎசு – பாசக சூழ்ச்சிக்கு இரையாகி விடாதீர்கள் என்று எச்சரிக்கவும் செய்கிறோம். பொதுக் குடியியல் சட்டத்துக்கு எதிராக மட்டுமல்ல, ஆதரவாகவும் யார் எழுதியனுப்பினாலும் தாழி மடலில் வெளியிட்டு உரையாடலை ஆழ்விரிவாக்கவே விரும்புகிறேன்.

சரி, நேற்று விட்ட இடத்திலிருந்து தொடர்கிறேன்.

தொடரும்)
தோழர் தியாகு
தாழி மடல் 286