(தோழர் தியாகு எழுதுகிறார் 91: இழிதொழில்புனிதமா? தொடர்ச்சி)

தோழர் தியாகு எழுதுகிறார்

இனிய அன்பர்களே!

மறக்க முயன்றாலும் மறக்க முடியாத ஆண்டு 2009தமிழினத்தின் கூட்டு உளச்சான்றில் மாறா வடுவாய்ப் பதிந்து விட்ட முள்ளிவாய்க்கால் இனவழிப்புக்காக மட்டுமன்று, அப்படி ஒரு கொடுமை நடந்து விடாமல் தடுக்க தமிழீழத் தாயகமும் தமிழ்நாடும் புலம்பெயர் தமிழுலகும் உலகத் தமிழர்களும் நடத்திய உணர்வார்ந்த போராட்டங்களும் மறக்கவியலாதவை. மறக்கக் கூடாதவை. அந்த மறவா நிகழ்வுகளில் ஒன்று 2009 பிப்பிரவரி 19ஆம் நாள் சென்னை உயர்நீதிமன்ற வளாகத்தில் காவல் துறை நடத்திய கொடுந்தாக்குதல். அந்தத் தாக்குதலில் மண்டையுடைந்து குருதி சிந்தியவர்களில் ஒருவர் வழக்கறிஞர் முனைவர் சம்பத்துகுமார். 2009 மே 18, 19 இனவழிப்புக்கு ஈடுசெய் நீதி கோரி நிற்கிறோம். அதே போல் 2009 பிப்ரவரி 19க்கும் நீதி கேட்கிறோம். அங்கே உலகம் நீதி செய்யவில்லை. இங்கே இந்தியாவும் தமிழ்நாடும் நீதி செய்யவில்லை. எட்டாக்கனியாக விலகிப் போன அந்த நீதியைத்தேடி சம்பத்துகுமார் எழுதியிருக்கும் குறுநூல் – நீதியைத் தேடி! விரைவில் வெளிவரும் அந்நூலுக்காக நான் எழிதியுள்ள அணிந்துரை இதோ:   

மறதிச் சேற்றில் புதைந்து போகாமல்

கடந்த 2009ஆம் ஆண்டு பிறக்கும் போதே தமிழ்நாடு போரட்டக் களமாகிக் கிடந்தது. போரை நிறுத்து! என்ற முழக்கம் எல்லாப் பக்கமும் ஒலித்துக் கொண்டிருந்தது. தமிழீழத்தின் மீது சிங்களப் பேரினவாத அரசு தொடுத்திருந்த இனவழிப்புப் போருக்கு இந்திய அரசு எல்லா வகையிலும் ஆதரவாக இருந்தது. தமிழ்நாட்டில் அப்போது ஆளும் கட்சியாக இருந்த திராவிட முன்னேற்றக் கழகமும் போரை நிறுத்தும் கோரிக்கைக்கு ஆதரவாகப் பேசியது என்றாலும், தமிழக அரசின் காவல்துறை அந்தப் போராட்டத்தை அடக்கி ஒடுக்க முயன்றது. முதல்வர் கலைஞர் கருணாநிதி அனைத்துக் கட்சிக் கூட்டம் நடத்தி இனக் கொலைப் போரை நிறுத்தத் தவறினால் நாடாளுமன்ற உறுப்பினர்கள் பதவி விலகுவோம் என்ற முடிவை அறிவித்தார். இந்திய அரசு இலங்கை அரசுக்கு ஆய்தம் கொடுக்கக் கூடாது என்ற கோரிக்கையும் வலியுறுத்தப்பட்டது. இந்தக் கோரிக்கைகளுக்காக நாடு தழுவிய மனிதச் சங்கிலியும் அமைக்கப்பட்டது.

ஆனால் எதற்கும் இந்திய அரசு மசியவில்லை. இனக் கொலைப் போர் தொடர்ந்தது. தமிழின உயிர்ப்பலி கூடிக் கொண்டே இருந்தது. அனைத்துக் கட்சித் தீர்மானத்தை அனைத்துக் கட்சிகளும் குப்பையில் வீசி விட்டன. எந்த நாடளுமன்ற உறுப்பினரும் பதவி விலகவில்லை. தமிழ்த் தேசிய அமைப்புகளும் பதவி அரசியலுக்கு அப்பாற்பட்ட திராவிட இயக்க அமைப்புகளும் தங்களால் இயன்றவரை “போரை நிறுத்து!” என்று ஓங்கி முழங்கிப் போராடிக் கொண்டிருந்தோம்.

