(தோழர் தியாகு எழுதுகிறார் : தேரான் தெளிவு- தொடர்ச்சி)

புரட்சியாளர்கள் – பொதுமையரானாலும் மற்றவர் ஆனாலும் – கடைப்பிடிக்கும் ‘ஒற்றுமை முன்னணி’ என்ற உத்தி பகடிக்குரிய ஒன்றன்று. ஒற்றுமை (ஐக்கிய) முன்னணி என்பதெல்லாம் போருக்கு மட்டுந்தான், அது அரசியலுக்குப் பொருந்தாது என்பதும் சரியான பார்வையன்று. அரசியல் என்பது குருதி சிந்தாப் போர்! போர் என்பது குருதி சிந்தும் அரசியல்! அரசியலின் நீட்சியே போர்!

இருப்பினும் ஒற்றுமை முன்னணி (ஐக்கிய முன்னணி) என்ற பேச்சுக்கே உள்நோக்கம் கற்பிக்கிறார் அன்பர் மருது.

தேர்தல் நெருங்கினாலே நமது புரட்சிகர இடதுசாரிகள் ஐக்கிய முன்னணித் தந்திரவுத்தியைப் பற்றிப் பேசத் தொடங்கி விடுவார்கள். சுற்றி வளைத்து ஏதாவது ஒரு ஆளும் வருக்கத்திற்கு ஆதரவாகச் செயல்படுவதற்கு அணிதிரட்ட ஆரம்பித்து விடுவார்கள். தமது செயல்களை நியாயப்படுத்த உடனடியாக சப்பானிய ஏகாதிபத்திய எதிர்ப்பு முன்னணி என்ற பழைய புளித்துப்போன வாதத்தைப் பேசத் தொடங்குவார்கள்.”

தேர்தல் என்பது ஒரு குடியாட்சிய வடிவம் மட்டுமன்று, அது ஓர் அரசியல் போராட்டம் என்பதையும், மற்றப் போராட்டங்களில் எப்படியோ அதே போல் தேர்தல் போராட்டத்திலும் ஒற்றுமை முன்னணி உத்தியைக் கையாளத்தான் வேண்டும் என்பதையும் அன்பர் மருது கருத்தில் கொள்ளவில்லை. சுற்றி வளைத்து ஏதாவது ஓர் ஆளும் வருக்கத்துக்கு ஆதரவாகச் செயல்படுவதுதான் ஒற்றுமை முன்னணி என்று பழிதூற்ற முற்படுகிறார். எந்தச் சூழலிலும் எந்த ஒற்றுமை முன்னணியிலும் ஆளும் வகுப்புக்கு – அதன் ஒரு பகுதிக்கும் கூட – இடம் அளிக்கக் கூடாது, அல்லது எந்நிலையிலும் எவரை எதிர்த்தும் ஓர் ஆளும் வகுப்பை ஆதரிக்கக் கூடாது என்பதுதான் புரட்சிகர இடதுசாரிகளுக்கு அவர் வழங்கும் அறிவுரை போலும்! ஒற்றுமை முன்னணி பற்றிய மார்க்சியக் கோட்பாட்டுக்கும் இந்த மருதுப் பேச்சுக்கும் எந்தத் தொடர்புமில்லை.

சப்பானிய வல்லரசிய (ஏகாதிபத்திய) எதிர்ப்பு முன்னணி என்ற வரலாற்று எடுத்துக்காட்டு மருது போன்றவர்களுக்கு வேண்டுமானால் பழைய புளித்துப் போன வாதமாக இருக்கலாம். சீனப் புரட்சியின் சுடர்மிகு படிப்பினைகளை இன்னமும் உயிர்ப்புள்ள வழிகாட்டிகளாகவே நான் மதிக்கிறேன். சப்பானிய வல்லரசிய எதிர்ப்பு முன்னணியைச் சீனப் புரட்சியின் தலைவர் மா சே துங்கு எவ்வளவு பெரிதாக மதித்தார் என்பதை விளங்க வைக்க சீன வரலாற்றில் நிகழ்ந்த கருத்துக்குரிய (கதை போல் சுவைதகு) நிகழ்ச்சி ஒன்றை எடுத்துக்காட்ட விரும்புகிறேன். –

::::::::::::::::

