(தோழர் தியாகு எழுதுகிறார் : கைச்சரக்கா மார்க்குசியம்?-தொடர்ச்சி)

தமிழீழ மக்களின் விடுதலைப் போராட்டத்தில் நம்பிக்கை கொள்ளாமல், இந்திய அரசை நத்தி ஏதாவது தீர்வு பெற்றுக் கொள்வது என்ற கோழைத்தனமான அணுகுமுறையைத் தமிழ் மக்களின் சார்பிலேயே சிலர் முன்மொழிந்து வரக் காண்கிறோம். அடிப்படையில் இந்திய வல்லரசுதான் ஈழத் தமிழர்களைப் பகைத்துக் கொண்டது என்ற உண்மையைத் தலைகீழாகக் கவிழ்த்துப் போட்டு தமிழீழ மக்கள் மீதும் புலிகள் மீதும் இவர்கள் சுற்றடியாகப் பழி போடுவதை வாடிக்கையாகக் கொண்டுள்ளனர்.

இப்போதைக்கு ஈழத் தமிழர் நலனை விடவும் இந்திய வல்லரசின் நலன்தான் உயர்ந்தது என்ற கருத்தைத் தலைவர் பிரபாகரன் பெயரிலேயே செல்லுபடியாக்க இழிமுயற்சி செய்து வருகின்றனர். இவர்களின் பொய்மைகளைத் தோலுரிக்கவும், ஈழ தேசத்துக்கும் இந்திய வல்லரசுக்குமான உறவு எத்தகையது என்பதை விளக்கவும் தேவை இருப்பதாக நம்புகிறேன். தலைவர் பிரபாகரனின் மாவீரர் நாள் உரைகளையே எடுத்துக் காட்டி வரலாற்றுப் புரட்டர்களை மறுதலிக்க முடியும் என நம்புகிறேன். படியுங்கள்! புரிந்து கொண்டு உரையாடுங்கள்!

:::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::

தமிழீழ விடுதலைப் போராட்டத்தில் இன்று எழுந்துள்ள பல்வேறு சிக்கல்களுக்கும் மையமாக இருக்கும் ஒரு வினா: இந்திய அரசு குறித்தான நம் அணுகுமுறை எப்படி இருக்க வேண்டும்?

ஒருசில நண்பர்கள் அடிக்கடி சொல்லி வரும் கருத்துத் துளிகள் இவை: நாம் இந்தியாவையே நம்பியிருக்கிறோம். இந்தியாவின் தயவில்தான் ஈழம் அமைக்க முடியும். இந்தியாவைப் பகைத்துக் கொள்ளக் கூடாது என்பது மட்டுமன்று, இந்தியாவைக் குறை கூறவே கூடாது. இந்தியாவின் நிகழ் அணுகுமுறையை மட்டுமன்று, கடந்த கால நடைமுறையையும் கூட குற்றாய்வு செய்யக் கூடாது. இந்தியாவின் புவிசார் அரசியல் நலன்களுக்குத் தனித் தமிழீழமே ஏற்றது என்பதை இந்திய அரசுக்குப் புரிய வைக்க வேண்டும்.

இந்த இந்தியச் சார்புக் கொள்கையினர் தமிழீழ விடுதலைப் புலிகளையும் தேசியத் தலைவர் பிரபாகரனையும் போற்றக் கூடியவர்கள். அவர் பெயரால் தம் அணுகுமுறையை நியாயப்படுத்தவும் செய்கிறவர்கள்.

ஆனால் தலைவர் பிரபாகரனின் ஆழ்ந்த பார்வைகளுக்குச் சான்றாகத் திகழும் அவரது சிந்தனை, சொல், செயல் ஆகியவற்றின் அடிப்படையில் இந்த இந்தியச் சார்பு ஈழக் கொள்கையினர் வாதுரைப்பதில்லை. 1987 ஆகட்டு 4 சுதுமலைச் சாற்றுரை ஈழத் தேசத்துக்கும் இந்திய வல்லரசுக்குமான உறவு பற்றிய முகன்மையான ஆவணமாகும். அடுத்து, தலைவர் பிரபாகரன் 1989 முதல் 2008 வரை ஆற்றிய 20 மாவீரர் நாள் உரைகள் நூல் வடிவம் பெற்றுள்ளன. இன்னும் சில செவ்விகளும் உள்ளன. இவற்றைப் படித்துப் புரிந்து உள்வாங்கிக் கொள்வது இந்திய வல்லரசு குறித்தான ஈழத் தேசக் கொள்கையை வகுக்க உதவும்.

