(தோழர் தியாகு எழுதுகிறார் : சியான் நிகழ்ச்சி- தொடர்ச்சி)

”வினைவலியும் தன்வலியும் மாற்றான் வலியும்
துணைவலியும் தூக்கிச் செயல்.”

– திருக்குறள் 471

அன்பர் மருது ”தேர்தல் பாதை திருடர் பாதை” என்று சொல்லவில்லை. தேர்தல் என்கிற குடியாட்சிய வடிவத்தை மறுதலிக்கவில்லை. தேர்தலைப் பயன்படுத்தக் கூடிய அளவுக்கு வலிமையான சக்திகளாகப் புரட்சிகர இடதுசாரிகள் இல்லை என்பதுதான் மருதுவுக்குள்ள கவலை. மெய்ந்நடப்பில் நமது ஆதரவோ எதிர்ப்போ தேர்தல் களத்திலே தீர்மானிக்கும் சக்தியாக இல்லை என்பதுதான் அவருக்குள்ள வருத்தம். இந்தச் சூழலில் ஒற்றுமை (ஐக்கிய) முன்னணித் தந்திரத்தைப் பேசுவதால் இடதுசாரிகளுக்கு என்ன பலன் கிடைத்து விடப் போகிறது? என்று அவர் கேட்கிறார்.

வறட்டுத்தனமான தேர்தல் புறக்கணிப்பை அன்பர் மருது வலியுறுத்தவில்லை என்ற அளவில் நல்லது. பாசிச எதிர்ப்பு முயற்சியில் தேர்தல் போராட்டத்தைப் பயன்படுத்தும் வாய்ப்பை ஏற்றுக் கொள்கிறார் என்று பொருள். ஆனால் அதற்கான வலிமை நமக்கு இல்லையே! என்ன செய்வது? என்று ஐயுறுகின்றார். நியாயம்தானே!

வினைவலி பெரிது! மாற்றான் வலி பெரிது! துணைவலி குறித்துத் தெளிவாகத் தெரியவில்லை! தன் வலியோ சிறிதினும் சிறிது! இந்த உண்மையை நாம் தெளிவாக உணர்ந்துள்ளோம்.

நமக்குள்ள வலிமைக் குறைவைக் கணக்கில் கொண்டுதான் நாமே போட்டியிடுவதைத் தவிர்க்கிறோம். இருக்கிற வலிமைக்கு என்ன செய்ய முடியுமோ அதையும் செய்யாமல், வலிமையில்லை என்று ஒதுங்கி நிற்பதால் நம் வலிமை மேலும் குறையுமே தவிர எவ்வகையிலும் கூடி விடாது. தீர்மானிக்கும் சக்தியா இல்லையா என்பதெல்லாம் சார்பியல் நோக்கிலானது. இன்று தீர்மானிக்கும் ஆற்றலாக இல்லை என்றால், பிறகு ஒரு நாள் அத்தகைய ஆற்றலாக வளர முடியாது என்று பொருளில்லை.

ஒற்றுமை முன்னணி உத்தியால் இடதுசாரிகளுக்கு என்ன பலன் கிடைத்து விடப் போகிறது? என்பது குறுங்குழுவியப் பார்வை. குடியாட்சிய இயக்கத்துக்கு என்ன கிடைக்கப் போகிறது? என்பதுதான் முதல் வினாவாக இருக்க வேண்டும். வரலாற்றில் சில தருணங்களில் அரசியல் நலனுக்காக அமைப்பு நலனை விட்டுத்தர வேண்டியிருக்கும்.

