(தோழர் தியாகு எழுதுகிறார் 92 :மறதிச் சேற்றில் புதைந்து போகாமல் – தொடர்ச்சி)

இறையூர் இழிவு

இனிய அன்பர்களே!

சிபி வினவுகிறார்: இறையூர் பட்டியலினத்தவர் பகுதியிலுள்ள தண்ணீர்த் தொட்டியில் மலம் கலந்த நிகழ்வினைக் குறித்துத் தங்களின் கருத்தென்ன தோழர்?

கண்டிக்கிறேன், வேதனைப்படுகிறேன், இந்த இழிசெயல் புரிந்த தமிழ்க் குமுகத்தில் நானும் இருப்பதற்காக வெட்கப்படுகிறேன். இதெல்லாம் சொல்லித்தான் தெரிய வேண்டுமென்பதில்லை. திண்ணியம் கொடுமை பற்றியும் அது தொடர்பான நீதிமன்றத் தீர்ப்பு பற்றியும் அந்த நேரத்தில் தமிழ்த் தேசம் திங்களேட்டில் நான் எழுதிய கட்டுரையை விரைவில் தாழியில் வெளியிடுகிறோம். நீங்களும் படிக்கலாம்.

சென்ற SANAVARI/சனவரி 7ஆம் நாள் செங்கிப்பட்டியில் நடைபெற்ற கொடுங்குழுவிய(பாசிச) எதிர்ப்பு மக்கள் முன்னணியின் பொதுக் குழு அமர்வில் இறையூர் வேங்கைவயல் ஊருக்கு நேரில் சென்றுவந்த தோழர்களிடமிருந்து செய்திகள் அறிந்தோம். வருகிற சனவரி 11ஆம் நாள் புதுக்கோட்டையில் பா.எ.ம.முன்னணி சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தத் தீர்மானித்தோம். அதற்கான ஆயத்தப் பணிகள் நடந்து வருகின்றன. ததேவிஇ சார்பில் அந்த ஆர்ப்பாட்டத்தில் தோழர் அருண். மாசிலாமணி தலைமையில் பங்கேற்போம். ஆர்ப்பாட்ட அறிக்கை வரட்டும், தாழியில் வெளியிடுகிறோம்.

சனவரி 7 மாலை செங்கிப்பட்டியில் நடைபெற்ற பாஎமமு கொள்கை அறிக்கை விளக்கக் கூட்டத்தில் இறையூர் இழிவு பற்றியும் பேசினேன். மீண்டும் நேற்று (சனவரி 8ஆம் நாள்) மாலை சென்னையில் நடந்த சிந்தனையாளன் பொங்கல் மலர் வெளியீட்டு நிகழ்ச்சியிலும் இறையூர் பற்றிப் பேசினேன். என் இந்த உரைகளின் சில முகன்மைக் கூறுகளை மட்டும் ஈண்டு பகிர்ந்து கொள்கிறேன்.

·           1927ஆம் ஆண்டு அண்ணல் அம்பேத்துகர் தலைமையில் மகத்து போராட்டம் நடைபெற்றது. தீண்டப்படாத மக்கள் சவுதார் குளத்தில் தண்ணீர் அள்ளிக் குடிப்பதற்கான சத்தியாகிரகப் போராட்டம் அது. அவர்கள் “நாங்களும் உரிமையுள்ள மனிதர்கள்” என்று அறிவித்து அந்தப் போராட்டத்தை நடத்தியவுடன் இந்து மதவெறிக் கூட்டம் அவர்களைத் தாக்கியதில் சிலர் காயமுற்றனர். தாழ்த்தப்பட்ட மக்களால் குளம் தீட்டுப்பட்டு விட்டதாகச் சொல்லி, பார்ப்பனர்கள் வேத மந்திரங்கள் முழங்கித் தீட்டுக் கழித்தார்கள். அது மட்டுமல்ல. 108 சட்டிகளில் பசுஞ்சாணம், பசுமூத்திரம், பால், நெய், தயிர் கலந்து ‘பஞ்சகவ்யம்’ செய்து குளத்திலே கொண்டுபோய்க் கொட்டினார்கள். இதை எதிர்த்து நடைபெற்ற மகத்து மாநாட்டில் பத்தாயிரம் மக்கள் திரண்டார்கள். மாநாட்டு மேடையிலேயே மனுசுமிருதி கொளுத்தப்பட்டது. கொளுத்தியவர்: பாபுசாகப் சக சுரபுத்தே என்ற முற்போக்குப் பார்ப்பனர்.