ஈண்டு நான் தலைவர் பிரபாகரனின் இறுதி மாவீரர் நாள் உரையை (2008 நவம்பர் 27) எடுத்துக்காட்டி அவரது அணுகுமுறையை விளங்கிக் கொள்ளவும் விளக்கிக் காட்டவும் முயல்கிறேன். இந்த உரையில் நம் கருத்தாய்வுக்குப் பொருத்தப்பாடுள்ள சில பகுதிகளைப் பார்ப்போம்.

“உலகின் பல்வேறு நாடுகளும் தமிழ் இன அழிப்புப் போருக்கு முண்டு கொடுத்து நிற்க, நாம் தனித்து நின்று, எமது மக்களின் தார்மீகப் பலத்தில் நின்று, எமது மக்களின் விடிவிற்காகப் போராடி வருகிறோம்.”

தமிழின அழிப்புப் போருக்கு முண்டு கொடுத்து நின்ற நாடுகளில் இந்தியாவும் ஒன்றல்லவா? அதிலும் முதன்மையான ஒன்றல்லவா? போரியல் வகையிலும், பொருளியல் வகையிலும் மட்டுமன்று. அரசியல் வகையிலும் அரசதந்திர வகையிலும் சிங்களத்தின் நேர் இன அழிப்புப் போருக்கு இந்திய வல்லரசு முண்டு கொடுத்து நின்றதும், இன்றளவும் கட்டமைப்பியல் இன அழிப்புக்கு முண்டு கொடுத்து நிற்பதும் இந்திய வல்லரசே என்ற உண்மையை மறுக்கவோ மறக்கவோ மறைக்கவோ எப்படிக் கூடும்?

இன அழிப்புக்கு ஈடுசெய் நீதி பெறுவதற்காகத் தமிழீழத் தேசம் பன்னாட்டு அரங்கில் எடுத்து வரும் முயற்சிகளுக்குத் துணை நின்று இந்திய அரசு தன் பாவத்துக்குக் கழுவாய் தேட முயன்றிருக்கலாம் அல்லவா? மாறாக, ஐநா மனிதவுரிமைப் பேரவை விவாதங்களிலும் தீர்மானங்களிலும் நேரடியாகவும் சுற்றடியாகவும் சிங்கள அரசைப் பாதுகாக்கும் முயற்சியில் இந்தியா தொடர்ந்து ஈடுபட்டு வரக் காண்கிறோம்.

கடந்த காலத்திய, நிகழ்காலத்திய உண்மைகளை மூடி மறைப்பதுதான் அரசதந்திரம் என்று இந்திய சார்பு ஈழக் கொள்கையினர் நம்புவதாக இருக்கக் கூடும். ஆனால் இந்த அரசதந்திரத்தால் இது வரை என்ன பயன் விளைந்துள்ளது? என்று அவர்கள் விரல்விட்டுச் சொல்லட்டும். இந்தியா குட்டக் குட்ட நாம் குனிவதும், நாம் குனியக் குனிய அவர்கள் குட்டுவதும்தானே கண்ட பலன்?

இத்தனைக்குப் பிறகும் நம் அன்பர்களில் சிலர் “நாங்கள் இந்தியாவைத்தான் நம்பியிருக்கிறோம்” என்று திரும்பத் திரும்பப் பேசிக் கொண்டிருப்பதில் பொருளில்லை. தந்தை செல்வா அவர்களோ, தலைவர் பிரபாகரன் அவர்களோ இந்தியாவை நம்பியோ பிற அயல் அரசுகளை நம்பியோ இந்த விடுதலைப் போராட்டத்தை நடத்தவில்லை. வேறு எதை நம்பித் தொடங்கி நடத்தினார்கள்? கேளுங்கள், தலைவரே உங்களுக்கு விடை சொல்வார்: எமது மக்களின் தார்மீகப் பலத்தில் நின்றுஎமது மக்களின் விடிவிற்காகப் போராடி வருகிறோம்.”

