தோழர் தியாகு எழுதுகிறார் 44: சொல்லடிப்போம் வாங்க! (5)
(தோழர்தியாகுஎழுதுகிறார் 43 தொடர்ச்சி)
சொல்லடிப்போம் வாங்க! (5)
தாழி அன்பர் பொன்முருகு கவின்முருகு கேட்கிறார்:
குற்றாய்வு என்ற சொல் விமர்சனம் என்பதற்கான தமிழ்ச் சொல்லா?
ஆமாங்க. விமர்சனம் என்பதில் இரு வகையுண்டு: (1) திறனாய்வு [review] (2) குற்றாய்வு [criticism]. Criticism and self-criticism = குற்றாய்வும் தற்குற்றாய்வும்.
இன்னுஞ் சிறந்த மாற்று இருப்பின் அன்பர்கள் எழுதலாம்.
நவ-தாராளவாதமா? புதுத் தாராளியமா? என்ற சிக்கலில் நவ-தாராளவாதம் ஒழிந்து, தாராளியமா? தாராளவியமா? தாராளிகமா? என்ற சிக்கல் மட்டும் தொடர்கிறது. அறிஞர்தம் கருத்துக்காகக் காத்துள்ளேன். இந்தச் சிக்கலை முடித்துக் கொண்டு தாராளியத்தின் வரலாற்றைப் பார்ப்போம்.
இதற்கிடையில் அடுத்த சிக்கலாக ‘ஏகாதிபத்தியம்’ (imperialism) என்ற சொல்லை எடுத்துக் கொள்வோம்.
ஏகாதிபத்தியம், முதலாளித்துவத்தின் உச்சக் கட்டம் [Imperialism, Highest Stage of Capitalism] என்பது மா இலெனின் எழுதிய புகழார்ந்த நூல். பொதுமை இயக்கத் தலைவர்களும் மொழிபெயர்ப்பாளர்களும் மட்டுமல்ல, அறிஞர் அண்ணாவும் தில்லி ஏகாதிபத்தியம் பற்றிப் பேசியுள்ளார். (அண்ணாவுக்குப் பின் யாரும் பேசினார்களா, தெரியாது.)
ஆனால் imperialism என்பதை முதலில் யார் ஏகாதிபத்தியம் என்று தமிழாக்கினார்களோ, தெரியவில்லை. இரண்டுக்கும் என்ன பொருத்தம் என்று கேட்க வேண்டியுள்ளது.
ஏகாதிபத்தியம் = ஏகம் + ஆதிபத்தியம். ஏகம் என்றால் ஒன்று. ஆதிபத்தியம் என்றால் அதிகாரம் அல்லது தலைமை. இது எப்படி imperialism ஆகும்?
ஏகாதிபத்தியம் தமிழ்ச் சொல் இல்லை என்பது மட்டுமல்ல. அதற்கு imperialism என்ற பொருளும் இல்லை.
Empire என்பதே அடிச்சொல். பேரரசு என்று பொருள். Imperialism வட மொழியில் சாம்ராச்சியம். மலையாளத்தில் சாம்ராச்சியவாதம் என்று நினைக்கிறேன். நல்ல தமிழில் பேரரசியம் எனலாம். ஆனால் பேரரசியத்தில் ஒரு நேர்நிறைத் தொனி இருப்பதால்
imperialism = வல்லரசியம்
என்பதில் போய் நிற்கிறோம். வல்லரசியம் ஒழிக! வல்லரசியம் எதிர்ப்போம்!
சொல்லாராய்ச்சியாக மட்டும் பார்க்க வேண்டியதில்லை. வரலாற்று நோக்கில் imperialism = வல்லரசியம் எவ்வாறு உருவானது? மா இலெனின் அவரது நூலில் இதனை எப்படி விளக்கினார் என்பதையும் பார்க்க வேண்டும். பார்ப்போம்.
தாழி மடல் மின்னஞ்சல் முகவரி கொடுத்து உள்பெட்டியில் பெற்றுப் படிக்கும் அன்பர்கள் குறைவாகவே உள்ளனர் என்ற மனக்குறை எனக்கும் தோழர்களுக்கும் உண்டு. ஆனால் நேரடியாக வரப்பெறாமலே தாழி மடல் படிப்பவர்கள் நிறைய உண்டென்பதை பெங்களூருவில் தெரிந்து கொண்டேன். மகிழ்ச்சி! அன்பர்கள் நேராக மின்னஞ்சலில் பெற்றுப் படிப்பது நம் உரையாடலுக்குக் கூடுதல் பொருத்தமாய் இருக்கும் என்பது என் நம்பிக்கை. தாழி மடல் செய்திகளை எல்லா வழிகளிலும் பரப்புங்கள். ஆர்வமுள்ளவர்களிடம் மின்னஞ்சல் முகவரிகள் திரட்டித் தோழர் மகிழனுக்கு அனுப்புங்கள். அறிவின் ஒளி படரத் துணை செய்யுங்கள்!
