தோழர் தியாகு எழுதுகிறார் : கீழ்வெண்மணித் தீர்ப்பு: மீளாய்வு தேவை! – அன்பர் சந்துரு 3/4
சென்னை உயர்நீதிமன்ற நீதியராகப் பணியாற்றி ஓய்வுபெற்ற அன்பர் சந்துரு எழுதுகிறார்.
(தமிழாக்கம்: நலங்கிள்ளி)
கீழ்வெண்மணித் தீர்ப்பு: மீளாய்வு தேவை! – 3/4
இந்த வழக்கில் முதல் எதிரியான கோபாலகிருட்டிண நாயுடு கையெழுத்திட்டு நெல் உற்பத்தியாளர் சங்கம் அனுப்பியதாகக் கருதப்படும் கடிதத்தை ஓர் ஆவணமாக வழக்கு விசாரணையின் போது அமர்வு நீதியர் முன்பு அரசு வழக்குரைஞரோ எதிர்த்தரப்பு வழக்குரைஞரோ அளிக்கவில்லை. இயல்பாக, சான்றாவணம் விசாரணை நீதிமன்றம் முன்பு அனிக்கப்படாத போது, மேல்முறையீட்டு நீதிமன்றம் கூடுதல் சான்று எடுத்துக் கொள்ள விரும்புமானால், அதற்கு 1898 குற்றவியல் நடைமுறைச் சட்டத்தின் கீழ் ஒரு நடைமுறை உள்ளது. (அந்த நேரத்தில் 1973ஆம் ஆண்டின் புதிய குற்றவியல் நடைமுறைச் சட்டம் இல்லை.) குற்றவியல் நடைமுறைச் சட்டம் பிரிவு 428 கூடுதல் சான்று பெற்றுக் கொள்வதற்கான வழிமுறையைக் குறித்துரைக்கிறது. இருநீதியர் ஆயம் இப்படி எந்த நடைமுறையையும் கடைப்பிடிக்க வில்லை.
மறுபுறம், மேற்சொன்ன கடிதம் எதிரி கோபாலகிருட்டிண நாயுடு சார்பாக உயர் நீதிமன்றம் முன்பு அளிக்கப்பட்ட தட்டச்சுத் தொகுதியில் சேர்க்கப்பட்டது. அக்கடிதம் எப்படி, ஏன் கோப்பில் எடுத்துக் கொள்ளப்பட்டது எனப் பதிவு கூட செய்யாமலே அக்கடிதத்தின் உள்ளடக்கத்தை நீதியர்கள் தாராளமாகப் பயன்படுத்திக் கொண்டனர்.
எதிரியால் மேல்முறையீட்டு நீதிமன்றத்தில் முன்வைக்கப்பட்டு ஏற்றுக் கொள்ளப்பட்ட எதிர் வாதத்துக்கு அடிப்படையாக அக்கடிதம் அமைந்தது. அது முதல் தடவையாக எதிரிக்கு ஆதரவான உருப்படியான சான்றாக அமைந்தது. இந்தக் கடிதம் ஒன்றுக்கு மேற்பட்ட இடங்களில் எடுத்துக்காட்டப்பட்டு, மார்க்குசியப் பொதுவுடைமைத் தலைமையிலான விவசாயத் தொழிலாளர் சங்கத்தைத் தாக்குவதற்குப் பயன்படுத்திக் கொள்ளப்பட்டது. இருநீதியராயம் பின்வருமாறு உரைத்தது:
