(தோழர் தியாகு எழுதுகிறார் 35 தொடர்ச்சி)

சொல்லடிப்போம், வாங்க!

கலைச் சொல்லாக்கம் என்பது அறிவியல் கல்விக்கு இன்றிய மையாதது. இயற்கை அறிவியல் ஆனாலும் குமுக அறிவியல் ஆனாலும் கலைச் சொற்களைத் தவிர்த்துப் பயிலவோ பாடம் சொல்லவோ முடியாது. ஒவ்வொரு மொழியும் அடிப்படையான ஒரு சொற்களஞ்சியத்தைக் கொண்டு இயங்குகிறது. சொற்களஞ்சியத்தின் செழுமை மொழிவளத்தைப் புலப்படுத்தும்.

ஆனால் எவ்வளவுதான் வளம்பொருந்திய மொழி என்றாலும் அறிவியல் வளர்ச்சிக்கு ஈடு கொடுக்கப் புதிய சொற்கள் வார்க்க வேண்டிய தேவை எழுந்தே தீரும். அப்படிச் செய்யும் போது அந்தந்த மொழிக்கும் உரிய சொல்லமைதிக்கு இணங்க புதிய சொற்களை அமைக்க வேண்டும். காலந்தோறும் வளர்ந்து செல்லும் அறிவியலின் தேவைகளுக்கு ஈடு கொடுக்கும் வகையில் சொல்லாட்சியில் மாற்றங்கள் செய்யத் தயங்கக் கூடாது.

கலைச் சொல்லாக்கம் குறித்து பிரெடெரிக்கு எங்கெல்சு மூலமுதல் முன்னுரையில் சொல்லியிருப்பதைப் பிறகு எடுத்துக்காட்டுவேன். மூலமுதல் தமிழாக்கத்தின் போக்கில் எனக்கு ஏற்பட்ட பட்டறிவும் சுட்டத் தகும். தேவையைப் பொறுத்து இந்த உரையாடலின் போக்கில் தக்க எடுத்துக் காட்டுகளோடு இவை குறித்தெல்லாம் பேசலாம்.

புதிய கலைச் சொற்களை வார்த்தல் அல்லது வடித்தல் என்பதை ஆங்கிலத்தில் COINING என்பர். தமிழில் நான் “சொல்லடித்தல்” என்கிறேன். வேறு சொல்லடிப்பதானலும் அடியுங்கள், காய்ச்சி அடியுங்கள்.

தாழி மடலில் சொல்லடிக்க ஓரிடம் ஒதுக்கி வைப்போம். நாள் தவறாமல் என்று உறுதியாகச் சொல்ல முடியாவிட்டாலும் தொடர்ந்து சொல்லடிப்போம்!

மொழியாக்கம் என்பது வெறும் மொழிபெயர்ப்பு அன்று, அது சிக்கல்களைத் தீர்த்துச் செல்லும் செயல்வழி (It is a process of problem-solving) என்று மூலமுதல் தமிழாக்கப் பதிப்பாசிரியர் இரா. கிருட்டிணையா  சொல்வார். ஒவ்வொரு சிக்கலாகத் தீர்க்கப் பார்ப்போம்.

