தோழர் தியாகு எழுதுகிறார் : இன உரிமை இலட்சிய மாநாடு
(தோழர் தியாகு எழுதுகிறார் : தமிழில் படித்தவர்க்கே தமிழ்நாட்டில் வேலை! – தொடர்ச்சி)
இனிய அன்பர்களே!
தமிழ்நாடு பொதுவுடைமை இயக்கம் – தஞ்சை மாநாடு
நேற்று 10.10.2023 தஞ்சையில் தமிழ்நாடு பொதுவுடைமை இயக்கம் நடத்திய இன உரிமை எழுச்சி மாநாட்டில் கலந்து கொண்டு உரையாற்றினேன். மாநாட்டில் இயற்றப்பட்ட தீர்மானங்கள் இன்றைய தமிழ்நாட்டு, இந்திய நாட்டு, பன்னாட்டுச் சூழலைப் புரிந்து கொள்ள உதவக் கூடும் என்பதால் அவற்றை ஈண்டு பகிர்கிறேன். –
::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::
இன உரிமை இலட்சிய மாநாடு
தஞ்சை, 2023 அட்டோபர் 10
தீர்மானங்கள்
- பாலத்தீனம்:
இசுரேலின் இனவழிப்புப் போரை எதிர்த்து, காசாப் பகுதியின் பாலத்தீன மக்கள் நடத்தி வரும் தற்காப்புப் போரில் பாலத்தீன மக்கள் வெற்றி பெற வேண்டுமென தமிழ்நாடு பொதுவுடைமை இயக்கத்தின் இந்த மாநாடு உளமார வாழ்த்துகிறது. இன்றைய உலகில் அப்பாவி மனித உயிர்களைப் பலியிட்டுப் போர் வழியில் தீர்வுகள் தேடும் இசுரேலிய யூதவெறி அரசின் அணுகுமுறையை வன்மையாகக் கண்டிக்கிறோம். அமெரிக்காவின் பைடன் ஆட்சியும் இந்தியாவின் மோதியாட்சியும் பாலத்தீன மக்களுக்கு எதிரான இசுரேலிய யூதவெறி அரசின் இனவழிப்புப் போருக்கு அளித்துள்ள ஆதரவை வன்மையாகக் கண்டிக்கிறோம். உக்கிரைன் மீது உருசியா தொடுத்த வன்பறிப்புப் போரின் அழிவுகள் தொடரும் நிலையில் இசுரேலிய அரசு பாலத்தீன மக்களது தாயகத்தின் மீது நடத்தி வரும் கொடும்போர் உலக அமைதிக்குப் பெருங்கேடு விளைவிக்கும் என்று இம்மாநாடு எச்சரிக்கிறது. ஐ.நா. தீர்மானங்களின் படியும் 1993 ஆசுலோ உடன்படிக்கைகள், ஆசுலோ செயல்வழியின் படியும் பாலத்தீனர்களின் இறைமையை உறுதி செய்து, போரை நிறுத்தி அமைதியை மீட்கும் படி, பன்னாட்டுலக அமைதி ஆற்றல்களைத் தமிழ்நாடு பொதுவுடைமை இயக்கத்தின் இந்த மாநாடு வேண்டிக் கொள்கிறது.
- மோதியாட்சி:
நரேந்திர மோதி தலைமையிலான பாரதிய சனதா கட்சியின் ஒன்றிய அரசு அரசமைப்புச் சட்ட வழியிலான குடியாட்சியக் கூறுகளுக்கும், மொழிவழி மாநில அமைப்புக்கும், தேசிய இன உரிமைகளுக்கும், சமூகநீதி சார்ந்த உரிமைகளுக்கும், தொழிலாளர்-உழவர் நலனுக்கும் எதிராகத் திட்டமிட்டுச் செயலாற்றி வருகிறது. இது வல்லரசிய(பாசிச) ஆட்சியாகவே நிலைபெற்றுக் கொடுங்கோன்மை வளர்ந்து வரும் நிலையில் இந்த மோதியாட்சியைத் தூக்கி எறிய ஒடுக்குண்ட தேசிய இனங்களும், உழைக்கும் மக்களும், அனைத்துக் குடியாட்சிய ஆற்றல்களும் ஒன்றுபட்டுக் கிளர்ந்தெழத் தமிழ்நாடு பொதுவுடைமை இயக்கத்தின் இந்த மாநாடு அறைகூவி அழைக்கிறது.
