தோழர் தியாகு எழுதுகிறார் : கீழ்வெண்மணித் தீர்ப்பு: மீளாய்வு தேவை! – அன்பர் சந்துரு 4/4
சென்னை உயர்நீதிமன்ற நீதியராகப் பணியாற்றி ஓய்வுபெற்ற
அன்பர் சந்துரு எழுதுகிறார்.
(தமிழாக்கம்: நலங்கிள்ளி)
கீழ்வெண்மணித் தீர்ப்பு: மீளாய்வு தேவை! – 4/4
“இந்தக் கால தாமதம் விசாரணை நீதிமன்றத்தில் புலனாய்வு ஆய்வாளரின் கவனத்துக்குக் குறிப்பாகக் கொண்டு வரப்படவில்லை என்பது உண்மையே. புலனாய்வு ஆய்வாளர் மேல்முறையீட்டில் வாதங்கள் நடைபெற்ற காலம் முழுதும் இந்த நீதிமன்றத்தில் இருந்த காரணத்தால், அவரிடம் மதிப்பிற்குரிய அரசு வழக்குரைஞர் கலந்தாலோசித்து, இந்த மிதமிஞ்சிய கால தாமதத்துக்கு அவருடைய பார்வையிலிருந்து காரணங்கள் என்னவென்று அறிந்து, எங்களிடம் தெரிவிக்கும்படி நாங்கள் கேட்டுக் கொண்டோம். புலனாய்வு அதிகாரியிடம் கலந்தாலோசித்த பிறகு மதிப்பிற்குரிய அரசு வழக்குரைஞர் கால தாமதத்துக்கு எங்களிடம் இரு விளக்கங்கள் கூறினார். முதல் சான்றாவனத்தை விரைவாக சார்-நடுவரிடம் கொடுக்க வேண்டுவது குறித்து விதிகள் திட்டவட்டமாக எதுவும் கூறவில்லை. என்பது முதல் விளக்கம். இதனை எங்களால் ஏற்றுக் கொள்ள முடியவில்லை.
“முதல் சான்றாவணம் கிடைத்ததாகச் சொல்லப்படும் இரவு 11 மணிக்கே சிறப்புத் தூதரை அனுப்பியிருந்தால், அவரால் அதனை நாகப்பட்டினத்துக்குப் பேருந்திலோ நடந்தோ சென்று, 26.12.1968 அதிகாலையில் சார்-நடுவரிடம் சேர்த்திருக்க முடியும். பெரும்பாலான உயரதிகாரிகள் 26.12.1968 காலை 09.30 மணியளவில் கிராமத்துக்கு வந்தார்கள் என்பதை மறுப்பதற்கில்லை. ஆனால் அதற்குப் பிறகாவது புலனாய்வு அதிகாரி ஊரின் சட்ட ஒழுங்குச் சுமையிலிருந்து ஆசுவாசமாகி, விரைவு அறிக்கையை சார்-நடுவரிடம் சேர்ப்பித்திருக்க வேண்டும்.”
இயல்பாகக், குற்றவியல் மேல்முறையீட்டை விசாரிக்கும் போது, புலனாய்வு அதிகாரியைச் சில கேள்விகளுடன் நீதிமன்றத்தில் இருக்கச் சொல்லி விட்டு, ஆணையில் அவரது மறுமொழிகளை நிராகரித்தது முறையன்று. இதேபோல், விசாரணை நீதிமன்றம் பெற்றுக் கொள்ளாத அந்த ஆவணத்தை எந்த நடைமுறையையும் பின்பற்றாமல் மேலமை நீதிமன்றம் பெற்றுக் கொள்வதும் பெரிதும் முறையற்றதே. இருநீதியராயம் 06.04.1973 அன்று பிறப்பித்த பொது ஆணையின் வழியாக கோபாலகிருட்டிண நாயுடுவும் மற்றவர்களும் செய்த மேல்முறையீட்டை ஏற்று, அரசு செய்த மேல்முறையீட்டைத் தள்ளுபடி செய்தது.
