தோழர் தியாகு எழுதுகிறார் : தமிழில் படித்தவர்க்கே தமிழ்நாட்டில் வேலை!
(தோழர் தியாகு எழுதுகிறார் : தமிழீழம் – இந்தியா – தமிழ்நாடு, திலீபன் நினைவுப் பேருரை 3 – தொடர்ச்சி)
இனிய அன்பர்களே!
தமிழில் படித்தவர்க்கே தமிழ்நாட்டில் வேலை!
தமிழ்நாட்டில் தமிழைக் கல்விமொழி ஆக்குவதற்காக நீண்ட நெடுங்காலமாய்ப் பற்பல வகையிலும் போராடி வருகிறோம். ஆனால் நம் இலக்கை அடைய முடியவில்லை என்பது மட்டுமன்று. அது நம்மை விட்டு விலகி விலகிப் போய்க் கொண்டுமிருக்கிறது.
கல்விமொழி என்றால் முதற்பயில்மொழியும் ஒரே பயிற்றுமொழியும் என்று பொருள். பொதுவாக உலகில் ஒவ்வொரு தேசமும் அதனதன் தேசிய மொழியையே – அம்மக்களின் குமுகத் தாய்மொழியையே – கல்விமொழியாக ஆண்டு வரக் காண்கிறோம். இதுதான் குமுக வளர்ச்சிக்கும் குமுக அறத்துக்கும் நல்லறிவுக்கும் ஏற்ற வழி என்பதை அறம்சார்ந்த அறிஞர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்கின்றனர்.
ஆனால் தமிழ்நாட்டில் ஒன்றிய அரசினரும் மாநில ஆட்சியாளர்களும் கல்வித் தமிழைப் புறக்கணிப்பதிலும், ஆங்கிலத்தை ஒரு பயில்மொழியாக மட்டுமின்றி, அனைத்து நிலைகளிலும் பயிற்றுமொழியகவும் திணிப்பதிலும் குறியாக உள்ளனர். இது போதாதென்று ஒன்றிய அரசினர் இந்தியையும் சமற்கிருதத்தையும் கூட திணிக்கத் துடிக்கின்றனர்.
முற்போக்கான கல்வி என்பது குடியாட்சியத்தையும் குமுக நிகர்மையையும் வளர்ப்பதற்கு இன்றியமையாத் தேவையாகும். ஏற்றத் தாழ்வுகள் நிறைந்த குமுகத்தில் நிகர்மைக்கான போராட்டத்தில் அது ஒரு முகன்மைக் கருவியாகும். மாறாக. பிற்போக்கான கல்வி என்பது நிகர்மையை மறுத்து ஆளும் வகுப்பினரின் தேவைகளை நிறைவு செய்வதாகவும், அவர்தம் குமுகக் கருத்தியலைப் பரப்புவதாகவும் அமைகிறது. இறுதி நோக்கில் அது அனைவருக்கும் கல்வி என்ற பெருங்குறிக்கோளுக்குத் தடை போடுகிறது.
இந்தியாவில் பார்ப்பனியமும் குடியேற்றியமும்(காலனியமும்) புகுத்தியுள்ள பிற்போக்கான கல்விமுறை மொத்தத்தில் ஆளும் வகுப்பின் தேவைகளுக்கும் கருத்தியலுக்குமே சேவை செய்து வருகிறது. குடியேற்றியம் (காலனியம்), பார்ப்பனியம், முதலியம், புதுத் தாராளியம் என்ற பகைப்புலங்களில் வருணாசிரமத்தின் குருகுலக் கல்வி, மெக்காலேயின் ஆங்கிலேயக் கல்வி, மோதியரசின் புதிய தேசியக் கல்விக் கொள்கை வரைக்குமான இந்திய வல்லரசின் அடுக்கடுக்கான கல்விக் கொள்கைகளின் பண்பும் பயனும் இவ்வளவுதான்.
அனைவருக்குமான கல்வியை மறுதலித்து, சிறுபான்மைக் கூட்டத்தின் கல்விசார் முற்றுரிமையை நிறுவுதல், கல்வியை வணிகமயம், இந்திய மயம், இந்துமயம் ஆக்கும் மும்முனைத் தாக்குதல் ஆகிய இந்தப் போக்குகளுக்கு அயல்மொழித் திணிப்பு ஒரு நுட்பமான கருவியாகப் பயன்படுகிறது; வருண வகையிலும் வகுப்பு (வர்க்க) வகையிலும் பெரும்பான்மையான வெகுமக்களை ஒடுக்க உதவுகிறது.
இந்த ஒடுக்குமுறையை எதிர்க்கவும் முறியடிக்கவும் தமிழ்நாட்டில் தமிழே கல்விமொழி என்ற முழக்கம் வழியமைக்கிறது. முதல் பயில்மொழியும் தமிழ், பயிற்று மொழியும் தமிழ் என்பதே இதன் பொருள். இரண்டாம் பயில்மொழியாகத் தேவையைப் பொறுத்து ஆங்கிலமோ பிற அயல்மொழியோ `பயில்வதற்கு இது தடையன்று என்பதைக் கூறத் தேவையில்லை அல்லவா?
