தோழர் தியாகு எழுதுகிறார் 95 : பதிவுகள் தளத்தில் செவ்வி 2
(தோழர் தியாகு எழுதுகிறார் 94: பதிவுகள் தளத்தில் செவ்வி .1- தொடர்ச்சி)
பதிவுகள் தளத்தில் தோழர் தியாகு செவ்வி 2
அப்படியான நிலை வரும் போது இந்தக் குறிப்பிட்ட வரையறைக்கு வெளியில் இருக்கிற அனைவருமே அன்னியர்களாகப் பாரக்கப்படுவார்கள். மற்றவர்கள் அல்லது அடையாளமற்றவர்கள் எனும் அளவிலேயே பார்க்கப்படுவார்கள். இவ்வாறான தருணங்களில் தனிநிலையை(‘எக்சுக்ளூசிவி’டியை)க் கோருவதால் மற்றவர்களையும் விளிம்புநிலையில் இருக்கிறவர்களையும் அழிக்கத் தேசியவாதிகள் நினைப்பார்கள். இன்றைய தேசியம் குறித்த உரையாடல்களில் இதை இனச்சுத்திகரிப்பு என்று குறிப்பிடுகிறார்கள். ஈழத்திலும் முசுலீம் மக்களின் பாலான விலக்கம் என்பது ஒரு சிக்கலான பிரச்சினையாகி வருகிறது. என்னுடைய அழுத்தம் இங்கு யாதெனில் தேசியக் கருத்தியல் உருவாக்கத்தில் இந்தத் தனிநிலையை (‘எக்சுக்ளுசிவி’டியை)க் கோரிக் கொள்வதுதான் மிகவும் எதிர்மறையான கூறாக இருக்கிறது. தேசிய சோசலிசத்தில் இனக் கொலை தொடர்பான என்ன ஆபத்து இருந்ததோ அந்த ஆபத்து விமர்சனமற்ற எல்லாத் தேசியங்களிலும் இருக்கிறது என்பதுதான் வரலாறாக இருக்கிறது.
மார்க்குசிய இயங்கியலை எழுதிய குணாவின் வல்லிய(பாசிச)த் தமிழ்த் தேசியம் தெலுங்கு பேசுகிற தணிந்த(தலித்து) மக்கள் உள்ளிட்டுத் தமிழகத்தில் நூற்றுக் கணக்கான ஆண்டுகளாக வாழ்ந்து வருகிற தெலுங்கு பேசுபவர்களை வெளியேற்ற வேண்டும் எனச் சொல்கிறது. இந்த வெளியேற்றம் என்பது அப்பட்டமான இனச்சுத்திகரிப்பு. தமிழ்த் தேசியத்தின் பெயரிலான இனக் கொலை நடவடிக்கைக்கான முசுதீபு. இதுதான் இனக் கொலையாகக் கொசொவாவில், பொசுனியாவில், (உ)ருவாண்டாவில் தேசியத்தின் பெயரில் நடந்தது. இது அப்பட்டமான வல்லியம்(பாசிசம்) என மார்க்குசியரான கோ.கேசவனும் தணிந்திய(தலித்திய)க் கோட்பாட்டாளரான அ.மார்க்குசும் குறிப்பிடுகிறார்கள் இவ்வாறான சூழ்நிலையில் இருந்துதான் நீங்கள் முன்வைக்கும் தமிழ்த் தேசம் பற்றிய எனது கேள்விகள் அமைகின்றன. இவ்வாறான வரலாற்று அனுபவத்திலிருந்து நீங்கள் சொல்கிற தமிழ்த் தேசத்தின் கருத்தியல் மற்றும் எதிர்காலம் எவ்வாறாக இருக்கப் போகிறது என்று கருதுகிறீர்கள்?