“நாகப்பட்டினம் வட்ட நெல் உற்பத்தியாளர்கள் சங்கத்தின் தலைவரான முதல் எதிரிக்கும் இட(து) பொதுவுடைமை உழவர்களுக்கும் இடையே கசப்புணர்வு இருந்ததை நாங்கள் ஏற்கெனவே குறிப்பிட்டுள்ளோம். முதல் எதிரி தன் உயிருக்கு ஆபத்து இருப்பதாகவும், இட(து) பொதுவுடைமையினர் தன்னைக் குற்றத்தில் தவறாகச் சேர்ப்பதற்கு முயன்று கொண்டிருந்ததாகவும் கூறி அச்சம்பவத்துக்கு சில நாள் முன்பு தமிழ்நாடு முதலமைச்சருக்கு அனுப்பிய மனுக்களையும் நாங்கள் குறிப்பிட்டுள்ளோம். ஒருவருக்கு ஒருவர் இடையில் சந்தேகமும் பகைமையும் நிறைந்த இந்த மனநிலையில் இவ்வழக்கில் முதல் எதிரியை உட்படுத்தி, 42 அப்பாவி ஆண்கள், பெண்கள், குழந்தைகள் மீதான மோசமான கொலைக் குற்றத்தையும், துப்பாக்கி, அருவாள், சுலுக்கி அல்லது கம்புகள் கொண்டு பலருக்கும் காயம் ஏற்படுத்திய குற்றத்தையும் அவர் மேல் சுமத்தலாம் என்ற ஆசை உழவர்களுக்கு ஏற்பட்டிருக்க வேண்டும். ஒரு பொதுவுடைமையரின் மரணம் தொடர்பாகப் பக்கத்து ஊருக்குப் பல முக்கிய பொதுவுடைமைத் தலைவர்கள் வந்திருந்தனர். அவர்கள் கீழ்வெண்மணியில் நடைபெற்ற துயரம் தொடர்பாகப் பெரிதும் உணர்ச்சிவசப்பட்டிருப்பார்கள். அந்தத் தலைவர்கள் காயமுற்றவர்களைச் சந்திக்கச் சென்றதை மெய்ப்பிக்கச் சான்று உள்ளது. இந்தச் சூழ்நிலையில், கிசான் இயக்கத்தின் முதல் பகைவரைக் குற்றத்தில் உட்படுத்துவதற்கு அரசுத் தரப்பு 5ஆம் சாட்சியால் முடியாமற் போனதால் கிசான் தலைவர்களுக்கு ஏமாற்றமும் மன உளைச்சலும் ஏற்பட்டிருக்க வேண்டும். இந்தச் சூழலில்தான் எல்லாக் கேடுகளுக்கும் முதல்வனாக முதல் எதிரி கோபாலகிருட்டிண நாயுடுவைக் குறிப்பிட்டு, அவரைத் தொடர்ந்து 30 – 40 பேரைப் பெயரின்றி விட்டுவிட்டு அநேகமாக 26.12.1968 மாலையில் முதல் சான்றாவணத்தைத் தயாரித்திருக்க வேண்டும்.”
நீதியர்கள் சொல்லும் ஏரணத்தின் படி, நெல் உற்பத்தியாளர்கள் சங்கம் விவசாயத் தொழிலாளர் சங்கத்துக்கும் அதன் தலைவர்களுக்கும் எதிராகச் சில குற்றச்சாட்டுகள் கூறி முதலமைச்சருக்கு அனுப்பிய மனு வேதவாக்காக இருக்கும் போதே, துயரப்பட்டவர்கள் செய்த முறைப்பாடு துன்ப நிகழ்வுக்குப் பின் உடனே தொழிலாளர்களைப் பார்க்கச் சென்ற மார்க்குசியத் தலைவர்களால் உள்நோக்கங்களுடன் திருத்தப்பட்டதாக இருக்க வேண்டுமாம். ஒருபுறம் முதல் எதிரி கோபாலகிருட்டிண நாயுடு, மற்றும் அவருடைய ஆதரவாளர்களுக்கும் மறுபுறம் விவசாயத் தொழிலாளர் சங்கத்துக்கும் பகைமை இருந்தது என்ற முடிவுக்கு நீதியரால் வர முடிந்தது என்னும் போதே, அவர்கள் குடிசைகளுக்குத் தீயிட்டதையும் தொழிலாளர்களைத் துப்பாக்கியால் சுட்டதையும் நேரில் கண்ட சாட்சிகள் இருந்த போதிலும் அவர்களின் சாட்சியத்தைப் புறந்தள்ளிய நீதியர் குற்றம் புரிதலில் நில உடைமையாளர்களுக்கு இருந்த கூட்டுக்குற்ற வகிபாகத்திலிருந்து அவர்களை விடுவிப்பதற்காக ஒரு புதுக் கோட்பாட்டை வழங்கி, இவ்வாறு எழுதினர்:
