(தோழர் தியாகு எழுதுகிறார் 37 தொடர்ச்சி)

சாதிக் குருடர்களாநீதித் திருடர்களா? 2

உச்ச நீதிமன்றத் தீர்ப்பு

 இந்திய அரசு நடத்தும் மையக் கல்விப் பயிலகங்களில் ஏனைய பிற்படுத்தப்பட்டோர்க்கு மாணவர் சேர்க்கையில் இடஒதுக்கீடு வழங்குவதற்கான சட்டம் 2006ஆம் ஆண்டு இயற்றப்பட்டது. இதற்கெதிராகத் தொடரப்பட்ட நீதிப் பேராணை (ரிட்) வழக்கு இந்திய உச்ச நீதிமன்றத்தின் உசாவலுக்கும் தீர்ப்புக்கும் காத்துள்ளது. இந்நிலையில் மேற்படிச் சட்டத்தின் 6ஆம் பிரிவை நிறுத்தி வைக்கும்படி அரிஜித் பசயத், லோகேசுவர் சிங் பந்தா ஆகிய இரு நீதிபதிகளைக் கொண்ட ஆயம் (‘பெஞ்சு’) சென்ற மார்ச்சு 29ஆம் நாள் தீர்ப்பளித்தது.

இந்தத் தீர்ப்பு குறித்துப் பல செய்நுட்பக் கேள்விகள் எழுந்துள்ளன:   

நிறுத்தி வைக்கும் ஆணையைத் தடையாணையாகக் கருத முடியுமா? முடியும் என்றால் இரண்டே இரண்டு நீதிபதிகள் இப்படி ஒரு தீர்ப்பை வழங்கியது முறைதானா?  குறைந்தது ஐந்து நீதிபதிகள் கொண்ட ஆயம்தான் இத்தகைய வழக்குகளில் தீர்ப்பு வழங்க முடியும் என்றும் அரசமைப்புச் சட்ட விதி (உறுப்பு 145, கூறு (3)] என்னா யிற்று? அரசுப் பணிகளில், ஏனைய பிற்படுத்தப்பட்டோருக்கு 27 விழுக்காடு இடஒதுக்கீடு வழங்கியது அரசமைப்பின்படி செல்லும் என்று 1992இல் இந்திரா சாஃஹ்னி வழக்கில் உச்ச நீதிமன்றத்தின் 9 நீதிபதி – ஆயம் வழங்கிய தீர்ப்புடன் இந்த 2 நீதிபதி -ஆயம் முரண்படுவதற்கு என்ன விளக்கம்? இப்போதைய தீர்ப்பை மீளாய்வு செய்யும்படி கேட்கக் கூடாது என்று நீதிபதிகளே அரசுக்கு (வழக்கை விரைந்து நடத்தவதற்கு) நிபந்தனை போடுவது கட்டப்பஞ்சாயத்தை நினைவுபடுத்த வில்லையா?

 இவை போன்ற பல வினாக்களுக்கும் விடை தேடும் முயற்சியில் நாம் இறங்கப் போவதில்லை.

 நமது நோக்கம் விவாதத்துக்குரிய உச்ச நீதிமன்றத் தீர்ப்பில் பொதிந்துள்ள சாதிக் குருட்டுச் சாதியத்தை வெளிப்படுத்துவதே ஆகும்.

 மூன்று முக்கிய வாதங்கள்

இந்தத் தீர்ப்பு மூன்று முதன்மை வாதங்களை அடிப்படையாகக் கொண்டுள்ளது :

1. மையக் கல்விப் பயிலகங்களில் ஏனைய பிற்படுத்தப் பட்டோருக்கு 27 விழுக்காடு இடஒதுக்கீடு வழங்குவதற்குப் போதுமான சான்றுகளை அரசு தரவில்லை. பிற்படுத்தப்பட்ட வகுப்பினரின் அளவு, அவர்களது பிற்பட்ட நிலையின் அளவு முதலானவை குறித்துப் போதிய தரவுகள் திரட்டப்படவில்லை . 1931ஆம் ஆண்டு எடுத்த சாதிவாரிக் கணக்கெடுப்பை அடிப்படையாகக் கொண்டு இப்போது இடஒதுக்கீடு வழங்குவது சரியில்லை.

2. இடஒதுக்கீடு தகுதி – திறமையைப் பாதிக்காது என்று அரசு சொல்வதை ஏற்க முடியாது.

3. ஏனைய பிற்படுத்தப்பட்டோர்க்கான இடஒதுக் கீட்டிலிருந்து பசையடுக்கினரை நீக்க வகை செய்யாததால் இந்த இடஒதுக்கீடு செல்லாது.

 இந்த வாதங்களை இந்திய அரசு தனக்கே உரிய முறையில் மறுத்துள்ளது. அதாவது அரைகுறையாகவும் முன்னுக்குப் பின் முரணாகவும் மறுத்துள்ளது. பார்க்கப் போனால், உச்ச நீதிமன்றத்தின் தடையாணைக்குத் தேவையான  ‘நியாயங்களை’ அரசின் குறிப்பிட்ட இடஒதுக்கீட்டுச் சட்டமே வழங்குகிறது எனலாம்.

