(தோழர் தியாகு எழுதுகிறார் : கைதுக்குக் காரணமான அழித்தொழிப்பு – தொடர்ச்சி)

கீற்று நேர்காணல் (2)(ஆ) : மினர்வா & நந்தன்

தோழர் தியாகு எழுதுகிறார் : சிறை வாழ்க்கை

சிறை வாழ்க்கை எப்படிப்பட்டதாக இருந்தது?

இந்திய நாட்டின் சட்டப்படி அரசியல் கைதி என்ற வகைப் பிரிவே கிடையாது. தாக்குதல் என்றல்ல, அரசியல் காரணங்களுக்காக ஓர் உண்ணாவிரதம் மேற்கொண்டால் கூட அவர்கள் மீது தற்கொலை முயற்சி வழக்குதான் பதிவு செய்யப்படும். மறியல் செய்தால் ‘அரசு ஊழியரை வேலை செய்ய விடாமல் தடுத்தார்’ என்றுதான் வழக்குப் பதிவு செய்யப்படும்.

எங்களை நக்குசலைட்டு விசாரணைக் கைதி என்று சொல்லி தனியாக அடைத்து வைத்து விட்டார்கள். சாதாரணக் கைதிகளாக இருந்தால் அவர்களுக்கு சில சுதந்திரங்கள் இருக்கும். அரசியல் கைதி என்றால் படிக்க, எழுத, நண்பர்களைச் சந்திக்க என்று சில வசதிகள் இருக்க வேண்டும். அதனால் எங்களை அரசியல் கைதியாக நடத்த வேண்டும் என்று போராடினோம். ‘புத்தகங்கள்ப் படிக்க, வெளியிலிருந்து வரும் புத்தகங்களை வாங்கிக் கொள்ள அனுமதிக்க வேண்டும். இருபத்து நான்கு மணி நேரமும் கொட்டடியில் பூட்டியே வைக்கக் கூடாது. நாங்கள் இருந்த சிறையில் கழிப்பறை வெளியே கிடையாது. கொட்டடிக்குள் ஒரு மண் சட்டியை கொடுப்பார்கள், அதில்தான் மலசலம் கழிக்க வேண்டும். உள்ளேயே துணி துவைத்து, குளித்து உள்ளேயே இருக்க வேண்டும். எனவே வெளியே கழிப்பறை கட்டித் தர வேண்டும்’ என்ற கோரிக்கைகளை வைத்துப் போராடினோம். போராட்டம் என்றால் உண்ணாவிரதம்தான். இந்தப் போராட்டங்கள் சிறையில் எங்களுக்கு ஒரு பெரிய மரியாதையை ஏற்படுத்திக் கொடுத்தன. நெருக்கடிநிலைக் காலத்தில் சிறைகளில் மிசா கைதிகளும் அடைத்து வைக்கப்பட்டிருந்தனர். சிறை அடக்குமுறைகளை மிசா கைதிகளால் தாங்கவும் முடியவில்லை, எங்கள் அளவுக்கு அதை எதிர்த்துப் போராடவும் முடியவில்லை.

மிசா காலத்தில் அரசியல் தலைவர், எம்.பி, எம்.எல்.ஏ. யாருக்கும் ஒரு மரியாதையும் கிடையாது. ஆனால் அதே நேரத்தில் நக்குசலைட்டு என்றால் சிறையில் தனி மரியாதை இருந்தது. அவர்கள்தான் ‘அடித்தால் திருப்பி அடி’ என்ற முழக்கத்தை சிறைக்குள்ளேயே எழுப்பியவர்கள். கொண்ட கொள்கைக்காகக் கைதாகி, சிறைக்கு வந்திருந்ததால் நக்குசலைட்டு கைதிகள் சிறைக்குள்ளும் தங்களது கொள்கை எதையும் விட்டுக் கொடுக்காமல் இருந்தோம். மிசா கைதிகளிடம் அந்தளவுக்கு கொள்கையும் கிடையாது; போராட்டக் குணமும் கிடையாது.

சென்னை சிறை மிசா கைதிகளில் ஆற்காடு வீராசாமியும் ஒருவர். அவர் ஏற்கெனவே நிறைய அடி வாங்கியிருந்தார். அதேநேரத்தில் அவர் அடிக்குப் பயந்தவர். உபயத்துல்லா என்ற சிறைக் காவலர் மேசையில் உட்கார்ந்திருப்பார். இவர் அவரது காலுக்குக் கீழே சென்று அமர்ந்து தன்னை அடிக்க வேண்டாம் என்று கெஞ்சிக் கொண்டிருப்பார். அதற்குப் பதிலாக தனது வீட்டில் சென்று பணம் வாங்கிக் கொள்ளச் சொல்வார்.

அதே நேரத்தில் சிட்டிபாபு, முரசொலி மாறன், சி.பி.எம்.கட்சியைச் சேர்ந்த சிவாசி போன்றோர் சிறை நிருவாகத்தை எதிர்த்து தைரியமாகப் போராடினார்கள். இவர்களால்தான் சிறையில் பல மாற்றங்கள் வந்தன. தாலினை முதலில் கடுமையாக அடித்ததோடு தனித் தொகுதிக்குக் கொண்டுசென்று தனிமைப்படுத்தி விட்டார்கள்.