1936 திசம்பர் 12 முதல் 26 வரையிலான காலத்தில் சீனத்தில் ஓர் அரசியல் நெருக்கடி மூண்டது. சியான் (சீன மொழி உச்சரிப்பில் (இ)க்குசியான் அல்லது சியான்) என்பது ஒரு சீன நகரம். அக்காலத்தில் சப்பானிய வல்லரசு சீனத்தின் மீது படையெடுத்து பெரும் நிலப்பரப்பைக் கைப்பற்றித் தன் ஆளுகையை விரிவாக்கிக் கொண்டும் இருந்தது. சீன தேசிய அரசின் தலைவராக இருந்த சியாங் கே-சேக்கு தமது தலமையிலான தேசியப் படையைப் பார்வையிட சியான் நகரத்துக்குப் போயிருந்த போது அந்தப் படையின் இரு தளபதிகள் – சாங் சூ-லியாங்கு, யாங்கு ஃகூசெங்கு ஆகியோர் – அவரைத் தளைப்படுத்தி வீட்டுச் சிறையில் அடைத்து விட்டனர்.

சாங்(கு), யாங்(கு) ஆகிய அந்த இரு தளபதிகளும் விரும்பியது என்னவென்றால், சியாங்(கு) கே-சேக்கு தலைமியிலான கோமிண்டாங்(கு) படைக்கும் சீனப் பொதுமைக் கட்சி தலைமையிலான மக்கள் விடுதலைப் படைக்கும் இடையிலான உள்நாட்டுப் போருக்கு முடிவு கட்ட வேண்டும். சீன மண்ணில் சப்பானிய வல்லரசின் ஆளுகை விரிவாக்கத்தை எதிர்த்து ஒன்றுபட்டுப் போரிட வேண்டும் என்பதே. மாவோ தலமையிலான சீனப் பொதுமையருக்கும் இதே விருப்பம் இருந்தது. சீனக் குமுகாயத்தின் பல்வேறு பிரிவினரும் இதையே விரும்பினர். கோமிண்டாங்கு படையிலும் பலர் இதை விரும்பினாலும் சியாங் கே-சேக்கு மட்டும் சப்பானியரை எதிர்ப்பதை விடவும் செம்படையை ஒழித்துக் கட்டும் உள்நாட்டுப் போரிலேயே குறியாக இருந்தார். இந்தப் பின்னணியில்தான் தேசியப் படையின் இரு தளபதிகள் அவரை சியான் நகருக்குத் தந்திரமாக வரவழைத்து சிறைப்படுத்தி விட்டனர்.

நீண்ட பயணத்துக்குப் பிறகு ஏனானில் தளம் அமைத்துப் போரிட்டுக் கொண்டிருந்த செம்படையை ஒழித்துக் கட்டும் பொறுப்பை சியாங் கே-சேக்கு வடகிழக்குப் படையிடம் ஒப்படைத்திருந்தார். 1931ஆம் ஆண்டு சப்பான் படையெடுத்து வந்து மஞ்சூரியாவைக் கைப்பற்றிய பிறகு அங்கிருந்து வெளியேறிய வீரர்களைக் கொண்டுதான் இந்த வடகிழக்குப் படை அமைக்கப்பட்டிருந்தது. சப்பானிய வன்பறிப்பை எதிர்ப்பதில் சீனப் பொதுமையரின் உறுதியும் நாட்டுப் பற்றும் வடகிழக்குப் படையினரைப் பெரிதும் ஈர்த்தது. அவர்கள் பொதுமையருடன் உறவாடலாயினர். செம்படையும் தேசியப் படையும் ஒற்றுமை முன்னணியாகச் சேர்ந்து சப்பானியப் படையெடுப்பை எதிர்த்துக் களமாட வேண்டும் என்ற கருத்து அவர்களிடம் வலுப்பெற்றது.

வடகிழக்குப் படையின் தளபதிகளாய் இருந்த சாங்கும் யாங்கும் தங்கள் தேசியத் தலைவராய் இருந்த சியாங் கே-சேக்கிடம் கொள்கைகளை மாற்றிக் கொள்ளும் படி வலியுறுத்தி வேண்டினர். அவர் கேட்பதாய் இல்லை. எனவேதான் அவரைக் கடத்த முடிவெடுத்து, வடகிழக்குப் படையைப் பார்வையிட வருமாறு சியானுக்கு அழைத்தார்கள். செம்படையை எதிர்த்துப் போரிடும் வீரர்களை நீங்கள் நேரில் சந்தித்து ஊக்கமூட்டினால் நன்றாக இருக்கும் என்றார்கள். தளபதி சாங்கின் இந்தத் திட்டத்தை அறிந்து “சிறப்பான முயற்சி” என்று தோழர் மாவோவும் பாராட்டினாராம். அழைப்பை ஏற்று வந்த சியாங் கே-சேக்கைப் பிடித்து அடைத்து வைத்துக் கொண்டு பொதுமைக் கட்சிக்குத் தகவல் கொடுத்தார்கள். தீவிரப் போக்கினரான சில படைத் தளபதிகள் சியாங் கே-சேக்கைச் சுட்டுத் தள்ள வேண்டும் என்றார். வடக்கு நோக்கிய படையெடுப்புக் காலத்தில் சியாங் கே-சேக்கு நடத்திய 1927 சாங்காய் படுகொலையை மறவாத செம்படையினர் சிலரும் சியாங் கே-சேக்கைத் தண்டிக்க இந்த வாய்ப்பைத் தவற விடக் கூடாது என்றே நினைத்தனர்.