- காவிரி உரிமை:
தமிழ்நாட்டின் காவிரி உரிமை மீண்டும் மீண்டும் சிக்கலுக்குள்ளாகி வருகிறது. காவிரி ஆற்றுநீர்ப் பகிர்வு தொடர்பான சட்டப் பொறிமுறை எதையும் மதிப்பதில்லை என்பதில் கருநாடகம் பிடிவாதமாக உள்ளது. தமிழ்நாட்டின் உரிமைப் பங்கைப் பெற்றுத்தர வேண்டிய கடமைப் பொறுப்பை இந்திய அரசு வேண்டுமென்றே தட்டிக் கழித்து வருகிறது. தமிழக அரசோ வேண்டுகோள்கள், வலியுறுத்தங்கள், அனைத்துக் கட்சித் தூதுக் குழுக்கள், சட்டப் பேரவைத் தீர்மானங்கள் என்ற வழிகளிலேயே காவிரி உரிமையை மீட்க முடியும் என்ற மயக்கத்தை உண்டாக்கி வருகிறது. மாறாகத், தமிழக மக்களை இந்திய அரசுக்கும் கருநாடகத்துக்கும் எதிராக உறுதியான நீடித்த போராட்டங்களில் அணி திரட்டுவதன் வாயிலாகவே காவிரி உரிமையையும் மொத்தத்தில் தமிழகத்தின் ஆற்றுநீர் உரிமையையும் காக்கவும் மீட்கவும் இயலும் என்பதைத் தமிழ்நாடு பொதுவுடைமை இயக்கத்தின் இந்த மாநாடு சுட்டிக் காட்ட விரும்புகிறது.
- தே.ப.க.(என்.எல்.சி.யின்) நிலப்பறிப்பு:
நெய்வேலி பழுப்பு நிலக்கரிக் கழகம் சுரங்கங்களை விரிவாக்குவதன் பெயரால் உழவர்களின் நிலங்களைப் பறிக்க எடுத்து வரும் முயற்சிகளை வன்மையாகக் கண்டிக்கிறோம். நெய்வேலி நிலக்கரி மீதும் அனல்மின் நிலையத்தின் மீதுமான தமிழ்நாட்டு மக்களின் இறைமையை உறுதிசெய்ய அவற்றைத் தமிழ்நாட்டுடைமையாக்க வேண்டுமென தமிழ்நாடு பொதுவுடைமை இயக்கத்தின் இந்த மாநாடு கேட்டுக் கொள்கிறது. சுற்றுச் சூழல் பாதுகாப்பை முன்னிட்டும் புதை படிவ எரிபொருள் ஆக்கத்தைக் குறைத்துக் கைவிடும் நோக்கிலும், புதுப்பிக்கத்தக்க ஆற்றல் வளங்களை மென்மேலும் கண்டறிந்து பயன்படுத்த அரசுகள் முன்வர வேண்டுமென தமிழ்நாடு பொதுவுடைமை இயக்கத்தின் இந்த மாநாடு கேட்டுக் கொள்கிறது.
- த.எ.த.(ஊபா), தே.பு.மு.(என்ஐஏ) அடக்குமுறைச் சட்டங்கள்:
த.எ.த(ஊபா) போன்ற அடக்குமுறைச் சட்டங்களையும், தே.பு.மு.(என்ஐஏ) போன்ற காவல் பொறிமுறைகளையும் குடியாட்சிய உரிமைகளுக்கு எதிராகவும், குறிப்பாகச் சிறுபான்மை மக்களுக்கு எதிராகவும் இந்திய ஒன்றிய ஆட்சியாளர்கள் பயன்படுத்தி வருவதையும், இந்த அடக்குமுறைக்குத் தமிழ்மாடு மாநில அரசு உடந்தையாக இருந்து வருவதையும் தமிழ்நாடு பொதுவுடைமை இயக்கத்தின் இந்த மாநாடு வன்மையாகக் கண்டிக்கிறது.
- உறுதியேற்பு:
தமிழ்நாட்டின் இறைமை மீட்புக்கும், குடியாட்சியக் காப்புக்கும், சுரண்டலும் ஒடுக்குமுறையும் இல்லாத புதிய வாழ்வுக்கும் அறிவார்ந்த முறையில் தன்னளிப்புடன் தொடர்ந்து போராடவும், அனைத்துலகிலும் இவ்வகையில் மாந்தக்குல முன்னேறத்துக்காக நடைபெறும் போராட்டங்களுடன் தோழமை கொள்ளவும் செவ்வியக்க மரபில் தமிழ்நாடு பொதுவுடைமை இயக்கம் மீண்டும் உறுதி ஏற்கிறது.
(தொடரும்)
தோழர் தியாகு
தாழி மடல் 340
Leave a Reply