தன்வலி, அதாவது நம் வலிமை என்பது பல கூறுகளால் ஆனது. நமக்குப் பொருள் வலிமை மிகமிகச் சிறிது. ஒன்றும் இல்லை என்றே சொல்லி விடலாம். ஆள் வலிமை மிகச் சிறிது. மக்கள் வலிமையும் சிறிதே. ஊடக வலிமையும் சிறிதென்றாலும் அலட்சியம் செய்யக் கூடியதன்று. தகவல் தொழில்நுட்ப வளர்ச்சியினால் குமுக ஊடகங்களில் நமக்கோர் இடம் இருக்கவே செய்கிறது. நம்மிடம் மிகப் பெரிய வலிமையாக இருப்பது கொள்கை வலிமை! நம் குறிக்கோளை அடைவதற்காக அறிவார்ந்து உழைக்கவும் ஈகம் செய்யவும் நாம் அணியமாய் உள்ளோம். வரலாற்று ஏரணத்தின் மீது நாம் நம்பிக்கை கொண்டுள்ளோம். மக்கள் இன்று நம் பக்கம் இல்லா விட்டாலும் நாம் என்றும் நம் மக்கள் பக்கம் நிற்பதில் உறுதியாக இருக்கிறோம். சுருங்கச் சொன்னால் நம்மிடம் ஈடிணையற்ற அற வலிமை உள்ளது. இந்த அற வலிமையை அரசியல் வலிமையாக்குவதுதான் நம் நோக்கமாக இருக்க வேண்டும். இந்தப் பெருமுயற்சியில் ஒற்றுமை முன்னணி உத்தி பயனுள்ளதாக இருக்கும் என்கிறேன். அந்த உத்தியின் முதல் நடைபடிதான் 2024 பொதுத் தேர்தலில் பாசிச பாசக கூட்டணியை வீழ்த்துவதில் உருப்படியான பங்கு வகிப்பது!

ஒற்றுமை முன்னணி என்பது நம் தேர்தல் செயற்பாட்டுக்குப் பின்னாலிருக்கும் கோட்பாட்டு நியாயமே தவிர உடனே பாசிச ஒற்றுமை முன்னணி ஒன்றைக் கட்டுவது நம் நோக்கமில்லை. முன்னணி கட்டுதல் என்பது ஓர் இயங்கியல் செயல்வழியே தவிர ஒரு நாள் குறித்து நடப்பதன்று. அதற்கான தொடக்க முன்னிலைகளில் ஒதுங்கியிருந்து விட்டு வலிமை திரண்ட பின் சேர்ந்து கொள்வது என்பது ஒருபோதும் நடவாது. ஏனென்றால் இந்தச் செயல்வழியில் இப்போதைய வலிமைக்கேற்பப் பங்கு பெறாமல் புதிய வலிமை வரவே வராது.

சென்ற தேர்தலில் திமுகவை ஆதரித்தவர்கள் இந்த மூன்று ஆண்டுகளில் திமுகவின் மக்கள்பகைப் போக்கினைக் கண்டித்து எத்துனைப் போராட்டங்களை முன்னெடுத்தனர்? நல்ல கேள்வி! தமிழ்த் தேசிய விடுதலை இயக்கமும் மக்கள் இயக்கங்களின் கூட்டமைப்பில் இடம்பெற்று, பாசக போட்டியிடும் தொகுதிகளில் மட்டும் அக்கட்சியைத் தோற்கடிக்க வேலை செய்தோம். இது விளைவளவில் திமுக கூட்டணிக்கான ஆதரவாகவே அமைந்தது. ஆனால் தேர்தலுக்குப் பின் நாம் உட்பட மக்கள் இயக்கங்களில் எதுவும் திமுகவின் தொங்குசதையாக மாறி விடவில்லை.

பாசிச எதிர்ப்பு மக்கள் முன்னணியிலும் பாசக ஆட்சிக்கெதிரான போராட்டங்கள் நடத்திய போது திமுக ஆட்சிக்கு எதிராகவும் போராடினோம். ‘பாப்புலர் பிரண்ட்‘ மீதான தடையை எதிர்த்துப் போராடிய போது திமுக ஆட்சியின் கண்ணியந்தவறிய மோசமான அடக்குமுறையைச் சந்தித்தோம். ’உபா’, ’நியா’ எதிர்ப்பு இயக்கத்தில் இந்திய பாசக அரசை எதிர்த்தது போலவே திமுக அரசையும் கடுமையாகச் சாடினோம். இண்டன்பெர்க்கு அறிக்கையின் அடிப்படையில் அதானி-மோதிக்கு எதிரான போராட்டத்தில் திமுக ஆட்சியின் அதானி கூட்டுக்கு எதிராகவும் கோரிக்கை வைத்தோம், குரல் கொடுத்தோம்.