இந்தப் பிற்போக்கான கல்விமுறையின் முதன்மைப் பொறியாக இயங்குவது இந்திய வல்லரசியம், அதன் அரசுக் கட்டமைப்பு என்பது வெள்ளிடை மலை. இதை எதிர்த்து நிற்க வேண்டியவர்கள் தமிழ் மக்கள், அவர்களுக்குத் துணைநிற்க வேண்டியவர்கள் மாநில ஆட்சியாளர்கள்! ஆனால் மெய்ந்நடப்பில் மாநில ஆட்சியாளர்களிடம் இதற்கான தெளிவும் துணிவும் இல்லை என்பதே வருத்தத்திற்குரிய உண்மை.
தமிழ் மக்களிடம் கல்வியார்வம் மிகுந்துள்ள அளவுக்குக் கல்வித் தெளிவு வளர வில்லை. என்ன கற்பது? எப்படிக் கற்பது? எம்மொழியில் கற்பது? என்ற புரிதல் இல்லாமையால் கல்வி வணிகக் கொள்ளையர்தம் கையில் சிக்கி அலைக்கழிகின்றார்கள். அவர்கள் கல்வியை என்ன விலை கொடுத்தேனும் வாங்கிக் கொள்ளலாம் என்று நினைக்கின்றார்கள். குமுகத்தின் பொது நன்மைக்கு அப்பால் தத்தமது தனி நன்மை பேணக் கருதுகின்றார்கள். அவர்கள் எழுப்பும் வினா: தமிழ் சோறு போடுமா?
ஆங்கிலவழிக் கல்வி பெற்றவர்களெல்லாம் பாதுகாப்பான வேலை பெற்று நிம்மதியாக வாழ்ந்து வருவது போன்ற மயக்கத்தில், தமிழில் படித்தால் வேலை கிடைக்குமா? என்று கேட்கின்றார்கள். ஆனால் தமிழ்நாட்டில் தமிழில் படித்தவர்களுக்கு வேலை கிடைக்க வேண்டும் என்பது ஒரு சரியான குடியாட்சிய எதிர்பார்ப்பு.
இந்திய அரசமைப்புச் சட்டத்தின் உறுப்பு 45 “அரசமைப்பு தொடங்கி பத்தாண்டுக் காலத்துக்குள் அகவை 14 வரைக்குமான அனைத்துக் குழந்தைகளுக்கும் இலவய, கட்டாயக் கல்வி வழங்க அரசு பாடுபடும்” என்று கட்டளையிட்டாலும், இஃது ‘அரசுக் கொள்கையின் திசைநெறிகள்’ என்ற நான்காம் பகுதியில்தான் இடம்பெற்றுள்ளது. இது அடிப்படை உரிமைகளில் ஒன்றாக மதிக்கப்பெறவில்லை. அரசமைப்பு தொடங்கி பத்தாண்டு என்ன, 70 ஆண்டு கழிந்த பின்னும் இது செயலாக்கம் பெறவில்லை. நூறாண்டு கழிந்த பிறகும் செயலாக்கம் பெறும் வாய்ப்பு தென்படவில்லை.
ஆனால் அரசமைப்புச் சட்டத்துக்கு 2002ஆம் ஆண்டு 86ஆம் திருத்தம் செய்யப்பட்டு உறுப்பு 21-அ சேர்க்கப்பட்டது. இது பகுதி 3 அடிப்படை உரிமைகளில் ஒன்றாகக் கல்வியுரிமையை நிறுவுகிறது. ஆனால் இந்தக் கல்வியுரிமை ஆறு முதல் பதினான்கு வயது வரைக்குமான குழந்தைகளுக்கு மட்டுமே. அதாவது தொடக்கக் கல்விக்கு மட்டும்தான். இந்தத் தொடக்கக் கல்வியியிலும் கூடத் தனியார் கல்வி வணிகம் செய்வதை அறவே தடுக்க அரசு சட்டம் இயற்றவில்லை என்பதால் இந்தக் கல்வியுரிமையும் முழுமையானதன்று.
அனைத்து நிலைகளிலும் அனைத்துக் கல்வியும் கட்டணமில்லாமல் பெறுவதற்கான உரிமை அடிப்படை உரிமை எனும் நிலைதான் உண்மையான கல்வியுரிமை ஆகும். அதே போது ஒன்றிய அரசும் மாநில அரசும் கல்வியில் வணிகமயத்தைத் திட்டமிட்டு வளர்த்து வருவது மக்களின் கல்வியுரிமையைக் காலில் போட்டு மிதிக்கும் செயலாகும். கல்வியுரிமைக்கும் வேலையுரிமைக்கும் நெருங்கிய தொடர்புள்ளது. “அனைவர்க்கும் கல்வி, அனைவர்க்கும் வேலை” என்ற முழக்கம் இந்தத் தொடர்பையே குறிக்கிறது. படிப்பு வேண்டும், படிப்புக்கு ஏற்ற வேலை வேண்டும். படித்தவர்க்குப் படிப்புக்கு ஏற்ற வேலை இல்லை என்றால் அது படித்தவர்க்கு மட்டுமன்று, அவரைப் படிக்க வைத்த குமுகத்திற்கும் இழப்பாகும்.
