(தோழர் தியாகு பகிர்கிறார் : தாய்மண்ணை விட்டகலோம்!- மகமுது அப்பாசு – தொடர்ச்சி)

இனிய அன்பர்களே!

எங்கள் பெயரால் செய்யாதே! எங்கள் பெயரால் செய்யாதே!
(NOT IN OUR NAME! NOT IN OUR NAME!)

ஐயா நக்கீரன் எழுதியதை மீண்டும் நினைவுபடுத்திக் கொள்வோம்:

இசுரேல் என்ற நாட்டை ஐக்கிய நாடுகள் சபை 1948 இல் அங்கீகரித்தது. 2000 ஆண்டுகளுக்கு மேலாக நாட்டை இழந்து நாடோடிகளாகவும் அடிமைகளாகவும் நாசிகளது இனப்படுகொலைக்கு உள்ளாகி உலகம் முழுதும் சிதறிக் கிடந்த யூதர்கள்தான் இசுரேலைக் குருதி சிந்தி உருவாக்கினார்கள்.”

1948ஆம் ஆண்டு மே 14ஆம் நாள் யூத முகமையின் தலைவர் தேவிட்டு பென்-குரியன் இசுரேல் அரசு நிறுவப்படுவதாக அறிவித்தார். அதே நாள் அமெரிக்க அதிபர் ஆரி எசு. துருமன் புதிய அரசை அறிந்தேற்றார்.

இசுரேல் அமைக்கப்படுவதற்கான அடிப்படை ஆவணம் முதல் உலகப்போர்க் காலத்தில் 1917ஆண்டு வெளியிடப்பெற்ற பால்ஃபோர் சாற்றுரை (பால்ஃபோர் பிரகடனம்) ஆகும். உலகப் போர் தொடங்கும் போது உதுமானியப் பேரரசு (0TTOMAN EMPIRE) எனப்பட்ட துருக்கியப் பேரரசின் கீழ் இருந்த பாலத்தீனத்தில் சியோனிய இயக்கம் கோரியபடி யூதர்களின் தேசியத் தாயகமாக இசுரேல் நாட்டை அமைத்துக் கொடுக்கலாம் என்பதை ஏற்றுக் கொண்டு 1917 நவம்பர் 2ஆம் நாள் பிரித்தானிய அயலுறவு அமைச்சர் ஆர்தர் பால்ஃபோர் பிரித்தானிய யூத சமுதாயத்தின் தலைவர் உரோத்துசைல்டு பிரபுவுக்கு எழுதிய வெளிப்படையான கடிதம்தான் பால்ஃபோர் சாற்றுரை எனப்படுகிறது. அந்த நேரத்தில் பாலத்தீனத்தில் அரபு மொழி பேசும் பாலத்தீனர்களே பெரும்பான்மையாக இருந்தார்கள், யூதர்கள் சிறுபான்மையாகவே இருந்தார்கள் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த பால்ஃபோர் சாற்றுரையை அமெரிக்காவும் ஆதரித்தது.

இரண்டாம் உலகப் போர்க் காலத்தில் என்ன நடந்தது என்பது தெரிந்ததே. இட்டுலரின் நாசிகளால் யூதர்கள் இனவழிப்புச் செய்யப்பட்டார்கள். ஐரோப்பாவில் வாழ்ந்த சற்றொப்ப 90 இலட்சம் யூதர்களில் 60 இலட்சம் பேர் கொலையுண்டார்கள். செருமனி, போலந்து, ஆத்திரியா போன்ற நாடுகள் யூத மக்களின் பெருங்கொலைக் களங்களாயின. சோவியத்து ஒன்றியம்தான் யூத மக்களைப் பாதுகாத்தது.

இரண்டாம் உலகப் போர்க் காலத்திய கொடுமைகள் யூதர்களுக்கு ஒரு நாடு வேண்டும் என்ற கோரிக்கைக்குப் பெரிதும் வலுச் சேர்த்தன. கொடுமைகள் நிகழ்ந்த ஐரோப்பாவில் அல்ல, வெகுதொலைவில் மத்தியதரைக் கடல் வட்டாரத்தில் பாலத்தீனத்தில் அந்த நாட்டை ஒரு புராணக் கதையின் அடிப்படையில் அமைத்ததுதான் இன்று வரை சிக்கலுக்குக் காரணமாகியுள்ளது.

