(ஒன்றிய அதிகாரிகளுக்குள்ள மொழி உணர்வு தமிழ்நாட்டு அதிகாரிகளுக்கும் வேண்டும்! தொடர்ச்சி)

தயிருக்குப் பொங்கிய முதல்வர் எல்லாவற்றிற்கும் பொங்க வேண்டும்!தமிழுக்குச்செய்ய வேண்டிய ஆயிரம் 24

ஆவின் தயிர் உறைகளில் தஃகி என இந்தியில் குறிக்க வேண்டும் எனச் சில நாள் முன்னர்  ஒன்றிய உணவுப் பாதுகாப்பு, தரக் கட்டுப்பாட்டு ஆணையம் (FSSAI) அறிவித்தது. முதல்வர் மு.க.தாலின் உடனடியாக எதிர்வினையாற்றித்  “தொலைந்துவிடுவீர்கள்” என எச்சரிக்கை விட்டுள்ளார். (வழக்கம்போல் முதலில் எதிர்ப்பு தெரிவித்தவர் மரு.இராமதாசுதான்.) முதல்வர் கண்டனம் தெரிவித்து இந்தித்திணிப்பு முயற்சிக்குத் தயிர் உறைகளில் முற்றுப்புள்ளி வைத்ததற்குப் பாராட்டுகள்.

ஆவின் தயிருக்கு மட்டும் பொங்கினால் போதுமா? எல்லா இடங்களிலும் பொங்க வேண்டாவா? எல்லா உணவகங்களிலும் தஃகி என்றுதான் பயன்படுத்தி நம்மையும் அவ்வாறே கூறச்செய்து விடுகிறார்கள்.

சோறுக்குப் பாத்து என்றும் பருப்பிற்குத் தால் என்றும் கிழங்கிற்கு ஆலு என்றும் மல்லிக்குத் தனியா என்றும் தேநீருக்குச் சாயா என்றும் ஏலக்காய்க்கு இலச்சி என்றும் இவ்வாறு பலவகையாக இந்திச்சொற்களைத்தான் பயன்படுத்துகின்றனர். நாமும் கண்டிக்காமல் அவ்வாறே பயன்படுத்துகிறோம்.

பாசிப்பயறு என்பதை மூங்தால் எனக் குறிப்பதுபோல் மளிகைப் பொருள்களிலும் இந்தியே வீற்றிருக்கிறது.

மருத்துவமனைகள், உறையுளகங்கள்(தங்கும் விடுதிகள்) ஆகியவற்றில் வரவேற்பில் நமசுகாரம்தான் சொல்ல வேண்டும் என்பதே ஒன்றிய ஆணை. தொலைபேசிகள், அலைபேசிகளில் முதல் தகவல்கள் இந்தியில்தான் சொல்லப்பட வேண்டும் என்பதும் ஒன்றிய ஆணையே. இவ்வாறு பொது மக்களுடன் தொடர்புடைய பணப்பொறியிலும் இந்திக்கே முதலிடம். தமிழ் இருந்தாலும் அது வேலை செய்யாது. கோவில்களில் கூட இரவிவார், சோமவார், மங்கள் வார், குருவார், சுக்கிரவார், சனி வார் என்றுதான் குறிப்பிடுகிறார்கள்.. பல இடங்களில் இந்தியே பயன்படுத்தப்பட வேண்டும் என்பது ஒன்றிய ஆணை. இவ்வாறு  எங்கும் இந்தி என்பது ஒன்றிய ஆணையாகச் செயற்படுத்தப்பட்டு வருகிறது. மாநில அரசோ ஆங்கிலமே நம் தாய்மொழி என எண்ணி “எங்கும் ஆங்கிலமே! என்றும் ஆங்கிலமே! ” எனச் செயற்பட்டு வருகிறது.

