(தோழர் தியாகு எழுதுகிறார் : மாரிமுத்து புதைகுழியில் உறங்குகிறார்!-தொடர்ச்சி)

சென்னை உயர்நீதிமன்ற நீதியராகப் பணியாற்றி

ஓய்வுபெற்ற அன்பர் சந்துரு எழுதுகிறார்…
(தமிழாக்கம்: நலங்கிள்ளி)

கீழ்வெண்மணித் தீர்ப்பு: மீளாய்வு தேவை!
(கீழ்வெண்மணியில் 52 ஆண்டு முன்பு நடந்தது என்ன?)

“நேற்று வரை நாங்கள் கொடுத்ததை வாங்கிச் சென்று கொண்டிருந்தவர்கள் இன்று எகிறுவது எப்படி?”
வேளாண் தொழிலாளர்களுக்கு எதிரான அக்கிரமங்களுக்கும் சாணிப் பால் – சவுக்கடிக்கும் செங்கொடிச் சங்கம் முடிவு கட்டிய பின்னர் தன் ஆதிக்கத்தை நிலைநிறுத்த விரும்பிய ஒரு நிலக்கிழாரின் பிதற்றலிலிருந்து எல்லாம் தொடங்கியது.

உலகெங்கும் சமூகவியலர்கள் கீழ்வெண்மணிக் கொலைகள் பற்றி ஏராளமான கட்டுரைகள் எழுதியுள்ளனர். கவிஞர்களின் கொந்தளிப்புகள் பற்பல கவிதைகளாயின. சில புதினங்களும் வெளிவந்துள்ளன. குற்றஞ்சாட்டப்பட்டவர்களைத் தண்டனையின்றி விடுவித்ததற்கு உயர் நீதிமன்றத்தையும் உச்ச நீதிமன்றத்தையும் பலரும் குற்றஞ்சாட்டியுள்ளனர். உயர் நீதிமன்றத் தீர்ப்பு சாத்தியமானது எப்படி? அதில் கண்ட முரண்பாடுகளும், உச்ச நீதிமன்ற மேல்முறையீட்டிலான வழக்கு நடவடிகைகளும் இது வரை பதிவு செய்யப்படவில்லை. அதற்கு முன்பு ஒரு சிறிய பின்னோட்டம்:

காங்கிரசு கட்சியின் 15 ஆண்டு ஆட்சி 1967 தேர்தலுடன் முடிவுக்கு வந்தது. அண்ணா தலைமையிலான திமுக முன்னணி மாபெரும் வெற்றி பெற்றது; அண்ணா 06.03.1967 அன்று தமிழ்நாட்டின் முதலமைச்சரானார். புதிய சட்டப் பேரவையில் மார்க்குசியப் பொதுவுடைமைக் கட்சி 11 இடங்கள் வென்றது. திருவாளர்கள் கே. ஆர். ஞானசம்பந்தம், பி.எசு. தனுசுக்கோடி கிழக்கு தஞ்சாவூரிலிருந்து மார்க்குசியப் சட்டப் பேரவை உறுப்பினர்களாகத் தேர்ந்தெடுக்கப்பட்டனர்.

கீழத்தஞ்சையில் விவசாயத் தொழிலாளர் சங்கம் கூலி உயர்வு கேட்டு இயக்கம் தொடங்கியது. அது வரை, ஒரு நெற்கலம் (144 நாளி/இலிட்டர்) அறுவடை செய்தால், 6 இலிட்டர் கூலியாகத் தரப்பட்டது. அவர்கள் இன்னுமோர் அரை இலிட்டர் கேட்டனர். அவர்கள் கூலி உயர்வு மட்டும் கேட்கவில்லை, பல பிடித்தங்களையும் நிறுத்தச் சொல்லிக் கேட்டனர்.

தோழர்கள் சங்கரய்யா, ஏ. பாலசுப்பிரமணியம் ஆகியோர் 1967இல் வேளாண் தொழிலாளர்கள் சார்பாக முதலமைச்சர் அண்ணாவைச் சந்தித்து, குறுவை அறுவடைக் காலத்தின் போது, கீழத்தஞ்சை கொதி நிலையில் இருப்பதாக முறையிட்டனர். கூலிப் பூசலை பேச்சுவார்த்தை மூலம் தீர்ப்பதற்கு மாநில அரசு தலையிட வேண்டுமெனக் கோரினர்.

போராட்டத்தை முறியடிக்க நிலஉடைமையாளர்கள் புதிய நுட்பங்களைக் கண்டுபிடித்துக் கொண்டிருந்தனர். அவர்கள் நில உடைமையாளர்கள் கூட்டமைப்பு என்ற பெயரை நெல் உற்பத்தியாளர் சங்கம் என்று மாற்றினர். இந்தப் புதிய அமைப்புக்கு இரிஞ்சூர் கோபாலகிருட்டிண நாயுடு தலைவரானார்.