”காவி பாசக புகுந்துவிடும்; தமிழகத்தில் பாசக கும்பலை விரட்டி அடிப்பதற்கு வேறு வழியே இல்லை. நாம் திமுகவை ஆதரிக்க வேண்டும் என்று புரட்சிகர இடதுசாரிகள் ஓயாது பல்லவி பாடுகின்றனர்” என்கிறார் மருது.

நாம் இப்படிப் பல்லவியோ சரணமோ பாடவில்லை. நாம் போராட்ட அரசியலையே வளர்க்க விரும்புகிறோம். போராட்ட அரசியலுக்குக் குடியாட்சிய வெளி தேவைப்படுகிறது. பாசகவைத் தேர்தலில் தோற்கடிக்க நமக்கென்று வலிமை இல்லாத போது அதற்கான தந்திரவுத்தியாகத் திமுக கூட்டணிக்கு வாக்குக் கேட்க வேண்டும் என்கிறோம். திமுக ஆட்சி மீதான நம் குற்றாய்வைக் கிஞ்சிற்றும் கைவிடாமலேதான் இதைச் செய்யப் போகிறோம்.

”நடைமுறையில் காவிகளின் பிடிக்குள் ஒட்டுமொத்த இந்தியாவும் வந்து விட்டது. சட்டங்களை இயற்றக்கூடிய வல்லமை படைத்த ஒன்றிய அரசு நினைத்த சட்டங்களை நிறைவேற்றுகின்றது. மாநிலங்களைத் துண்டாடுகின்றது. மக்கள்பகைக் கொள்கையைப் புகுத்துகின்றது. தேசிய இனம் சார்ந்து, மொழி சார்ந்த பண்பாடுகளை சிதைக்கின்றது” என்கிறார் மருது.

சரிதான். இதிலிருந்து நாம் எடுக்க வேண்டிய முடிவு என்ன? பாசக ஆட்சி நீடிக்க விடக் கூடாது என்பதுதானே?

”அரசமைப்புச் சட்டப்படி ஒன்றிய அரசுக்குக் கட்டுப்பட்டது தான் மாநில அரசு. ஒன்றிய அரசே பாஜகவின் கட்டுப்பாட்டுக்குள் வந்த பிறகு, மாநில அரசுகள் அதற்குக் கட்டுப்பட்ட அரசாகத் தான் செயல்பட்டுக் கொண்டிருக்கின்றன. இந்தச் சூழலில் இந்த அதிகாரம் அற்ற அரசைக் காப்பதற்குத் தான் அணி சேர்க்கின்றனர் நமது புரட்சியாளர்கள்” என்கிறார் மருது.

அதிகாரம் அற்ற மாநில அரசுகள் என்பது வரலாற்று நோக்கில் சரி. ஆனால் அரசியல் நோக்கில் சரியன்று. மாகாண அல்லது மாநில அரசுகள் தன்னாட்சிக்காகப் போராடுவதும், அந்தத் தன்னாட்சியைக் குறுக்கவும் மறுக்கவும் நடுவண் அரசு மீண்டும் மீண்டும் முனைப்புக் காட்டுவதும் குடியேற்ற ஆளுகைக் காலம்தொட்டு குடியாட்சிய வரலாற்றில் தொடர்ந்து வருகின்ற நிகழ்வுதான். சட்டப்படி ஒன்றிய அரசு அப்படித்தான், மாநில அரசு இப்படித்தான், நாம் செய்வதற்கொன்றுமில்லை என்பது செயலின்மைக்கு வழிகோலும் இயக்க மறுப்பியல் பார்வையே ஆகும்.