  • 1.நவ-தாராளவாதமா? புதுத் தாராளியமா?
  •  2. அண்மையில் நவம்பர் 25ஆம் நாள் தோழர் ஏ.எம்.கே நினைவு நாளில் சென்னையில் பாட்டாளி வர்க்க சமரன் அணியின் சார்பில் நடைபெற்ற நூல் வெளியீட்டு விழாவில் கலந்து கொண்டு பேசினேன். வெளியிடப்பெற்ற நூலின் தலைப்பு: நவ-தாராளவாத ஏகாதிபத்தியம்: முதலாளித்துவப் பேரழிவின் உச்சக்கட்டம். இரு பாகங்களாக வெளியிடப் பெற்ற இந்நூலின் பேசுபொருள் குறித்து ஈண்டு நான் அலசப் போவதில்லை. இந்நூலின் சொல்லாட்சி, குறிப்பாக அதன் தலைப்புதான் சொல்லடிக்கும் முனைப்பில் நம் கவனம் கோரி நிற்கிறது.   
நவ-தாராளவாதம் என்பதில் நவம், தாராளம், வாதம் என்ற மூன்று பகுதிகள் உள்ளன. இவற்றில் முதலும் கடைசியும் தமிழல்ல. நவம் என்பதற்கு இரு பொருள் உண்டு. நவசக்தியில் புதியது. நவராத்திரியில் ஒன்பது. தாராளம் தமிழ்தான். நவம் என்பதற்கு புது என்ற தமிழ்ச் சொல் இருக்க நவம் என்ற பிறமொழிச் சொல் எதற்கு? புதுத் தாராளவாதம் என்று சொல்லலாம்தானே? ஆங்கிலத்தில் வரும் …ism வாதம் ஆகிறது. இதுவும் தேவையற்றதே! “…இயம்” என்ற பின்னொட்டு போதுமானது. நவ-தாராளவாதம் என்றும் புதுத் தாராளியம் என்றும் மாறி மாறிச் சொல்லிப் பாருங்கள். எது வாய்க்கு வழங்குகிறது? தமிழ்ச் சொற்கள்தாம் தமிழ் நாவில் இயல்பாகத் தவழும். நாவில் தேன் தடவலாம். மருந்தையும் தேன் கலந்து தடவலாம். ஆனால் கல்லைப் போட்டு உருட்ட முடியாது.  

தாராளவாதம் என்பதில் பிற்பாதி தமிழன்று என்பது மட்டுன்று. அது ஒரு வாதமில்லை. Capitalism என்பது போல் அது ஓர் அமைப்பு அல்லது முறைமை. முதலாளித்துவம் அல்லது முதலாளியம் என்பதை முதலாளிவாதம் அல்லது மூலதன வாதம் அல்லது முதல்வாதம் என்று சொல்ல முடியாது அல்லவா? ‘(இ)லிபரலிசம்’ என்பது ஓர் அமைப்பு அல்லது முறைமை. அஃது ஒரு வாதமாகவும் இருக்கலாம், ஆனால் வெறும் வாதமன்று. அடிப்படையில் ஒரு கட்டமைப்பு, புறஞ்சார்ந்த கட்டமைப்பு (objective structure). அதற்கு ஆதரவான கொள்கை என்பது பிறகுதான்.

வாதம் வேண்டா, இயம்தான் என்றாலும் தாராளவியம் என்றுதானே சொல்ல வேண்டும், ஏன் தாராளியம் என வேண்டும்? தாராளம் + இயம் = தாராளவியம். சரிதான். மாற்றாக, தாராளியம் என்று சொல்லவும் புணர்ச்சி இலக்கணத்தில் இடமுண்டு. இரண்டில் எது என்பதை ஒலிநயம் சார்ந்து முடிவு செய்யலாம்.

புதுத் தாராளியம் என்கிறேன். புதுத் தாராளவியம் என்று வேண்டுமானாலும் சொல்லுங்கள். நவ-தாராளவாதம் வேண்டாவே!

தாராளியம் என்பதில் இலக்கணப் பிழையில்லை என்று அன்பர் இலக்குவனார் திருவள்ளுவன் சொல்கிறார். அருங்கலைச் சொல் அகர முதலியில் அருளியர் liberalism என்பதற்குத் தாராளிகம் என்று பொருளுரைக்கிறார்.

சொற்கள் எழுத்துகளின் செயற்கையான வெறும் சேர்க்கையன்று. அவற்றுக்குள் வரலாறு உறைந்துள்ளது. Liberal என்ற சொல்லின் வரலாறு தெரிந்தால்தான் liberalism சரியாகத் தமிழுக்கு வரும். புதுத் தாராளவாதம் என்ற ஒன்று உண்டென்றால், பழைய தாராளவாதம் இருந்திருக்க வேண்டுமே? அந்த வரலாறு தெரியாமல் இந்தச் சிக்கலைத் தீர்க்க முடியாது. பார்ப்போம்.

(தொடரும்)

தோழர் தியாகு

தரவு :  தாழி மடல்