(தோழர் தியாகு எழுதுகிறார் : மா.பொ.கட்சியின் ஈர்ப்பும் விலகலும் – தொடர்ச்சி)

கட்சியில் இருந்து நீக்கப்பட்டேன்


அந்த நேரத்தில் மா.பொ.க.(சி.பி.எம்.) மாவட்ட மாநாடு நடைபெற்றது. நான் குழு(கமிட்டி) பதவியை விட்டு விலகினேன். இதற்குக் காரணமாக, ‘என் கீழே இருக்கும் உறுப்பினர்களிடம் என்னால் அதிக நாட்கள் பொய் சொல்லிக் கொண்டிருக்க முடியாது. எனவே இதை விட்டு விலகுகிறேன்’ என்று சொன்னேன். இதுதொடர்பாக உ.இரா. வரதராசனுடன் கடுமையான விவாதம் நடைபெற்றது. ‘குழுப் பதவியை விட்டு விலகினாலும் நீங்கள் தொடர்ந்து கண்காணிக்கப்படுவீர்கள்’ என்று அவர் கூறினார். ‘நீங்கள் யார் என்னைக் கண்காணிப்பதற்கு, நாங்கள் கண்காணிக்க வேண்டிய நிலையில்தான் தலைவர்கள் இருக்கிறீர்கள்’ என்று கூறினேன்.

மாநாட்டில் எனக்குப் பேசுவதற்கு எட்டு நிமிடம் ஒதுக்கப்பட்டது. நான் பேச ஆரம்பித்ததுமே குறுக்கிட்டு, ‘தி.மு.க.வில் பேசுவது போல் பேசக் கூடாது’ என்றார்கள். ‘நீங்கள் சோ.ராமசாமி பேசுவது போல் பேசாதீர்கள்’ என நான் பதில் கூறினேன். இனிமேல் கட்சிக்குள் போராடி வெல்ல முடியாது என்ற முடிவுக்கு வந்தேன்.

நேருவின் மொழிக் கொள்கையை நடைமுறைப்படுத்த வேண்டும் என்று ஏ. நல்லசிவன் அறிக்கை கொடுத்தார். அஃது ஓர் ஏமாற்று மோசடி என்று நான் அவருக்குப் பதில் எழுதினேன். ‘அனைத்து மொழிகளும் சமம் என்கிற இலெனினின் கொள்கையை ஏற்றுக் கொள்கிறீர்களா, அல்லது இந்தியும், ஆங்கிலமும் மட்டும்தான் தேவை என்கிற நேருவின் கொள்கையை ஏற்றுக் கொள்கிறீர்களா?’ எனக் கேட்டிருந்தேன். அவர் கட்சிக்குள் ஒரு சிறந்த சனநாயகவாதி. என்னை அழைத்து அது குறித்து விவாதித்தார். பேச்சு விடுதலைப் புலிகள் பக்கம் திரும்பியது. ‘புலிகள் போராட்டத்தை நான் எதிர்க்கவில்லை, ஆனால் தொழிற்சங்கத்தில் கிடைப்பது போல இடைக்கால நிவாரணம் தற்போது கிடைப்பதை அவர்கள் ஏற்றுக்கொள்ளலாம் இல்லையா?’ என்று கேட்டார்.

இடைக்கால நிவாரணம் தொழிற்சங்கத்தைக் கலைப்பது போல இருக்கக் கூடாது’ என்று நான் சொன்னேன். இதேபோல் பல வாக்குவாதங்கள் நடைபெற்றன. 1989 செட்டம்பர் 15ஆம் நாள் திலீபன் உண்ணாவிரதப் போராட்டம் தொடங்கிய நாள். நாங்கள் மூன்று தோழர்கள் இணைந்து திலீபன் மன்றம் ஒன்றை அறிமுகம் செய்தோம் அன்று நடைபெற்ற கூட்டத்தில் ஈழச்சிக்கல் குறித்து நான் விரிவாகப் பேசினேன். கூட்டத்தில் மா.பொ.க.வைக் கடுமையாகத் தாக்கிப் பேசினேன்.

கூட்டம் நடைபெறப் போகிறது என்று அறிந்தவுடனே, நான் அந்தக் கூட்டத்தில் கலந்து கொள்ளக் கூடாது எனக் கட்சியில் இருந்து சொன்னார்கள். அதைமீறி நான் கலந்து கொண்டேன். மறுநாள் தீக்கதிர் பத்திரிகையில் நான் கட்சியில் இருந்து நீக்கப்பட்டதாக செய்தி வெளியானது. மா.பொ.க.வுடன் உறவு முறிந்து போன பின்னணி இதுதான். அவர்கள் பேச்சளவில், எழுத்தளவில் இந்தியாவைப் பல்தேசிய இன மக்களை கொண்ட நாடாகக் கூறினாலும், அவர்களின் வேலைத் திட்டம் இந்தியாவை ஒரே நாடாகக் கருதுகிறது.