தொடக்கத்தில், தமிழ்நாடு அரசு அரசமைப்புச் சட்டம் உறுப்பு 132இன் பேரில் உச்ச நீதிமன்றத்துக்கு மேல்முறையீடு செய்வதற்குச் சான்றிதழ் வழங்கக் கோரி உயர் நீதிமன்றத்தில் மனு செய்தது. அதனை உயர் நீதிமன்றம் நிராகரித்து விட்டது. பின்னர் தமிழ்நாடு அரசு உச்ச நீதிமன்றம் சென்று, 1976இல்தான், அதாவது தீர்ப்புக்குக் கிட்டத்தட்ட மூன்றாண்டு கழித்துத்தான் மேல்முறையீடு செய்ய அனுமதி கேட்டது. சிறப்பு அனுமதி விண்ணப்பத்தை ஏற்று உச்ச நீதிமன்றம் பின்வருமாறு ஆணையிட்டது:
“நாகப்பட்டினத்தில் உள்ள கிழக்கு தஞ்சாவூர்ப் பிரிவு அமர்வு நீதியர் உடனடியாகவே மேலே குறிப்பிட்ட எதிர்விண்ணப்பர்களைப் கைது செய்யப் பிணை கிடைக்காத பிடியாணை பிறப்பித்திடுக.”
இந்நிலையில் கைது செய்யபப்டுவோம் என்றஞ்சி கோபாலகிருட்டிண நாயுடுவும் மற்ற எண்மரும் உயர் நீதிமன்றத்தில் மனு செய்து, தண்டனையை இடைநிறுத்தி வைக்கும்படிக் கேட்டனர். ஆனால் உயர் நீதிமன்றம் 03.02.1976 நாளிட்ட ஆணையில் இத்தகைய தீர்வு வழங்கும் அதிகாரமேதும் உயர் நீதிமன்றத்துக்கு வழங்கப்படவில்லை எனக் கூறி அம்மனுவை நிராகரித்து விட்டது. (காண்க: 1977 Cri L J 50).
இதனிடையே, கோபாலகிருட்டிண நாயுடு 14.12.1980 அன்று இரிஞ்சூர் ஊரில் கொலை செய்யப்பட்டார். இட(து) தீவிரவாதக் கருத்துகளில் நாட்டம் கொண்ட சிலர் இதை செய்ததாகச் சொல்லப்பட்டது. இந்தச் செய்தி கோபாலகிருட்டிண நாயுடுவை முதல் எதிர்விண்ணப்பராகக் கொண்ட அரசின் மேல்முறையீடு நிலுவையிலிருந்த உச்ச நீதிமன்றத்தின் கவனத்துக்குக் கொண்டுசெல்லப்படவில்லை. கீழ்வெண்மணிக் கொலையை அனைவரும் மறந்து விட்டனர். எதிரிகள் விடுவிக்கப்பட்டார்கள்.
இறுதியாகத், தமிழ்நாடு அரசு செய்த மேல்முறையீடு (Crl.A.17/1976) நீதிமன்றம்-7 முன்பு பட்டியலிடப்பட்டது. அங்கு இந்த வழக்கை நீதியர் எசு. இரங்கநாதன், நீதியர் கே. இராமசாமி ஆகியோர் விசாரித்தனர். நீதியர் இரங்கநாதன் வாழ்நாள் முழுதும் வருமான வரிப் பொருண்மைகளையே புழங்கி வந்தவர். அவர் வருமான வரி மேல்முறையீட்டுத் தீர்ப்பாயத்திலிருந்து தில்லி உயர் நீதிமன்றத்துக்கு உயர்த்தப்பட்டவர். உயர் நீதிமன்றத்திலிருந்த இந்தப் பதவிக் காலத்திலுங்கூட பெரும்பாலும் வருமான வரி வழக்குகளை மட்டுமே பார்த்துக் கொண்டவர். சமூக நீதிப் பொருண்மைகளில் தீர்ப்பு வழங்கிப் பெயர்பெற்ற நீதியர் கே. இராமசாமி அப்போதுதான் உச்ச நீதிமன்றத்துக்கு உயர்த்தப்பட்டவர். அவர்தான் அந்த ஆயத்தில் இளையவராக இருந்தார்.
