(தோழர் தியாகு எழுதுகிறார் : மொழிக்கொள்கை – தொடர்ச்சி)

பா.ச.க. போன்ற மதவாத இயக்கங்கள்

தமிழ்த் தேசியமே இறுதி இலக்கு என்று இருக்கும் தமிழ்த் தேசிய அமைப்புகள் தனித்தனி அமைப்புகளாக செயல்படுவது ஏன்?

அமைப்புகள் என்பதே கருத்துகளின் வெளிப்பாடுதான். சுபவீயின் வற்புறுத்தலின் பேரில் தமிழ்த் தேசிய அமைப்புகளை ஒருங்கிணைத்து செயல்படுவது குறித்து பேச்சுவார்த்தை நடத்தினோம். அதில் முதலில் எழுந்த கேள்வியே அமைப்புகளின் குறிக்கோள் என்ன? என்பதுதான். நாங்கள் தேசிய விடுதலை என்றோம், பெ.மணியரசன் தன்னுரிமை என்றார். சுபவீயோ, ‘தன்னுரிமையோ, தேசிய விடுதலையோ, வேறொன்றோ எதை வேண்டுமானாலும் குறிக்கோளாக வைத்துக் கொள்ளுங்கள். ஆனால் நீங்கள் நெடுமாறன் தலைமையில் ஒன்றிணைந்து ஒரே இயக்கமாகச் செயல்பட வேண்டும்’ என்று கூறினார்.

விவாதம் நீண்டுகொண்டே போய் இறுதியில் பொதுமுழக்கமாக ‘தமிழ்த்தேசிய இறையாண்மை’ என்பதை வைத்துக் கொள்ளலாம் என முடிவானது. முதலில் எல்லா அமைப்புகளும் ஒருங்கிணைந்து இயங்குவது, பின்னர் அதை கூட்டமைப்பாக மாற்றி, காலப்போக்கில் ஒரே அமைப்பாகக் கொண்டுவந்து விடலாம் என முடிவு செய்தோம். நெடுமாறன், ‘நாம் மூன்று அமைப்புகள் மட்டும் இணைந்தால் போதாது, தமிழ்நாட்டில் நம்மைப் போல் எண்பது அமைப்புகள் உள்ளன. அனைவரும் இணைந்து இயங்கலாம்’ என்றார்.

இந்தக் கருத்தில் எனக்கு மாறுபாடு இருந்தது. ‘இந்த மூன்று அமைப்புகள் மட்டும்தான் தீவிரமாக வேலை செய்யும். மற்றவர்களிடம் அந்தத் தீவிரம் இருக்காது. எனவே பெயரளவுக்கு மன்றம் வைத்திருப்பவர்களை எல்லாம் நம்முடன் இணைத்துக் கொண்டால் அஃது அரசியல் இயக்கமாக இருக்காது’ என்று கூறினேன்.

என்னுடைய முக்கியமான கோரிக்கையாகத் தேர்தல் புறக்கணிப்பு இருந்தது, பெ.மணியரசனுக்கு அதில் உடன்பாடு இருந்தது. அதை நெடுமாறன் ஒத்துக் கொள்ளவில்லை. ‘நமக்கு ஆதரவான சக்திகள் போட்டியிடும்போது அதை ஆதரிக்க வேண்டும். பிற்காலத்தில் நாமே போட்டியிட்டு வெற்றி பெறும் வாய்ப்பு இருந்தால் அதைப் பயன்படுத்திக் கொள்ள வேண்டும்’ என்றார். இப்படி ஒரு கருத்தை வைத்திருப்பவரோடு எப்படி ஒன்றுசேர முடியும்? பார்க்கிறவர்களுக்கு அவர் தமிழ்த் தேசிய பெருந்தலைவராக இருக்கலாம்; பத்திரிகைகள் அவருக்கு முக்கியத்துவம் தரலாம். அதற்காகவே எல்லாரையும் ஒன்றுசேர்த்து விட முடியாதே!

அதே நேரத்தில் தனித்தனி கொள்கைகள் இருப்பதாலேயே, இந்தி எதிர்ப்பு, தமிழ்மொழிப் பாதுகாப்பு போன்ற கோரிக்கைளுக்காக நாங்கள் ஒன்று சேர்ந்து போராடாமலும் இல்லை.

புதுவையில் நடைபெற்ற ஒரு கூட்டத்தில் எனக்கு முன்னால் பேசிய ஒரு தோழர், ‘எல்லாப் பொதுவுடைமைக் கட்சிகளும் ஒன்றுசேர வேண்டும்’ என்று குறிப்பிட்டார். நான் பேசும்போது, ‘எதற்காக எல்லாப் பொதுவுடைமைக் கட்சிகளும் ஒன்றுசேர வேண்டும்? எல்லாப் பொதுவுடைமையர்களும் ஒன்று சேர்ந்து அஃது ஒரு சிறு குழுவாக மக்கள் மத்தியில் இருப்பதற்குப் பதிலாக, ஒரு பொதுவுடைமைக் கட்சி வெகுமக்களைத் திரட்டி புரட்சி செய்தால் போதுமானது. அப்படித்தான் உலக வரலாற்றில் மாற்றங்கள் சாத்தியமாகியிருக்கின்றன’ என்று குறிப்பிட்டேன்.