நாடில்லாத மக்களுக்கு மக்களில்லாத நாடு” [A LAND WITHOUT PEOPLE FOR A PEOPLE WITHOUT LAND] என்பது சீயோனியத்தின் முழக்கம். ஆனால் பாலத்தீனம் மக்கள் நிறைந்த நாடாக இருந்தது. முதல் உலகப் போரின் முடிவுக்குப் பின்னர் பிரித்தானிய வல்லரசின் கட்டளையதிகாரத்துக்கு உட்பட்டிருந்த பாலத்தீனம் 1948இல் இரு பாதியாகப் பிரிக்கப்பட்டு ஒரு பாதியில் இசுரேல் அமைக்கப்பட்டது. மறுபாதியையும் இசுரேல் படையெடுத்துச் சென்று கைப்பற்றிக் கொண்டது. அதைத் தடுக்க முயன்ற அரபு நாடுகள் தோற்றுப் போயின. பாலத்தீனத்தில் மிச்சமிருந்த பகுதிகள் யோர்தான் மேற்குக் கரையும் காசா முனையும்தான். ஆனால் மேற்குக் கரை யோர்தான் நாட்டிற்கும், காசா முனை எகிப்துக்கும் போய் விட்டன. பாலத்தீனர்கள் நாடற்றுச் சிதறிப் போனார்கள்.
இப்படித்தான் இசுரேல் பிறந்தது.


“2000 ஆண்டுகளுக்கு மேலாக நாட்டை இழந்து நாடோடிகளாகவும் அடிமைகளாகவும் நாசிகளது இனப்படுகொலைக்கு உள்ளாகி உலகம் முழுதும் சிதறிக் கிடந்த யூதர்கள்தான் இசுரேலைக் குருதி சிந்தி உருவாக்கினார்கள்” என்று நக்கீரன் ஐயா சொல்கிறார்.


யூதர்களுக்கென்று ஒரு நாடு என்றைக்கும் இருந்ததில்லை. பழைய பாலத்தீனத்தையே இசுரேல் என்று வைத்துக் கொண்டாலும் அது யூதர்களுக்கான தனித்துரிய நாடன்று. அந்தப் பகுதியில் தோன்றிய கிறித்துவத்துக்கும், சில நூறாண்டுகள் கழித்துப் பிறந்த இசுலாத்திற்கும் கூட அந்த நிலத்தில் உரிமை உண்டு. ஏனைய பிற சமயங்களுக்கும் அவற்றை நம்பிக் கடைப்பிடித்த மக்களுக்கும் கூட உரிமை உண்டு.

2000 ஆண்டுகளுக்கும் மேலாக செமித்திய எதிர்ப்புக் கொள்கை எனும் யூத வெறுப்புக் கொள்கையின் கொடுந்தாக்கிற்கு ஆளான யூத மக்கள் சீயோனிய இயக்கத்தின் ஊடாகத் தங்களுக்கென்று நாடமைத்துக் கொண்டார்கள். அவர்கள் இசுரேலைக் குருதி சிந்தி உருவாக்கினார்கள் என்று ஐயா நக்கீரன் சொல்வது உண்மைதான். ஆனால் அந்தக் குருதி யாருடைய குருதி? நாசிகளால் கொலையுண்ட யூதர்களின் குருதி மட்டும்தானா? யூதர் இனவழிப்புக்கு எவ்விதத்தும் பொறுப்பில்லாத அரபுகளின் குருதி, பாலத்தீனர்களின் குருதியும் சிந்தப் பட்டதே, இன்றளவும் சிந்தப்படுகிறதே! ஐயா, இதற்கு யார் பொறுப்புக்கூறுவது?

மதத்துக்கு ஒரு நாடு என்ற பிற்போக்குக் கொள்கையை நாம் உறுதியாக எதிர்க்க வேண்டும். யூதம், இசுலாம், இந்து, பௌத்தம், கிறித்துவம்… எந்த மதத்துக்கென்றும் நாடமைக்க முற்படுவது பிற்போக்கானது. ஆனால் சிலபல வரலாற்றுக் காரணங்களால் யூத இசுரேல் உருவாக்கி இவ்வளவு காலம் நிலைத்து விட்டது. இசுரேலின் சியோனிசத்தை அந்நாட்டு மக்களே மறுதலிக்கும் காலம் வரும். அறிவார்ந்த யூத மக்கள் இப்போதே இசுரேலின் அரசத் திகிலியத்தைக் கண்டித்து முழங்கி வருவது நம்பிக்கையூட்டும் செய்தி. புது யார்க்கில் யூத மக்கள் காசா மீதான தாக்குதலைக் கண்டித்து நடத்திய ஆர்ப்ப்பாட்டத்தில் எழுப்பிய முழக்கம்: NOT IN OUR NAME! இந்தக் கொடுமையை எங்கள் பெயரால் செய்யாதே!

தோழர் தியாகு
தாழி மடல் 343
(தொடரும்)