“மேலும், இந்த வழக்கில் உட்படுத்தப்பட்டுள்ள 23 எதிரிகளுமே மிராசுதார்களாகவே இருப்பது வியப்பாக இருக்கிறது. அவர்களில் பெரும்பாலார் விரிந்துபரந்த நிலபுலன்களுக்குச் சொந்தக்கரர்களான செல்வந்தர்கள். முதல் எதிரிக்குச் சொந்த வண்டி(கார்) இருப்பதற்குச் சான்று உள்ளது. ஆனால் இட(து) பொதுவுடைமை உழவர்களைப் பழிவாங்கும் ஆசை மிராசுதார்களுக்கு எவ்வளவுதான் இருந்தாலும், அவர்களாகவே நிகழ்விடத்துக்கு நேராக நடந்து சென்று எந்த வேலைக்காரர்கள் உதவியுமின்றி வீடுகளுக்குத் தீ வைத்தார்கள் என நம்புவது கடினமாக உள்ளது. பெரும் சொந்த நலன்கள் கொண்ட செல்வந்தர்கள் விரக்தியிலும் பசியிலும் உள்ள தொழிலாளர்களை விடப் பாதுகாப்பாகச் செயல்படவே விரும்புவார்கள். மிராசுதார்கள் பின்னணியில் ஒளிந்து கொண்டு, கூலிப் படையைப் பல குற்றங்கள் புரிவதற்கு ஏவி விட்டதாகத்தான் எவரும் எதிர்பார்க்க முடியும். ஆனால் இந்தக் குற்றங்களை மிராசுதாரர்களே நிகழ்விடத்துக்கு நேரடியாக வந்து செய்தததாக அரசுத் தரப்பு கூறுகிறது.” (அழுத்தம் சேர்க்கப்பட்டது.)
சென்னை உயர் நீதிமன்ற நீதியர்கள் கோபாலகிருட்டிண நாயுடு குடிசைகளுக்குத் தீ வைக்கவோ, துப்பாக்கியால் சுடவோ இல்லை என்று மட்டும் கூறவில்லை, அவர் சம்பவ இடத்தில் இல்லை என்பதற்களித்த வேற்றிடச் சான்றையும் ஏற்றுக் கொண்டனர். கோபாலகிருட்டிண நாயுடுவை வழக்கில் சேர்ப்பதற்கு மார்க்குசியத் தலைவர்கள் சான்றர்களைத் தூண்டி விட்டதாகவும் நீதியர்கள் கூறினர். ஆனால் இதற்கு நேர்மாறான ஒன்றே அப்போது நடந்தது. அனைத்து உள்ளூர்த் தலைவர்களும் கொச்சியில் 1968 திசம்பர் முடிவில் நடைபெற்ற அனைத்திந்திய மாநாட்டில் பேராளர்களாகக் கலந்து கொள்ளச் சென்றிருந்தனர். சான்றர்களின் கூற்றையும் அவர்களிடம் நடத்திய குறுக்கு விசாரணையையும் பதிவு செய்த அமர்வு நீதியர் முதல் எதிரி (A1) நாயுடு முன்வைத்த வேற்றிடச் சான்று என்னும் வாதத்தை நிராகரித்து, ஒவ்வொரு நிகழ்விலும் அவர் இருந்தார் என்றும், அதற்கு ஆதரவான சாட்சியத்தையும் மேற்கோளிட்டுக் காட்டினார். அவர் அனைத்து நில உடைமையாளர்களுக்கும் பத்தாண்டுக் கடுங்காவல் தண்டனையும் வழங்கினார். அவர் அதற்கான காரணங்களையும் கூறினார்:-
