தோழர் தியாகு எழுதுகிறார் 58: தோழர் தியாகுவை விடாது உழைக்க விடுவோம்! – நலங்கிள்ளி
(தோழர் தியாகு எழுதுகிறார் 57 தொடர்ச்சி)
நலங்கிள்ளி எழுதுகிறார்:
தோழர் தியாகுவை விடாது உழைக்க விடுவோம்!
தோழர் தியாகு “தாழி மடல்” என்னும் இதழை மின்ம அஞ்சல் வழி கடந்த ஒரு மாதத்துக்கும் மேலாக நடத்தி வருகிறார்.
தியாகு எழுதுவது அனைத்தும் அறிவுச் சுரங்கத்தைச் சளைக்காமல் தேடும் பணியே!
அதனைத் “தாழி மடல்” மீண்டும் மெய்ப்பித்துள்ளது.
தாழி மடல் வாசகர்கள் தோழர் தியாகுவிடம் அவர் எழுதும் எழுத்துகள் குறித்து வினாத் தொடுக்கலாம். வினாக்களுக்கு அடுத்தடுத்த இதழ்களில் விடையிறுக்கப்படும்.
தாழி மடலைத் தொடர்ந்து படித்து வரும் எனக்கு இரு செய்திகள் என் மனத்தை உலுக்குகின்றன:
தாழி மடல் 10இல்
தோழர் கதிரவன் தியாகுவிடம் கேள்வி கேட்கிறார்:
தாழி என்றால் என்ன தோழர்?
தோழர் தியாகுவின் விடை:
தாழி என்று பெயரிட்டது என் முதுமையை மனத்திற்கொண்டு ! முதுமக்கள் தாழி தெரியும்தானே?
இது எளிதில் கடந்து செல்லும் செய்தியல்ல. ஆனால் ஏனோ அப்போது அவ்விடையை அவ்வளவு பெரிதாக எடுத்துக் கொள்ளவில்லை.
தாழி மடல் 21இல் தோழர் தியாகு எழுதுகிறார் :
“தாழி மடலில் இன்னும் நிறைய எழுத வேண்டும், உங்களோடு உரையாட வேண்டும் என்று ஆசைப்படுகிறேன். வேறு பல பணிகளும் குவிந்து கிடக்கின்றன. நிறைய நிறைய எழுதவும் படிக்கவும் வேண்டும். எனக்குத் தேவை போதிய நேரம் மட்டுமே. அறிவியல் தொழில்நுட்பத்தின் துணைகொண்டு குறைந்த நேரத்தில் நிறைய செய்ய முடியும் என்று நினைவிற்கொள்ளுங்கள். தாழியின் கோணத்தில் ஒவ்வொன்றையும் திட்டமிட உதவுங்கள்.
வெளியூர் என்றாலும் சென்னை என்றாலும் எந்த நிகழ்ச்சிக்கும் நேரில் அழைக்காமல் என் நேரத்தை மிச்சம் செய்து கொடுத்தால் மகிழ்வேன். வெளியே போய் வந்தால் பல வகையிலும் நேரம் விரயமாகிறது. நானும் களைப்புறுகிறேன். நேரில் பேசுவது என்றால் அரங்கத்தைக் காட்டிலும் தெருவில் நின்று பேசுவதே கூடுதலாகப் பயன்படும் என நம்புகிறேன். எனக்கும் அது விருப்பமான வேலை.”
இது என் மூளையில் நன்கு உறைத்தது.