ஒன்றிய அரசு முன்னெடுக்கும் மக்கள் பகைச் செயல்களை அட்டியின்றி மாநில அரசு நடைமுறைப்படுத்திக் கொண்டிருக்கிறது என்றால் நாம் அந்த மாநில அரசை அட்டியின்றி எதிர்த்துப் போராட என்ன தடை? உண்மையில் நாம் போராடியிருக்கிறோம், இப்போதும் போராடுகிறோம், இனியும் போராடுவோம். இந்தப் போராட்டங்களுக்கான குடியாட்சிய வெளியைக் காத்துக் கொள்ளவும் விரிவாக்கிக் கொள்ளவும் மக்கள் பகைக் கொள்கைகளின் மூல ஊற்றாக விளங்கும் பாசிச பாசக ஆட்சியை வீழ்த்த வேண்டும் என்கிறோம். பாசக கூட்டணியைத் தோற்கடிக்க வல்ல கட்சி அல்லது கூட்டணியை ஒரு கருவியாகக் கொண்டு இதைச் செய்ய முடியும் என்கிறோம்.

இந்திய அரசமைப்புச் சட்டம் என்பது தேசிய இனங்களின் அடிமை முறியாகத்தான் உள்ளது என்பது சரி. ’’ஒன்றிய அரசின் அனைத்து மக்கள் பகை நடவடிக்கைகளும் அரசமைப்புச் சட்டத்தின் படியே நிகழ்த்தப்படுகின்றன” என்பது ஓரளவுக்கே உண்மை. அரசமைப்புச் சட்டத்தைப் பற்றிக் கவலைப்படாமலும் சிலபல செயல்கள் நடைபெறுகின்றன என்பதுதான் இந்த ஆட்சியின் பாசிசத் தன்மையை உறுதி செய்கிறது. காட்டாக, வேளாண் சட்டங்கள் அரசமைப்புச் சட்டத்துக்கு உட்பட்டு இயற்றப்படவில்லை என்பதே உண்மை. காசுமீர அடாவடியும் (370 நீக்கம்) இந்திய அரசமைப்பை ஏய்த்துச் செய்யப்பட்டதே.

கட்டுத் திட்டம் (நிபந்தனை) என்று வாக்குறுதி பெற்று ஆதரிக்கலாமே? என்று மருது கேட்கிறார். ஏற்கப் பெற வாய்ப்பில்லாத எந்தக் கட்டுத் திட்டம் விதித்தாலும் அது செயலின்மைக்குச் சாக்குத் தேடுவதாகவே முடியும்.

வலிமையான மக்கள் இயக்கங்கள் கட்டுவது பற்றி அன்பர் மருது திரும்பத் திரும்பப் பேசுகிறார். எப்படிக் கட்டுவது? பாட்டாளி வருக்கத்தை ஆளும் நிலைக்கு உயர்த்த முடியும் என்கிறார். எப்படி உயர்த்துவது? ஆளும் வருக்கங்களில் ஏதேனும் ஒன்றைத் தேர்வு செய்வதல்ல, ஆளும் வருக்கத்தை மாற்றி அமைப்பதுதான் புரட்சி என்கிறார். சரி, நாம் பாசிச எதிர்ப்புக்கு, குறிப்பாகப் பாசிச பாசக ஆட்சியை விரட்டுவதற்கு வழிதேடுகிறோம். இதைப் புரட்சி என்று நாம் சொல்லிக் கொள்ளவில்லை. செய்தால் புரட்சி செய்வோம், வேறேதும் செய்திடோம் என்பது நம் நிலைப்பாடில்லை.

இலெனின் பார்வையில் குடியாட்சியத்தின் நிறைவாக்கமே குமுகியம் என்பதை அன்பர் மருது போன்ற குமுகியர்கள் மறக்க வேண்டாம். குடியாட்சியம் காக்கும் போராட்டத்தில் ஒரு முகன்மையான கட்டம்தான் 2024 பொதுத் தேர்தல். கனவுகள் மெய்ப்படச் செய்வதற்காக அல்ல, கனவு காணும் உரிமையை இழந்து விடக் கூடாது என்பதற்காக என்ன செய்யலாம் என்று ஆழ்ந்து சிந்திக்க வேண்டுகிறேன்.

[அன்பர் மருதுவுக்கான என் மறுமொழி முற்றும்.]