தோழர் தியாகு எழுதுகிறார் 41: சொல்லடிப்போம் வாங்க! (2)
(தோழர் தியாகு எழுதுகிறார் 40 தொடர்ச்சி)
சொல்லடிப்போம் வாங்க! (2)
நவ-தாராளவாதமா? புதுத் தாராளியமா? என்ற சிக்கல் குறித்து மேலும் சில பார்வைகள்:
தாராளியம் என்ற சொல்லாக்கம் குறித்து அன்பர் இலக்குவனார் திருவள்ளுவன் எழுதுகிறார்:
புது + ஆண்டு = புத்தாண்டு. ஏனெனில் புத் என்பது முன்னொட்டு. ஆனால் பொது + ஆண்டு பொத்தாண்டு என வராது.
தாராளம் என்பது தள் → தரு → தார்+ஆளம் = தாராளம். எனவே, இந்த இடத்தில் ஆளம் என்பதைப் பிரித்து ஆள் + இயம் என்பது இடராக உள்ளது. எனினும் தாளியம் என்னும் சொல்லோசைக்கிணங்க இருப்பதால் தாராளியம் என்பதைப் பயன்படுத்தி இயல்பாக்கலாம்.
நான் தொடர்கிறேன்: நவ-தாராளவாதம் (Neo-liberalism) என்று ஒன்றிருந்தால் பழைய தாராளவாதம் (old liberalism) என்றும் ஒன்று இருந்திருக்க வேண்டுமல்லவா? என் சொல்லாட்சியில் புதுத் தாராளியம் போல் பழந்தாராளியமும் இருக்க வேண்டுமே? Liberalism என்பதை இரு இடங்களிலும் ஒரே தமிழ்ச் சொல்லால்தான் குறிக்க வேண்டும். கால, வெளி மாற்றங்களை அச்சொல் தாங்கி நிற்க வேண்டும். பழந்தாராளியம் பற்றிப் பேசுமுன் இன்னொரு வகைத் தாராளியத்தையும் பார்த்து விடுவோம்:
சீனப் புரட்சியின் தலைவர் தோழர் மா சே-துங்கின் உரை ஒன்றின் தலைப்பு: COMBAT LIBERALISM. இது இயக்கம் அல்லது கட்சியின் அமைப்புக் கோட்பாடுகள் (ஊழியர் கொள்கை) பற்றியது. Old Liberalism. Neo-liberalism, மாவோ எதிர்க்கும் liberalism ஆகிய மூவகை liberalism-த்துக்கும் ஒரே தமிழ்ச் சொல்தான் ஆள வேண்டும்.
அடுத்து, liberalism ஓர் அகஞ்சார் கொள்கையாகவோ புறஞ்சார் முறைமை அல்லது அமைப்பாகவோ இருக்கலாம். இரு நிலைகளிலும் பொருந்தும்படியான தமிழ்ச் சொல் வேண்டும். தாராளவாதம் ஒரு கொள்கையைக் குறிப்பதாக உள்ளதே தவிர அமைப்பைக் குறிப்பதாக இல்லை. தாராளியம் இரண்டையும் குறிக்க வல்லது.
நவ-தாராளவாத ஏகாதிபத்தியம் என்று சொல்லும் போது அது அமைப்பு பற்றியதே தவிர கொள்கை பற்றியதன்று என்பது தெளிவாகிறது. ஆனால் தாராளவாதம் என்ற சொல் கொள்கையைக் குறிக்குமே தவிர அமைப்பைக் குறிக்காது. எதைக் குறித்தாலும் இரண்டுக்கும் பொதுவானது தாராளியம்தான்.
Liberalism அமைப்பாகவோ கொள்கையாகவோ இருக்கலாம். அது அமைப்பைக் குறிக்கும் இடங்கள், கொள்கையைக் குறிக்கும் இடங்கள், இரண்டையும் குறிக்கும் இடங்கள் ஆகிய எல்லா இடங்களுக்கும் பொருந்தும் சொல்லாகத் தாராளியம் உள்ளது. தாராளவாதம் அப்படி இல்லை. நவ-தாராளவாதம் என்று பாட்டாளி வருக்க சமரன் அணித் தோழர்கள் குறிப்பிடுவது புதுத் தாராளியத்தையே.