·        1927ஆம் ஆண்டு சவுதார் குளத்தில் மாட்டுச்சாணம் கலந்தார்கள். 95 ஆண்டு கழித்து 2022ஆம் ஆண்டு இறையூர் வேங்கைவயல் தண்ணீர்த் தொட்டியில் மனித மலம் கலந்துள்ளார்கள். இதுதான் இந்து இந்தியா கண்டுள்ள முன்னேற்றம். தமிழ்நாட்டு மண் வேறு விதமானது – இது ‘பெரியார் மண்’ — என்பது உண்மையானால் இறையூர் இழிவு நிகழ்ந்திருக்கக் கூடாது. அப்படியே நிகழ்ந்தாலும் குற்றவாளிகள் தனிமைப்படுத்தப்பட்டு கூண்டிலேற்றப்பட்டிருக்க வேண்டும். எந்த சாதிக்காரனும் அந்தக் குற்றவாளிகளுக்கு ஆதரவளித்திருக்கக் கூடாது. அரசு எந்திரம் சமூக நல்லிணக்கம் என்று சாக்கிட்டு முடங்கி நின்றிருக்கக் கூடாது.

·        1927ஆம் ஆண்டு சவுதார் குளத்தில் மாட்டுச் சாணமும் மாட்டு மூத்திரமும் கொட்டக் காரணமாய் இருந்தவர்கள் பார்ப்பனர்கள். 2022ஆம் ஆண்டு இறையூரில் பார்ப்பனர்கள் யாருமில்லை. குடிநீர்த் தொட்டியில் மலம் கொட்டியவர்கள் என்ற ஐயத்துக்கு ஆளாகியிருப்பவர்கள் மிகவும் பிற்படுத்தப்பட்ட ‘சாதி இந்துக்கள்’ அல்லது வெறும் சூத்திரர்கள். இந்தச் சூத்திரர்கள், பஞ்சமர்கள் அனைவருமே உழைக்கும் மக்கள். நெற்றி வியர்வை நிலத்தில் சிந்தப் பாடுபடும் மக்கள். இவர்கள் பகைகொண்டு மோதுவதில்தான் பார்ப்பனியத்தின் வெற்றி அடங்கியுள்ளது. இதுதான் இந்துத்துவ அரசியலுக்கு ஏற்ற மண். எனவேதான் பாசக உடனே களத்தில் குதிக்கிறது. பாசக சாதிச் சண்டை மூட்டிக் குளிர் காய முயல்கிறது.

·        இறையூர் நிகழ்வுகளில் மூன்று சிக்கல்கள் பின்னிக் கிடப்பதாகஸ் செய்தி: 1) நிலம் இல்லாமை; இது இரு தரப்ப்புக்கும் பொது. 2) கோயில் வழிபாட்டுரிமை ஒருசாராருக்கு மட்டும் மறுக்கப்பட்ட நிலை. 3)   குடிநீரில் இன ஒதுக்கல். இந்தச் சிக்கல்கள் குறித்து உள்ளூர்த் தோழர்களிடம் விரிவான அறிக்கை கேட்டுள்ளோம், வந்த பின் பேசுவோம். 

(தொடரும்)
தோழர் தியாகு
தரவு : தாழி மடல் 64