(தோழர் தியாகு எழுதுகிறார் 49 தொடர்ச்சி)

அன்பர்கள் எழுதுவதை வரவேற்கிறோம்

அன்பர் சத்தியசீலனின் முதல் மடல் குறித்து நலங்கிள்ளி எழுதுகிறார்:
“திமுகவின் ஈழ நிலைப்பாட்டில் சற்று மாற்றம் ஏற்பட்டது என்பது இந்திய முன்னாள் தலைமையமைச்சர் இராசீவு காந்தி படுகொலைக்குப் பின்னரே” என்று சத்தியசீலனே ஏற்றுக் கொள்கிறார். அப்படியானால் இராசீவு மரணத்துக்கும் திமுகவின் தமிழீழ நிலைப்பாடு மாறுவதற்கும் என்ன ஏரணப் பொருத்தம் இருக்க முடியும்? தமிழீழ நிலைப்பாட்டில் திமுகவின் கருத்து மாறி விட்டது என்ற பிறகு அந்த அமைப்பு மீது விமரிசனம் வரத்தான் செய்யும். அந்த விமரிசனங்களை அவதூறு என்று சத்தியசீலன் எப்படிப் பார்க்கிறார் எனத் தெரியவில்லை.”
%%%
அன்பர் சிபி எழுதுகிறார்:
தமிழினத்தின் மொழிப்போரில் முதலில் ஒரு நிலை, பின்பு ஒரு நிலை, எல்லைப் போராட்டத்தில் ஈவெராவின் பங்களிப்பே இல்லை, நீடாமங்கலம் தவிர வேறெந்த சாதிசார் சிக்கலிலும் போராடவில்லை. வெறும் பிராமண எதிர்ப்பு மட்டும் தமிழின தன்மான அடித்தளமாகவோ சமூகநீதிப் புத்தமைப்பின் உலைக்களமாகவோ விடுதலைச் சிந்தையின் விளைநிலமாகவோ ஆகிவிடுமா? ஈவெராவின் வரலாற்றுப் பங்களிப்பு எவ்விதத்திலும் தமிழர் இனத்தின் வரலாற்றுக்கு உதவவில்லை. தங்களின் மறுமொழிக்குப் பின் மேலும் பேசலாம் தோழர்.
%
பேசுவோம் அன்பர்களே!
இது வரையிலான தாழி மடல்களில் எதுவாவது யாருக்காவது கிடைக்காமல் இருந்தால் தெரிவியுங்கள். அனுப்பி வைக்கிறோம். கடந்த 31 நாளில் ஒரு நாள் கூட விடாமல் எழுதியுள்ளேன். தொடர்ந்தும் அவ்வாறே. மடல் செய்திகளில் ஒவ்வொன்றையும் ஒவ்வொருவரும் முழுமையாகப் படிக்க வேண்டும் என்ற எதிர்பார்ப்பு எனக்கில்லை. எதைப் படிப்பது, எதைப் படிக்காமல் விடுவது என்பது உங்கள் விருப்பத்தைப் பொறுத்தது. தாழி அன்பர்களில் பலதரப்பட்டவர்களும் இருப்பதால் எல்லாருக்கும் ஒரேவிதமாகப் பரிமாறுவதில் எனக்கு நம்பிக்கை இல்லை.

இரண்டாவதாக எனக்குள்ள அவசரத்தைப் புரிந்து கொள்ள வேண்டுகிறேன். இது எனக்கு விடியலோ நடுப்பகலோ அல்ல. இயற்கை இடமளித்தால் மாலை என்றுதான் கருதிக் கொள்கிறேன். அந்தி சாய்வதற்குள்… எண்ணவும் எழுதவுமான நலத்துடன் இருக்கும் போதே பகிரத் தேவையானவற்றை எல்லாம் இயன்ற வரைக்கும் பகிர்ந்து விட வேண்டும். நீங்கள் வேண்டுமானால் சிலவற்றைப் பிறகு படித்துக் கொள்ளலாம் என்று சேமித்துக் கொள்ளுங்கள். பயன்படக் கூடும். இயன்ற வரை சுருக்கமாகவே எழுதுகிறேன். நீண்டு எழுதுவது எனக்கும் சுமைதானே?
காலநிலை மாற்றம், அணுவாய்தப் பேரிடர், மாந்தவுரிமைகள், புதுத் தாராளியம், பார்ப்பனர்களுக்கான பாசக அரசின் இட ஒதுக்கீடு… இன்னும் பலவற்றைப் பற்றியும் தொடர்ந்து உரையாட வேண்டும். நான் மட்டும்தான் எழுத வேண்டும் என்பதில்லை. அன்பர்கள் இந்தத் தலைப்புகளிலோ பொருத்தமான வேறு தலைப்புகளிலோ எழுதுவதை தாழி விரும்பி வரவேற்கிறது. எழுதுங்க…
தியாகு, 08.12.2022, திருவள்ளுவராண்டு 2053, கார்த்திகை 22, வியாழன்
(தொடரும்)

தோழர் தியாகு

தரவு : தாழி மடல் 32