நவ-தாராளவாதம் என்றால் மக்களுக்கு விளங்கும், புதுத் தாராளியம் என்றால் விளங்காது என்று சொல்லவும் முடியாது. இரண்டுமே தாமாக விளங்க மாட்டா என்பதே உண்மை.
பிறமொழி கலந்த சொல்லைக் காட்டிலும் நல்ல தமிழ்ச் சொல் எளிதில் விளங்கும் என்று வேண்டுமானால் சொல்லலாம்.
புதுத் தாராளியம் என்ற ஏற்பாட்டைக் குற்றாய்வு செய்யும் போது பழந்தாராளியம் பற்றியும் தெரிந்து கொள்ள வேண்டும். தாராளியத்தின் வரலாற்றைத் திரும்பிப் பார்க்க வேண்டும். பார்ப்போம்.
+++++++++++++++++
தோழர் அருண் மாசிலாமணி எழுதுகின்றார்:
தாழி 23 மடலில் அறிவிலியர்கள் என்கிற சொல்லைப் பயன் படுத்தியுள்ளீர்கள். அச்சொல் அறிவியலாளர்கள் என்று இதுவரை நாம் பயன்படுத்தி வந்த சொல்லுக்கு மாற்றா?
அறிவிலி என்பது ignorant இல்லையா?
+++++++++++++++
அறிவிலியர்கள் என்பது பிழை. அறிவியலர்கள் என்பதே சரி. பிழையைச் சுட்டியமைக்கு நன்றி! தாழியில் பிழை வரவே கூடாது என்று முயல்கிறோம். மீறி வந்து விட்டால் சுட்டிக்காட்டி சரி செய்யுங்கள்.
Science என்பதை முன்பெல்லாம் விஞ்ஞானம் என்றுதான் சொல்லிக் கொண்டிருந்தோம். அறிவியல் என்பது இப்போது நிலைத்து விட்டது. விஞ்ஞான சோசலிசத்தை இப்போது அறிவியல் குமுகியம் என்கிறோம். (utopian socialism = ?) கலைச் சொற்கள் நிலைக்க வேண்டுமானால் பாடப் புத்தகத்தில் இடம் பெற வேண்டும். Scientist அறிவியலாளர் ஆகி விட்டார். அதன் சுருக்க வடிவம்தான் அறிவியலர்.
தாழி மடல் (23)இல் அணுவாய்தப் பேரிடர் குறித்து எழுதியிருந்தேன். அது குறித்து அன்பர் மைக்கேல் இயூபருட்டு எழுதுகிறார்:
அணுத்திறன் பொறுப்பற்ற தன்மைக்கான அரக்கனான புடினை முதலில் அழிக் கவேண்டும் என்கிறார் ஓர் எளிய மனிதர். அடுத்து, செஞ்சீனாத் தீயரவு(dragon).
சிலர் அமெரிக்காவைப் பழி சொல்வர். some may blame America. சப்பானின் தூண்டுதலே இரோசிமா, நாகசாகி மீதான குண்டு வீச்சுகள். காலநிலைத்தேவைப்பாடுகளே பெரும் வடுக்களாகும். (A common man says, Putin needs to destroyed, the monster for nuclear recklessness, next are red Chinese dragons, some may blame America. America never intentionally nuked anybody, the provoking by Japan was the bombing of Hiroshima and Nagasaki. More scarring are climate exigencies.)
அன்புக்குரிய இயூபருட்டு அவர்கள் உணர்வார்ந்து பலவும் கூறியிருப்பினும், இரோசிமா, நாகசாகி பேரழிவுக்கு அமெரிக்காவைக் குற்றம் சொல்ல முடியாது என்றும், சப்பானின் ஆத்திரமூட்டல்தான் காரணம் என்றும் கூறியிருப்பது (‘fact-check’) தரவுச் சரிபார்த்தலுக்கு உரியது. சரிபார்க்கலாம் அல்லவா?
(தொடரும்)
தோழர் தியாகு
தரவு : தாழி மடல்
Leave a Reply