(ஊரும் பேரும் 56 : இரா.பி.சேது(ப்பிள்ளை) – இதிகாசமும் ஊர்ப் பெயரும் – தொடர்ச்சி)

சிரீ (ஸ்ரீ)

 இன்னும், சில ஊர்ப்பெயர்கள் சிரீ (ஸ்ரீ) என்ற வட சொல்லை அடை மொழியாகக் கொண்டு வழங்குகின்றன. வைணவ உலகத்தில் தலை சிறந்து விளங்கும் பதி சிரீ ரங்கம் ஆகும். ஆழ்வார்கள் பாடியருளிய திருப்பாசுரங்களில் திருவரங்கம் என்று அவ்வூர் போற்றப்படுகின்றது. தென்னாட்டில் ஆழ்வார் திருநகரிக்கு அருகேயுள்ள பழம்பதி சிரீ வைகுந்தம் என்று பெயர் பெற்றுள்ளது. பெரியாழ்வாரும் ஆண்டாளும் பிறந்தருளும் பேறு பெற்ற புத்தூர் சிரீ வில்லிபுத்தூராக விளங்குகின்றது. மெய்ஞானச் செல்வராகிய இராமானுசர் பிறந்த ஊர் சிரீ பெரும்புதூர் ஆகும்.

தேவாரப் பாடல் பெற்ற ஊர்களில் சீகாழி என்னும் ஊர் சாலச் சிறப்பு வாய்ந்தது. தேவாரம் பாடிய மூவருள் ஒருவராகிய ஞான சம்பந்தர் அவ்வூரிலே பிறந்து சிவஞான சம்பந்தர் ஆயினார். இத் தகைய செம்மை வாய்ந்த ஊரின் பெயராக வழங்கும் சீகாழி என்ற சொல்லின் முதலெழுத்து அடைமொழி என்பதில் ஐயமில்லை. சிரீ என்ற வட சொல்லே சீ யாயிற்றென்பர் சிலர். சீர்காழி என்பதே சீகாழியென வழங்கலாயிற்றென்பர் வேறு சிலர். தேவாரப் பாசுரத்தில் ‘சீர் திகழ்காழி’ என்று குறிக்கப் பட்டிருத்தல் பின்னவர் கொள்கைக்கு ஆதாரமாகும்.6

சத்திமுற்றம்

இங்ஙனம் சிதைவுற்ற சில ஊர்ப் பெயர்களின் அடியாகப் பிற் காலத்தில் பல கதைகள் முளைத்து எழுந்தன. சோழ நாட்டில் கும்ப கோணத்துக்கு அருகே சத்தி முற்றம் என்ற ஊர் உள்ளது. அங்கு அமர்ந்து அருள் புரியும் இறைவனை, “திருச்சத்தி முற்றத் துறையும் சிவக்கொழுந்தே” என்று போற்றியுள்ளார் திருநாவுக்கரசர். அவ்வூர்ப் பெயர் சத்திமுத்தம் என மருவி வழங்கலாயிற்று. அதனடியாக ஒரு கதை எழுந்தது. பரா சத்தி யாகிய பார்வதியம்மை பரமசிவனை முத்தமிடக் கண்ட பெருமை அவ்வூருக்கு உரியதென்று புனைந்துரைத்தனர் புராண முடையார். அதற்கேற்ப, அங்குள்ள திருக்கோயிலில் சத்தி,  சிவனுக்கு முத்தமிடும் கோலத்தில் ஒரு திருவுருவமும் பிற்காலத்தில் அமைவதாயிற்று.

திருவெண்டுறை

 தஞ்சை நாட்டிலுள்ள மன்னார்குடிக்கு அருகே திருவெண்டுறை என்னும் சிவத்தலம் உள்ளது. பிற்காலத்தில் அப் பெயர் திருவண்டுதுறை எனத் திரிந்தது. பிருங்கி முனிவர் வண்டுருவம் கொண்டு ஈசனை வணங்கிய இடம் அதுவே எனப் புராணமியற்றிய புலவர்கள் காரணம் கற்பிப்பா ராயினர்.

மகாபலிபுரம்

 இன்னும், மல்லை என்று ஆழ்வார்கள் திருப்பாசுரத்திலும், மாமல்லபுரம் என்று சாசனங்களிலும் குறிக்கப்படுகின்ற ஊர் மகாபலிபுரம் எனத் திரிந்து, மகாபலி மன்னனோடு தொடர்புறுவதாயிற்று. அக்கதைக்குச் சான்றாக அக் கோயிற் பாதையில் மகாபலி மன்னன் அரசு வீற்றிருக்கும் கோலத்தில் ஒரு சிற்பமும் காணப்படுகின்றது.7

தென்காசி உத்தரகாஞ்சி

 பெருமை வாய்ந்த ஊர்ப் பெயர்களின் வாசியைப் போற்றும் ஆசை இந் நாட்டில் என்றும் உண்டு. காசியும், காஞ்சியும் முன்னாளிற் சிறந்து விளங்கிய நகரங்கள். வட காசியின் மீதுள்ள ஆசையால் தமிழ் நாட்டில் தென்காசி  என்னும் ஊர் தோன்றிற்று. காஞ்சியின் பெருமையறிந்த ஆந்திரத் தேசத்தார் கோதவரி நாட்டில் உத்தர காஞ்சி என்று ஓர் ஊருக்குப் பெயரிட்டார்கள்.

