தோழர் தியாகு எழுதுகிறார் 90 : காந்தி(யார்?)
(தோழர் தியாகு எழுதுகிறார் 89 தொடர்ச்சி)
காந்தி(யார்?)
இனிய அன்பர்களே!
என் அக்காள் பெயர் காந்திமதி. மற்றபடி எல்லாக் குழந்தைகளுக்கும் மகாத்துமா குறித்து என்ன சொல்லப்படுமோ அதுதான் எனக்கும் சொல்லப்பட்டது. தனியாக காந்திபக்தி அல்லது காந்திப்பற்று என்று எதுவும் எனக்கு எப்போதும் இருந்ததாக நினைவில்லை. அப்பாவுக்கு நண்பர்களாக இருந்த சில பெருந்தனக்காரர்கள் அவர்களின் அலங்கம் போன்ற அரண்மனைகளில் (இது அம்மாவின் வருணனை) பெரிய காந்தி படங்களை மாட்டி வைத்திருந்ததும் கூட காந்தி தொடர்பான என்
அசிரத்தைக்குக் காரணமாக இருக்கலாம்.
நண்பர் அமீர்சானுடன் பழகி அவர் மதித்தவர்களில் காந்தியும் இருப்பதை அறிந்தேன். காரல் மார்க்குசையும் அவர்தான் எனக்கு அறிமுகம் செய்தார் (காட்டுக்கு ஒரு சிங்கம், உலகத்துக்கொரு காரல் மார்க்குசு). அப்போதே என்னை மார்க்குசு ஈர்த்த அளவுக்கு காந்தி ஈர்க்கவில்லை. சான் வழியாக நாத்திகத்தில் ஈடுபாடு வந்த பின் இறைப்பற்றுள்ள யாரையும் ஏற்க முடியாத மனநிலை. அப்படிக் கூடாது, காந்தியிடமும் நல்லவை உண்டு என்று சான் சொன்னதை நான் ஏற்கவில்லை. காந்தியிடம் அமீர்சானுக்குப் பிடித்தவை கதரும் தாய்மொழிக் கல்வியும். எனக்கும் இதில் மறுப்பில்லை. அப்பாவின் கடும் எதிர்ப்பை மீறிக் கதர் உடுத்தத் தொடங்கி விட்டேன். தாய்மொழிக் கல்வியில் காந்திக்கு இருந்த சொந்த உறுதிப்பாடு இன்றும் நான் எடுத்துக்காட்டுவதுதான்.
ஆனால் காந்தி ஆத்திகர், மதப்பற்றுள்ளவர், குமுகியத்தை(சோசலித்தை) ஒப்புக்கொள்ளாதவர், புரட்சிக்கு எதிரானவர் என்றெல்லாம் நான் அப்போது பழகிய பொதுவுடைமைத் தோழர்கள் சொல்லியிருந்தார்கள். ஆனால் காரல் மார்க்குசு இந்த வகைகளில் காந்திக்கு மாறானவர் மார்க்குசு மேல் பற்று வளர வளர, காந்தியைப் பிடிக்காமலே போயிற்று. பேராசிரியர் சேசாத்திரியோடு மார்க்சுக்காக நடந்த மோதல் குறித்து முன்பே எழுதியுள்ளேன்.
காங்கிரசில் இருந்த போதே மேடைகளில் மார்க்குசையும் இலெனினையும் உயர்த்தியும் காந்தியைக் குறைத்தும் பேசுவேன். சென்னையில் காங்கிரசு மாணவர்கள் (தஞ்சையார், வாழப்பாடியார் போன்றவர்கள்) (பசுபதி தனராசு இருந்தாரா நினைவில்லை) மார்க்குசு பிறந்த நாள் கொண்டாடினார்கள். — பெரியவர் (காமராசர்) அனுமதியோடுதான். செயகாந்தன் அந்நிகழ்வில் பேசினார். செய்தி தெரிந்ததும் குடந்தையில் அதே போல் ஏற்பாடு செய்தோம். மாவட்டத் தலைவர் திரு கருப்பையா மூப்பனாரைப் பார்த்துத் தகவல் சொன்னேன். “என்னது மார்க்குசு பிறந்தநாளா?” என்று கேட்டார். “காந்தி செயந்திதானே கொண்டாடிப் பழக்கம்?” சென்னையில் பெரியவர் அனுமதியோடு நடந்ததைச் சொன்னதும், “சரி, செய்யுங்கள், என்னை அழைக்காமலிருந்தால் சரி” என்றார். திருவரங்கம் குமுகிய(சோசலிச)ப் பயிற்சி முகாமில் ஒரு பட்டிமன்றத்தில் “காந்திதான் அகிம்சை வழியில் இந்தியாவுக்கு விடுதலை வாங்கித் தந்தார்” என்ற கருத்தை நான் மறுத்து வாதிட்ட போது பெரியவர் காமராசர் முன்னிலையிலேயே கடும் சர்ச்சை எழுந்து, கடைசியில் அவர் என்னை நியாயப்படுத்தி விட்டுப் போனார். இப்படி இன்னும் சில நிகழ்வுகளிலும் நடந்ததுண்டு.
