(தோழர் தியாகு பகிர்கிறார் : (இ)யூத இசுரேலும் இந்து இந்தியாவும்- தொடர்ச்சி)

இனிய அன்பர்களே!

பெத்தலகேம் – கீழவெண்மணி:

மாண்டவர்கள் உயிர்த்தெழுந்து ஏற்றுக விடுதலை ஒளி!

இன்று கிறித்து பிறப்பு நாள். சமயப் பண்டிகை எதுவும் நான் ஒருபோதும் கொண்டாடியதில்லை. கிறித்து பிறப்பு நாள் பற்றிப் பெரிதாக நினைப்பதும் இல்லை. ஆனால் இந்த ஆண்டு கிறித்துநாதர் பிறந்த பெத்தலகேம் பற்றி எண்ணாமலிருக்க முடியவில்லை. உலகம் எங்கும் கிறித்துமசு கொண்டாடப்படுகிறது என்றாலும் இந்தக் கொண்டாட்டத்தின் உச்ச மையம் பெத்தலகேம்தான். ஆனால் அந்தத் திருத்தலம் பண்டிகை கொண்டாடும் நிலையில் இல்லை. பாலத்தீனத்தில் இசுரேல் நடத்தி வரும் அழிவுப் போர் பெத்தலகேமையும் விட்டு வைக்கவில்லை.

பாலத்தீனத்தின் பெத்தலகேம் நகரம். ‘மிகவும் மோசமான கிறித்துமசை’ எதிர்கொள்கிறது, ஏனெனில் இசுரேல் போர் சுற்றுலாப் பயணிகளையும் வழிபட வருவோரையும் அச்சுறுத்துகிறது என்று கடந்த சில நாட்களாகவே செய்திகள் வருகின்றன. சீயோனியர்களின் வன்பறிப்புக்கு உள்ளான மேற்குக் கரையில் அமைந்த பெத்தலகேமில் எவாஞ்சலிக்கல் (உ)லூத்தரன் தேவாலயத்தில் இயேசுநாதர் மாட்டுத்தொழுவத்தில் பிறந்து கிடக்கும் காட்சியை ஒரு பெண் உருவாக்கியுள்ளார்.

இந்த முறை மட்டுத்தொழுவதில் கட்டட இடிபாடுகளில் குழந்தை இயேசு கிடக்கிறார். அவரது உடை பாலத்தீனர்களுக்கே உரியது. பாலத்தீனத்தில் இசுரேல் நடத்தி வரும் இனவழிப்பில் படுகொலை செய்யப்படும் பல்லாயிரம் குழந்தைகளுக்கு இந்தக் குழந்தை இயேசு ஒரு குறியீடு மட்டுமே.

சனவரி 25 வெண்மணி நாள். என்னைத் தீவிரமான பொதுமை இயக்கத்துக்கு, அதிலும் ஆய்தப் போராட்ட இயக்கத்துக்கு உந்திய ஒரு நிகழ்வு. கீழவெண்மணியில் 44 பேர் உயிருடன் எரிக்கப்பட்ட அந்தக் கொடுமைதான். அதற்குப் பழிதீர்க்கும் வனமத்துடன்தான் வீட்டையும் படிப்பையும் துறந்து புரட்சிக்கு வந்தேன். எத்தனையோ மாற்றங்களுக்கு இடையே அந்த வன்மத்தை மட்டும் நான் தணித்துக் கொள்ளவே இல்லை.

சாதி ஒழிப்பு, அதற்கு வழிகோலும் தமிழ்த் தேசிய விடுதலை என்ற இலக்குகளை அடையும் வரை இந்த வன்மத்தை அடைகாத்து வருவேன். அன்று சில பகைவர்களைக் குறிவைத்து அழித்தொழிப்புக்காகப் புறப்பட்டேன். இன்று சாதி ஒழிப்புக்கும் தேசிய விடுதலைக்கும் பகையாக நிற்கும் இந்திய அரசக் கட்டமைப்பை அழித்தொழிப்பதையே இலக்காகக் கொண்டு இயங்குகிறேன். சரியாகச் சொன்னால் இயங்குகிறோம். நம்மை அடக்கியாளும் இந்திய வல்லரசியத்தை ஒழிக்காமல் சாதியொழிப்பு வெறுங்கனவே.

இயேசு நாதர் உயிர்த்தெழுக! பாலத்தீன மக்களின் விடுதலைக்கு வழிகாட்டுக! இசுரேலியக் குண்டுவீச்சில் கொல்லப்படும் ஒவ்வொரு பாலத்தீனக் குழந்தையும் ஓர் இயேசுதான். இவர்கள் அனைவருமே உயிர்த்தெழுவார்கள். விடுதலைக் கனவு மெய்ப்படச் செய்வார்கள்.

வெண்மணியில் மாண்டவர்கள் மீண்டு வருவார்கள்! தம்மை எரித்த நெருப்பை ஏந்தி வருவார்கள்! வகுப்புச் சுரண்டலையும் சாதி அடிமைத்தனத்தையும் சுட்டெரிப்பார்கள்.

(பெத்தலகேம், வெண்மணி ஆன்மாக்களை இதயமேந்தும் இந்த நாளில் சென்னையில் அன்புக்குரிய சாம்ராசின் புதினம் ‘கொடைமடம்‘ கவிக்கோ அரங்கில் வெளியிடப்பட்டது. வெளியிடும் பெருமையை எனக்குத் தந்தனர். )

தோழர் தியாகு
தாழி மடல் 415

(தொடரும்)