மானாமதுரை; வடமதுரை
பாண்டி நாட்டின் தலைநகராகிய மதுரையும் ஆன்ற பெருமை வாய்ந்ததாகும். தமிழும் சைவமும் தழைத் தோங்கக் கண்ட அந்நகரின் பெயரை ஏற்றுத் திகழ்வது மானா மதுரை. மான வீரன் மதுரை என்பது மானா மதுரை யாயிற்று என்பர். சோழ நாட்டில் ஓர் ஊர் வடமதுரை என்று பெயர் பெற்றுள்ளது.


திருஆலவாய் நல்லூர்


மதுரையில் அமைந்துள்ள சிவாலயம் திரு ஆலவாய் ஆகும். அத்திருக்கோயிலின் பெயரைக் கொண்ட திரு ஆலவாய் நல்லூர் என்ற ஊர் மதுரை நாட்டு நிலக்கோட்டை வட்டத்தில் உள்ளது.


திரு இராமேச்சுரம்


பாண்டி நாட்டிலுள்ள இராமேச்சுரம் பெரும் புகழ் வாய்ந்தது. அங்குள்ள மூர்த்தி, தலம், தீர்த்தம் என்னும் மூன்றையும் சைவ உலகம் தலைக் கொண்டு போற்றும். அதன் பெருமையால் சோழ நாட்டிலும் ஓர் இராமேச்சுரம் உண்டாயிற்று. நெடு மணல் என்று முன்னாளில் பெயர் பெற்றிருந்த ஊரில் இராமேச்சுரம் என்ற கோயில் எழுந்ததென்பது சாசனத்தால் விளங்கும்.9 இப்பொழுது கோயிற் பெயரே ஊர்ப் பெயராயிற்று.


குற்றாலம்


தென்பாண்டி நாட்டில் இயற்கை அழகும் இறைவன் அருளும் வாய்ந்த சீருர் திருக்குற்றாலம். அதன் பெருமையைக் கண் களிப்பக் கண்ட திருஞான சம்பந்தர்,
கொம்பார் சோலைக் கோலவண்டு யாழ்செய் குற்றாலம்
” என்று பாடி மகிழ்ந்தார். இத்தகைய குற்றாலத்தின் பெயரைச் சோழ நாட்டிலுள்ள திருத்துருத்தி என்னும் பாடல் பெற்ற தலம் ஏற்றுக்கொண்டது. காவிரித் துருத்தி என்று தேவாரத்திலும், வீங்குநீர்த் துருத்தி என்று சாசனங்களிலும் வழங்கப் பெற்ற அவ்வூர் பிற்காலத்தில் குலோத்துங்க சோழன் குற்றாலம் என்று பெயர் பெற்றது.10 இப்பொழுது குற்றாலம் என்பதே அதன் பெயராகும்.11


திருப்பூவணம்


பாண்டி நாட்டில் மூவர் தேவாரமும் பெற்ற பழம் பதிகளுள் ஒன்று திருப்பூவணம் ஆகும். அப்பதி முடியுடைய தமிழ் வேந்தர் மூவராலும் வணங்கப் பெற்றதென்று திருஞான சம்பந்தர் பாடியுள்ளார்.


“ஆரா அன்பில் தென்னர் சேரர்
சோழர்கள் போற்றிசைப்பத்
தேரார் வீதி மாடம் நீடும்
தென்திருப் பூவணமே”

என்பது அவர் தேவாரம். வைகை யாற்றின் மருங்கே வளமார்ந்த சோலை சூழ்ந்த திருப்பூவணக் கோயிலில் எழுந்தருளிய ஈசனைப் “பொழில் திகமும் பூவணத் தெம்புனிதன்” என்று திருநாவுக்கரசர் போற்றி யருளினார்.அத்திருக் கோயில் இப்போது புட்பவனேசுவரம் என்ற பெயரோடு இராமநாதபுரத்தைச் சேர்ந்த சிவகங்கை வட்டத்தி லுள்ளது.