சாதி ஒழிப்பு குறித்துத் தனியான சிந்தனையோ, வேலைத்திட்டமோ அவர்களிடம் கிடையாது. அவர்களைப் பொறுத்தவரை நிலப் பிரபுத்துவச் சமூகத்தின் மிச்சசொச்சம் தான் சாதி. வர்க்கப் போராட்டம் நடந்து முடியும் போது சாதி தானாக ஒழிந்து விடும் என்பதுதான் அவர்களது கருத்து. இதனால்தான் இடஒதுக்கீட்டில் அவர்களுக்கு ஆர்வம் கிடையாது. இட ஒதுக்கீடு தொழிலாளி வருக்கத்தைப் பிளவுபடுத்தி, முதலாளித்துவ ஒழிப்பு ஐக்கியத்தை அழித்து விடும் என்பது அவர்கள் கருத்து.

கட்சியின் பார்ப்பனத் தலைமை மட்டுமே இதற்குக் காரணமல்ல. கட்சியின் அமைப்பிலேயே கோளாறு இருக்கிறது. கட்சிக்குள் முழுநேர ஊழியர்களாக வருபவர்கள் ஆ.கா.க.(எல்.ஐ.சி.) சங்கம், வங்கி ஊழியர்கள் சங்கம் போன்றவற்றில் இருந்துதான் கட்சிக்குள் வருகிறார்கள். மண்டல் குழு பரிந்துரை, இட ஒதுக்கீடு போன்றவை இந்தப் பார்ப்பன ஊழியர்களை நேரடியாகப் பாதிக்கும். எனவே இதனை அவர்கள் அலட்சியப்படுத்துகிறார்கள். இதைத்தான் கட்சித் தலைமை எதிரொலிக்கும். சமூகநீதிக் கொள்கையில் அவர்களுக்கு உண்மையான அக்கறை கிடையாது.

தேசிய இனச்சிக்கல், சாதிச் சிக்கல்கள் போன்றவற்றில் ஆளும் வருக்கத்தின் பார்வைதான் அவர்களின் பார்வை. இடது வண்ணம் பூசப்பட்ட ஆளும் வருக்கப் பார்வை. அடிப்படையில் அவர்கள் இந்திய ஆளும் வருக்கத்தின் பக்கம் நிற்கிறார்கள். நாம் தமிழ்த் தேசியம் சார்ந்தோ, சாதி ஒழிப்பு சார்ந்தோ பேசினால் அவர்களுக்கு அது எதிரானது. எனவே நான் அவர்களோடு மாறுபட்டேன்.

அப்போதிருந்த மா.பொ.க. நிலைக்கும், இப்போதிருக்கும் நிலைக்கும் ஏதாவது வித்தியாசத்தை காண்கிறீர்களா?

முன்னைவிட மோசமாக இருக்கிறது. 1964இல் கட்சியின் முதல் வேலைத்திட்டம் குறித்த விவாதம். அதில் தேசிய இனச்சிக்கல் குறித்துப் பேசுகிறார்கள். கருத்து வேறுபாட்டால் கட்சி இரண்டு பிரிவாக நின்றது. ஏ.பாலசுப்பிரமணியம், சுந்தரய்யா போன்றவர்கள் ‘தேசிய இனச்சிக்கல் என்பது இலெனினின் கொள்கைதான். இந்தியா ஒன்றாக இருக்க வேண்டும். ஆனால் பிரிந்து போகும் உரிமையோடு கூடிய, தன்வரையறை உரிமை கொண்ட தேசிய இனங்களின் ஐக்கியமாக இருக்க வேண்டும்’ என்றார்கள்.

1912இலேயே தாலின் “இந்தியாவில் தேசிய இனங்கள் வளர்ந்து கொண்டிருக்கின்றன. முதலாளித்துவ வளர்ச்சி இந்த நிலைக்குக் கொண்டு சென்றுள்ளது. பின்னாளில் தேசிய இனங்கள் தங்களது உரிமைகளை வலியுறுத்தும்” என்று எழுதினார். 1920களிலேயே இந்தியாவில் மொழிவழித் தேசிய இனங்கள் தங்களை உறுதியாக நிலைநாட்டிக் கொண்டார்கள். அதனுடைய ஒரு வெளிப்பாடுதான் பெரியாரின் தன்மதிப்பு(சுயமரியாதை) இயக்கம். தமிழ்த்தேசியம் தன்னை அடையாளம் கண்டுகொள்ளும் முயற்சி அது. பஞ்சாபில் ‘அகாலி’ இயக்கம் ஒருபுறம் பிரிட்டனை எதிர்த்துக் கொண்டே ‘பஞ்சாப்பு பஞ்சாபிகளுக்கே’ என்ற முழக்கத்தை முன்வைத்தது.

இதற்கெல்லாம் முன்னோடியாக வங்காளம் திகழ்ந்தது. வந்தே மாதரம் பாடலை சட்டர்சி எழுதும் போதே ஏழு கோடி மக்கள்தொகை என்றுதான் எழுதினார். பாரதியார் அதை முப்பது கோடி என்று மொழிபெயர்த்தார். ஏனெனில் சட்டர்சி எழுதியது வங்கதேசத்துக்கான பாடல்தான். பிற்காலத்தில் ஆந்திராவில் எழுந்த தெலுங்கானா போராட்டம் என்பது தெலுங்கு தேசிய இனத்தின் உரிமைப் போராட்டம்தான்.

