This image has an empty alt attribute; its file name is thalaippu-thaazhi-madal-thoazhar-thiyagu.jpg

(தோழர் தியாகு பகிர்கிறார் : துயர்துடைக்க மகிழன் வேண்டுகோள்-தொடர்ச்சி)

இனிய அன்பர்களே!

தாய்மண்ணை விட்டகலோம்!
பாலத்தீனத் தலைவர் மகமுது அப்பாசின் உறுதி!

காசா முனையில் வாழும் பாலத்தீன மக்கள் மீது இசுரேல் தொடுத்துள்ள போர் ஓய்ந்த பாடில்லை. இந்த நிலையில்தான் கெய்ரோவில் பன்னாட்டுத் தலைவர்களின் உச்சி மாநாடு நடந்துள்ளது. இது கெய்ரோ அமைதி மாநாடு என்று அழைக்கப்படுகிறது. ஐநா பொதுச்செயலர் உள்ளிட்ட பன்னாட்டுத் தலைவர்கள் கலந்து கொண்ட இந்த மாநாட்டில் அமெரிக்கா, பிரிட்டன் பிரான்சு, செருமனி முதலான வல்லரசுகளின் தலைவர்களை மட்டும் காணவில்லை.

இசுரேலின் படையெடுப்புக்கு உதவப் போர்க் கப்பல் அனுப்பத் தெரிந்த அமெரிக்க அரசுத் தலைவர் பைடன் கெய்ரோ மாநாட்டுக்கு வரவில்லை. அமெரிக்க வல்லரசு சார்பில் மாநாட்டுக்கு அனுப்பிவைக்கப்பட்டவர் கெய்ரோவில் உள்ள அமெரிக்கத் தூதகத்தின் பொறுப்பதிகாரி, அவரும் மாநாட்டில் வாய்திறக்கவே இல்லை.

ஃகாமாசு தாக்குதலைச் சாக்கிட்டு காசாவிலிருந்து மட்டுமல்ல மேற்குக் கரையிலிருந்தும் பாலத்தீன மக்களைத் துரத்தியடித்து விட்டு, அந்த இரு பகுதிகளையும் மீண்டும் வன்பறிப்புச் செய்து அமெரிக்க வல்லரசின் ஆதரவோடு அகண்ட இசுரேல் அமைப்பதுதான் இசுரேலிய நெட்டன்யாகு அரசின் திட்டம் என்பது வெளிப்படையான செய்தி. இசுரேலிய அமைச்சர்கள் தொடர்ந்து இதை வலியுறுத்தியும் வருகின்றார்கள். மோதியின் நிலைப்பாடு ஒரு வகையில் அகண்ட இசுரேலுக்கு அகண்ட பாரதம் அளிக்கும் ஆதரவுதான் என்பதைப் புரிந்து கொள்ள வேண்டும்.

முற்றுகைக்கு ஆளான காசா மக்களுக்கு எகிப்து வழியாக அனுப்பப்படும் துயர்தணிப்பு உதவி என்பது ஆனைப் பசிக்கு சோளப் பொறி என்று சொல்லக்கூட போதுமானதன்று.

இந்தப் பகைப்புலத்தில் கூடிய கெய்ரோ மாநாடு போர்நிறுத்தத்தை வலியுறுத்தும் ஒரு கூட்டறிக்கை கூட வெளியிடாமலே கலைந்து விட்டது.

இந்த மாநாட்டில் உலகமும் நாமும் கவனிக்க வேண்டிய ஓர் உரை என்றால் பாலத்தீன அதிகார அமைப்பின் தலைவர் மகமுது அப்பாசு அவர்களின் சுருக்கமான உரையைத்தான் சொல்ல வேண்டும். அவர் பேசும் அரபு மொழி விளங்கா விட்டாலும் இராய்ட்டர் நிறுவனம் அதனை எழுத்து வடிவிலான ஆங்கில மொழிபெயர்ப்புடன் வெளியிட்டுள்ளது

தமிழில் –
பாலத்தீனத் தலைவர் மகமுது அப்பாசு சொல்கிறார்:
“நாங்கள் வெளியேற மாட்டோம்.”


“எங்கள் மக்களை காசாவை விட்டு வெளியேற்றும் படியான முயற்சிகள் குறித்து எச்சரிக்கிறோம். பாலத்தீனர்களை அவர்தம் இல்லங்களிலிருந்தும், எரூசலம் அல்லது மேற்குக் கரையிலிருந்து வெளியேற்றும் படியான முயற்சிகள் குறித்து எச்சரிக்கிறோம். நாங்கள் வெளியேற்றப்படுவதை ஏற்க மாட்டோம். என்ன வரினும் நாங்கள் எங்கள் நிலத்தில் அசைந்து கொடுக்காமல் நிற்போம். பெரியோர்களே! தாய்மார்களே! நாங்கள் வெளியேற மாட்டோம்! வெளியேற மாட்டோம்! வெளியேற மாட்டோம்! எங்கள் நிலத்திலேயே நிலைத்திருப்போம்.”

தலைவர் அப்பாசு ஆற்றிய இந்த உரை பாலத்தீன மக்களின் போராட்ட வரலாற்றில் முத்திரை பதிக்கும் படியான ஒன்று என்பது என் நம்பிக்கை.

கெய்ரோ மாநாட்டில் மகமுது அப்பாசு உரை கேட்கவும் காணவும் இந்த இராய்டார் செய்தி இணைப்பைப் பயன்படுத்திக் கொள்ளுங்கள். –

https://www.reuters.com/world/middle-east/cairo-peace-summit-grapples-with-gaza-war-risks-region-rise-2023-10-21/

தோழர் தியாகு

தாழி மடல் 351

(தொடரும்)