கடந்த காலத்தில், குறிப்பாக 1983 கறுப்பு யூலைக்குப் பின் “இந்தியப் படையை ஈழத்துக்கு அனுப்பித் தமிழ் மக்களைப் பாதுகாக்க வேண்டும்” என்று தமிழ்நாட்டில் ஒரு கோரிக்கை எழுந்ததுண்டு. திராவிட முன்னேற்றக் கழகம் இதற்காக ஒரு மறியல் போராட்டமே நடத்தியது. ஆனால் எவ்வித நெருக்கடியிலும் தமிழீழ விடுதலைப் புலிகள் இந்தக் கோரிக்கையை வழிமொழிந்ததில்லை.

“எமது பலத்திற்கு மிஞ்சிய பாரிய சக்திகளையெல்லாம் நாம் எதிர்கொண்டிருக்கிறோம். வல்லமைக்கு மிஞ்சிய வல்லாதிக்க சக்திகளோடு நேரடியாக மோதியிருக்கிறோம். அலையலையாக எழுந்த எதிரியின் ஆக்கிரமிப்புக்களை எல்லாம் நேருக்கு நேர் நின்று சந்தித்திருக்கிறோம்.”

தலைவர் பிரபாகரன் குறிப்பிடும் “வல்லமைக்கு மிஞ்சிய வல்லாதிக்க சக்திகள்” யார்? சிங்களம் தவிர, தமிழீழத்தை ஆக்கிரமித்த எதிரி என்பது இந்தியாவே அல்லவா? ஈழத்தைப் பகைத்து இந்தியாவா? இந்தியாவைப் பகைத்தது ஈழமா?

“இதேநேரம்சமாதான முயற்சிகளின் காவலர்கள் எனத் தம்மை அடையாளப்படுத்திய உலக நாடுகளில் ஒரு பகுதியினர் அவசரப்பட்டு அதிரடி நடவடிக்கையில் இறங்கியமைசமாதான முயற்சிகளுக்கே ஊறு விளைவிப்பதாக அமைந்தது.”

சமாதான முயற்சிகளுக்கு ஊறு விளைவித்த உலக நாடுகளில் இந்தியாவுக்கு முக்கிய இடமுண்டா? இல்லையா?

“எமது சுதந்திர இயக்கத்தை இந்நாடுகள் ஒரு பயங்கரவாதக் குழுவாகச் சிறுமைப்படுத்திச் சித்திரித்துதடை செய்யப்பட்ட இயக்கங்களின் வரிசையில் பட்டியலிட்டுஎம்மை வேண்டத்தகாதோராகதீண்டத்தகாதோராக ஒதுக்கி ஓரங்கட்டிபுலம்பெயர்ந்து வாழும் எம்மக்கள் மீது வரம்பு மீறிய வரையறைகளை விதித்துகட்டுப்பாடுகளைப் போட்டுஎமது விடுதலைப் போராட்டத்திற்கு ஆதரவாக அவர்கள் முன்னெடுத்த அரசியற் செயற்பாடுகளுக்கு முட்டுக்கட்டைகள் போட்டன.”

சிறிலங்கா தவிர ஈழ விடுதலை இயக்கத்தை ஒரு பயங்கரவாதக் குழுவாகச் சித்திரித்த முதல் நாடு இந்தியாதான். தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்துக்கு முதன்முதலாகத் தடை விதித்ததும் இன்றளவும் தடையை நீடித்து வருவதும் இந்தியாதான்.

ஈழத் தமிழர்கள் மறக்கக் கூடாத ஒரு வரலாற்று உண்மை என்ன தெரியுமா? சிங்களம் தவிர, தமிழீழத்தின் மீது படையெடுத்த ஒரே அயல்நாடு இந்திய வல்லரசுதான்! தமிழ் மக்கள் இன்றளவும் ஒவ்வொரு ஒன்றுகூடல் நிகழ்வைத் தொடங்கும் போதும் அகவணக்கம் செலுத்துவது சிங்களப் படைகளாலும் இந்தியப் படைகளாலும் கொலையுண்ட தமிழர்களுக்கே அல்லவா? இந்த அகவணக்கத்திலிருந்து இந்தியப் படையால் கொலையுண்டவர்களை நீக்கினால்தான் இந்திய வல்லரசின் பரிவைப் பெற முடியும் என்று நினைப்பதே அம்மக்களின் நினைவைக் களங்கப்படுத்துவது அல்லவா?

