(தோழர் தியாகு எழுதுகிறார் 38 தொடர்ச்சி)

சாதிக் குருடர்களாநீதித் திருடர்களா? – 3

இந்தியத் தொழில்நுட்பப் பயிலகம் (IIT), இந்திய மேலாண்மைப் பயிலகம் (IIM), அனைத்திந்திய மருத்துவ அறிவியல் பயிலகம் (AIIMS) என்ற வகையிலான கல்வி நிறுவனங்களில் ஒன்றே ஒன்றிலாவது ஏனைய பிற்படுத்தப்பட்டோர் அவர்களின் மக்கள் தொகைக்குரிய விழுக்காட்டை நெருங்கியிருப்பதாகக் காட்ட முடியுமா?

 இந்த உயர்கல்விப் பயிலகங்களில் ஒன்றே ஒன்றின் நிருவாகத்திடமிருந்தாவது அதன் ஆசிரியர்கள் -மாணவர்களின் வகுப்புவாரிக் கணக்கைக் கேட்டுப் பெற முயன்றார்களா உச்ச நீதிமன்ற நீதிபதிகள்? 

வழக்கில் வந்து சேர்ந்து கொண்ட பேராசிரியர் பி.வி இந்திரேசன் போன்றவர்களிடம் ஐ.ஐ.டி.யில்  பிராமணர்கள் எத்தனை? பிற்படுத்தப் பட்டோர் எத்தனை? அட்டவணைச் சாதியினர் – அட்டவணைப் பழங்குடியினர் எத்தனை?’ என்று கேட்கத் தோன்றியதா நீதிபதிகளுக்கு?

எந்தத் தரவுகளின் அடிப்படையில் அரசு இடஒதுக்கீடு வழங்கியது?  என்று கேட்கும் உச்ச நீதிமன்ற நீதிபதிகள் எந்தத் தரவுகளின் அடிப்படையில் இடஒதுக்கீட்டுக்குத் தடை விதித்தார்கள்? என்று திருப்பிக் கேட்கலாம்..

 ஆனால் தரவுகள் போதவில்லை என்பதெல்லாம் தடை போடுவதற்கு ஒரு சாக்குத்தான் என்பது நீதிபதியின் இரண்டாம் வாதத்திலிருந்து தெளிவாகிறது.

 நீதிபதிகள் உள்ளத்தில் சாதியம்

‘இடஒதுக்கீட்டுச் சட்டத்தால் சமூகப் பேரழிவு நேரிடும்’ என்றும், இச்சட்டத்தின் வாயிலாக இடம்பெற்றுப் படித்து முடிக்கும் மாணவர்கள் இப்போது படித்து முடித்து வெளியே வரும் மாணவர்களுடன் ஒப்பிட்டால் அறிவுக் குள்ளர்களாக இருப்பார்கள் என்றும் மனுதாரர்கள் வாதிடுவதை நீதிபதிகள் தங்கள் தீர்ப்பில் அப்படியே எடுத்துக்காட்டுகிறார்கள். அவர்களது உள்ளத்தில் படமெடுத்தாடும் சாதியத்தையே இது வெளிச்சமிட்டுக் காட்டுகிறது.

   இடஒதுக்கீடானது கல்வியையும், வேலைவாய்ப்பையும் அதிகாரத்தையும் பரவலாக்குவதன் மூலம் சனநாயகப்படுத்துகிறது. இவ்விதம் மொத்தச் சமூகத்தின் தகுதி திறமையும் உயரத் துணை செய்கிறது. இடஒதுக்கீடுதான் தகுதி திறமை வளர வழி. இடஒதுக்கீட்டை மறுப்பது தகுதி திறமையை முடக்குவதாகும். இந்த அடிப்படைத் தெளிவு கூட மெத்தப் படித்த உச்ச நீதிமன்ற நீதிபதிகளுக்கு இல்லை என்பதை நம்புவது கடினமாய் உள்ளது.