பேராசிரியர் மருதமுத்து (அப்போது இராதகிருட்டிணன்) அவர்களின் தாக்கத்தால் நக்குசல் (மா-இலெ) இயக்கத்தைத் தேர்ந்தெடுத்த பின் காந்தியைப் பகைநிலையில் வைத்து வெறுக்கும் போக்கு வளர்ந்து இறுகியது. மூன்று வயதுக் குழந்தைக்குப் படங்கள் காட்டி மார்க்குசு தாத்தா, இலெனின் தாத்தா, மாவோ தாத்தா என்று சொல்லிக் கொடுத்து விட்டு காந்திப் பயல், நேருப் பயல், (போலீசுகாரப் பயல்) என்று சொல்லித் தரும் அளவுக்குச் சென்றோம்.
காந்தி ஏகாதிபத்தியத்தின் கைத்தடி என்ற புரிந்துணர்வுதான் இயக்கத்துக்கு அப்போது இருந்தது. நான் இயக்கப் பணியாற்றிய காலத்தில் வருக்கப் பகைவர்கள் அழித்தொழிப்புப் போல் காந்தி சிலை உடைப்பும் ஒரு வேலைத்திட்டமாக இருந்தது நள்ளிரவில் வெளியே போகும் போதெல்லாம் ஒரு சிறு கடப்பாரையை மறைத்து எடுத்துப் போய் காந்தி சிலையை உடைத்து விட்டு வந்து விடுவோம். காரைக்குடி கல்லூரி விடுதிக்கு அருகிலிருந்த ஒரு சிலையை உடைக்க சில மாணவர்களையும் அழைத்துப் போய், அதை முழுமையாகச் செய்ய முடியாமல் மூக்கை மட்டும் உடைத்து விட்டு வந்தோம்.
சிறைப்பட்ட பிறகு, தூக்குக் கொட்டடியில்தான் இரசினி பாமி தத்தின் ‘இன்றைய இந்தியா. (INDIA TODAY) தமிழில் படித்தேன். இந்திய விடுதலைப் போராட்டம் குறித்தும் இந்திய வரலாற்றில் காந்தியாரின் பங்கு குறித்தும் என் பார்வை மாறுவதற்கு இந்நூலே முதன்மைக் காரணம். இந்த நூலின் துணையோடுதான் ‘IS INDIA A SEMI-COLONY?’ என்ற தலைப்பில் ஆங்கிலத்தில் ஒரு கட்டுரை எழுதினேன். இந்திய விடுதலைப் போராட்ட வரலாறு குறித்து இன்னொரு கட்டுரையும் எழுதினேன். தலைப்பு நினைவில்லை. இரு கட்டுரைகளையும் தோழர் ஏ.சி.கே. படித்துச் சீர் செய்து கொடுத்தார். இந்தக் கட்டுரைகளின் அடிப்படையில்தான் சிறைக்குள் மா.இலெ(எம்-எல்) கட்சித் திட்டத்தை மறுத்து ஒரு கருத்துப் போராட்டதை நடத்தினேன். இது பற்றிப் பிறகு எப்போதாவது விரிவாகப் பேசுவேன். காந்தியார் பற்றிய பார்வையில் ஓர் அடிப்படையான மாற்றம் இப்படித்தான் வந்துற்றது என்பது மட்டும் இப்போது போதும். INDIA TODAY ஆங்கிலத்தில் படிக்க வேண்டும் என்ற ஆசையைத் தீர்த்து வைத்தவர் நண்பர் சந்துரு. கிருட்டிணையர், சின்னப்ப ரெட்டி தீர்ப்பு ஒன்றை நான் மொழிபெயர்த்துக் கொடுத்த போது “உங்களுக்கு எதாவது செய்ய வேண்டுமே?” என்றார். நான் INDIA TODAY கேட்டேன், வாங்கி வந்து கொடுத்தார்.
சிறையிலிருந்து விடுதலையாகி வந்த பின் நெல்சன் மண்டேலா குறித்தும் தென் ஆப்பிரிக்க விடுதலைப் போராட்டம் குறித்தும் எழுதுவதற்காக காந்தியாரின் SATYAGRAHA IN SOUTH AFRICA படித்தேன். காந்தியார் மீது மதிப்புயர இது முக்கியக் காரணமாயிற்று.
காந்தி சிலையை உடைக்கத் திரிந்த காலத்தையும் நேற்று கௌரி இலங்கேசு கொலையைக் கண்டித்து அதே காந்தி சிலைக்கு மாலை அணிவிக்கச் சென்றதையும் ஒப்புநோக்கினால் எவ்வளவு பெரிய தலைகீழ் மாற்றம்! காந்தி சிலை உடைப்பு என்பது காந்தியத்துக்கு எதிராகக் கருத்து தளத்தில் போராட முடியாத இயலாமையின் விளைவு என்ற முடிவுக்குத்தான் வரவேண்டியுள்ளது. அது கோழைத்தனம்.
இப்போதும் காந்தியம் என்னும் கலவைக் கருத்தியலை என்னால் ஏற்க முடியாது. மார்க்குசியத்தை நம்புகிற எவராலும் ஏற்க முடியாது. ஆனால் காந்தியாரின் வரலாற்றுப் பங்களிப்பு காந்தியத்தையும் கடந்து நிற்பது. காந்தியாரே காந்தியராக நடந்து கொள்ளாத தருணங்களுக்கு இப்படித்தான் விளக்கந்தர முடியும் எனத் தோன்றுகிறது. காந்தியை வெறுக்கலாம், அல்லது நேசிக்கலாம், அல்லது வெறுத்து நேசிக்கலாம், ஆனால் கண்டுகொள்ளாமல் கடக்க மட்டும் முடியாது. குறிப்பாக இப்போது…
(தொடரும்)
தோழர் தியாகு
தரவு : தாழி மடல் 58
Leave a Reply