(தோழர் தியாகு எழுதுகிறார் 65 தொடர்ச்சி)

தோழர் மகிழன் வேண்டுகோள்: கைகொடுத்துக் காலத்தைத் தூக்கி விடுவோம், வாருங்கள்!

இனிய அன்பர்களே! வணக்கம்.

இது தாழி மடல் – 40. நமக்கு ஒரு நாளிதழ் வேண்டும் என்று சொல்லி அதன் முன்னோடியாகத்தான் தோழர் தியாகு இம்முயற்சியைத் தொடங்கினார். அவரது உழைப்பாலும் உங்களின் ஒத்துழைப்பாலும் தாழி தொடர்ந்து மலர்கிறது. எவ்வளவு இடர்ப்படினும் நாள் தவறாமல் தாழி மடல் உங்கள் கைக்கு வரும் என்பதில் ஐயம் வேண்டா. தாழி மடலின் முகன்மை எழுத்துகளை அச்சிலேற்றி நூல்வடிவாக்க வேண்டும் என்ற முன்மொழிவும் உள்ளது.

இதே போல்தான் ஈராண்டுக்கு மேலாக “தமிழ்நாடு இனி” இணைய வழி அரசியல் வகுப்பு தொடர்ந்து அறிவன் தோறும் நடந்து வருகிறது. இது வரை 108 வகுப்புகள் முடிந்துள்ளன. வகுப்புகளைக் காணொலிகளாக்கி தமிழ்த் தேசம் வலையொளியில் தொடர்ந்து தரவேற்றி வருகிறோம். இது போதாது. வகுப்புப் பதிவுகளை நூல்வடிவாக்கி ஆவணப்படுத்தினால்தான் இக்காலத்துக்கும் எதிர்காலத்துக்கும் நிலைப்பயன் அடைய முடியும் என்பதை உணர்ந்துள்ளோம். வகுப்புக் காணொலிகளை வரிவடிவாக்கும் பெரும்பணியைத் தமிழ்த் தேசம் நூலகத்தில் தோழர் தியாகுவின் மேற்பார்வையில் தோழர் கதிர் இரவு பகலாகச் செய்து கொண்டிருக்கிறார். அலுவலகப் பணிகள் என் பொறுப்பில்!

தமிழ்த் தேசம் நூலகம், இளைஞர் அரண், பொதுமை செய் படிப்பு வட்டம், பல்வேறு கூட்டியக்கங்கள் என்று எல்லாத் தோழர்களுக்கும் வேலை உள்ளது. இயக்கப் பணியில் ஓய்வும் இல்லை. சோர்வும் இல்லை. அறிவும் உழைப்பும் ஈகமும்தான் இயக்கத்துக்கு அடிப்படைகள் என்று கற்றுக் கொண்டுள்ளோம். 

அயர்ந்தால் நாடு பறிபோய் விடும் அச்சுறுத்தலை நன்குணர்ந்த நண்பர்களின் தன்னளிப்பு மிக்க உதவியையும் நன்றியுடன் குறிப்பிட விரும்புகிறேன்.

அன்பர்களே!

(நம் பணிகளுக்கெல்லாம் உயிர்நாடியான நூல் வெளியீட்டு முயற்சியில் சுணக்கம் இருப்பதை உணர்ந்துள்ளோம். தோழர் சமந்தா எழுதிய “சூழலியல் அடிப்படைகள்” எழுதப்பட்டுப் பக்க வடிவமைப்பும் செய்யப்பட்டு நெடுங்காலமாக அச்சுக்குக் காத்துள்ளது. தோழர் தியாகு எழுதிய “ஈழம் மெய்ப்படும்” “தேசியத்தின் உரையாடல்” இன்னும் பல நூல்களும் அதே நிலையில்தான் உள்ளன. மார்க்குசியம் அனா ஆவன்னா, மார்க்குசின் தூரிகை உள்ளிட்ட பழைய நூல்களும் மீளச்சு செய்யப்பட வேண்டும்.

இந்த நிலையில்தான் சென்னைப் புத்தகக் கண்காட்சி வருகிற சனவரி 6ஆம் நாள் தொடங்குகிறது என்ற செய்தி வந்துள்ளது. அதற்குள்ளாகச் சில நூல்களாவது அணியமானால் நன்று. இந்தப் பணிகளில் உங்கள் துணை நாடுகின்றோம். கேட்டெழுதுதல், தட்டச்சிடல், மெய்ப்பு திருத்தம் இந்தப் பணிகளில் என்ன முடியுமோ செய்யுங்கள்.

நூல்வெளியீட்டுக் குழுவில் இடம் பெற்று எங்களுக்கு வழிகாட்ட முன்வந்தாலும் மகிழ்வோம். ) எல்லாவற்றுக்கும் பொருளுதவியும் வேண்டும். பொருள் இல்லாதவர்க்கு இவ்வுலகம் இல்லை. புத்தக உலகமும் இல்லை. உதவுங்கள்! தமிழ்த் தேசிய விடுதலை இயக்கத்தின் சார்பில் நாங்கள் முன்னெடுத்துள்ள இந்த முயற்சிகள் நம் மக்களின் எதிர்கால விடியலுக்கு அடித்தளமிடும் என்று உறுதியாக நம்புகிறோம். அந்த அடித்தளத்தில் ஆளுக்கொரு கல்லாக இருந்தால் அந்தப் பெருமை போதும் என மனங்கொள்கிறோம். கைகொடுத்துக் காலத்தைத் தூக்கி விடுவோம், வாருங்கள்!

நாளை ஆட்சியைப் பிடிப்போம், புரட்சியை வென்று காட்டுவோம் என்று உங்களிடம் வெற்று வாக்குறுதிகள் கொடுக்க விரும்பவில்லை. ஆனால் தமிழ்ச் சமூகத்தின் வருங்காலத்திற்கென ஓர் அடிப்படையை கருத்தளவிலும் அமைப்பளவிலும் கட்டியெழுப்ப உழைப்போம் என உறுதி அளிக்கிறோம். ஆகவே நண்பர்களே, உங்கள் ஆதரவை நாடி நிற்கிறோம்! ஒல்லும் வகையெல்லாம் உதவிடுங்கள்! காலத்தால் செய்த நன்றி…..

 மகிழன் [9025870613] 

அமைப்புச் செயலாளர்,

தமிழ்த் தேசிய விடுதலை இயக்கம்                    

பொருளுதவிக்கான சேமிப்புக் கணக்கு:

கணக்குடையவர் பெயர் : மைக்கேல் இராசு / Micheal Raj

கணக்கு எண் / Account Number : 0933101041559

இ.நி.அ.குறியீடு / IFSC code: CNRB0000933

கனவரா வங்கி , சைதாப்பேட்டை /  CANARA BANK, SAIDAPETகூகுள் செலுத்தி எண் / Gpay number: 9025870613

 (தொடரும்)

தோழர் தியாகு

தரவு : தாழி மடல் 40