(தோழர் தியாகு எழுதுகிறார் : மாண்டவர்கள் உயிர்த்தெழுந்து ஏற்றுக விடுதலை ஒளி!-தொடர்ச்சி)

பரணர் பாடிய பேகனும் சாம்ராசு பாடும் தோழர்களும்

இனிய அன்பர்களே!

மதுரையைக் கதைக் களனாகக் கொண்டு, மா-இலெ தோழர்களை முதன்மைக் கதை மாந்தர்களாகக் கொண்டு, 1980களைக் கதைக் காலமாகக் கொண்டு அன்பர் சாம்ராசு படைத்துள்ள புதினம் கொடை மடம்.

இறுதியாகப் பெயர் கொடுப்பதற்கு முன்பே இந்தப் புதினத்தைச் சாம்ராசு எனக்குப் படிக்கத் தந்தார். அது சரியான அலைச்சல் நேரம் என்றாலும் சிலநாளில் படித்து முடித்தேன். எடுத்தால் கீழே வைக்க முடியாத இலக்கியச் சுவை! சாம்ராசு நகைச்சுவை உணர்வில் சரியான ‘லந்துக்காரர்’ என்பது அவரோடு பழகும் அனைவருக்கும் தெரிந்த செய்திதான்! எள்ளலும் துள்ளலுமான அவரது எழுத்து நடை மீது எனக்குள்ள மதிப்பையும் வியப்பையும் இந்தப் புதினம் பெரிதும் உயர்த்தி விட்டது.

கதைக்கு நடுவே அவர் கோத்துள்ள (‘கோர்த்துள்ள’ என்பது பிழை) முத்து முத்தான உபகதைகளில் ஒன்றைத் தாழி மடலில் (321) வைகை தன்னை ஆறு என உணர்ந்த வேளை என்று தலைப்பிட்டு வெளியிட்டிருந்தேன்.

கூடல் மாநகரை உயிர்ச் சித்திரமாகத் தீட்டும் இந்தப் புதினத்துக்குக் கொடை மடம் என்ற தலைப்பை அகழ்ந்தெடுத்துக் கொடுத்தவர் சாம்ராசின் தோழர்களில் ஒருவரான இசை. அன்பர் சாம்ராசு பெருஞ்செல்வந்தர் – அத்துணைச் சொத்து! அத்தனையும் அருமையான நண்பர்கள்! எடுத்த காரியம் யாவற்றிலும் (‘யாவிலும்’ எனபது பிழை) கைகொடுத்து நிற்பவர்கள்! அவருக்கென்றால் அவர் வழியாக எனக்கும்!

இசை தேடிக் கொடுத்த தலைப்பு ஒரு புறநானூற்றுப் பாடலில் வேர் கொண்டிருப்பது கருத்துக்குரிய செய்தி:

புறநானூறு – 142

         கொடைமடமும் படைமடமும்

பாடியவர்: பரணர்
பாடப்பட்டவர்: வையாவிக் கோபெரும் பேகன்
திணை: பாடாண்
துறை: இயன்மொழி

“அறுகுளத்து உகுத்தும் அகல்வயல் பொழிந்தும்
உறுமிடத்து உதவாது உவர்நிலம் ஊட்டியும்
வரையா மரபின் மாரிபோலக்
கடாஅ யானைக் கழற்கால் பேகன்
கொடைமடம் படுதல் அல்லது,
படைமடம் படான் பிறர் படைமயக் குறியோனே.”

அரசன் பேகன் வீரக் கழல் அணிந்த தன் கால்களால் யானைக் கடாவை அடக்கி ஆள்பவன். மழையானது நீர் இல்லாக் குளத்தில் பெய்ய வேண்டும். வயலில் பொழிய வேண்டும். அவ்வாறன்றி களர்நிலத்திலும் பொழிவது போல வள்ளல் பேகன் கொடை வழங்குவதில் ஒரு மடையனாக விளங்குபவன். ஆனால் போரின் போது மடமை இல்லாதவன். நல்லவர்களை விலக்கி அல்லாதவர்களைக் கொல்பவன்.

புறநானூற்று பேகனைப் புதுமக் காலத்து மா-இலெ தோழர்களுடன் ஒப்பிட்டுக் காட்ட விரும்புகின்றாரா சாம்ராஜ்? எதில் ஒப்பிடுவது? களர்நிலத்தில் பெய்த மழை போல் அவர்களின் ஈகம் வீணாகி விட்டது என்பதிலா? நல்லவர்களை விலக்கி அல்லாதவர்களைக் கொல்வதிலா? இந்த ஆய்வு தொடக்கக் கால ‘நக்சல்’களில் ஒருவனாகிய எனக்குள் சில வினாக்கள் எழுப்பிற்று. அடுத்தடுத்து எழுதுகிறேன்.

1973ஆம் ஆண்டு மதுரையைச் சின்னாபின்னமாக்கிய அந்த மழை வெள்ளம் பற்றிய சாம்ராசின் எழுத்தைப் பகிர்ந்து இன்று முடித்துக் கொள்கிறேன்:

“வைகை எப்போதாவது தன்னை ஆறு என உணர்ந்து வெள்ளமாகப் பெருக்கெடுப்பதுண்டு.”

மதுரைக்கு நடுவே ஒரு மலைப்பாம்பாக நெளிந்து கிடக்கும் வைகையை ஆறு என மதுரைக்காரர்களாவது உணருவதுண்டா? மதுரைக்கு அடிக்கடி போய்வரும் என்னைப் போன்றவர்களாவது உணருவதுண்டா? நாம் இயற்கையின் படைப்புகளையும் அவற்றின் ஆற்றலையும் உணரத் தவறும் போது இயற்கை சீறியெழுந்து தன்னை உணர்த்திக் கொள்வதாகச் சொல்கிறீர்களா சாம்ராசு?

தோழர் தியாகு
தாழி மடல் 414

(தொடரும்)