(தோழர் தியாகு எழுதுகிறார் 64 தொடர்ச்சி)

தோழர் தியாகு எழுதுகிறார் 65

இனிய அன்பர்களே!

தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர்கள் கலைஞர்கள் சங்கத்தின் தலைவர் தோழர் ச. தமிழ்ச்செல்வன் அவர்களுக்கு நேற்று திறந்த மடல் எழுதினேன்.

அவர் உடனே விடையனுப்பினார்:

உயர்சாதியினருக்கான 10 விழுக்காட்டு இட ஒதுக்கீட்டை அண்ணல் அம்பேத்துகருக்குச் செய்த துரோகம் என்றுதான் நான் கருதுகிறேன். நான் சார்ந்திருக்கும் தமு எகச இது குறித்து விரிவான அறிக்கை அப்போதே வெளியிட்டிருக்கிறோம் தோழரே. தங்கள் மடலுக்கு நன்றி.

அவருக்கு நான் நன்றியும் பாராட்டும் தெரிவித்தேன். தமுஎகச அறிக்கையை அனுப்பும் படியும் கேட்டுக் கொண்டேன். “தேடி அனுப்புகிறேன் தோழர்” என்று விடையிறுத்துள்ளார்.  

தோழர் ச. தமிழ்ச்செல்வனை மனமுவந்து பாராட்டுகிறேன். அவரது குடியாட்சியப் பண்புக்காகவும், பொநபி (இ டபிள்யூ எசு) இட ஒதுக்கீடு பற்றிய உறுதியான நிலைப்பாட்டுக்காகவும் பாராட்டுகிறேன். தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர்கள் கலைஞர்கள் சங்கத்தையும் பாராட்டுகிறேன்.

தாழி அன்பர்களே! நீங்களும் தோழர் தமிழ்ச்செல்வனையும் தமுஎகச அமைப்பையும் பாராட்டுவீர்கள் என நம்புகிறேன். குடியாட்சியப் பண்பாடு வளர நாமும் பாடாற்றுவோம்!   

திருச்சிராப்பள்ளியிலிருந்து வழக்குரைஞர் தோழர் கென்னடி எழுதுகிறார்:

அன்புள்ள தோழருக்கு வணக்கம் தங்களது மடல் தொடர்ந்து சீரான முன்வைப்புகளோடு அன்றாட நிகழ்வுகளை அரசியல் முக்கியமான செய்திகளையும் பார்ப்பதற்கும் அறிந்து கொள்வதற்கும் உதவுகிறது இந்த முன்முயற்சி தொடர வேண்டும் அதற்கான எனது வாழ்த்துக்கள். நன்றி!

சிறப்பு முகாம் ஏதிலியர்க்காக நடத்தி வரும் சட்டப் போராட்டம் பற்றி நீங்களும் எழுதுங்க கென்னடி!  

அன்பர் மணி வில்லன் (பெயரே இதுதானா?) எழுதுகிறார்:

வணக்கம். தாழி மடல் தொடர்ந்து கிடைக்கிறது.  நன்றி.

அன்பர் மா. சத்தியசீலன் எழுதுகிறார்:

வணக்கம். தங்களின் ‘ஈழம் மெய்ப்படும்‘ நூலிற்காகக் காத்திருக்கிறேன்!

அத்துடன் ‘மூலமுதல்’ நூலின் தற்போதைய நிலை – எந்தக் கட்டத்தில் உள்ளது என்பதை அறியவும் ஆவலாய் உள்ளேன்.

தங்களின் முந்தைய ‘ மூலதனம்‘ நூலின் அனைத்துப் பாகங்களும் என்னிடம் உள்ளன; ஆனால் அவற்றைப் படித்துப் புரிந்து கொள்வதில் எனக்குச் சிரமமாக உள்ளது. அந்நூலின் கருத்துகளை எளிமைப்படுத்தி என்னைப் போன்றோர் புரிந்து கொள்ளும் வகையில் சிறுசிறு கட்டுரைகளாக தங்களால் வெளியிட இயலுமா! அறிய விழைகிறேன், நன்றி; வணக்கம்!