தாழி மடலுக்கு அன்பர்கள் எழுதுவது ஊக்கமளிக்கிறது. தாழி அன்பர் சத்தியசீலனிடமிருந்து சற்றே நீண்ட மடல் ஒன்று வந்துள்ளது. அதனை அப்படியே உங்கள் பார்வைக்கு வைக்கிறேன்.
அன்பர் சத்தியசீலன் மா. எழுதுகிறார்:
ஐயா, வணக்கம். தங்களின் மடல்கள் கருத்துக் கருவூலங்களாக- அழகுத் தமிழில் என்னைப் போன்ற பலர் அறியாத -ஆனால் அறியவேண்டிய அரிய தகவல்களுடன் வருகின்றன; மிக்க மகிழ்ச்சி!
தாழி-20, 21 மடல்கள் குறித்தான சில ஐயப்பாடுகளைத் தெளிவுப்படுத்திக் கொள்ளவே இம்மடலை தங்கள் பார்வைக்கு அனுப்புகிறேன்.
விடுதலைப் புலிகள் தலைவர் பிரபாகரன் அவர்களைப் பற்றியும் அவர்தம் இயக்கத்தைப் பற்றியும் என்னைப் போன்ற பலருக்கும் மேலதிகமான புரிதல் தேவைப்படும் எனக் கருதுகிறேன்; அதனைக் குறித்தே இக்கடிதம்.
எனது பள்ளிப் பருவத்திலிருந்து 2009 மாபெரும் இனவழிப்பு நடந்தேறிய வரை புலிகளின் மீதும் அதன் தலைவர் பிரபாகரன் மீதும் மாபெரும் நன்மதிப்பையும் மரியாதையையும் வைத்திருந்தேன்; ஆனால் அண்மைக் காலமாக தமிழ்நாட்டில் தமிழ்த் தேசியம் எனும் பெயரால் திராவிட இயக்கத்தையும் தந்தை பெரியாரையும் இழிவுபடுத்தியும் திமுக உள்ளிட்ட திராவிட இயக்கங்கள்- கட்சிகள் ஆகியவற்றின் தலைவர்களை அவர்தம் சாதிகளின் அடிப்படையில் ‘தமிழர்அல்லாதோர்’ என்றும் ‘திராவிடர்கள்’ என்போரை இனப் பகைவர் என்றும் சாதிய அடிப்படையிலான இனவாத அரசியலைக் கட்டமைக்கின்றனர்.
பெரியாரின் பகுத்தறிவு – பார்ப்பன எதிர்ப்புக் கருத்துகள் மீதும் திமுகவின் இந்தி எதிர்ப்பு – தமிழின அரசியல் மீதும் எனக்கு மிகுந்த பேரார்வம் உண்டு.
விடுதலைப் புலிகளின் அரசியலை தமிழகத்தில் என்னைப் போன்ற பலர் பரவலாக அறிய வந்தது திராவிட இயக்கமும் திமுகவும் ஈழ விடுதலை ஆதரவுப் பரப்புரையின் மூலம்தான் என்பதை அவர்கள் அறிவார்களா?
திமுக தலைவர் கலைஞர் வெளிப்படையாக வி.பு.க்களையும் பிரபாகரனையும் ஆதரிக்கவில்லை எனினும் அக்கட்சியினர் பலர் – அடிமட்டத் தொண்டர் வரை வெளிப்படையாக புலிகளை ஆதரித்து வந்தனர் என்பதை அனைவரும் அறிவோம். ஏனெனில் கலைஞர் புலிகளின் ஈழ விடுதலைப் போராட்டத்தை ஆதரித்தார்.
ஆனால் அதிமுகவின் நிலைப்பாடோ இதற்கு நேரெதிரானது; அதன் தலைவர் எம்ஞ்சியார் பிரபாகரனை ஆதரித்து வந்தார். ஆனால் அவரைத் தவிர அவரது கட்சியினர் வேறெவரும் புலிகளை ஆதரித்ததாக எந்தவொரு தகவலும் எனக்குத் தெரிந்து இல்லை.