‘இந்தித் திணிப்பு கண்டறியும் குழு’ ஒன்றை முதல்வர் அமைக்க வேண்டும்.  உணவுப்பொருள்கள், மளிகைப் பொருள்கள், வரவேற்பு உரையாடல்கள், அலைபேசி-தொலைபேசிப் பயன்பாடுகள் என எல்லா இடங்களிலும் இந்தி எவ்வாறெல்லாம் புகுத்தப்படுகின்றது என்பதைக் கண்டறிய வேண்டும். அங்கெல்லாம் தமிழ் இடம் பெற ஆவன செய்ய வேண்டும்.

ஆவின் தயிருக்குப் பொங்கினார் அல்லவா முதல்வர். நாம் முன்பே குறிப்பிட்டிருந்தது போல் ஆவின் பால் வகைகள் ஆங்கிலத்தில்தான். மிகப்பெருங்கொடுமை, கெள மில்க்(கு) எனக் குறிப்பிட்டு விற்பது. என்ன செய்வது? ஆங்கிலேயரின் தத்துப்பிள்ளைகளுக்குப் பசும் பால் எப்படித் தெரியும்? எனவேதான் ஆங்கிலத்தையே பயன்படுத்துகின்றனர்.

யோகர்ட்(டு) என்பதை இந்தி எனக் கருதிப் பயன்படுத்தி வருகின்றனர். இன் தயிரைக் குறிக்கும் துருக்கிச் சொல் இது. ஆவின் பாலகத்தில் உற்பத்தியாகும் – விற்பனையாகும் – அனைத்துப் பொருள்களையும் தமிழில் குறிக்கலாம் அல்லவா? ஆங்கிலேய அடிமைகளுக்கு அந்த எண்ணம் வராது என்பதுதான் வருத்தமான உண்மை.

“இந்தி பரவலாகப் பேசக்கூடிய மொழி என்பதால் தயிரில் இந்தியைச் சேர்க்கக் கூறியிருப்பார்கள்” என ஒருவர் கூறியுள்ளார். இத்தகைய உணர்வாளர்களால் தேர்ந்தெடுக்கப்படும் மக்கள் சார்பாளர்களும் இத்தகைய உணர்வுடன்தானே இருப்பார்கள். அரசும் அரசு அலுவலகங்களில் தமிழ் பயன்படுத்தப்பட்டால் போதும் எனக் கருதுகிறார்கள். (அதுவும் ஓரளவுதான் செயற்படுத்தப்பட்டு வருகிறது.) எனவே, தன்னாட்சி நிறுவனங்கள், தனியார் கடைகள், தனியா் நிறுவனங்கள், தமிழ்நாட்டிலுள்ள பன்னாட்டு  நிறுவனங்கள், ஒன்றிய அலுவலகங்கள், பிற மாநில அவலகங்கள் ஆகியவற்றில் தமிழுக்குச் சிறிதும் இடமில்லை என்பது பற்றி ஆட்சியாளர்கள் கவலைப்படுவதில்லை. தமிழ்நாட்டில் ல்லா இடங்களிலும் தமிழ் மட்டுமே பயன்படுமொழியாக இருக்க வேண்டும் என்பதை அரசு நடைமுறைப்படுத்த வேண்டும்.

தயிரை இந்தியில் குறிக்க வேண்டும் என்றதும் பொங்கி எழுந்து கண்டனம் தெரிவித்து அதைத் திரும்பப் பெற வைத்த முதல்வர், தன் அதிகாரத்திற்கு உட்பட்ட இடங்களில் ஆங்கிலத்தை அகற்றவும் பொங்கி எழ வேண்டும்.

அக நாட்டில் அன்னைத்தமிழ் மொழி! புறநாட்டுடன் ஆங்கில மொழி!” எனப் பின்பற்றினால் தமிழ்நாட்டில் தமிழ் எல்லா இடங்களிலும் இருக்கும்.

எங்கும் எதிலுமே

   தமிழமுதூட்டு!

இங்கிலீசை இந்தியை

   இடமிலா தோட்டு!

புரட்சிக்கவிஞர் பாரதிதாசன்

இலக்குவனார் திருவள்ளுவன்