எமது சுதந்திர இயக்கத்தை இந்நாடுகள் ஒரு பயங்கரவாதக் குழுவாகச் சிறுமைப்படுத்திச் சித்திரித்துதடை செய்யப்பட்ட இயக்கங்களின் வரிசையில் பட்டியலிட்டுஎம்மை வேண்டத்தகாதோராகதீண்டத்தகாதோராக ஒதுக்கி ஓரங்கட்டிபுலம்பெயர்ந்து வாழும் எம்மக்கள் மீது வரம்பு மீறிய வரையறைகளை விதித்துகட்டுப்பாடுகளைப் போட்டுஎமது விடுதலைப் போராட்டத்திற்கு ஆதரவாக அவர்கள் முன்னெடுத்த அரசியற் செயற்பாடுகளுக்கு முட்டுக்கட்டைகள் போட்டன.

“தாம் வாழும் நாடுகளின் அரசியல் சட்டவிதிகளுக்கு அமைவாகநீதிநெறி வழுவாது எம்மக்கள் மேற்கொண்ட மனிதாபிமானப் பணிகளைக் கொச்சைப்படுத்தி சிங்கள அரசின் இன அழிப்புக்கு ஆளாகிமனிதப் பேரவலத்திற்கு முகம் கொடுத்து நின்ற தமது தாயக உறவுகளைக் காக்க எமது மக்கள் முன்னெடுத்த மனிதநேய உதவிப் பணிகளைப் பெரும் குற்றவியற் செயல்களாக அடையாளப்படுத்திதமிழ் மக்களின் பிரதிநிதிகளையும் தமிழின உணர்வாளர்களையும் கைது செய்துசிறைகளிலே அடைத்துஅவமதித்தன.”

இப்படியெல்லாம் இந்தியா செய்யவில்லை என்று நம் இந்தியச் சார்பு ஈழக் கொள்கையினரால் சொல்ல முடியுமா?

“மாறாகசில உலகநாடுகள் சிங்கள தேசத்திற்கு அழிவாயுதங்களை அள்ளிக் கொடுத்துஇராணுவப் பயிற்சிகளையும்இராணுவ ஆலோசனைகளையும் இலவசமாக வழங்கி வருகின்றன. இதனால்தான் சிங்கள அரசு தமிழருக்கு எதிரான இன அழிப்புப் போரைத் துணிவுடனும் திமிருடனும் ஈவிரக்கமின்றியும் தொடர்ந்து வருகிறது.”

இந்தச் சில நாடுகளில் இந்தியாவும் முதன்மையான ஒன்றில்லையா?

ஈழப் போராட்டம் இந்திய நாட்டின் தேசிய நலன்களுக்கு எதிரானதா? இந்த வினாவிற்குத் தலைவர் பிரபாகரனின் விடை இதோ:

“உலகத் தமிழினத்தின் ஒட்டுமொத்தப் பேராதரவோடு நாம் இந்தப் போராட்டத்தை நடாத்தி வருகிறோம். அதுமட்டுமன்று, எமது போராட்டம் எந்தவொரு நாட்டினதும் தேசிய நலன்களுக்கோ அவற்றின் புவிசார் நலன்களுக்கோ பொருளாதார நலன்களுக்கோ குறுக்காக நிற்கவில்லை.

“எமது மக்களது ஆழமான அபிலாசைகளும் எந்தவொரு தேசத்தினதும் எந்த மக்களினதும் தேசிய நலன்களுக்குப் பங்கமாக அமையவில்லை. அத்தோடு இந்த நீண்ட போராட்ட வரலாற்றில், நாம் திட்டமிட்டு எந்தவொரு தேசத்திற்கு எதிராகவும் நடந்துகொண்டதுமில்லை.”

