(தோழர் தியாகு எழுதுகிறார் : தமிழீழம் – இந்தியா – தமிழ்நாடு, திலீபன் நினைவுப் பேருரை 2 – தொடர்ச்சி)

திலீபன் நினைவுப் பேருரை 3/3 :

தமிழீழம் – இந்தியா – தமிழ்நாடு

இந்த அறிவிப்பில் நேர்மை இருக்குமானால், இந்திய நாடாளுமன்றத்தில் இதற்கான தீர்மானம் கொண்டுவர வேண்டும். இலங்கையில் நடந்திருப்பது இனவழிப்பு. அதற்காக இராணுவ வகையிலும் அரசியல் வகையிலும் குற்றம் புரிந்தவவர்கள் தண்டிக்கப்பட வேண்டும். பன்னாட்டுக் குற்றவியல் நீதிமன்றத்தில் அவர்களைக் கொண்டுபோய் நிறுத்த வேண்டும் என்று கடந்த காலத்தில் ஐ.நா. மனித உரிமைப் பேரவையில் உயர்ஆணையர்கள் அறிக்கையிட்டுள்ளார்கள். அதைச் செய்ய வேண்டும். செய்வதற்கு ஆதரவு தர வேண்டும். இலங்கைக்கு ஆதரவு தரக் கூடாது, நடுநிலைவகிக்கிறோம் என்ற பெயரில் தமிழ் மக்களின் போராட்டத்தை முறியடிக்கக் கூடாது. இனியாவது இதைச் செய்வார்களா? இந்த அறிவிப்பு உண்மை என்றால், இதைச் செய்ய வேண்டும். செய்யுமாறு நாம் வலியுறுத்த வேண்டும். அது தமிழீழ மக்களுடைய நீதிக்கான போராட்டத்திற்குச் செய்யக் கூடிய ஓர் உதவியாக அமையும் என்று தமிழ்நாட்டிலே தமிழீழ ஆதரவு அமைப்புகள் நம்புகின்றன.

எத்தனையோ அரசியல் வேறுபாடுகளுக்கு இடையில் இந்திய அரசு தன்னை இனவழிப்புக்கு எதிராக மாற்றிக் கொள்ளுமானால், அதை வரவேற்க நாம் அணியமாக இருக்கிறோம். அந்த மாற்றத்தின் அடையாளமாகும் ஐ. நா. மனிதஉரிமைப் பேரவையில் அடுத்தடுத்து வரக் கூடிய விவாதங்களிலும், தீர்மானங்களிலும் தமிழீழ மக்களுடைய அடிப்படைக் கோரிக்கைகளுக்கு ஆதரவான நிலையை இந்தியா மேற்கொள்ள வேண்டும். இதில் நமக்குப் பெரிய மயக்கம் ஏதும் இல்லை. நடந்தால் நன்று! நடக்கா விட்டாலும் நம்முடைய போராட்டம் தொடரும். நான் அடிக்கடி சொல்வதுண்டு. தந்தை செல்வா அவர்களும், தலைவர் பிரபாகரன் அவர்களும் இந்தியாவை நம்பியோ ஐநாவை நம்பியோ, வேறு உலக நாடுகளை நம்பியோ இந்தப் போராட்டத்தைத் தொடங்கவில்லை. அவர்கள் தமிழீழ மக்களை நம்பித்தான் இந்தப் போராட்டத்தைத் தொடங்கி நடத்தினார்கள். அவர்கள் பக்கம் இருக்கின்ற வரலாற்று நியாயத்தை நம்பியே இந்தப் போராட்டத்தைத் தொடங்கி நடத்தினார்கள். இந்த வரலாற்று ஏரணம் இன்றைக்கும மறைந்து விடவில்லை.

