(தோழர் தியாகு பகிர்கிறார் : ஐயா வைகுண்டர் வழியில் சனாதன எதிர்ப்பு-தொடர்ச்சி)

இனிய அன்பர்களே!

சூழ்கலி நீங்கத் தமிழ் மொழி ஓங்க…

“வாழ்க நிரந்தரம்! வாழ்க தமிழ்மொழி!
வாழிய வாழியவே!
வான மளந்தது அனைத்தும் அளந்திடு
வண்மொழி வாழியவே!
ஏழ்கடல் வைப்பினுந் தன்மணம் வீசி
இசைகொண்டு வாழியவே!
எங்கள் தமிழ்மொழி! எங்கள் தமிழ்மொழி!
என்றென்றும் வாழியவே!
சூழ்கலி நீங்கத் தமிழ்மொழி ஓங்கத்
துலங்குக வையகமே!
தொல்லை வினைதரு தொல்லை அகன்று
சுடர்க தமிழ்நாடே!
வாழ்க தமிழ்மொழி! வாழ்க தமிழ்மொழி
வாழ்க தமிழ்மொழியே!
வானம் அறிந்த தனைத்தும் அறிந்து
வளர்மொழி வாழியவே!

இது பாரதியார் எழுதிய தமிழ்மொழி வாழ்த்து என்பதை நீங்கள் அறிந்திருப்பீர்கள். இதன் ஆழமான உட்பொருளை எண்ணிப் பார்த்தீர்களா? தமிழ்மொழியை வாழ்த்திப் பலரும் பலவாறு பாடியுள்ளனர். ஆனால் இந்தப் பாட்டு வெறும் வாழ்த்துப் பாடலாக மட்டும் நின்று விடவில்லை.
பாரதியார் தமிழ்மொழியின் அழகைப் போற்றுவதோடு அதன் பயனையும் எடுத்துரைக்கிறார். “பண்பும் பயனும்” என்பாரே திருவள்ளுவர், அத்தகைய பார்வை இது.
தமிழ் வாழ்க! என்றென்றும் வாழ்க! வானத்தின் கீழ் கிடக்கிற அனைத்தையும் அறிந்துரைக்கும் வளமார் தமிழ் மொழி வாழ்க! அண்டம் முழுவதிலும் அசைந்தாடும் பொருட்களும் நிகழ்வுகளுமான பொருண்மையை நமக்கு அறியத் தருவது தமிழ்மொழி! வானம் அளந்தது அனைத்தும் அளந்திடு வண்மொழி என்றால் அளந்து முடித்து விட்டதா? அளந்து கொண்டிருக்கிறதா? அளக்கப் போகிறதா? எப்படி வேண்டுமானாலும் பொருள் கொள்ளலாம். வளர் மொழி என்பதும் அதே போலத்தான்! வளர்ந்த மொழி, வளரும் மொழி, வளர வேண்டிய மொழி! உயிரோட்டமான மொழி என்பது இப்படித்தான் இருக்க வேண்டும்.
பாரதியின் இந்த வாழ்த்துப் பாடலில் என்னைப் பெரிதும் ஈர்த்த பொருட்செறிவு மிக்க வரி இதுதான்: சூழ்கலி நீங்கத் தமிழ்மொழி ஓங்கத் தமிழ்மொழி ஓங்கத் துலங்குக வையகமே! சூழ்கலி என்றால் என்ன? தமிழ்மொழி ஓங்கினால் வையகம் எப்படித் துலங்கும்? ஒரு மொழி வாழ்வதற்கும் உலகம் துலங்குவதற்கும் என்ன தொடர்பு? இந்த வினாக்களுக்கு விடை தேடும் முயற்சியாக –
நாளை (19.09.2023) செவ்வாய் பிற்பகல் பூவிருந்தவல்லியில் திரு இருதயக் குருத்துவக் கல்லூரியின் தமிழ்க் கழகத்தில் “சூழ்கலி நீங்கத் தமிழ் மொழி ஓங்க” என்ற தலைப்பில் உரையாற்றுகிறேன்.

(தொடரும்)
தோழர் தியாகு
தாழி மடல் 317