இந்திய நாட்டுக்கு மட்டுமல்ல, வேறு எந்த நாட்டுக்கும் ஈழ விடுதலைப் போராட்டம் எதிரானதன்று. நீண்ட போராட்ட வரலாற்றில் எந்த நாட்டையும் நாம் பகைத்துக் கொண்டதில்லை. இந்தியாவை மட்டும் எதற்காகப் பகைத்துக் கொள்ளப் போகிறோம்? இந்தியா தன் வல்லரசிய நலன்களுக்கு ஈழப் போராட்டம் எதிரானது எனக் கருதினால் அதற்கு நாம் எப்படிப் பொறுப்பாவோம்?

“எமது விடுதலை இயக்கமும் சரி எமது மக்களும் சரி என்றுமே உலக நாடுகளுடனும்எமது அண்டை நாடான இந்தியாவுடனும் நட்புறவை வளர்த்துச் செயற்படவே விரும்புகிறோம்.

“இதற்கான புறநிலைகளை உருவாக்கிநட்புறவுப் பாலத்தை வளர்த்து விடவே சித்தமாக இருக்கிறோம். எமது நல்லெண்ணத்தை வெளிப்படுத்திகாத்திரமான உறவுகளைக் கட்டியெழுப்புவதற்குக் காத்து நிற்கிறோம். எம்மைத் தடை செய்துள்ள நாடுகள்எமது மக்களது அபிலாசைகளையும் ஆழமான விருப்பங்களையும் புரிந்து கொண்டுஎம்மீதான தடையை நீக்கிஎமது நீதியான போராட்டத்தை அங்கீகரிக்க வேண்டுமென அன்போடு வேண்டிக் கொள்கிறேன்.”

அன்று இந்தியாவுடன் நட்பை வளர்த்துக் கொள்ளவே தலைவர் விரும்பினார். இன்றும் ஈழ மக்களின் விருப்பம் அதுவே. ஆனால் அன்றும் இன்றும் தடை விதித்து நட்புக்குத் தடை போட்டுக் கொண்டிருப்பது இந்திய வல்லரசுதான் என்பது கண்கூடான உண்மையல்லவா?

“நாம் எமது இலட்சியத்தில் உறுதியாக நின்ற காரணத்தினால்தான் எமது இயக்கத்திற்கும் இந்திய அரசிற்கும் பிணக்கு ஏற்பட்டது. எனினும்இந்தியாவை நாம் ஒருபோதும் பகைச் சக்தியாகக் கருதியதில்லை. இந்தியாவை எமது நட்புச் சக்தியாகவே எமது மக்கள் என்றும் கருதுகிறார்கள். எமது தேசியப் பிரச்சினை விடயத்தில் இந்தியப் பேரரசு ஒரு சாதகமான நிலைப்பாட்டை எடுக்கும் எனப் பெரிதும் எதிர்பார்க்கிறார்கள்.”

இந்தியா சாதகமான நிலைப்பாட்டை எடுப்பதானால் அதற்கான முதல் நடைபடி, விடுதலைப் புலிகள் மீதான தடையை நீக்குவதுதான். பதினைந்து ஆண்டுகள் கரைந்த பின்னும் தலைவர் பிரபாகரனின் சொற்கள் உண்மையாக ஒலிக்கின்றன. இந்தியாவைப் பகைச் சக்தியாக நாம் கருதவில்லை, கருத வேண்டிய தேவையும் இல்லை. இந்தியாவை நட்புச் சக்தியாகவே தமிழர்கள் கருதினார்கள், இன்றும் கருதுகின்றார்கள். ஆனால் இந்தியப் பேரரசின் அணுகுமுறைதான் ஈழ மக்களுக்கும் அவர்தம் போராட்டத்துக்கும் பகையாக உள்ளது.

கற்றுக்குட்டித்தனமான சில நாடகங்களை அரங்கேற்றுவதன் மூலம் இந்திய வல்லரசின் இந்த அணுகுமுறையை மாற்றி விட முடியாது என்பதை “இந்தியாவையே நம்பியிருக்கும்” நம் அன்பர்கள் விரைவில் உணர்ந்து கொண்டால் நன்று.