தீலீபனின் பெயரால் நான் உங்கள் அனைவரையும் கேட்டுக் கொள்கிறேன். திலீபன் மக்கள் புரட்சியிலே நம்பிக்கை வைத்தார். மக்கள் புரட்சி வெடிக்கட்டும் என்று முழங்கித்தான் தன்னுடைய இறுதிப் போராட்டத்தைத் தொடங்கினார். இன்றைக்கும் அந்த மக்கள் புரட்சியிலே நான் நம்பிக்கை வைத்துள்ளேன். நீங்களும் மக்கள் புரட்சியிலே நம்பிக்கை வையுங்கள்! தாயகத்திலே, தமிழீழ மக்கள் தங்கள் கோரிக்கைகளுக்காகப் போராட வேண்டும். அதற்கு ஆதரவாக நாமும் போராட வேண்டும். இன்று இதுதான் இன்றியமையாத் தேவை.

ஒன்றுக்கும் உதவாத வரலாற்றின் குப்பைத் தொட்டியில் வீசப்பட்டு விட்ட பதின்மூன்றாம் திருத்தம் என்ற பம்மாத்து வேலையை இந்திய அரசும சிங்களஅரசும் செய்கின்றன. இதற்கு ஒருபோதும் தமிழீழ மக்கள் மயங்கி விடக் கூடாது.

அன்றைக்கு 1987-88இல் நடைமுறைப்படுத்த முடியாத ஒன்றை இத்தனை ஆண்டுகள் கழித்து எப்படி நடைமுறைப்படுத்த முடியும்? இந்திய அரசுக்கு நேர்மை இருக்குமானால், அஃது இலங்கை-இந்திய ஒப்பந்தம் என்னாயிற்று? என்று கேள்வி எழுப்ப வேண்டும். அதுதான் பன்னாட்டு உடன்படிக்கை. நமக்கு அதில் உடன்பாடு இருக்கிறதோ இல்லையோ அதன் வழியாக வடக்கு, கிழக்கு இணைக்கப்பட வேண்டும் என்பதை இந்தியா வலியுறுத்தினால் நன்றாக இருக்கும். ஆனால் வடக்கு கிழக்கு இணைப்பைப் பற்றிப் பேச மாட்டார்கள். இந்திய இலங்கைஒப்பந்தத்தைப் பற்றிப் பேச மாட்டார்கள். தமிழீழத் தாயத்தை அங்கீகரிக்க மாட்டார்கள். பதின்மூன்று, பதின்மூன்று என்று கிளிப்பிள்ளை போலப் பேசிக் கொண்டேஇருப்பார்கள்.

தமிழீழ மக்கள் இந்த நாசகாரத் திட்டத்தை முறியடிக்க வேண்டும். பதின்மூன்றாம் திருத்தம் என்ற ஒரு திருத்தச் சட்டம் முன்மொழியப்பட்ட காலத்தில் இது ஒரு கேலிக்கூத்து என்று என்று இராசீவு காந்திக்குக் கடிதம் எழுதிய மூன்றுபேரில் ஒருவர்தான் ஐயா சம்பந்தன் அவர்கள். சிவசிதம்பரமும், அமிர்தலிங்கமும் மற்ற இருவர். இராசீவு காந்தி இல்லாமல் போய் விட்டார். ஆனால் அந்தக் கடிதம் இருக்கிறது. கேலிக் கூத்து மாறி விட்டதா? அப்படி நிலைமையில் என்ன மாற்றம் வந்து விட்டது? இந்தியா சொல்வதை நாம் ஏன் கேட்டு நடக்க வேண்டும்?

எனவே நாம் நம்முடைய மக்களை நம்பி நம்முடைய நிலத்தில் போராட வேண்டும். அதற்காகத் தமிழகத்திலே போராட வேண்டும். உலகெங்கும் போராட வேண்டும். நம்முடைய கோரிக்கைகளில் மாற்றம் இல்லை. ஏனென்றால் தமிழர்கள் இன்றைக்கு நாதியற்றவர்கள் ஆகி விட்டார்கள், வலிமை இழந்து விட்டார்கள் என்ற கருத்து தாயகத்திலும் வெளியிலும் நிலவுகிறது. நமக்கென்று என்ன இருக்கிறது என்ற கேள்வி எழுகிறது. ஒரு வகையில் நியாயமாகத் தோன்றக் கூடிய கேள்விதான்.