சிறப்பு ஆயுதப் படை தஞ்சாவூர் மாவட்டத்துக்கு அனுப்பி வைக்கப்பட்டது. பூந்தாழங்குடி ஊரில் ஏற்றப்பட்டிருந்த செங்கொடியைச் சிலர் அகற்ற முயன்றதை வேளாண் தொழிலாளர்கள் தடுக்க முயன்ற போது, காவல்துறைத் துப்பாக்கிச் சூட்டுக்கு ஒருவர் பலியானார். போராட்டம் அதிகரித்துச் சென்றதன் காரணமாகத், தஞ்சாவூர் மாவட்ட ஆட்சியர் இரங்கபாசியம் முத்தரப்புப் பேச்சுவார்த்தைக்கு ஏற்பாடு செய்தார். இடைக்கால நடவடிக்கையாகக், கூலியில் அரை நாளி/இலிட்டர் உயர்வு கொடுக்கலாம் என்றும், 6 நாளி/இலிட்டர் கொடுத்த இடங்களில் அதனையே தொடரலாம் என்றும், எதிர்காலத்தில் கூலிப் பூசலை முடித்து வைப்பதற்கு மாநில அரசு ஆணையம் ஒன்றை அமைக்க வேண்டும் என்றும் முடிவானது.

நில உடைமையாளர்களும் அரசு அதிகாரிகளும் இந்த ஒப்பந்தத்தைச் செயல்படுத்துவதற்கு ஒத்துழைப்பு தரவில்லை. நில உடைமையாளர்கள் கூலி உயர்வு கொடுக்க மறுத்த சில இடங்களில் வேளாண் தொழிலாளர்கள் கட்டாய அறுவடை செய்து, தங்களுக்குரிய கூலியை எடுத்துக் கொண்ட பிறகு, மீதத்தைக் கதிரடிக்கும் தளத்திலேயே விட்டுச் சென்றனர். அதே நேரம், விவசாயத் தொழிலாளர் சங்கத்தின் கிளைத் தலைவர் சின்னப்பிள்ளை கடத்தப்பட்டுக் கொல்லப்பட்டார். வேளாண் தொழிலாளர்களின் கூலிப் பூசலை முடிவு செய்வதற்கு முத்தரப்புப் பேச்சுவார்த்தை நடத்த அரசு மறுத்து விட்டது.

பேச்சுவார்த்தை மூலம் கூலிப் பூசலைத் தீர்ப்பதற்குப் பதிலாக, அரசு காவல் படைகளை அனுப்ப முயன்று கொண்டிருந்தது. எதிர்ப்புப் போராட்டங்களில் நூற்றுக் கணக்கானாரைக் கைது செய்து, சிறையில் அடைத்தது. கீழ் வெண்மணி ஊர் கீவளூர் காவல் உட்கோட்டத்தில் இருக்கிறது. அந்தக் கோட்டத்தில் மட்டும் 12 சரக்குந்துகளில் காவல் படை கொண்டுவந்து இறக்கப்பட்டது. மார்க்குசியத் தலைவர் பி.இராமமூர்த்தி வேளாண் தொழிலாளர்களுக்குப் போதிய பாதுகாப்பு இல்லையென அரசை எச்சரித்தார். மேலும் அவர், “எங்கள் தொழிலாளர்களுக்கு அரசு பாதுகாப்புத் தரவில்லை என்றால், நாங்களாகவே தொண்டர் படை அமைத்து எங்களை நாங்களே காத்துக் கொள்வோம்.” என்றும் எச்சரித்தார். 15.11.1968 அன்று சிக்கில் கிராமத்தைச் சேர்ந்த தோழர் பக்கிரியின் கொலையைக் கண்டிக்கும் வகையில், தேவூர், திருவாரூர், இலுப்பூர், கருவேலி, ஆவூராணி, சிக்கில், புதுச்சேரி, மஞ்சக்கொல்லை ஆகிய ஊர்களில் கண்டனக் கூட்டங்கள் நடத்தப்பட்டன.

நெல் உற்பத்தியாளர் சங்கமும் இரிஞ்சூர் கோபாலகிருட்டிண நாயுடுவும் வேளாண் தொழிலாளர்களைத் தாக்குவதற்கு 25.12.1968 என்று நாள் குறித்தமைக்குக் காரணங்கள் இருந்தன. அந்த நேரத்தில், மார்க்சியப் பொதுவுடைமைக் கட்சியின் 8ஆவது அனைத்திந்திய மாநாடு கொச்சியில் திசம்பர் 23 முதல் 29 வரை நடைபெற்றது. இரு சட்டப் பேரவை உறுப்பினர்கள் உட்பட, விவசாயிகள் சங்க, விவசாயத் தொழிலாளர் சங்கத் தலைவர்கள் அனைவரும் கொச்சி மாநாட்டுச் சார்பாளர்களாகச் சென்றிருந்தனர். இது நில உடைமையாளர்கள் தமது சதித் திட்டத்தை நிறைவேற்றுவதற்கு வசதியாகிப் போனது.