ஆனால் பொதுமைக் கட்சித் தலைமை வேறுவிதமாகச் சிந்தித்தது. தோழர் மாவோ கோமிண்டாங்கை அனைத்துத் தேசிய ஒற்றுமை முன்னணிக்குள் கொண்டுவர இந்த வாய்ப்பைப் பயன்படுத்திக் கொள்வதே நாட்டுக்கு நல்லது எனக் கருதினார். பொதுமைக் கட்சியின் சார்பில் தோழர் சூ என்-லாய் தலைமையிலான தூதுக் குழுவினர் சியானுக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். இரு கிழமைக் காலம் அவர்கள் சியாங் கே-சேக்குடன் பேச்சு நடத்தி, பொதுமைக் கட்சிக்கும் கோமிண்டாங்குக்கும் ஒற்றுமை முன்னணி அமைத்து சப்பானியப் படையெடுப்பை எதிர்த்துப் போரிட அவர் ஒப்புக் கொண்ட பின் அவரை விடுதலை செய்யச் சொல்லி விட்டனர்.

இதுதான் சீன வரலாற்றில் திருப்புமுனையான சியான் நிகழ்ச்சி. சியாங் கே-சேக்கு நினைத்தாலும் மீற முடியாத அளவுக்கு இந்த நிகழ்ச்சி சீன மக்களிடையே நாட்டுப்பற்று சார்ந்த பேரெழுச்சியைத் தோற்றுவித்தது. அது சீனத்தின் தேசிய வெற்றிக்கு மட்டுமல்லாமல், உலக அளவில் பாசிசம் வீழ்த்தப்படுவதற்கும் பெருந்துணை ஆயிற்று. குமுகிய சோவியத்து ஒன்றியமும் வல்லரசிய பிரித்தானியா, பிரான்சு, அமெரிக்காவும் ஏற்படுத்திய பன்னாட்டளவிலான பாசிச எதிர்ப்பு முன்னணியில் சீன தேசத்தின் பங்கினையும் உறுதி செய்தது.

சியான் நிகழ்ச்சி தரும் பாடங்கள் என்ன?

1) பொதுப் பகைவனுக்கு எதிராக ஒற்றுமை முன்னணி கட்டும் வாய்ப்பை ஒருபோதும்
தவற விடக் கூடாது.

2) பழைய பகைவர்கள் புதிய கூட்டாளிகள் ஆக வேண்டிய வரலாற்றுத் தேவை எழும் போது, பழிதீர்க்கும் பகையுணர்ச்சி அடிப்படையில் ஒற்றுமை முன்னணியின் தேவையை மறுதலிக்கக் கூடாது.

3) எந்த ஓர் ஒற்றுமை முன்னணியும் குறிப்பான வரலாற்றுக் கட்டத்துக்கு உரியதே. பிறிதொரு கட்டத்தில் ஒற்றுமை குலைவது இயல்பானதே. இதனால் ஒற்றுமை முன்னணிக் கொள்கையே தவறு என்று ஆகி விடாது.

4) புரட்சியாளர்கள் – பொதுமையர் – விடுதலை வீரர்கள் பாசிச எதிர்ப்பு ஒற்றுமை முன்னணியில் உண்மையாகவும் உறுதியாகவும் பங்கேற்பது அவர்களின் ஆதரவு அடித்தளத்தை விரிவாக்கவும் உறுதியாக்கவும் உதவக் கூடியது.

அன்பர் மருதுவுக்கான மறுமொழி பெரும்பாலும் முடிந்தது. எஞ்சியுள்ள சில கூறுகளை அடுத்து எடுத்துக் கொள்கிறேன்.
இரண்டாம் உலகப் போர்க் காலத்தில் பன்னாட்டளவில் பாசிச எதிர்ப்பு ஒற்றுமை முன்னணி எவ்வாறு செயற்பட்டது என்பதைப் பற்றிப் பிறிதொரு தருணத்தில் பேசுவோம்.

(தொடரும்)