விடுதலைப் போராட்டத்தினுடைய தலைமைப் படை நசுக்கப்பட்டு விட்டது. கட்டளைத் தலைமை அழிக்கப்பட்டு விட்டது. நாம் நம் படைகளை இழந்தோம். படை வீரர்களை இழந்தோம். போராடி மீட்ட நிலத்தை இழந்தோம். இறைமை இழந்தோம். ஆனால் இத்தனையும் இழந்தாலும் நாம் புதிதாக ஒரு வலிமையை ஈட்டி இருக்கிறோம். அதுதான் நம்முடைய அற வலிமை. Moral Strength. இந்த அறவலிமை முப்பதாயிரத்திற்கு மேற்பட்ட மாவீரர்களின் ஈகத்தினால், இலட்சத்திற்கு மேற்பட்ட பொதுமக்களின் ஈகத்தினால் நமக்குக் கிடைத்திருப்பதாகும்.

இரண்டாம் உலகப் போரில் யூதர்கள் இனவழிப்பு செய்யப்பட்ட போதும் தங்களுக்கு ஒரு நாட்டைப் பெற்றுக் கொள்வதற்கு, அவர்களுக்கு இந்த அறவலிமை உதவியது. இந்த நாடு எங்கே பெறப்பட்டது என்பது வேறு செய்தி. ஆனால் இங்கே தமிழீழ மக்கள் தம்முடைய மரபுவழித் தாயகத்தில் தங்கள் இறைமையை மீட்டுக் கொள்வதற்கு இந்த அறவலிமை அவர்களுக்குத் துணைநிற்கும். யுகொசுலாவியாவில் செருபியாவுக்கு அடங்கிக் கிடந்த பல்வேறு தேசங்கள் – கொசோவோ வரைக்கும் – இந்த அற வலிமையைக் கொண்டுதான் தங்கள் இறைமையை மீட்டுக் கொண்டன. கிழக்குத் தைமோரில் இதுதான் நடந்தது. பாலத்தீனத்தில், குருதிசு மண்ணில் இந்த அற வலிமைதான் அவர்களுக்குத் துணை நிற்கிறது.

நாமும் அற வலிமையோடு இருக்கிறோம். இந்த அற வலிமையை அரசியல் வலிமையாக மாற்றுவதன் மூலமாக நம்முடைய கோரிக்கைகளில் வெற்றி காண்போம் என்ற நம்பிக்கையோடு நம் போராட்டத்தைத் தொடர்வோம். திலீபன் நினைவைச் சொல்லுகிற போது. இதைத்தான் ஒரு செய்தியாக நான் கொடுக்க நினைக்கிறேன்.

இந்தியாவிற்கும் சீனாவிற்குமான சதுரங்கப் பலகையாக இலங்கை மாற்றப்படுவது நமக்குத் தெரியாமல் இல்லை. ஆனால், இதற்கான தீர்வு இந்தியாவிற்கு எதிராகச் சீனத்தையோ சீனத்திற்கு எதிராக இந்தியத்தையோ ஆதரிப்பது அல்ல. இரண்டு வல்லரசுகளுக்கு இடையே நடைபெறுகின்ற அரசியல் சூதாட்டத்திற்கு நடுவில் நாம் நீதியின் பக்கம், நம் மக்களின் தேவையின் பக்கம் நின்று நம்முடைய போராட்டத்தை நாம் முன்னெடுப்போம். நம்மைப் பொறுத்த வரைக்கும் எதிர்கால இந்தியா மட்டும் இல்லை, இன்றைக்கு இருக்கிற இந்தியாவே எதைப் பாதுகாப்பு என்று நினைத்துக் கொண்டு இருக்கிறதோ, அந்தப் பாதுகாப்புக்கு ஈழத்தினால் ஒருபோதும் எந்தத் ஊறும் ஏற்பட்டது இல்லை. எதிர்காலத்தில் ஏற்படப் போவதுமில்லை. ஆனால் ஈழத்தின் பாதுகாப்புக்குத்தான் இந்தியா மிகப் பெரிய அழிவை ஏற்படுத்தியது என்பதை நாம் மறக்கவில்லை.