 இடஒதுக்கீட்டினால் தகுதி திறமை நீர்த்துப் போகும் என்ற பூச்சாண்டி குறித்து இந்திய அரசின் நிலைப்பாடு என்ன?

 இந்திய அரசும் தகுதி-திறமைவாதமும்

‘மையக் கல்விப் பயிலகங்கள் (சேர்க்கையில் இடஒதுக்கீடு) சட்டம், 2006’ – வழக்கில் சிக்கியுள்ள இந்தச் சட்டத்தின் பிரிவுகளை ஒவ்வொன்றாக எடுத்துப் பார்த்தால் பார்ப்பனியத்தின் தகுதி – திறமைவாதத்துக்கு இந்திய அரசும் ஒத்துப் போவது வெளிப்படுகிறது.

சட்டத்தின் பிரிவு 3 மையக் கல்விப் பயிலகங்கள் ஒவ்வொன்றிலும் ஒவ்வொரு துறையிலும் ஆண்டு தோறும் அனுமதிக்கப்படும் மொத்த இடங்களில் பின்வருமாறு ஒதுக்கீடு செய்கிறது:

அட்டவணைச் சாதிகளுக்கு (SC) 15%, அட்டவணைப் பழங்குடிகளுக்கு (ST) 7.5%, ஏனைய பிற்படுத்தப்பட்டோர்க்கு (OBC) 27%..

பிரிவு 5 (1)இன் படி ஒவ்வொரு மையக் கல்விப் பயிலகமும் தக்க அதிகாரத்துவத்தின் முன்னிசைவுடன் ஒவ்வொரு துறையிலும் ஆண்டுதோறும் அனுமதிக்கப்பட்ட இடங்களின் எண்ணிக்கையை அதிகமாக்க வேண்டும். எந்த அளவுக்கு அதிகமாக்க வேண்டும்? பிற்படுத்தப்பட்டோருக்குஇடஒதுக்கீடு வழங்குவதால் பொதுப் பிரிவினருக்குரிய இடங்கள் குறைந்து விடாத அளவுக்கு அதிகமாக்க வேண்டும். எடுத்துக்காட்டாக,அனுமதிக்கப்பட்ட மொத்த இடங்கள் 200, இடஒதுக்கீட்டினால் பிற்படுத்தப்பட்டோருக்கு 20 இடங்கள் போய்விடுமானால், மொத்த இடங்களை 220 ஆக்க வேண்டும். கூடுதலாய்ச் சேர்த்த 20 இடங்களில் ஒதுக்கீடு கிடையாது.

பொதுப் பிரிவு என்பது பெரும்பாலும் பிராமணர்களுக்கும் பிற உயர் சாதியினர்க்கும் உரியது என்பது பட்டறிவு. அதனால்தான் இட ஒதுக்கீடே தேவைப்படுகிறது. இடஒதுக்கீட்டினால் பொதுப் பிரிவினருக்குப் பாதிப்பு வரக் கூடாது என்ற கவலையின் பொருள் – உயர் சாதியினருக்கு எந்த இடர்ப்பாடும் நேரக் கூடாது என்பதே. ஏன்? ஏனென்றால் அப்படிச் செய்வது தகுதி திறமையை நீர்க்கச் செய்து விடுமாம். இந்திய அரசு தரும் விளக்கமே இதுதான்.

 நீதிமன்றக் குதர்க்கம்

இடங்களை எவ்வளவு வேண்டுமானாலும் அதிகமாக்குங்கள்! ஆனால் கூடுதல் இடங்கள் உள்ளிட்ட இடங்களிலும் பிற்படுத்தப்பட்டோருக்கு இடஒதுக்கீடு தாருங்கள்! – இது சமூக நீதியாளர்களின் கோரிக்கை.