கட்சி அரசியலுக்கு அப்பால் மாணவர் இளைஞர் அமைப்புகள், தொழிலாளர் உழவர் அமைப்புகள், வணிகர் சங்கங்கள் போராடிக் கொண்டிருந்தன. இந்த வகையில் தமிழ்நாடெங்கும் வழக்கறிஞர் சங்கங்கள் பல்வேறு வடிவங்களில் முன்னெடுத்த போராட்டம் குறிப்பிடத்தக்கது.

தமிழ்நாடு தழுவிய வழக்கறிஞர் போராட்டத்தின் குவிமையமாகச் சென்னை உயர் நீதிமன்ற வழக்கறிஞர்களின் தொடர் போராட்டம் அமைந்தது. போராடும் வழக்கறிஞர்களுக்கு ஊக்கமளிக்கும் விதத்தில் ஈழ ஆதரவு இயக்கங்கள் அவர்களது போராட்டத்தில் இணைந்து நின்றன. இதை எழுதிக் கொண்டிருக்கும் நான் பல முறை உயர்நீதிமன்ற வளாகம் சென்று வழக்கறிஞர் போராட்டத்தை வாழ்த்திப் பேசியுள்ளேன்.

வழக்கறிஞர்கள் நீதிமன்றப் புறக்கணிப்புப் போராட்டத்துக்கு நடுவிலும் பொதுமக்களின் சட்ட உரிமைகளைப் பாதுகாக்க எடுத்துக் கொண்ட முயற்சி மதிக்கத்தக்கது. கட்சிக்காரர்களே நீதிபதிகளின் முன் நின்று தங்கள் வழக்கை எடுத்துரைக்க வழக்கறிஞர்கள் நீதிமன்ற வளாகத்திலேயே பயிற்சி கொடுக்கக் கண்டோம்.

ஈழத்திலிருந்து ஒவ்வொரு நாளும் வந்து கொண்டிருந்த போர்ச் செய்திகள் தமிழக மக்களை மேன்மேலும் கிளர்ந்தெழச் செய்தன. தமிழ்நாட்டில் ஈழ வெப்பம் ஏறிச் சென்று கொண்டிருந்ததன் அடையாளமாக முத்துக்குமார் தொடக்கம் வரிசையான தீக்குளிப்புகள் நிகழ்ந்தன. பெரிய அரசியல் கட்சிகளின் போர் எதிர்ப்புப் போராட்டங்கள் தாக்கமேதும் கொள்ளவில்லை. தலைவர்கள் மெய்யாகவே போரை நிறுத்தக் கோரித்தான் போராடுகின்றார்களா? அல்லது எல்லாமே நாடகம்தானா? என்ற ஐயம் அரசியல் விழிப்புற்றவர்களிடையே ஏற்பட்டது. இவ்வாறு விழிப்புற்றவர்களில் வழக்கறிஞர்களும் சட்ட மாணவர்களும் முன்னுக்கு நின்றார்கள். வழக்கறிஞர்களிடையே கட்சி அரசியல் இருக்கவே செய்தது என்றாலும், அவர்கள் தமிழினவழிப்புக்கு எதிரான போராட்டத்தில் ஒன்றுபட்டு நின்றார்கள்.

ஈழ மக்களுக்கு ஆதரவான தமிழ்நாட்டின் போராட்ட எழுச்சியும், குறிப்பாக வழக்கறிஞர்களின் கிளர்ச்சியும் தமிழீழ மக்களுக்கும் புலம்பெயர் தமிழ் மக்களுக்கும் தமிழ்நாட்டின் போராடும் ஆற்றல்களுக்கும் ஆறுதலும் ஊக்கமும் அளித்தன. இதே காரணத்தால் இந்திய ஆட்சியாளர்களுக்கு எரிச்சலூட்டின. தமிழக ஆட்சியாளர்களின் நிலையும் இதுவாகவே இருந்தது.

ஆளுங்கட்சியான திமுக பல குரல்களில் பேசிக் கொண்டிருந்தது. போரை நிறுத்து! என்ற முழக்கத்தில் தானும் இணைந்து நின்றது. அதேபோது போரை நடத்தும் சிங்கள அரசுக்கு இந்திய அரசுதான் பின்வலு என்று தெரிந்தும் “இந்திய அரசின் கொள்கையும் எங்கள் கொள்கையும் ஒன்றே” என்று அறியத் தந்தது. அனைத்திலும் மோசமாக, ஆட்சியதிகாரத்தைப் பயன்படுத்தி மக்கள் போராட்டங்களை அடக்கியொடுக்க முற்பட்டது. சட்டப்படியான குடியாட்சிய உரிமைகளைக்கூட நசுக்க முயன்றது.

