(தோழர் தியாகு பகிர்கிறார் : சூழ்கலி நீங்கத் தமிழ் மொழி ஓங்க. – தொடர்ச்சி)

இனிய அன்பர்களே!

கலியுகமும் கிருதயுகமும்…

கலி முத்திப் போச்சு! இது கலி காலம்! இப்படியெல்லாம் மக்கள் பேசக் கேட்டிருப்பீர்கள். இந்துத் தொன்மவியலின் பார்வையில் உலகக் குமுகாயம் நான்கு வளர்ச்சிக் காலங்களின் வழிச் செல்கிறது. இவை நான்கு உகங்களாகக் குறிக்கப்படுகின்றன: கிருத யுகம் (சத்திய யுகம்), திரேதா யுகம், துவாபர யுகம், கலி யுகம்!

இந்த நான்கு உகங்களின் கால அளவைப் பார்த்தாலே இது புராணிகக் கதை என்பது விளங்கும்.
1) கிருதயுகம் – 17 லட்சத்து 28 ஆயிரம் ஆண்டுகள்;
2) திரேதாயுகம் – 12 லட்சத்து 96 ஆயிரம் ஆண்டுகள்;
3) துவாபரயுகம் – 8 லட்சத்து 64 ஆயிரம் ஆண்டுகள்;
4) கலியுகம் – 4 லட்சத்து 32 ஆயிரம் ஆண்டுகள்.
இப்போது நடப்பது கலி உகமாம்! கலிஉகம் முடிந்ததும் மீண்டும் கிருத உகம் தொடங்குமாம்! அடுத்து திரேதாஉகம், துவாபரஉகம், மீண்டும் கலிஉகம் என இவ்வாறு மீண்டும் மீண்டும் வந்து கொண்டேயிருக்குமாம்!


கலிஉகம் எப்போது தொடங்கியது? கண்ணன் (கிருட்டிண பரமாத்துமா) இறந்த நாளில் கலிஉகம் தொடங்கியதாகச் சிறிமண் மகாபாகவதம் (முதல் கந்தம்: அத்தியாயம் – 15, சுலோகம் – 36). இராமன் பிறந்த நாள், கிருட்டிணன் இறந்த நாள் இதெல்லாம் ‘அவாவா’ நம்பிக்கையைப் பொறுத்தது. இது பற்றிக் கேள்வி எழுப்பினால் அவாள் மத நம்பிக்கை புண்படும். ஆனால் இந்த நம்பிக்கையிலும் அவாளுக்குள் நிறைய வேறுபாடுகள் உண்டு.

கி.பி. (பொது ஊழி) 476ஆம் ஆண்டு பிறந்த வானியலர் ஆரியபட்டர் சொல்கிறார்… கி.மு. (பொ.ஊ.மு.) 3102 பிப்ரவரி 18ஆம் நாள் வெள்ளிக்கிழமை கலிஉகம் தோன்றியதாம்! வராகமிகிரர் என்னும் மற்றொரு வானியலர் சொல்கிறார்… கலிஉகம் கி.மு. (பொ.ஊ.மு.) 2449ஆம் ஆண்டில் தொடங்குகிறதாம்!

கலிஉகம் 4,32,000 ஆண்டுகள் என்ற கணக்கையே மறுக்கிறார் சிறியுக்குதேசுவர்: கலிஉகம் 2,400 ஆண்டுகள்தானாம்! 1,200 ஆண்டு இறங்குமுகம், 1,200 ஆண்டு ஏறுமுகமாம்! இப்போது நடப்பது துவாபர உகமாம்!
கலிஉகத்தில் என்னவெல்லாம் நடக்குமாம்?
அரசர்களின் செங்கோல் தாழுமாம்! கொடுங்கோல் ஏற்றம்.பெறுமாம்! வரிகள் உயருமாம். அரசுகள் இறை நம்பிக்கையையும் இறை வழிபாடுகளையும் பாதுகாக்க மாட்டார்களாம்! அரசே மக்களை வாட்டி வதைக்குமாம்! மக்கள் உணவின்றித் தவிப்பார்களாம்!

(ஏதோ கொஞ்சம் நம்ம மோதிசிக்குப் பொருந்துவது போலவும் உள்ளது! பொருந்தாதது போலவும் உள்ளது அல்லவா?)

கலிகாலத்தில் மக்கள் எப்படி இருப்பார்களாம்? பொறாமை கூடுதலாகுமாம்! ஒருவருக்கொருவர் வெறுப்பு வளருமாம். குற்றவுணர்ச்சியே இல்லாமல் கொலைகள் நடக்குமாம்! காம வெறியும் பாலின ஒழுக்க கேடும் சமூகத்தில் தலையெடுக்குமாம்!

ஆசிரியர்களுக்கு மதிப்பு கிடைக்காதாம்! அவர்களுக்கு மாணவர்களால் ஆபத்து வருமாம்! அப்படித்தான் சில காரியங்கள் நடக்கின்றன!

திருமணம் அவரவர் விருப்பபடி நடக்குமாம்! பெரியவர் இசைவின் பேரில் அல்லவாம்! நல்லது, நடக்கட்டும்!

கலிஉகத்தின் முடிவில் கல்கி அவதாரம் நிகழுமாம். வெள்ளை குதிரையில் வந்து கலிஉக நிகழ்வுகளுக்குக் காரணமான “கலி”யுடன் போரிட்டுத் தீயசக்திகளை அழிப்பாராம். அதன் முடிவில் உண்மை வெல்கின்ற சத்திய உகம் (கிருத உகம்) பிறக்குமாம்.

இந்துத் தொன்மவியலின் கருத்துருக்களைக் காலத்துக்கேற்ப மீட்டெடுத்து அவற்றுக்குப் புது உள்ளடக்கம் தந்து தமது நோக்கத்துக்குப் பயன்படுத்திக் கொள்வதில் வல்லவர் பாவலர் பாரதியார்.
கலியுகம், கிருதயுகம் ஆகிய தொனமங்களை முறையே பழமைக்கும் புதுமைக்குமான குறியீடுகளாக அவர் ஆளும் அழகையும் அதனால் விளையும் தெளிவையும் அடுத்த மடலில் பார்க்கலாம்.

(தொடரும்)
தோழர் தியாகு
தாழி மடல் 317

சி)