தோழர் தியாகு எழுதுகிறார் 59
(தோழர் தியாகு எழுதுகிறார் 58 தொடர்ச்சி)
தருக்க முறையும் கொள்கை அறிவிப்பும்
அன்பர் சிபி பெரியார்-பிரபாகரன் தொடர்பாக அன்பர் சத்தியசீலன் தொடங்கி வைத்த உரையாடலைத் தொடரும் வகையில் பின்னவரின் மடலிலிருந்து ஒரு சொல்லியத்தைத் திரையடி எடுத்து அனுப்பியுள்ளார். இதுதான் அது:
___புலிகள் எவ்விடத்திலும் திராவிட இயக்கத்தைச் சாடியதாக நான் குறிப்பிடவில்லை – மாறாக அவர்களின் புகழ் பாடிக் கொண்டே அவர்கள் செய்யாத செயலை இவர்கள் ஏன் செய்ய வேண்டும்?___
“இனவாதிகள்” பெரியாரையும் திராவிட இயக்கத்தையும் சாடுவதாகச் சொல்லி, அதற்கான பழியைப் புலிகள் மீதும் பிரபாகரன் மீதும் சத்தியசீலன் சுமத்துகின்றார் என்ற கருத்தின் அடிப்படையில் இவர்கள் செய்வதற்கு அவர்கள் எப்படிப் பொறுப்பாவார்கள்? என்று சத்தியசீலனை நான் கேட்டிருந்தேன். இதற்கு, நான் அப்படிச் சொல்லவில்லை என்று தன்னிலை விளக்கம் தந்த சத்தியசீலன் புலிகளைப் போற்றுவோர் திராவிட இயக்கத்தைத் தூற்றுவதை ஒரு முரண்பாடாகச் சுட்டிக்காட்டுகின்றார். நான் கூட வைகோவைத் தெலுங்கர் என்று வசவு கூறும் தம்பிகளை மறுக்க “இதைத் தலைவர் பிரபாகரன் உங்களுக்குச் சொன்னாரா?” என்று கேட்டதுண்டு. இது ஒரு தருக்க முறை. ஒருவரின் வாதத்திலுள்ள முரண்பாட்டை எடுத்துக்காட்டி அவரின் கருத்தை மறுக்கும் முறை. இதன் பொருள் பிராபாகரன் சொன்னதைதான் நாமும் சொல்ல வேண்டும் என்பதில்லை. “ஆமாம், பிரபாகரன் சொன்னதைத்தான் நாங்களும் சொல்ல வேண்டும், அவர் செய்தைத்தான் நாங்களும் செய்ய வேண்டும் என்ற தேவையில்லை” என்று விடையிறுத்து விட்டால் முடிந்தது. அப்படிச் சொல்லும் வரை, பிரபாகரன் சொல்லாததை நீங்கள் சொல்கிறீர்களே? என்ற கேள்வி தொடர்ந்து கொண்டேதான் இருக்கும்.
சத்தியசீலனின் கருத்தை ஒரு தருக்கத்தின் பகுதியாக இப்படித்தான் நான் புரிந்து கொள்கிறேன். “பிரபாகரன் குறை சொல்லவில்லை, எனவே நீங்களும் குறை சொல்லக் கூடாது” என்ற கொள்கை அறிவிப்பாக நான் புரிந்து கொள்ளவில்லை. சத்தியசீலனின் விளக்கத்தை எதிர்பார்ப்போம்.
எப்படியிருப்பினும் நீங்கள் புரிந்து கொண்ட விதத்தில் புரிந்து கொள்வதற்கும் சத்தியசீலனின் அந்த ஒரு சொல்லியம் இடமளிப்பதை நான் மறுக்கவில்லை. உங்கள் முயற்சியை மதிக்கிறேன். தாழி உரையாடலுக்குச் செழுமை சேர்த்துள்ளீர்கள், மெச்சுகிறேன். தொடர்ந்து எழுதுங்கள்.
“ஈழத்தில் பிரபாகரன் ஈவெராவையோ திராவிடத்தையோ குற்றாய்வு செய்யவில்லை என்பதால் இங்கு யாரும் அதனைச் செய்யக் கூடாது என்பது ஏற்புடையதல்ல” (தாழி மடல் 33) என்ற உங்கள் கருத்தை மீண்டும் வழிமொழிகிறேன். இதே தெளிவும் துணிவும் அனைவருக்கும் வரவேண்டும் என விரும்புகிறேன்.
சிபி! அரசியல் விவாதங்களை அக்கறையோடு நீங்கள் அணுகும் முறை நம் இளைஞர்கள் கற்க வேண்டிய ஒன்று. சரி, நீங்கள் இளைஞர்தானே?
(தொடரும்)
தோழர் தியாகு
தரவு : தாழி மடல் 36
Leave a Reply