தோழர் தியாகு எழுதுகிறார் 11: காலநிலை மாற்றம் கற்பிதமன்று
காலநிலை மாற்றம் கற்பிதமன்று
“மெய்ம்மைகளிலிருந்து உண்மைக்கு” என்பார் மா இலெனின். தரவுகளிலிருந்து முடிவுக்கு என்றும் இதைப் புரிந்து கொள்ளலாம். தரவுகள் இல்லாமல் சில முன்-முடிவுகளை மட்டும் வைத்துக் கொண்டு பேசுவதால் பயனில்லை. காலநிலை மாற்றம் தொடர்பான தரவுகள் இல்லாமல் இந்தச் சிக்கலான போராட்டத்தை முன்னெடுக்க இயலாது.
எகித்து நாட்டில் இப்போது காலநிலை மாற்றம் தொடர்பான உயர்நிலை மாநாடு நடந்து வருகிறது. இந்த மாநாட்டை ஒட்டி முதன்மையான சில காலநிலைத் தரவுகள் வெளிவந்துள்ளன. நேற்றைய இந்து (ஆங்கிலம்) நாளேட்டில் தரவு அணி இவற்றை வெளியிட்டுள்ளது:
முதன்மையான பசுங்குடில் வாயுவாகிய கரியீருயிரகை(Carbon dioxide) உமிழ்வு ஆண்டுக்கு ஆண்டு உயர்ந்து வருகிறது. அது தணிவதாகவோ கட்டுப்படுவதாகவோ அறிகுறியே இல்லை. இந்த வகையில் அமெரிக்காவும் சீனமும்தான் முதற்பெரும் குற்றவாளிகள். மாசுமன்னர்கள்! இந்தியாவின் பங்கும் உயர்ந்து கொண்டுதான் இருக்கிறது. ஐரோப்பிய ஒன்றியத்தின் பங்கு குறைந்து வருவது ஆறுதலான செய்தி.
காற்று மண்டலத்தில் கரியீருயிரகை(Carbon dioxide) அடர்த்தி தொழிற்புரட்சியிலிருந்து தொடங்கி, உமிழ்வுகளின் பெருக்கத்தால் கிட்டத்தட்ட செங்குத்தாகவே உயர்ந்து வருகிறது. இது இப்போது பத்து நூறாயிரம் பங்கில் 419 பங்கு என்ற உயரத்தைத் தொட்டுள்ளது.
கரியீருயிரகை(Carbon dioxide) அடர்த்தியின் உயர்வு புவி மேற்பரப்பின் வெப்பநிலை உயர்வுக்குக் காரணமாகிறது. 1851க்கும் 2000த்துக்கும் இடைப்பட்ட நீண்ட காலத்தில் புவி மேற்பரப்பின் நிரலளவு (சராசரி) வெப்பநிலை பெரும்பாலும் சீராகவே இருந்து வந்தது. 1998 மட்டும் விதிவிலக்கான ஆண்டாக இருந்தது. 2000 தொடக்கம் புவிமேற்பரப்பின் வெப்பநிலையில் செங்குத்தான உயர்வு தொடங்கி விடுகிறது. அதன் பிறகுதான் புவி வரலாற்றிலேயே ஆகப் பெரும் வெப்ப ஆண்டுகள் வந்தன. அவற்றில் 19 அனல் தகிக்கும் ஆண்டுகள் இந்தக் காலத்துக்குரியவை. புவி மேற்பரப்பின் வெப்பத்தைக் கணக்கிட்டுப் பதிவு செய்யும் நடைமுறை 1880ஆம் ஆண்டு தொடங்கிற்று. இத்தனை நீண்ட காலத்தில் உச்சம் தொட்ட ஆண்டுகள் 2016, 2020.
வெப்பநிலை உயர்வால் அண்டாருட்டிகா பனித் திரள் உருகிக் கொண்டிருக்கிறது. இந்த நிகழ்வை அமெரிக்காவின் நாசா நிறுவனம் செயற்கைக் கோள் துணை கொண்டு துல்லியமாகக் கணக்கிட்டுள்ளது. அண்டாருட்டிகாவின் பனித்திரள் ஆண்டுக்கு 151 கோடிப்பதின்மக் கல்லெடை (billion metric ton) என்ற கணக்கில் மாறியுள்ளது.
வெப்பநிலை உயர்வால் பெருங்கடல்களும் சூடாகி வருகின்றன. பெருங்கடல் வெப்பநிலை 1955க்குப் பின் 337 மாச் செவ்வயிரை(zetta) திறனி(இயூல்/Joule) உயர்ந்துள்ளது.
பனித்தகடுகள் உருகியதால் பெருங்கடல்களில் நீர் இருப்பு உயர்ந்துள்ளது. புவியின் கடல் மட்டம் 1993 சனவரிக்குப் பின் 102.5 கீழயிரைப் பேரடி (Millimetre) உயர்ந்துள்ளது.
காலநிலை மாற்றம் கற்பிதமன்று என்பதையும், அஃது எவ்வளவு நெருக்கடியான கட்டத்தை அடைந்துள்ளது என்பதையும் இந்தத் தரவுகளிலிருந்து அறியலாம். துவாலுவுக்கு வந்துள்ள துயரத்திற்கு எப்படி ஒரு வகையில் உலகமே பொறுப்பேற்க வேண்டும் என்பதையும் உணரலாம்.
கடலில் மூழ்கிப் போகும் இடர்நிலை துவாலுவுக்கு மட்டுமன்று. பசிபிக்கு பெருங்கடல் தீவுகள் பலவும் முன்பின் அதே நிலையில்தான் உள்ளன. பசிபிக்கு பெருங்கடலுக்கும் ஏனைய பெருங்கடல்களுக்கும் இடையே யாரும் அணைகட்டி வைக்கவில்லை. எல்லாம் சேர்ந்து ஒரே பெருமாக்கடல்தான்! பசிபிக்கு துயரம் புவித் துயரமாக மாறக் காலம் பிடிக்காது. அடுத்தடுத்துப் பார்ப்போம்.
தரவு: தியாகுவின் தாழி மடல் 10
Leave a Reply