இந்தப் பின்னணியில்தான் 2009இல் அந்த பிப்பிரவரி 19ஆம் நாள் கொடுமை நடந்தது. தலைநகரம் சென்னையிலேயே தமிழ்நாட்டின் தலைமை நீதிமன்ற வளாகத்திலேயே வழக்கறிஞர்களும் நீதிபதிகளும் கூடக் காவல் துறையின் மூர்க்கத் தாக்குதலுக்கு ஆளானார்கள். வளாகத்துக்குள் நின்ற ஊர்திகள் என்ன பாவம் செய்தனவோ அவையும் தடியடிக்கு உள்ளாயின. வளாகத்துக்கு வெளியிலும் கூட பெண்கள் உள்ளிட்ட வழக்கறிஞர்கள் துரத்தித் துரத்தித் தாக்கப்பட்டார்கள். 

அந்த நேரம் நீதிமன்றத்திலிருந்த “நீதியரசர்கள்” எனப்பட்டோரின் செங்கோல்கள் காவல்துறையினரின் கம்புகளின் முன்னே வளைந்து குனிந்தன. சட்டம் அலசும் நீதிமன்றக் கூடங்கள் அரசத் திட்டங்களுக்குச் சூதிடங்கள் ஆகிப் போயின.

தாக்குண்டது நீதி! தாக்குண்டது சட்டம்! தாக்குண்டது உரிமை! குடிமக்களைக் காக்க வேண்டிய இவையெல்லாம் தம்மைத்தாமே காத்துக் கொள்ள முடியாமல் வீழ்ந்து நொறுங்கின. நடந்த வன்முறைக்குப் பொறுப்புக் கூறல் இல்லை. நீதி இல்லை. இனியொரு முறை இப்படி நிகழாது என்ற உறுதிப்பாடும் இல்லை.

வினவல் ஆணையம் அமைக்கப்பட்டு அறிக்கையும் வந்தது. நீதிமன்ற வழக்குகள் நீண்டு சென்று காலக் கிணற்றில் வீசிய கற்களாகி விட்டன. தாக்குண்ட பலரும் நம்பிக்கை இழந்து சோர்ந்து விட்டனர். சிலர் தங்கள் அரசியல் மயக்கங்களுக்கு மாறான நிகழ்வுகளை நினைவு வைத்துக் கொள்வதே இல்லை.

ஆனால் இந்தத் தமிழ்நாட்டில் ஒருவர் 2009 பிப்பிரவரி 19ஆம் நாளை முழுமையாக ஆவணமாக்கியுள்ளார். அவரே வழக்கறிஞர். அந்த நாளில் தாக்கப்பட்டவர். அந்தத் தாக்குதலின் ஆறா வடுக்களை மனத்தில் சுமந்து நீதிக்கான சமரை அயராது தொடரும் முனைவர் அரங்க. சம்பத்குமார். அந்த நாள் நிகழ்வுகளையும், அவை ஏற்படுத்திய பல்திசை அதிர்வுகளையும், நீதியைத் தேடி எழுத்தில் செதுக்கியுள்ளார்

படியுங்கள், அறிவும் உணர்வும் கூராகட்டும். 2009 மே 18 முள்ளிவாய்க்காலுக்கு முன்னே 2009 பிப்பிரவரி 19 சென்னை உயர்நீதிமன்றம். மே 18க்கு நீதி கோரும் போராட்டம் போலவே பிப்ரவரி 19க்கு நீதி கோரும் போராட்டமும் நீண்டு செல்கிறது. ஆனால் இந்த நாட்களின் நினைவு மறதிச் சேற்றில் புதைந்து போக விடோம்! எவ்வளவு நீண்டு சென்றாலும் ஒருநாள் நீதிக்கனவு மெய்ப்படாமல் சாக விடோம்!

நீதியைத் தேடி தோழர் சம்பத்துகுமார் தொடுக்கும் எழுத்துக் கணை இலக்குத் தவறாது. ஏனென்றால் சட்டமும் நீதியும் உண்மைகளும் வரலாறும் அவருக்குத் துணை!

(தொடரும்)
தோழர் தியாகு
தரவு : தாழி மடல் 61