எனவே எச்சரிக்கையோடு நாம் விழிப்போடு இருந்து நம்மைப் பாதுகாத்துக் கொள்ள வேண்டியவர்களாக இருக்கிறோம். நம்மால் இந்தியாவிற்கு ஆபத்து என்ற ஒரு பொய்ப் பரப்புரையைச் செய்வார்களானால், வரலாறு அதை மறுத்து நிற்கிறது. இன்றைய உண்மைகள் அதை மறுத்து நிற்கின்றன. இந்தியப் படைகளால் தமிழ்மண்ணில் கொலையுண்ட தமிழ்மக்கள் என்ற ஒரு ஒரு கணக்கு உண்டு. தமிழ்ப் படைகளால் இந்திய மக்கள் யாரும் எங்கும் கொல்லப்படவில்லை.

தமிழ் மக்கள் என்றென்றைக்கும் தங்களைப் பாதுகாத்துக் கொள்வதற்காகத் தங்கள் மண்ணில் போராடி இருக்கிறார்கள். இந்தியப் படை செய்தது போல் வேறு மண்ணிலே போய் ஆக்கிரமித்தது இல்லை. எனவே நமக்கு நாம் பூச்சாண்டி காட்டிக் கொண்டிருக்க வேண்டா. நம் நியாயமான கோரிக்கைகளை எதிர்த்து நம் தமிழ் மக்களையே திரட்டுகின்ற முயற்சிகளை மறுதலிக்க வேண்டும். நாம் எச்சரிக்கையோடு நம்முடைய கோரிக்கைகளை உறுதியாகப் பற்றி நிற்க வேண்டும். இந்தக் கோரிக்கைகளுக்கு இந்தியா ஆதரவு கொடுத்தால் மகிழ்ந்து வரவேற்போம். ஆனால் இதன் பொருள் இந்தியா அரசியல் சதுரங்கத்தில் நம்மைப் பகடைகளாக உருட்ட முடியும் என்பது இல்லை. நாம் அதை அனுமதியோம்.

திலீபன் நமக்கு ஒரு வரலாற்று உண்மையை உணர்த்துவதற்காகப் பன்னிரண்டு நாள் பட்டினிப் போர் புரிந்தார். அவர் உணவுண்ணாமல் பட்டினியை உண்டார். அவர் பசி இன்னும் தீரவில்லை. ஈகத்தின் மறுபெயராக விளங்கினார். உலகம் உள்ள வரை தமிழ் கூறும் மக்கள் உள்ள வரை தீலீபனின் பெயர் என்றும் நிலைத்திருக்கும். தீலீபனின் பெயரால் நாம் அவரது அந்த உரையை நினைவுபடுத்திக் கொள்வோம்.

“ஒரு காலத்திலே இந்தக் கோட்டையிலே ஒல்லாந்தர் கொடி பறந்தது, பிறகு பிரித்தானியர் கொடி பறந்தது. இன்று சிங்களர் கொடி பறக்கிறது. தமிழீழக் கொடி பறக்கும் நாளே உண்மையான விடுதலை நாள்.”

திலீபனின் ஈகத்திலிருந்து உலகெங்கும் வாழும் தமிழர்கள், தமிழ்நாட்டுத் தமிழர்களும் கூட ஊக்கமும் உரமும் பெற்றிருக்கிறோம்.

தமிழ் மண்ணில் புதையுண்ட வீர விதைகளுக்கு… அறிவை நீராக்கி, உணர்வை உரமாக்கி, அமைப்பை வயலாக்கித் தமிழ்த் தேசங்களில் புதிய விளைச்சல் காண்போம். நன்றி! வணக்கம்!

(தொடரும்)
தோழர் தியாகு
தாழி மடல் 324