திமுகவின் ஈழ நிலைப்பாட்டில் சற்று மாற்றம் ஏற்பட்டது என்பது இந்திய முன்னாள் பிரதமர் இராசீவு காந்தி படுகொலைக்குப் பின்னரே. அதுவும் அப்படுகொலையினால் அதிகம் பாதிக்கப்பட்டோர் திமுகவினரும் – திகவினருமே ஆவர் என்பதனாலும் அப்படுகொலையை நிகழ்த்தியது புலிகள்தான் என்ற அனைத்திந்தியப் பரப்புரை எடுபட்டதும்தான்.
நிலைமை இவ்வாறு இருக்கையில் இந்தத் தமிழினவாத அரசியல்வாதிகள் திமுக – திராவிட இயக்கங்களின் மீது அவதூறுகள் பரப்பிக் கொண்டுள்ளனர். இத்தனைக்கும் இவர்கள் எவரும் ஈழ விடுதலை அரசியலுக்காகக் களத்தில் நிற்கவோ சிறை செல்லவோ இல்லை.
பிறகு ஏன் இவர்களுக்குத் திராவிட இயக்கத்தின் மீது வன்மம்; இவர்களுக்குப் பின்னிற்பது யார் அல்லது எந்த ஆற்றல்! திராவிட இயக்கம் வீழ்ந்துபட்டால் அதனால் ஆதாயம் பெறுவது வலதுசாரி – இந்துத்துவா பாசிட்டுகளாகத்தான் இருக்க இயலும்.
இந்த இனவாதப் பிழைப்புவாதிகளுக்குப் பொருளாதார அடித்தளமாக இருப்பது மேலைநாடுகளில் வசிக்கும் ஈழ ஏதிலியரே!
அவர்கள் ஏன் இவர்களை ஆதரிக்க வேண்டும் – அரசியல் அறிவற்று ஆதரிக்கிறார்களா இல்லை தெரிந்தேதான் ஏதேனும் உள்நோக்கத்துடன் ஆதரிக்கிறார்களா!
அவர்களின் நோக்கம்தான் என்ன! இவர்கள் தமிழ்நாட்டின் ஆட்சி அதிகாரம் பெற்று ஈழத்தைப் பெற்றுத் தந்து விடுவார்கள் என்று நிசமாகவே நம்புகிறார்களா? – அந்தளவுக்கு அறிவற்றவர்களா?
இத்தகைய அரசியல் அறிவைத் தான் இவர்களின் தலைவரான பிரபாகரன் இவர்களுக்குப் போதித்திருக்கிறாரா?
அப்படி எனில் விடுதலைப் புலிகளின் அரசியல் அறிவின் மீதே எனக்கு அய்யம் எழுகிறது!
பெரியாருக்கு எதிராக பிரபாகரனை எதிர் நிறுத்துகின்றனர்; நான் தெரியாமல்தான் கேட்கிறேன் – தமிழ்நாட்டுத் தமிழர்கள் அதிகம் நன்மையடைந்தது பெரியாராலா பிரபாகரனாலா? பிரபாகரனா தமிழ்நாட்டில் தில்லிக்கு எதிராகவும் பார்ப்பனர்க்கு எதிராகவும் போராடினார்?
அது மட்டுமல்ல, பெரும்பாலான இடதுசாரிகள் (மகஇகவினர் உள்ளிட்ட) – அறிவுசீவிகள் பலரும் புலிகளைக் குற்றாய்வு செய்து வருகின்றனர்! ஆனால் தங்களைப் போன்ற ஒரு சில இடதுசாரி அரசியலர்களும் பெரியாரியலாளர்களும் (பெரியாருக்கு நிகராகவே) ஆதரிக்கின்றனர்!
இதுதான் என்னைப் போன்றோருக்கு கருத்து மயக்கத்தை
ஏற்படுத்துகிறது. ஆகவே விரைவாகத் தங்களிடமிருந்து இதுகுறித்து தெளிவான விளக்கம் பக்கச் சார்பற்று – எனக்குப் புரிதல் ஏற்படுத்தும் அளவில் வரும் என்ற நம்பிக்கையுடன் காத்திருக்கிறேன்;
நன்றி!
(தொடரும்)
தோழர் தியாகு
தரவு : தாழி மடல் 29
Leave a Reply