தென்பாண்டி நாடெனப்படும் நெல்லை நாட்டில் மற்றொரு திருப்பூவணம் உண்டாயிற்று. வடக்கே பாடல் பெற்ற திருப்பூவணம் ஒன்று இருத்தலால், இதனைத் தென் திருப்பூவணம் என்றார்கள். முள்ளி நாட்டுத் தென் திருப்பூவணம் என்று சாசனத்திற் குறிக்கப்படுகின்ற இவ்வூர், தென் திருப்புவனம் என்னும் பெயரோடு அம்பாசமுத்திர வட்டத்தில் உள்ளது. இங்குள்ள திருக் கோயிலும் புஷ்பவனேஸ்வரம் என்றே வழங்குவதாகும்.12


திருவரங்கம்


காவிரியாற்றின் நடுவே அமைந்த திருவரங்கம் வைணவ உலகத்தில் தலைசிறந்து திகழும் திருப்பதியாகும். அதன் பெருமை யறிந்த தென்னார்க்காட்டு மக்கள் கள்ளக்குறிச்சி வட்டத்தில் பெருமாளுக்கு ஒரு திருக்கோவில் கட்டி, அதற்கு உத்தர திருவரங்கம் என்று பெயரிட்டார்கள் திருமாலிடம் தலை சிறந்த அன்பு வாய்ந்த கிருட்டிண தேவராய மன்னர் காலத்தில் உத்தர திருவரங்கத்தில் உள்ள அரங்கநாதர் கோவிலுக்கு மூன்று ஊர்கள் வழங்கப்பட்ட செய்தி கல்வெட்டால் விளங்குகின்றது.13 இக்காலத்தில் திருவரங்கம் என்பதே அவ்வூரின் பெயர்.


திருநாகேச்சுரம்


சோழ நாட்டிலுள்ள பாடல் பெற்ற திருநாகேச்சுரம் திருத்தொண்டர் புராணமியற்றிய சேக்கிழார் உள்ளத்தைக் கவர்ந்த சிறந்த சிவத்தலம்.
நித்தன்உறை திருநாகேச் சுரத்தில் அன்பு நிறைதலினால் மறவாத நிலைமை மிக்கார்” என்று அவர் வரலாறு கூறும். அருட்செல்வமும் பொருட் செல்வமும் ஒருங்கே பெற்ற சேக்கிழார், தமது ஊராகிய குன்றத்தூரில் ஒரு திருக்கோயில் கட்டி, அதற்குத் திருநாகேச்சுரம் என்று பெயரிட்டார்.
செம்பியார்கோன் திருநாகேச் சுரம்போல் எதும்
திருநாகேச் சுரமெனவே திருப்பேர் சாற்றி”
ச்

சேக்கிழார் வழிபட்டார் என்பது சரித்திரம். ஆகவே, சோழ நாட்டுத் திருநாகேச்சுரத்தின் பெயர் தாங்கித் தொண்டை நாட்டுக் குன்றத்துருக்கு அருகே மற்றொரு திருநாகேச்சுரம் இன்று விளங்கு கின்றது.

வட பழனி

பழம் பெருமை வாய்ந்த முருகப் பதிகளுள் ஒன்று பழனி என்பதை முன்னமே கண்டோம். அப்பதியில் தண்டாயுத பாணியாகக் காட்சி தரும் முருகனை இப்பொழுது சென்னை மாநகர்க்கு அருகேயுள்ள கோடம்பாக்கத்திற் கண்டு அன்பர்கள் வழிபடத் தொடங்கியுள்ளார்கள். அங்கு எழுந்துள்ள முருகன் கோயில் வடபழனி என்று வழங்கப் பெறுகின்றது.

(தொடரும்)

இரா.பி.சேது(ப்பிள்ளை), ஊரும் பேரும்


அடிக் குறிப்பு

6.“நீறுபூசிய உருவர் நெஞ்சினுள் வஞ்சமொன்
றின்றித் தேறுவார்கள் சென்றேத்தும்
சீர்திகழ் காழிநன் னகரே.”

  • திருஞான சம்பந்தர் தேவாரம்.
    தேவாரத் திருமுறையைத் தலவரிசையாகப் பதிப்பித்த சுவாமிநாத பண்டிதர் சீர்காழியென்றே குறித்துள்ளார்.
  • 7. தேவாரத் திருமுறை, ப. 108,
  • 8. செ.மா.க.(L.M. P.,) பக்கங்கள் 327-329.
  • வாணர வீரன் மதுரை என்பது மானா மதுரை யாயிற் றென்பது புராணக் கொள்கை.
  • 9, i53 /1911.
  • 10.483 / 1907.
  • 11.குத்தாலம் என்பது ஒருவகை ஆத்தி மரம் என்றும், அம் மரத்தின் பெயர் பெற்ற ஊர் தற்காலத்தில் குற்றாலம் ஆயிற்றென்றும் கூறுவதுண்டு. மீ.ச. முதற்பாகம், 295.
    12, 1916 இற்கான சென்னைக் கல்வெட்டுத் தொகுப்பிற்கான தாெகுப்பு எண் 475
    ;திருவாங்கூர் தொல்லியல் தொகுப்பு 12 பக்கம் 25
  • 13. 66 / 1906.