1/ ஈழம் மெய்ப்படும் மின்படி இன்றே உங்களுக்கு அனுப்பப்படும்.

2/ மூலமுதல் தூய தமிழாக்கப் பணி பாதியில் நிற்கிறது. தனித்து நான் மட்டுமாக அதைச் செய்வது கடினம். பெருந்தொற்றுக் காலத்தில் யாரையும் உடன் வைத்துக் கொண்டு செய்ய இயலவில்லை. நானும் பொள்ளாச்சி போய் விட்டேன். பெருந்தொற்றுக் காலம் பெரும்பாலும் முடிந்த பின் தோழர் கார்த்திகேயபிரபுவின் உதவி கிடைத்தது. பொதுமையறிக்கை (பொ க கொ அ) தூய தமிழாக்கம் முடித்து விட்டு மூலமுதலை எடுக்கத் திட்டமிட்டு, அந்தப் பணியை அவர் துணையோடு தொடங்கினேன். சென்னை வந்த பிறகும் கொஞ்சம் செய்தோம். அதுவும் பாதியில் நிற்கிறது. விரைவில் அதை முடித்து, மூலமுதலுக்கும் திரும்ப முடியும் என்று எதிர்பார்க்கிறேன். தாழியில் அவ்வப்போது நிலவரம் பகிர்வேன்.

3/மூலமுதலில் முதல் அதிகாரம் மட்டும்தான் சற்றே கடினம். முயன்று படித்து அதைக் கடந்து விட்டால் பிறகு எல்லாம் எளிது. நான் ஏற்கெனவே மூலமுதல் வகுப்புகள் நடத்தியுள்ளேன். தமிழ்த் தேசம் ஏட்டில் “என்ன?” என்ற தலைப்பில் ஒரு தொடரே எழுதினேன். உங்கள் குறிப்பான ஐயப்பாடுகள் (அய்யப்பாடுகள் என்று எழுதுவீர்கள் அல்லவா?) இருப்பின் எழுதுங்கள். தெரிந்த வரை ஐயந்தெளிய உதவுவேன். இல்லையேல் பொறுங்கள், மூலமுதல் வரட்டும், அதற்கொரு ‘நண்பன்’ (கோனார் நோட்சு போல?) போட்டு விடுவோம்.

அன்பர் சிபி எழுதுகிறார்:

தோழர் சத்தியசீலனுக்கு! நலமா தோழர்? தங்களின் கடிதத்தைப் படித்தேன். மாற்றுக் கருத்தைக் கூற பிரபாகரனைத் துணைக்கு அழைக்க வேண்டா என்பதில் எவ்வித ஏரணமும் இல்லை. ஏனென்றால் சீமான் பிரபாகரனைத் துணைக்கு வைத்துக் கொண்டு எங்கேயும் ஈ.வெ. இரா. மீதோ திராவிடக் கருத்துகள் மீதோ இடித்தாய்வு வைக்கவில்லை. 2009 இனப் படுகொலையின் போது ஆண்ட கட்சியின் மீதே தொடக்கத்தில் அவர் இடித்தாய்வு வைக்கிறார். பின் அக்கட்சியின் அதன் திராவிடம் என்ற கருத்தியல் மேல் திறனாய்வு செய்து அது தமிழர்களுக்கெதிரான பிறமொழியாளர்களின் ஆதிக்கம் என்று முடிவு செய்து ஈவெஇராவை விமர்சிக்கிறார். அவரின் விமர்சனம் தமிழினப் படுகொலையின் மீது திமுக செயல்கள் தொடங்கி திராவிடமென்ற கருத்தியலை இடித்தாய்வு செய்வதாக உள்ளது. இதிலெதிலும் அவர் பிரபாகரனைத் துணைக்கு அழைக்கவும் இல்லை; காட்டவும் இல்லை. பிரபாகரன் மீது ஆதரவு தெரிவிப்பவர் ஈவெஇராவையோ திராவிடத்தையோ இடித்தாய்ந்தால் பிரபாகரனை ஐயுறுவோம் என்பது சிறுபிள்ளைத்தனம். சீமான் பேசும் திராவிட எதிர்ப்பு என்பது பாதிக்கப்பட்டவனின் வன்முறை போன்றது, அது எதிர்வினையே தவிர வினை இல்லை. அதற்கெதிராக பிரபாகரனை ஐயுறுவது அதிகாரத்தின் வன்முறைக்கீடானது, அது வினை ஆகும். இனப்படுகொலையில் பங்கு என்று வினையால் வந்த எதிர்வினையே சீமானின் இடித்தாய்வு.. நன்றி. சிபி. 