தியாகு:
உங்களுடைய உதாரணம் ஒரு குறிப்பிட்ட வரலாற்று இயக்கத்தின் உதாரணம். ஒரு குறிப்பிட்ட கட்டத்தில் ஒரு இயக்கம் எடுக்கக் கூடிய முடிவின் தன்மைகள் தொடர்பான உதாரணம். நாம் கொஞ்சம் எல்லாவற்றையும் மறந்து விட்டு ஒரு கருத்தியலாக தேசியம் என்ற பொதுக் கோட்பாட்டைப் பேசாது வரலாற்றுப் போக்கை பார்த்தோமானால் சமூக வளர்ச்சியினுடைய ஒரு குறிப்பிட்ட கட்டத்தில் தேசிய சமுதாயங்கள் உருவாவது என்பது – அந்த தேசிய சமுதாயங்களுக்குப் பொருத்தமான தேசிய அரசுகள் உருவாவது என்பது – ஒரு முற்போக்கான பங்கு வகிக்கிறது. இது இன்று நேற்றல்ல.
லெனின் தனது தேசிய இனச் சிக்கல் குறித்த ஆய்வுகளில் தேசிய இனச் சிக்கலை எப்படி அணுக வேண்டும் என்று சொல்லும் போதும் இதுதான் முதலில் செய்தது. முதலாளித்துவ வளர்ச்சியினுடைய எந்தக் கட்டத்தில் ஐரோப்பா எப்படி ஒரு பிற்போக்கு ஐரோப்பாவாக — முடிமன்னராட்சி, மதக் குருமார்களின் ஆதிக்கத்தில் இருந்த ஐரோப்பாவாக – அவ்வாறான அரசுகளாக இருந்த போது – தேசிய அரசுகளாக மொழிவழிப்பட்ட எல்லைக்குட்பட்ட அரசுகளாக இல்லாமல் எப்படிக் கலந்து கிடந்தன என்பதையும் பார்ப்பதோடு, சனநாயக வளர்ச்சிப் போக்கில் சமய மறுமலர்ச்சி, மதக் குருமார்களின் ஆதிக்கம் ஒழிக்கப்பட்ட நிலைமை, வாக்குரிமையின் விரிவாக்கம் இதனோடு இணைந்துதான் தேசிய அரசுகளின் உருவாக்கத்தை அவர் பார்க்கிறார். சமூகத்தில் ஏற்படுகிற சனநாயக வளர்ச்சிக்குப் பொருத்தமான ஓர் அரசு வடிவம்தான் தேசிய அரசு வடிவம்.
இதை ஏன் இலெனின் இப்படிப் பார்க்கிறார் என்கிற போது – தேசியம் என்பது ஒரு கருத்தியல், அஃது ஓர் உணர்வு, அஃது ஒரு மனநிலை எனப் புரிந்து கொள்ள முடியும். ஆனால் இந்தக் கருத்தியலுக்கும் உணர்வுக்கும் மனநிலைக்கும் ஒரு புறஞ்சார்ந்த அடிப்படை இருக்கிறது. புறஞ்சார்ந்த அடிப்படையில்லாத ஒரு கருத்தியலைத்தான் நாம் கற்பிதம் என்று கூறுகிறோம். மொழி என்பது கற்பிதமல்ல. ஒரு மொழி பேசுகிற மக்கள் ஒரு நிலப்பரப்பில் சேர்ந்து வாழ்வது கற்பிதமல்ல. இப்படி வாழ்கிற போது அவர்களுக்கிடையில் ஏற்படுகிற மனநிலை அவர்களுக்கென்று ஏற்படுகிற பண்பாடுகள் போன்றன ஒரு புறநிலை அடிப்படையிலிருந்து எழக் கூடிய அகநிலைக் கூறுகள். அதே போல ஒரு தேசியச் சந்தையினுடைய உருவாக்கம், சரக்கு உற்பத்தியினுடைய வளர்ச்சி இவையெதுவுமே கற்பிதமல்ல. அனைத்துமே புறநிலையானவை. வரலாற்று வழியில் இவை இணைந்துதான் ஒரு தேசம் உருவாகிறது. தேசம் என்கிற மக்கள் சமுதாயம் உருவாகிறது. தேசிய சமுதாயம் என்பது கற்பிதமல்ல என்கிற போது இந்தத் தேசியச் சமுதாயத்தின் வளர்ச்சிக்குரிய ஒரு கருத்தியலாக, அதை நிலைப்படுத்திக் கொள்கிற ஒரு கருத்தியலாக தேசியக் கருத்தியல் உருவாகிறது.