“எதிரிகள் சட்டத்தைத் தங்கள் கையில் எடுத்துக் கொண்டுள்ளனர். அவர்கள் வீடுகளுக்குத் தீ வைக்கத் திட்டமிட்டுள்ளனர். தீ வைத்து மூன்று தெருக்களை அழித்துள்ளனர். துப்பாக்கியால் சுட்டு, இட(து) பொதுவுடைமைக்
கட்சியைச் சேர்ந்த தொழிலாளர்கள் அனைவரையும் கொல்வதற்கும் முயன்றுள்ளனர். அவர்களுக்கு ஏராளமான காயங்கள் ஏற்படுத்தியுள்ளனர். இதனை ஐயுறுவதற்குக் காரணம் ஏதுமில்லை. எதிரிகள் தீ வைத்ததன் காரணமாக, 42 அப்பாவி மக்கள் உயிரோடு கொளுத்தப்பட்டுள்ளனர். இந்தச் சூழலில், அவர்களுக்குக் கடுமையான தண்டனை வழங்கப்பட வேண்டும் என்பதே எனது கருத்து.”
42 வேளாண் தொழிலாளர்கள் மாண்ட அந்தத் தீவைப்பு தவிர, பல முன்னணித் தொண்டர்கள் துப்பாக்கிச் சூட்டுக் காயங்களால் பாதிக்கப்பட்டிருந்தனர். அந்தச் சம்பவத்துக்கு ஒரு மாதம் முன்பே சிறப்பு ஆயுதக் காவல் படையினர் அந்த ஊரைச் சுற்றி நிறுத்தப்பட்டிருந்தனர். இரு நாள் முன்பே கிசான் சபா தலைவர்கள் 500 கிமீ தள்ளியிருந்த கொச்சி மாநாட்டில் கலந்து கொள்ளச் சென்றிருந்தனர். சம்பவம் நடந்த உடனேயே காவல்துறைத் தலைமை ஆய்வாளர் (IG), காவல்துறைத் துணை ஆய்வாளர், காவல்துறைக் கண்காணிப்பாளர் ஆகியோர் அவ்விடத்தில் முகாமிட்டு, எவரையும் அந்த ஊருக்குள் நுழைய அனுமதிக்கவில்லை.
இந்தச் சூழ்நிலையில், விவசாயத் தொழிலாளர் சங்கத் தலைவர்கள் குற்ற வழக்கில் கோபாலகிருட்டிண நாயுடுவைச் சேர்க்கும் நோக்கில் பொய் வாக்குமூலம் தரும்படித் தூண்டி விட்டிருப்பார்கள், அந்த வாக்குமூலத்தைக் காவல் துறையினர் தாமதமாகப் பதிவு செய்திருப்பார்கள் என்னும் இந்த இரு கண்டெடுப்புகளையும் எந்த அடிப்படையும் இல்லாமல் உயர் நீதிமன்றம் வழங்கியுள்ளது. மேல்முறையீடுகள் குறித்த விசாரணையின் போது, இவ்வழக்கைப் புலனாய்வு செய்த காவல்துறை ஆய்வாளர் அரசுத் தரப்பு வழக்குரைஞருக்குத் துணைசெய்ய உயர் நீதிமன்றத்தில் இருந்தார். நீதியர்கள் அவரையும் விட்டுவைக்கவில்லை. மேல்முறையீட்டு விசாரணையின் போது அவரை அழைத்து அவரிடம் வினாத் தொடுத்தார்கள். அவரளித்த பதில்கள் நிறைவாக இல்லை எனக் கூறி, அதனைக் கீழ்க்காணும் ஆணையில் பதிவிட்டார்கள்:
(தொடரும்)
தோழர் தியாகு
தாழி மடல் 293
Leave a Reply