தமிழ்நாடு அரசு ஒரு மூத்த வழக்கறிஞரை அமர்த்தியிருந்த போதிலும், உள்ளபடியே தொடக்கத்தில் 31.10.1990 அன்று இந்த வழக்கு எடுத்துக் கொள்ளப்பட்ட போது, (பதிவுருப் படி) மாநில அரசு வழக்கறிஞர் திரு எம்.வி. கிருட்டிணமூர்த்தி கிட்டத்தட்ட 45 நிமிடம் வாதிட்டார். அடுத்த நாள் (01.11.1990) திரு யு.ஆர். இலலித்து ஏறத்தாழ 15 நிமிடம் வாதிட்டார். இதன் தொடர்ச்சியாக, எதிரியின் வழக்கறிஞர் தமது வாதங்களை முன்வைத்து, பிற்பகல் 02.15 மணிக்கு முடித்தார். நீதிமன்றம் 01.11.1990 அன்று வெளியிட்ட நடவடிக்கைப் பதிவை எடுத்துக்காட்டுவது பயனுள்ளதாக இருக்கும்:-
“வழக்கறிஞர் வாதம் கேட்டு நீதிமன்றம் பிறப்பித்த ஆணை
வழக்கறிஞர் திரு வி. கிருட்டிணமூர்த்தி பிற்பகல் 03.15 மணிக்கு வாதிடத் தொடங்கி, நீதிமன்றம் வேலைநேரம் முடியும் 4 மணி வரை வாதத்தை முடிக்கவில்லை. பொருண்மை பகுதியளவு கேட்டதோடு நின்றது.
உருப்படி எண் 13 நீதிமன்ற எண் 6
31.10.1990 கோரம் மற்றும் முன்னிலை: விண்ணப்பருக்காக மூத்த வழக்குரைஞர்
திரு யுஆர். இலலித்து அவர்களின் வாதுரை
மதிப்பிற்குரிய வழக்குரைஞர் திரு யு.ஆர். இலலித்து தன் வாதுரையை நண்பகல் 12 மணிக்குத் தொடங்கி, 12.15 மணிக்கு முடித்தார். பிறகு வழக்குரைஞர் திரு கே.ஆர். சவுத்ரி வாதிடத் தொடங்கி பிற்பகல் 02.15 மணிக்கு முடித்தார். விசாரணை முடிவுற்றது. நீதிமன்றம் ஒப்பமிட்டுக் கோப்பிலிட்ட ஆணையின் அடிப்படையில் மேல்முறையீட்டைத் தள்ளுபடி செய்தது.”
இவ்வகையில் இறுதியாகப் பன்னாட்டளவில் செய்தியாகி, ஒவ்வொருவரின் மனச்சான்றையும் உலுக்கிய வழக்கை இரண்டு மணி நேரத்தில் மூன்று பக்க ஆணை எழுதி உச்ச நீதிமன்றம் முடித்து வைத்தது. அரசின் வாதங்கள் 10 வரிகளில் விவரிக்கப்பட்டன. எதிர்த்தரப்பு வாதங்கள் 14 வரிகளில் சுருக்கித் தரப்பட்டன. பார்த்துப் பார்த்து அலுத்துப் போன உள்ளடக்கங்கள் கொண்ட ஒரு சாதாரணக் குற்றவியல் மேல்முறையீட்டைப் போல் இவ்வழக்கு முடித்து வைக்கப்பட்டது. இந்தச் சுருக்கமான ஆணையை எடுத்துக் காட்டத்தான் வேண்டும்: –
“நாங்கள் அமர்வு நீதிமன்றமும் உயர் நீதிமன்றமும் அளித்த விவரமான தீர்ப்புகள் நெடுகிலும் நடத்திச் செல்லப்பட்டுள்ளோம். நாங்கள் இரு வழக்கறிஞர்களின் வாதங்களையும் கேட்டோம். இந்த வழக்கு நடைபெற்ற சூழல்களுக்கு மதிப்பளித்து, அது பற்றி எங்களுக்குள்ள கருத்து என்னவென்றால், அரசமைப்புச் சட்டம் உறுப்பு 136இன் கீழ் இந்த முறையீட்டில் தலையிடுவதற்கு அடிப்படைகள் ஏதுமில்லை. எதிரிகளில் சிலருக்கு இதச 307, 326, 436 ஆகிய பிரிவுகளின் கீழ் அமர்வு நீதிமன்றம் குற்றத் தீர்ப்பு