எனவே உச்ச நீதிமன்றத் தீர்ப்பைக் குற்றாய்வு செய்வது அரசின் நிலைப்பாட்டை நியாயப்படுத்துவதற்காக அல்ல.  அரசின் நிலைப்பாட்டைக் குறை சொல்வதும் உச்ச நீதிமன்றத் தீர்ப்பை நியாயப் படுத்துவதற்காக அல்லவே அல்ல. இரண்டையுமே  நாம் தெள்ளத் தெளிவான சமூகநீதிக் கோணத்திலிருந்து அணுகித் திறனாய்வு செய்ய வேண்டும்.

சாதிவாரிக் கணக்கெடுப்பும் மண்டல் குழுவும்

முதலாவதாக, 1931க்குப் பிறகு சாதிவாரிக் கணக்கெடுப்பே நடத்தப்படவில்லை என்பது ஆட்சியாளர்களின் குற்றம். பிற்படுத்தப்பட்ட  மாணவர்களை இதற்காகத் தண்டிக்க முடியாது. ஆனால் இந்த 27 விழுக்காடு இடஒதுக்கீட்டுக்குப் பரிந்துரை செய்த மண்டல்குழு 1931 மக்கள் தொகைக் கணக்கெடுப்பை ஒரு தொடக்கமாக மட்டுமே கொண்டது. 1979-80இல் மண்டல் குழு பல்வேறு கோணங்களிலும் ஆய்வு செய்துதான் பிற்படுத்தப்பட்ட வகுப்புகளின் பட்டியலை வரைந்தது.

 மண்டல் குழுவின் பட்டியலில் இடம்பெற்ற பிற்படுத்தப்பட்ட வகுப்புகள் – சாதிகளின் தொகை 3,743. அரசு இந்தப் பட்டியலை முழுமையாக  ஏற்கவில்லை. வடிகட்டி வடிகட்டி அது இத்தொகையை 2,000 ஆக்கிற்று. 1992 இந்திரா சாஃகுனி வழக்கில் உச்ச நீதிமன்றம் ஆணையிட்டவாறு பிற்படுத்தப்பட்ட வகுப்புகளுக்கான நாடளாவிய ஆணையம் ஏற்படுத்தப்பட்டது. இந்த ஆணையம் அறிவுறுத்தியபடி மேலும் 200க்குச் சற்றே மேற்பட்ட வகுப்புகள், இப்பட்டியலில் சேர்க்கப்பட்டன. மண்டல் பட்டியல், மாநில அரசுப் பட்டியல் இரண்டுக்கும் பொதுவான வகுப்புகள் மட்டுமே மைய அரசின் பட்டியலில் இடம்பெற்றுள்ளன. இந்தப் பட்டியல் எவ்வகையில் காலாவதியான ஒன்று என்பது உச்ச நீதிமன்ற நீதிபதிகளுக்கே வெளிச்சம்!

மண்டல் குழுப் பரிந்துரையை எல்லா வகையிலும் மட்டம் தட்ட உச்ச நீதிமன்ற நீதிபதிகள் துடிப்பது அப்பட்டமாய்த் தெரிகிறது. மண்டல் கணக்குப்படி இந்திய மக்கள் தொகையில் பிற்படுத்தப்பட்டோர் பங்கு 52 விழுக்காடு ஆகும். ஆனால் அவர்களுக்குப் பரிந்துரைக்கப்பட்ட இடஒதுக்கீடு வெறும் 27 விழுக்காடுதான்.

மண்டல் கணக்கைத் தவறு என்று காட்டுவதற்காக வேறு சில கணக்குகளை உச்ச நீதிமன்றத் தீர்ப்பு சுட்டுகிறது. இவற்றில் ஒன்று இந்திய நாடளாவிய மாதிரி ஆய்வு (NSSO) தரும் கணக்கு. இந்த மாதிரி ஆய்வில் புறஞ்சார்ந்த கணக்கெடுப்போ, சாதிவாரிப் புள்ளி விவரமோ கிடையாது. 

 உச்ச நீதிமன்றத்தின் அநியாயச் சந்தேகம்

நாடளாவிய மாதிரி ஆய்வின் கணக்குப்படி இந்தியாவில் ஏனைய பிற்படுத்தப்பட்டோர் 41 விழுக்காடு. இந்தக் கணக்கு சரியா, மண்டல் கணக்கு சரியா என்பதன்று வினா. இரண்டில் எது சரியென்றாலும், ஏனைய பிற்படுத்தப்பட்டோர் 27 விழுக்காடாவது இருப்பார்களா என்ற ஐயப்பாடு எழ நியாயமே இல்லை. ஆனால், இந்தச் சந்தேகம் உச்ச நீதிமன்றத்துக்கு அநியாயமாய் எழுகிறது.

மண்டல் குழு ஆய்வையும் மைய ஆய்வையும் மைய அரசின் கணக்கையும் கூட கேள்விக்குள்ளாக்கும் உச்ச நீதிமன்ற நீதிபதிகள் இந்தச் சிக்கலுக்கு முன்மொழியும் தீர்வு என்ன? உடனடியாகச் சாதிவாரிக் கணக்கெடுப்பு நடத்தச் சொல்கிறார்களா? ஏனைய பிற்படுத்தப்பட்டோர் முன்போல் இப்போது பிற்படுத்தப்பட்டிருக்கவில்லை என்று காட்டுவதற்கான தரவுகளை முன்வைக்கிறார்களா? எதுவுமே இல்லை

தமிழ்த்தேசம் இதழ் – சித்திரை 2௦௦7 – ஆசிரியர்: தியாகு

.

 (தொடரும்)

தோழர் தியாகு

தரவு :  தாழி மடல்