சிறையில் நக்குசலைட்டுகளின் போராட்டம் எப்படி இருந்தது?

முதலில் எங்களது கோரிக்கைகளுக்காகப் போராடினோம். அடுத்தக்கட்டமாக சிறைக்குள் இருப்பவர்களோடு கலந்து அவர்களை இணைத்துக் கொண்டு ஏதாவது போராட்டம் நடத்த வேண்டும் என்ற முடிவுக்கு வந்தோம்.

அப்போது சிபிஎம் கட்சித் தோழர் ஏ.சி.கே. எங்களுடன் இருந்தார். அவர் எங்களுக்குப் பெரிய உந்துதலாக இருந்தார். அவர் சிறைக்குள் இருந்து கொண்டே காவலர்கள் இருபத்தைந்து பேரைத் திரட்டி அவர்களது கோரிக்கைகள் நிறைவேற ஓர் அமைப்பை ஏற்படுத்தினார். சிறைப்பட்டவர்களுக்கு மேல்முறையீடு, விண்ணப்பங்களை அவர்தான் எழுதிக் கொடுப்பார். ‘எங்களை நாகை கிளைச் சிறைக்கு மாற்றும் போது அங்கிருந்து தப்பித்து விடுவது’ என்று நாங்கள் திட்டம் தீட்டியபோது, ஏ.சி.கே.தான் உள்ளேயிருந்து அனைத்து உதவிகளையும் செய்தார். ஆனால் அந்தத் திட்டம் தோல்வியில் முடிந்தது.
சிறைப்படுத்தப்பட்டோர் நல உரிமைச் சங்கம்’ என்ற சங்கத்தையும் தோழர் ஏ.சி..கே.தான் ஏற்படுத்தினார். உரிமைக் குரல் என்ற பத்திரிகை (கையேடு) நடத்தினார். நானும் அதில் எழுதினேன். அவரது உந்துதலின் பேரில் எழுத்தறிவு இயக்கம் ஒன்றை ஏற்படுத்தினோம். எழுதப் படிக்கத் தெரியாத தூக்குத் தண்டனைக் கைதிகளுக்கு எழுதப் படிக்க கற்றுக் கொடுத்தோம். அதே நேரத்தில் அரசியல் நிலையில் அழித்தொழிப்பு, ஆயுதப் போராட்டம் என்கிற எங்களுடைய பழைய கருத்திலிருந்து விடுபட்டோம். எல்லாப் போராட்ட வடிவங்களையும் அங்கீகரிக்க வேண்டும் என்கிற தெளிவு கிடைத்தது.
(தோழர் ஏசி தலைமையிலான சிறைப் போராட்டங்கள் பற்றியறிய சுவருக்குள் சித்திரங்கள் படிக்க வேண்டும்.)

நீங்கள் ஒரு கொள்கையை நம்பி வீட்டை விட்டு வெளியேறுகிறீர்கள். பல இழப்புகளுக்குப் பின் கைதாகி, தூக்குத் தண்டனையும் கிடைக்கிறது. அந்த நேரத்தில் ஏற்றுக் கொண்ட கொள்கை தவறு என்று பட்ட போது எப்படி இருந்தது?

புரட்சி, அதன் மீதான நம்பிக்கை என்பது புனிதமானது. அந்த நம்பிக்கையை என்றுமே மாற்றிக் கொள்ள முடியாது. அதில் உறுதியாகப் பிடிப்பு வைத்து விட்டேன். அந்தப் புரட்சிக்கு இதுதான் சரியான அமைப்பு என்பதிலும் அதே அளவு நம்பிக்கை வைத்தாகி விட்டது. இதில் ஏதோ தவறு என்கிற போது சில வழிமுறைகளில் ஏற்பட்ட தவறு என்றுதான் இயல்பாகவே முதலில் தோன்றும்.

சிறையில் இருக்கும் போது வழக்கம் போல் மே நாள் கொண்டாடுவது, நவம்பர் புரட்சி நாள் கொண்டாடுவது, அன்று எங்களுக்குள் கூட்டங்கள் நடத்துவது என்று ஏதாவது நடக்கும். அந்த நேரத்தில் அழித்தொழிப்பு மீதான நம்பிக்கை முழுவதுமாகப் போய் விட்டது. முதன்முதலில் ஏ.எம்.கே.வை சந்தித்த போதே ‘அவர் அழித்தொழிப்பு தனிமனித பயங்கரவாதமாக மாறிவிடுமோ’ என்ற தன்னுடைய அச்சத்தைத் தெரிவித்திருந்தார்.
(individual terrorism எனபதைத் தனிமனித பயங்கரவாதம் என்றுதான் அப்போது சொல்லிக் கொண்டிருந்தேன். அது சரியன்று. individual terrorism என்பதற்கு எதிர்நிலை state terrorism. அதாவது அரசப் பயங்கரவாதம். இங்கே தனிமனிதரா? அல்லது கூட்டு மனிதரா? என்பதல்ல, அரசா? அல்லது குடிமகனா / குடிமகளா? என்பதுதான் எதிர்நிலை. பயங்கரவாதம் தமிழ்ச் சொல் அன்று, terrorism என்பதைத் திகிலியம் எனக் கொண்டால், state terrorism = அரசத் திகிலியம்; individual terrorism = குடித் திகிலியம்)