இந்திய அரசமைப்பில் வேலையுரிமை பெயரளவுக்குக் கூட அடிப்படை உரிமையாக அறிந்தேற்கப்படவில்லை. பகுதி 4 இல் இடம்பெற்றுள்ள உறுப்பு 41 வேலையுரிமை, கல்வியுரிமை, வேலையில்லாக் காலத்திலும் முதுமைக் காலத்திலும் நோய்க் காலத்திலும் பொது உதவி பெறும் உரிமை ஆகியவற்றைக் குறிப்பிட்ட போதிலும் அரசு தன் பொருளியல் வல்லமை, வளர்ச்சி ஆகியவற்றின் வரம்புகளுக்கு உட்பட்டு இந்த உரிமைகளைப் பெற்றுத் தரும் என்று கூறி விடுவதால் இதனை வேலையுரிமைக்கான வழிவகை என்று சொல்வதற்கில்லை.
கல்வியுரிமையைப் போலவே வேலையுரிமையையும் அரசுகள் காலில் போட்டு மிதித்து வருவதே மெய். முதலியத்தின், குறிப்பாகப் புதுத் தராளியத்தின் வளர்ச்சி கல்வியையும் வேலையையும் அங்காடிச் சரக்குகளாக்கி விட்ட நிலையில் கல்வியுரிமையையும் வேலையுரிமையையும் நிலைநிறுத்த உறுதியான போராட்டங்கள் தவிர வேறு வழியில்லை.
தமிழில் கல்வி என்பது கல்வியுரிமையின் பாற்பட்டது என்பது போலவே தமிழில் படித்தோருக்கே தமிழ்நாட்டில் வேலைவாய்ப்பு என்பதும் வேலையுரிமையின் பாற்பட்டதாகும். இந்திய அரசின் பொருளியல் கொள்கையும் கல்விக் கொள்கையும் குடிமக்களின் கல்வியுரிமைக்கும் வேலையுரிமைக்கும் நேர் எதிராக இருப்பதைப் புரிந்து கொண்டு அவற்றுக்கு எதிராகப் போராட வேண்டும்.
சில துறை அரசுப் பணிகளில் தமிழில் படித்தவர்களுக்கு 20 விழுக்காடு ஒதுக்கீடு என்பது போல் அவ்வப்போது மாநில ஆட்சியாளர்கள் வெளியிடும்
அறிவிப்புகளும் ஆணைகளும் வெறும் கண்துடைப்பே ஆகும். ஏனென்றால், முதலாவதாக இந்த நாட்டில் அரசுத் துறை வேலைவாய்ப்புகள் தனியார் துறை வேலைவாய்ப்புகளை விட மிகமிகக் குறைவு. அரசுத் துறைகளிலும் மாநில அரசு அறிவிப்புகள் ஒன்றிய அரசுத துறைகளுக்குப் பொருந்த மாட்டா. மாநில அரசுத் துறைகளிலும் ஒருசில துறைகளில் மட்டும் ஒருசில கீழ்நிலைப் பணிகளுக்கு மட்டுமே ஒப்புக்கு சப்பாணியான இடஒதுக்கீடு வழங்கப்படுவது யானைப் பசிக்கு சோளப்பொரி என்பது போலத்தான்! அது மட்டுமல்ல இந்த அறிவிப்புகள் தமிழில் படித்தவர்களை உண்மையில் இழிவு செய்யும் அறிவிப்புகளும் ஆகும்.
தமிழில் படித்தவர்களுக்கு வேலைவாய்ப்பில் வழங்கப்படும் முன்னுரிமை அரசுத் துறைகளுக்கு மட்டுமல்லாமல் தனியார் துறைக்கும் பொருந்தும் படிச் செய்ய வேண்டும். மாநில அரசுத் துறைகளுக்கு மட்டுமல்லாமல் ஒன்றிய அரசுத் துறைகளுக்கும் பொருந்தும் படிச் செய்ய வேண்டும்.
தமிழ்நாட்டில் தமிழில் படித்தவர்களுக்கு அது என்ன முன்னுரிமை? முற்றுரிமை அல்லவா வழங்க வேண்டும்? தேவையானால், தமிழில் படிக்காதவர்களுக்கு இடைகாலமாக விலக்குரிமை வழங்கலாம்.
தமிழில் படித்தால்தான் தமிழ்நாட்டில் வேலை கிடைக்கும் என்பதை உறுதி செய்யாமல் தமிழ்க் கல்வியும் தமிழ்வழிக் கல்வியும் ஏற்றம் பெற வாய்ப்பில்லை என்பதைத் தமிழ் மக்கள் உணரச் செய்ய வேண்டும். அதற்காக அரும் பாடாற்ற அணியமாவோம்!
(தொடரும்)
தோழர் தியாகு
தாழி மடல் 333
Leave a Reply