அதுபோலத் தமிழ்த் தேசியவாதிகள் அனைவரும் இணைந்து தமிழ்நாட்டில் நூறுபேர் கொண்ட ஒரு குழுவாக இருப்பதற்குப் பதிலாகத், தமிழ்த் தேசியவாதிகளில் ஒழுங்காகச் செயல்படுகிற பத்துப் பேர் தமிழ்த் தேசியச் சிக்கலை சரியாகப் புரிந்து கொண்டு மக்களைத் திரட்டி மாற்றம் கொண்டு வர முடியுமானால் அதுதான் முக்கியமானது. அதற்கு நீங்கள் குறிப்பிட்ட இந்த சேர்க்கை முரண்பாடாகத்தான் இருக்கும்.

இதில் எனக்கு சுபவீயோடும் முரண்பாடு இருக்கிறது. சமூகநீதி மாநாட்டில் பேசும்போது, ‘மண்டல் குழுவை நாம் ஆதரிக்கிறோம், வடநாட்டில் எதிர்க்கிறார்கள். அதை எல்லோரும் இணைந்துதான் செயற்படுத்த வேண்டும் என்று என்ன அவசியம் இருக்கிறது? நமக்கு உடன்பாடு இருந்தாலும் அதை நாம் நிறைவேற்றிக் கொள்வதற்கு அனைவருக்கும் ஒரே அரசமைப்புச் சட்டம் என்ற அமைப்புதான் தடையாக இருக்கிறது. எனவே சமூகநீதியுடன் கூடிய தனி அரசு வேண்டும் என்று தீர்மானம் நிறைவேற்ற வேண்டும்’ என்று பேசினேன்.

‘விவாதம் நடந்து கொண்டிருக்கும் நிலையில் இந்தத் தீர்மானம் தேவையற்றது, தீர்மானத்தை உடனடியாகக் கைவிடவும்’ என்று சுபவீ கோரினார். மாநிலங்களுக்குக் கூடுதல் அதிகாரம், தமிழ்வழிக்கல்வி, இட ஒதுக்கீடு இந்த மூன்று கோரிக்கைகளும் போதுமானவை என்பது அவரது கருத்து. இப்படிக் கருத்து வேறுபாடுகளை வைத்துக் கொண்டு தமிழ்த்தேசியம் என்ற பெயர் இருப்பதாலேயே நாங்கள் அனைவரும் எப்படி இணைந்து இயங்க முடியும்? தமிழ்த் தேசியம் என்பது வெறும் உணர்வு மட்டுமல்ல, அது ஓர் அறிவியல் கண்ணோட்டம். சமூக மாற்றம் பற்றிய ஓர் அறிவியல் பார்வை. அந்த அறிவியலை எந்த ஒற்றுமைக்காகவும் விட்டுக் கொடுக்க முடியாது.

தமிழ்மொழிப் பாதுகாப்பு, ஈழச் சிக்கல் போன்றவற்றின் வழியாகப் பா.ச.க. போன்ற மதவாத இயக்கங்கள் தமிழ்த் தேசியவாதிகளோடு இணைந்து செயல்பட முயல்கிறார்கள் என்ற ஒரு கருத்தும் இருக்கிறது. இஃது எந்த அளவுக்கு உண்மை?

சமீபத்தில் கூட ஈழச்சிக்கலுக்காக நெடுமாறனும் இல.கணேசனும் இணைந்து பணியாற்றினார்கள் என்ற குற்றச்சாட்டு கூட எழுந்தது.

நாங்கள் பா.ச.க.வோடு எந்தக் காலத்திலும் இணைந்தது கிடையாது. நெடுமாறன் இல.கணேசனோடு சேர்ந்து செயலலிதாவுக்கு ‘சமூகநீதி காத்த வீராங்கனை’ என்ற பட்டம் கொடுத்த விழாவில் போய்ப் பேசினார். ‘இராசாசியைப் போல் திறமையானவர் செயலலிதா’ என்று பாராட்டிப் பேசினார். அஃது அவருடைய கருத்து. அதற்கு நாங்கள் பொறுப்பு கிடையாது. பா.ச.க.என்பது இந்தியத் தேசியத்தின் படுபிற்போக்கான ஒரு வடிவம். இந்துத்துவ, பார்ப்பனிய, சாதி ஆதிக்கத்தைக் கட்டி நிறுவுகிற ஒரு அமைப்பு. அவர்களோடு நமக்கு எந்தவிதமான அரசியல் உறவோ, அமைப்பு உறவோ இருக்க முடியாது. ஈழ விடுதலையைப் பா.ச.க.வால் ஒருபோதும் ஆதரிக்கவே முடியாது.

அதே நேரத்தில் பா.ச.க.வின் பின்னால் இருக்கிற தொழிலாளர்கள், விவசாயிகள், மாணவர்கள், தமிழர்களுக்கும் நமக்கும் எந்த உறவும் இல்லை என்றும் சொல்ல முடியாது. இரயில்வே தொழிலாளர்கள் போராட்டம் வந்தபோது பா.ச.க.வினரும் பொதுவுடைமையர்களும் இணைந்து போராடினார்கள். தொழிலாளர்கள் என்ற அடிப்படையில் அவர்கள் ஒன்றிணைந்தார்கள். பா.ச.க.வின் எந்தக் கொள்கையையும் பொதுவுடைமையர்கள் ஏற்றுக்கொள்ளவில்லை, ஏற்றுக்கொள்ளவும் முடியாது. அதே நேரத்தில் நியாயமான கோரிக்கைக்காக நம்முடன் இணைந்து போராட வரும்போது புறக்கணிக்க வேண்டும் என்று எந்த அவசியமும் கிடையாது. அதற்கு நாம் பொறுப்பேற்கவும் முடியாது. பா.ச.க.வோடும் சரி, காங்கிரசோடும் சரி எங்களுக்கு எந்த உறவும் கிடையாது.

((தொடரும்)
தோழர் தியாகு
தாழி மடல் 300