‘அழித்தொழிப்பில் மக்களுக்கு என்ன பங்கு’ என்பதுதான் எங்கள் முன் இருந்த பெரிய கேள்வியாக இருந்தது. மக்களின் பங்கு இல்லாத எந்தப் போராட்டமும் மக்களைத் திரட்ட உதவாது என்பதில் தீர்மானமாக இருந்தோம். “சீனத்தின் பாதை நமது பாதை, சீனத்தின் தலைவர் நமது தலைவர்” என்பதுதான் அப்போது நாங்கள் (நீதிமன்றத்தில் கூட) எழுப்பிய முழக்கம். சீனத்தின் பாதை எது என்பதை ஆராய்ந்த போது எங்களுக்கு அதிர்ச்சி காத்திருந்தது.

வெகுமக்கள் போராட்டம்தான் சரி என்பது சீனத்தின் கொள்கை. ‘நாங்கள் பாராளுமன்றில் பங்கேற்கவில்லை என்று யாரும் எங்கள் மீது குறைசொல்ல முடியாது. ஏனெனில் இங்குப் பாராளுமன்றே கிடையாது’ என்று மாவோ சொல்கிறார். ‘நாங்கள் தேர்தலில் பங்கேற்கவில்லை என்றும் சொல்ல முடியாது. ஏனெனில் இங்குத் தேர்தலே நடைபெறவில்லை’ என்றும் அவர் சொல்கிறார். தொடர்ந்து சீன வரலாற்றைப் படிக்கும் போது வெகுமக்கள் போராட்டத்திற்கு எப்படி அவர்கள் தயாராகிறார்கள், அமைதிப் போராட்டத்திற்கு வாய்ப்பிருந்தால் அதையும் செய்யத் தயாராய் இருக்கிறார்கள் என்பதும் புரிந்தது.

அன்று சூலை 1 சீனப் பொதுவுடைமைக் கட்சியின் நிறுவன நாள். அன்று சிறைக்குள் எங்களுக்கிடையே பல்வேறு விதமான விவாதங்கள் எழுந்தன. சீனப் புரட்சிக்கும் இந்தியப் புரட்சிக்குமான வேறுபாட்டை நான் அறிக்கையாக முன்வைத்தேன். அதில் முக்கியமான வேறுபாடாக நான் குறிப்பிட்டது ‘சீனா ஒரே மொழி பேசுகின்ற மக்களைக் கொண்ட நாடு. இந்தியா பல மொழிகளைப் பேசக்கூடிய ஒரு நாடு. அங்கு மொழி என்பது புரட்சிக்கு ஒரு தடையாக இல்லை, இங்கு மொழி புரட்சிக்கு ஒரு தடையாக இருக்கிறது. இதை நாம் கணக்கில் கொள்ள வேண்டும்’ என்று பேசினேன்.

72ஆம் ஆண்டு என்று நினைக்கிறேன். சாரு மசூம்தார் கைதாவதற்கு முன்பு பீகாரில் தலைமறைவாக இருந்து கொண்டு ஒரு பேட்டி கொடுத்தார். கேள்வியில், ‘சீனப் பாதைதான் உங்கள் பாதை என்றால் அங்கு நடந்தது போல் ஒரு நீண்ட பயணம் நடக்குமா?’ என்று கேட்கப்படுகிறது. சாரு பதிலில், “நிச்சயம் நடக்கும். ஆந்திராவில் சிறிகாகுளத்திலிருந்து இருந்து வங்கத்தின் பீர்பூம் வரை இந்த நீண்ட பயணம் நடக்கும்” என்று சொல்கிறார். அப்போது ஆந்திராவிலும், வங்கத்திலும் பெரிய அளவில் அழித்தொழிப்பு நடந்து கொண்டு இருந்தது.

சிறை நண்பர்கள் இதுகுறித்து என்னிடம் கேட்டனர். ‘சீனாவின் நீண்ட பயணம் கேண்டண் தொடங்கி ஏனான் வரை நடைபெற்றது. அங்கு அனைவரும் சீனமொழி பேசுபவர்கள். இங்கு ஆந்திராவில் தெலுங்கு பேசும் மக்களோடு புறப்படும் நாம் ஆந்திர எல்லையைக் கடந்து மத்தியப் பிரதேசம் அல்லது ஒரிசாவிற்குள் நுழைந்ததுமே வேறு மொழி பேசும் மக்களை எதிர்கொள்ள வேண்டும். எனவே இங்கு நீண்ட பயணம் சாத்தியமில்லை’ என்று சொன்னேன்.

(தொடரும்)

தோழர் தியாகு
தாழி மடல் 297