ஆனால் பொதுவுடைமைக் கட்சி 1941இல் பாகித்தான் பிரிவினைக் கோரிக்கையின் போதுதான் தேசிய இனச்சிக்கலுக்கு முதன்மைத்துவம் தருகிறது. அதற்காக ஒரு குழு அமைத்து ஆய்வு செய்தது. இறுதியில் இந்தியா என்பது பிரிந்து போகும் உரிமையுடைய பல்வேறு தேசிய இனங்களை உடைய ஒரு பல்தேசிய நாடு என அறிக்கை வெளியிட்டது. இதன் அடிப்படையில்தான் பாகித்தான் தனிநாடு கேட்கிறது. எனவே அதை ஆதரிக்க வேண்டும் என்றும் அதில் கூறியிருந்தார்கள்.

பாகித்தான் பிரிவினைக்குப் பிறகு ஏற்பட்ட கலவரங்கள், ‘நேரு ஓர் ஏகாதிபத்திய எதிர்ப்பாளர், எனவே அவரது கையை வலுப்படுத்த வேண்டும்’ எனச் சீனா, சோவியத்து கருதியது போன்ற பல்வேறு பின்னணிகளில் பொதுவுடைமைக் கட்சி தேசிய இனச்சிக்கலில் தங்களுக்கிருந்த கொள்கையைக் கைகழுவியது. இ.எம்.எசு. போன்ற தலைவர்கள் ‘தன்வரையறை(சுயநிருணய) உரிமையை ஆதரித்தால் இந்தியப் பாட்டாளி வருக்கம் பிளவுபட்டு விடும். ஆனால் மார்க்சியக் கட்சி என்ற முறையில் தேசியத் தன்வரையறை(சுயநிருணய) உரிமையை எதிர்க்க முடியாது, அதே நேரத்தில் அதை வலியுறுத்தவும் கூடாது’ என்ற நிலையை எடுத்தார்கள்.

வெளிப்படையாகத் ‘தன்வரையறை(சுயநிருணய) உரிமையை ஆதரிக்க வேண்டும்’ என்ற மற்றொரு கருத்தும் அங்கே வெளிப்பட்டது. எனவே இதை விவாதித்து முடிவெடுப்பதாக அறிவித்து 72 வரை எட்டு வருடங்கள் கட்சிக்குள் விவாதங்கள் நடைபெற்றன. மாநிலங்களில் இது குறித்து வாக்கெடுப்பு நடத்தப்பட்டது. தமிழ்நாட்டில் தன்வரையறை(சுயநிருணய) உரிமைக்கு ஆதரவாக (பி.இராமமூர்த்தியை எதிர்த்து, ஏ.பாலசுப்பிரமணியத்திற்கு ஆதரவாக) அதிகம் பேர் வாக்களித்திருந்தார்கள் என்று கேள்விப்பட்டேன். ஆனால் அது மறுதலிக்கப்பட்டது. இறுதியில் இந்தியா விருப்பம் சார்ந்து இணைந்த தேசிய இனங்களின் ஒன்றியமாக இருக்கும் என்ற முடிவுக்கு அவர்கள் வந்தார்கள். இது கட்சியின் தீர்மானம்.

இந்தியாவுக்குச் சொன்ன இந்த கருத்தை, அளவுக்கு மீறி அவர்கள் இலங்கையில் திணித்து விட்டார்கள். சமீபத்தில் கொசோவாவுக்கும் விடுதலை கூடாது என்ற கருத்தை வெளியிட்டுள்ளார்கள். ஆனால் வங்கதேசப் பிரிவினையை ஆதரிக்கிறார்கள். ஏனெனில் மேற்கு வங்காளத்தில் கட்சி பெரிய கட்சி. அதனால் வங்க மக்களின் தேசிய உணர்வை எதிர்த்து நிற்க முடியவில்லை. இதற்கு வங்கத் தேசிய உணர்வு மட்டும் காரணமல்ல. இந்திய ஆளும் வருக்கத்தின் கொள்கை இவர்களது கொள்கையாக இருப்பதும் ஒரு காரணம்.

வங்கதேசப் பிரிவினை பாகித்தானை பலவீனப்படுத்தும். எனவே இந்திய ஆளும் வருக்கம் அதை ஆதரிக்கிறது. பொதுவுடைமையர்களும் ஆதரிக்கிறார்கள். இந்தியப் படையை இலங்கைக்கு ஆளும் வருக்கம் அனுப்பிய போது அதை வரவேற்றார்கள். இப்படித்தான் முன்னைக் காட்டிலும் மா.பொ.க.(சி.பி.எம்மின்) நிலைமை பலமடங்கு மோசமாகி விட்டது.

(தொடரும்)
தோழர் தியாகு
தாழி மடல் 299