இந்திய உச்ச நீதிமன்றம் என்ன சொல்கிறது தெரியுமா? இடங்களை அதிகமாக்கும் போது பொதுப் பிரிவினரின் இடங்களும் அதிகமாக வேண்டுமாம்! இல்லையேல் இது சமமற்றவர்களைச் சமமாக நடத்துவதாம்! உயர்சாதியினருக்கு இதுவரை கிடைத்து வந்த பங்கு குறையாவிட்டாலும் கூட பிற்படுத்தப்பட்டோர்க்கு இடஒதுக்கீடு தரக்கூடாது என்று பொருள்! 

உச்ச நீதிமன்றத்தின் இந்தக் குதர்க்கத்துக்கு அடிப்படையே அதன் ‘தகுதி-திறமைவாத’க் கண்ணோட்டம்தான். இந்தக் கேவலமான பிராமணியப் பார்வை இந்திய அரசுக்கும் உள்ளது, பிறகு எப்படி இவர்களிடமிருந்து சமூக நீதியை எதிர்பார்ப்பது?

சட்டத்தின் பிரிவு 5 (2) ஏனைய பிற்படுத்தப்பட்டோருக்கான இடஒதுக்கீட்டைத் தவணை முறையில் (மூன்று தவணைகளாக) வழங்குவதற்கு வாய்ப்பளிக்கிறது. அதாவது முதலாண்டிலேயே 27 விழுக்காடு தரவேண்டியதில்லை. “ஒன்பது ஒன்பதாய்க் ” கூட்டி மூன்றாம் ஆண்டில் 27 தந்தால் போதும். மூன்று ஆண்டுக்குள் எத்தனை தடை வருமோ, அதனை எப்படித் தாண்டுவதோ, உச்ச நீதிமன்ற  நீதிபதிகள் வணங்கும் இராமனுக்கே வெளிச்சம்!

தரங்காக்கத் தவணை முறையா?

இந்தத் தவணை முறை இடஒதுக்கீட்டுக்கு மைய அரசின் சட்டம் சொல்லும் காரணங்களில் ஒன்று கல்வித் தரங்களைப் பாதுகாக்க வேண்டும் என்பதாகும். அதாவது ஒரேயடியாக 27 விழுக்காடு தந்தால் கல்வித் தரம் பாதிக்கப்படுமாம். உயர்சாதி மாணவர்கள் குறையாமல் நிறைந்திருந்தால்தான் கல்வித்தரம் கெட்டியாகப் பாதுகாக்கப்படும் என்று பொருள். இடஒதுக்கீட்டுச் சட்டத்திலேயே இப்படியோர் இழிவான எண்ணம் மறைந்திருக்கும் போது, ‘இடஒதுக்கீட்டை எதிர்த்து வழக்குத் தொடுப்போர்  இடஒதுக்கீட்டினால் அறிவுக்குள்ளர்கள் தோற்றுவிக்கப் படுவார்கள்’ என்று வாதிடுவதிலும், அதை உச்ச நீதிமன்ற நீதிபதிகள் ஏற்றுக்கொள்வதிலும் வியப்பேது?

 இடஒதுக்கீட்டை வெளிப்படையாக எதிர்ப்பவர்கள் மட்டுமல்ல, அவர்களுக்கு உறுதுணையாக விளங்கும் உச்ச நீதிமன்ற நீதிபதிகள் மட்டுமல்ல, இடஒதுக்கீட்டைச் செயலாக்கச் சட்ட மியற்றுபவர்களும் கூட ஏதோ ஒருவகையில் சாதிக் குருட்டுச் சாதியத்தால் பீடிக்கப்பட்டுள்ளனர் என்பது  இதிலிருந்து தெளிவாகிறது.

– தமிழ்த்தேசம் இதழ் – சித்திரை 2௦௦7 – ஆசிரியர்: தியாகு

 (தொடரும்)

தோழர் தியாகு

தரவு :  தாழி மடல்