இப்போது தோழர் தியாகு ஓர் அறிவிப்புச் செய்கிறார் :
“எனக்குள்ள அவசரத்தைப் புரிந்து கொள்ள வேண்டுகிறேன். இது எனக்கு விடியலோ நடுப்பகலோ அல்ல. இயற்கை இடமளித்தால் மாலை என்றுதான் கருதிக் கொள்கிறேன். அந்தி சாய்வதற்குள்… எண்ணவும் எழுதவுமான நலத்துடன் இருக்கும் போதே பகிரத் தேவையானவற்றை எல்லாம் இயன்ற வரைக்கும் பகிர்ந்து விட வேண்டும். நீங்கள் வேண்டுமானால் சிலவற்றைப் பிறகு படித்துக் கொள்ளலாம் என்று சேமித்துக் கொள்ளுங்கள். பயன்படக் கூடும். இயன்ற வரை சுருக்கமாகவே எழுதுகிறேன்.”
அப்படியானால் தியாகு என்ன காரணத்தினாலோ தமது முடிவு நெருங்குவதாக நினைக்கிறாரா? அவரது உடல் அத்தகைய சைகைகளை அவருக்கு வழங்குகிறதா?
என் கணிப்பில், ஏன், உறுதியான முடிவில், இன்றைய தமிழ்த் தேசிய அரசியல் ஆற்றல்களில் தியாகு ஆகச் சிறந்த அறிவுக் கருவூலம் எனத் துணிந்துரைப்பேன். சட்டம், அரசியல், வரலாறு, மார்க்குசியம், இலெனினியம் என எத்துறை எடுத்துக் கொண்டாலும் எவரையும் விஞ்சி நிற்பவர். எத்துறை சார்ந்த கேள்விகளுக்கும் அவரிடம் விடை அணியமாக இருக்கும். ஏனென்றால் அவர் அன்றாடம் கற்றுக் கொண்டே இருக்கிறார்.
அவர் என் எழுத்துக்கு ஆசான், தமிழாக்க அறிவுக்கு ஆசான். நான் அவரிடம் ஒரு முறை கூறினேன்: உங்களை எழுத்து, மொழிபெயர்ப்பு என எந்தத் துறையிலேனும் விஞ்சி நிற்க வேண்டும்.
அதற்கு அவர் கூறினார்: நீங்கள் அதற்கான முயற்சிகளைச் செய்து கொண்டிருப்பீர்கள் என்று தெரியும், ஆனால் நான் என் உழைப்பை நிறுத்தி விட மாட்டேன் அல்லவா? என விடையிறுத்தார்.
ஆம், அவர் என்றும் தனது உழைப்பை நிறுத்திக் கொள்ள மாட்டார், இறுதி முடிவை எட்டும் வரை.
இப்போது அந்த முடிவை அவரே எதிர்பார்த்து நிற்பதேன்?
உழைக்கும் போது, நாளையே இறப்பது போல் உழைக்க வேண்டும், திட்டமிடும் போது, நூறாண்டுக் காலம் வாழ்வது போல் திட்டமிட வேண்டும்.
தோழர் தியாகு! நாளை இறப்பது போல் நீங்கள் உழைப்பது சரி, நூறாண்டுக் காலம் வாழ்வது போல் திட்டமிடுங்கள். எதையும் இயற்கை முடிவு செய்து கொள்ளட்டும்.
எனவே என் நண்பர்களே, நான் உட்பட இனி எவரும் இன்றியமையாச் செய்தியேதும் இருந்தாலொழிய அவரிடம் பேசக் கூடாது. அவர் விருப்பத்துக்கேற்ப இருக்கட்டும். அவரைக் கூட்டங்களுக்கு அலைக்கழித்து, அவர் விருப்பப்படும் வேலைக்குத் தடை போடாதீர்கள்.
தோழர் தியாகுவின் “தாழி மடல்” உங்களுக்கு அன்றாடம் வந்து சேரும். நீங்கள் செய்ய வேண்டியது எல்லாம், உங்கள் மின்ம அஞ்சல் (மின்னஞ்சல்) முகவரியை 9025870613 என்ற எண்ணுக்கு அனுப்பி வையுங்கள்!
தமிழன்புடன், நலங்கிள்ளி
(தொடரும்)
தோழர் தியாகு
தரவு : தாழி மடல் 36
Leave a Reply