திசம்பர் 25ஆம் நாள் இரவு 10 மணிக்குச் சட்ட விரோதக் கும்பல் ஒன்று கீழ்வெண்மணியில் 30 குடிசைகளுக்குத் தீ வைத்தது. இராமையாவின் குடிசையில் ஒளிந்திருந்த பெண்கள் உட்பட 44 பேர் குடிசைக்குள்ளேயே தீக்கிரையாயினர். அந்தப் பக்கமாக வந்தவர்கள் துப்பாக்கிகளால் சுடப்பட்டனர். சிலர் அரிவாள், சுளுக்கி, தடி ஆகியவற்றால் தாக்கப்பட்டுப் படுகாயமடைந்தனர். துப்பாக்கிச் சூட்டுக்குள்ளான முனியன் (அரசுத் தரப்புச் சாட்சி 1) அளித்த முறைப்பாட்டில், தாக்க வந்த கூட்டத்தில் நெல் உற்பத்தியாளர் சங்கத் தலைவர் கோபாலகிருட்டிண நாயுடுவும் இருந்ததாகக் குறிப்பிட்டார். இந்தத் தீவைப்பில் வெளியிலிருந்து அறுவடைக்காகக் கூட்டி வரப்பட்ட வேளாண் தொழிலாளர் பக்கிரிசாமி என்பவரும் கொல்லப்பட்டார்.

இந்த அதிர்ச்சிச் செய்தியைப் பெற்ற முதலமைச்சர் அடுத்த நாளே காவல்துறைத் தலைமை ஆய்வாளர், துணைத் தலைமை ஆய்வாளர், மாவட்டக் கண்காணிப்பாளர் ஆகியோரைக் கீழ்வெண்மணிக்கு அனுப்பி வைத்தார். மார்க்குசியக் கட்சி மாநாட்டில் இருந்ததால், தஞ்சை விவசாயத் தொழிலாளர் சங்கத் தலைவர்களால் திரும்ப முடியவில்லை. கீழ்வெண்மணிக்கு உடனடியாகத் திரும்பிய பி. இராமமூர்த்தி சம்பவ இடத்தைப் பார்வையிட்டுக் கடும் கண்டன அறிக்கை வெளியிட்டார். உள்ளூர்க் காவலர்கள் மேல் அதிருப்தி நிலவியதால் முதல் தகவல் அறிக்கை 327/1968 அடிப்படையிலான புலனாய்வு 01.01.1969 அன்று மத்தியக் குற்றப் பிரிவுக்கு மாற்றப்பட்டது.

நெல் உற்பத்தியாளர் சங்கத்தின் இரிஞ்சூர் கோபாலகிருட்டிண நாயுடு முதல் குற்றவாளியாகச் சேர்க்கப்பட்டார். மற்ற 22 பேர் மீதும் குற்றப் பத்திரிகை அளிக்கப்பட்டது. கீழத்தஞ்சை அமர்வு நீதியர் முன்பு விசாரணை தொடங்கியது. அந்த வழக்கில் கோபாலகிருட்டிண நாயுடு, அவரது நெருங்கிய உறவினர்கள் ஆகியோருக்கு எதிராக இதச பிரிவு 302, ஆயுதச் சட்டம் ஆகியவற்றின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டது.

அதே நேரத்தில், கீவளூர் காவல் நிலையத்தில் தீவைப்பில் இறந்த பக்கிரிசாமி மரணத்துக்கு எதிராக முதல் தகவல் அறிக்கை 328/1968 பதியப்பட்டது. இவ்விரு வழக்குகளும் அமர்வு நீதியர் சி.எம். குப்பண்ணன் முன்பு விசாரணைக்கு வந்தது. பக்கிரிசாமி மரணம் தொடர்பான முதல் வழக்கைப் பொறுத்த வரை, கோபாலுக்கும் (எ1), மற்ற 22 பேருக்கும் எதிராகக் கொலைக் குற்றம் சாற்றப்பட்டது. அவ்வழக்கில், கோபாலுக்கு ஆயுள் சிறைத் தண்டனை வழங்கப்பட்டது. இரண்டாம் எதிரி இராமையாவுக்கு 5 ஆண்டும், மற்ற நால்வருக்கு 2 ஆண்டும் கடுங்காவல் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டது. 8 பேர் விடுவிக்கப்பட்டனர். அவ்வழக்கில் 78 சான்றர்கள் விசாரிக்கப்பட்டனர்.

(தொடரும்)
தோழர் தியாகு
தாழி மடல் 293