சிபி, சற்றுப் பொறுங்கள், நான் உங்களுக்குச் சொல்ல வேண்டிய விளக்கங்கள் மீதமுள்ளன. இதற்கிடையில் எனது “ஈழம் மெய்ப்படும்” மின்படியை உங்களுக்கும் அனுப்புகிறேன் (பிடிஎஃப்-க்கு நீங்களே தமிழ் சொல்லுங்களேன்.) பெரியார் குறித்தும் நாம் விவாதிக்க வேண்டியுள்ளது என்பதை நான் மறக்கவில்லை. முதலில் பெரியார்-எதிர்-பிராபகரன் என்ற பூசலுக்கப்பால், அதை விட்டு வெளியே வந்து, ஈழப் போரில் திமுக பங்கு பற்றி விருப்பு வெறுப்பின்றி உரையாட ஒரு முதிர்ச்சி தேவைப்படுகிறது, நீங்களும் சத்தியசீலனும் இரு கருத்தியல் நிலைப்பாடுகளின் சார்பாளர்கள் (பிரதிநிதிகள்) என்ற முறையில் நான் எழுதுவது உங்கள் இருவருக்காக மட்டுமல்ல. உங்களைப் போலவே ஆதரவு – எதிர்ப்பு நிலைப்பாடுகள் எடுத்துள்ள எத்தனையோ திராவிட, தமிழ்த் தேசிய  ஆர்வலர்களுக்காகவும்தான். தொடர்ந்து உரையாடுவோம்.

++++++++++++++++++++++++++++++++++++++++++++++

உயிர் பறித்த பீமா கொரேகான் பொய் வழக்கு

பீகொ-16: அமெரிக்காவிலுள்ள இணையத் தடயவியல் நிறுவனம் ஒன்று பீமா கொரேகான் வழக்கில் அருள்தந்தை ஃச்டான் சுவாமி இணைக்கப்பட்டது பற்றிப் புதிய உண்மைகளைக் கண்டறிந்துள்ளது. பொய் வழக்கில் அவரைச் சிக்க வைப்பதற்கான ஆவணச் சான்றுகள் 2017க்கும் 2019க்கும் இடையில் அவரது கணிணியில் ‘ஊன்றப்பட்டன’ என்று இந்நிறுவனத்தின் ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது. இதனை எடுத்துக்காட்டி மா.பொ.க.(சிபிஎம்) கட்சியின் அரசியல் தலைமைக் குழு மோதி ஆட்சியில் தேசியப் புலனாய்வு முகமையின் செயல்பாடுகளைக் கண்டித்துள்ளது. பிணை மறுக்கப்பட்டு, சிறும வசதிகள் மறுக்கப்பட்டு, சிறைக் காவலில் அவர் உயிரிழந்தார், இது படுகொலையே என்று மா.பொ.க.சிபிஎம் அறிக்கை சொல்கிறது.    

+++++++++++++++++++++++++++++++++++++++++++++

(தொடரும்)

தோழர் தியாகு

தரவு : தாழி மடல் 39