(பூங்கொடி 20 – கவிஞர் முடியரசன்: புற்றரைக் காட்சி – தொடர்ச்சி)

பூங்கொடி

கோமகன் ஆவல்

மானிகர் விழியாள் மலர்வனம் புகுசொல்

தேனெனப் பாய்ந்தது திருமகன் செவியில்;

‘ஒண்டொடி அவள்மன ஒப்புதல் பெற்றுத்

தண்டமிழ் நிகர்க்கும் தையல் கொழுநன்

ஆவேன் யான்’ என ஆவல் துரப்பக்

காவிற் புகுந்துள பாவையைக் காண்பான்

வில்விடு அம்பென விரைந்தனன் கோமகன்;

பூங்கொடி வெருவுதல்

புகுவோன் றன்னைப் பூங்கொடி நோக்கி

‘இகுளை! இம்மகன் என்மேற் காதல்      60

மிகுமனத் தானென மேலொரு நாளில்

தேன்மொழி அனையிடம் செப்பக் கேட்டுளேன்

யானிவண் செய்வது யாது’என. நடுங்கினள்;

படிப்பகம் புகுதல்

அல்லி வெருவி ஆங்குள படிப்பகம்

அதனுட் புகுகென அரிவையைக் கடத்தித்

தான்வெளிப் புறத்தே தனிமையில் நின்றனள்,

கோமகன் காமவுரை

காமம் என்னுங் கடுவிட நாகம்

செக்கர் மாலைத் தென்றலின் இசையால்

பக்கம் நின்று படம்விரித் தாடித்

தீண்டஅப் பெருமகன் சிறுகுணம் மேவி

நீண்ட உயிர்ப்பொடும் நெருங்கி வருவோன்

கனிமொழி அல்லியைக் கண்களில் நோக்கித்

‘தனிவெளி நின்றாய்! தந்திரம் அறிவேன்.

நனிஎழில் நங்கைஎன் காதல் நலத்தை

உணரும் ஆற்றல் உற்றனள் கொல்லோ?

புணர்மணம் கொள்ளாள் பொதுநலம் பேணி

இளமை கழித்திடல் ஏனோ? வாழ்வெனும்

குளம்பெறு மலராம் கூடிய இளமை,

மலர்மணம் வீச மனங்கரு தாமல்

அலரின் கொடியை அறுத்திடல் நன்றாே?

இன்பத் துறவு துன்ப விடுதலை

ஈயுந் திறத்ததோ இதழ்கள் எத்துணை

ஆயிரம் இருப்பினும் தோயுறும் மதுவைக்

காத்திட வல்லதோ பூத்தநற் றாமரை:

ஆர்த்திடும் சுரும்பினம் அருந்துதல் உறுதி;    85

பொறிகளின் கதவைப் பூட்டி வைப்பின்

நெறிதடு மாறி நெஞ்சங் கலங்கும்;

(தொடரும்)

கவிஞர் முடியரசன், பூங்கொடி