வழங்கியிருப்பது உண்மைதான் என்றாலும், நாம் ஏற்கெனவே சொல்லியிருப்பது போல், எதிரிகளை விடுவிப்பது தொடர்பாக இரு கீழமை நீதிமன்றங்களும் ஒரே மாதிரி முடிவுகளைக் கண்டடைந்துள்ள வழக்கு இது. திரு சவுத்திரி சரியாகக் குறிப்பிட்டது போல், அந்தக் கொடுநாளில் நடந்த சம்பவங்களை முழுமையாகக் கணக்கில் எடுத்துக் கொண்டால், எதிரிகள் மேல் வைக்கப்பட்டிருக்கும் வழக்கில் அவர்கள் மீதான குற்றச்சாட்டுகள் எதுவும் நிறுவப்படவில்லை என்று உயர் நீதிமன்றம் கருத்துக் கொண்டதில் தவறெதுவும் இருப்பதாகச் சொல்லி விட முடியாது. நாங்கள் சாட்சியங்களை விரிவாக அலசவில்லை. ஏனென்றால் தரவிலிருந்து இறுதியில் உண்மை என்ன என்று முடிவுக்கு வருவதுதான் இங்கு சிக்கலுக்குரியது. தரவுகளைக் கவனமாக ஆய்ந்து பார்த்த பிறகு, உயர் நீதிமன்றம் இட்ட விடுவிப்பு ஆணை பதிவேறிய தரவுகளால் உறுதி செய்யப்படவில்லை என நாங்கள் ஒப்புக் கொள்வது கடினம்.”
மேற்கண்டவாறு நீதிமன்றம் கண்டடைந்து சொன்னவற்றிலிருந்து, நிலக்கிழார்கள் 42 தணிந்த (தலித்து) மக்களைப் படுகொலை செய்த குற்றத்தை உயர் நீதிமன்றம் விசாரித்து அவர்களை விடுவித்துள்ளது என்றும், அந்தத் தீர்ப்பை உச்ச நீதிமன்றம் 22 ஆண்டு கழித்து ஒரு பூடகமான ஆணை மூலம் உறுதி செய்துள்ளது என்றும் யாருக்காவது தெரிய வருமா?
வரலாற்றில் நடந்த பெரிய பெரிய தவறுகளுக்குச் சில அரசாங்கங்களே நீண்ட காலத் தாழ்வுக்குப் பிறகு மன்னிப்புக் கேட்டுள்ளன. சாலியான்வாலாபாக்கு படுகொலைக்காக அது நடந்து ஒரு நூற்றாண்டு கழித்து பிரித்தானிய அரசு வருத்தம் தெரிவித்தது. சபல்பூர் ஏடிஎம் வழக்கில் (1978) ஆட்சித் துறை அடிப்படை உரிமைகளை நிறுத்தி வைத்துள்ளது என்ற அடிப்படையில்தான் உச்ச நீதிமன்றம் மனுவைத் தள்ளுபடி செய்தது என்றாலும், அவ்வழக்கிலும் கூட ஓர் உச்ச நீதிமன்ற நீதியர் வெளிப்படையாக வருத்தம் தெரிவித்தார். அடுத்து வந்த காலத்தில் 2018 ஆதார் அட்டை வழக்கில் அந்தத் தீர்ப்பே சட்டப்படி தவறு எனத் தீர்ப்பாயிற்று.
1968இல் கீழ்வெண்மணியைச் சேர்ந்த அப்பாவி தணிந்த(தலித்து) வேளாண் தொழிலாளர்களுக்குச் செய்யப்பட்ட அநீதி இன்றளவும் களையப்படவில்லை. நீதிமன்றங்கள் தமது மானத்தைக் காப்பாற்றிக் கொள்ளவும், நீதித்துறை மீது மக்களின் நம்பிக்கையை மீட்டுக் கொள்ளவும் விரும்பினால், நிலக்கிழார்கள் தமது வருக்க வலிமையைக் கொண்டு தப்பித்து, நீதித்துறையை இருளில் தள்ளிய இவ்விரு மானக்கேடான தீர்ப்புகளுக்காகவும் வருத்தம் தெரிவித்து அவற்றைத் திரும்பப் பெற வேண்டும்.
தோழர் தியாகு
தாழி மடல் 293
Leave a Reply