தேசியக் கருத்தியலில் இரண்டு போக்குகள் இருக்கின்றன. ஒன்று வெளியிலிருந்து வருகிற தடைக்கெதிராகத் தன்னை அது நிலைநாட்டிக் கொள்ள வேண்டியிருக்கிறது. தேசியச் சமுதாயம் ஒரு சமுதாயமாக ஒன்றுபட வேண்டும், தங்களை ஒருங்கிணைந்த முழுமையாக மாற்றிக் கொள்ள வேண்டும். ஒரு முழுமைப்பட்ட ஒருமையாக மாற்றிக் கொள்ள வெளியிலிருந்து வருகிற தடைகள் இருக்கிற மாதிரி உள்ளிருந்தும் வருகிற தடைகள் இருக்கின்றன. உள்ளிருந்து வரக் கூடிய தடைகள் என்பது ஒரு பிரபுத்துவ சமுதாயத்தில் அச்சமூக வளர்ச்சிக்கே தடையாக இருக்கிறது. அவர்கள் மொழி அடிப்படையில் இன அடிப்படையில் தங்களை அடையாளப்படுத்திக் கொள்வதற்கு முகவரி பெறுவதற்கே தடையாக இருக்கிறது. நம்முடைய சமுதாயத்தில் நாம் தெளிவாகப் பார்க்கலாம். ஒரு தேசிய இனம் என்று நம்மை அடையாளப்படுத்திக் கொள்வதற்கு இங்கு இரண்டு தடைகள் இருக்கின்றன. ஒன்று வெளியிலிருந்து வரக் கூடிய ஆதிக்க தேசியம். இரண்டாவதாக சமூகத்துக்குள்ளிருந்து வருகிற சாதியம். இந்த இரண்டு விதமான தடைகள் இருக்கின்றன. அப்போது தேசிய வளர்ச்சி என்பது இந்த இரண்டு தடைகளுக்கும் எதிரான வளர்ச்சிதான். இந்த இரண்டு தடைகளுக்கும் எதிரானது எனும் அளவில் அது வரலாற்று வளர்ச்சியில் ஒரு முற்போக்கான பாத்திரத்தை வகிக்கிறது. எந்த ஒரு கருத்தியலுமே வரலாற்று வழியில் அதனது பாத்திரம் முடிந்த பிறகு நிலைநிறுத்தப்படுகிற போது, அதனது தேவையைக் கடந்து அது வாழ்கிற போது அது பிற்போக்காக மாறிப் போகிறது அல்லது பிற்போக்குத்தனத்தின் கருவியாகக் கூட அது மாறிப் போகிறது. ஜெர்மன் தேசியம் என்பது பிரஷ்யன் முடிமன்னராட்சிக்கு எதிராக இருக்கிற வரைக்கும் ஜெர்மனி துண்டு துண்டாகப் பிளவுண்டு கிடப்பதை மாற்றி ஒன்றுபடுத்துவதற்கு உதவுவது எனும் வரைக்கும், போலந்து பிரான்ஸ் மற்ற தேசியஇனங்களின் மீது ஆதிக்கம் செலுத்தி அடிமைப்படுத்தும் கருவியாக இருந்த பிரஷ்ய முடிமன்னராட்சியை எதிர்த்து மற்ற தேசிய இனங்களின் விடுதலைக்கு உதவிய வரைக்கும் வரலாற்று வழியில் அது முற்போக்குப் பாத்திரம் வகிக்கிறது. லெனின் இது பற்றிக் குறிப்பிடுகிற போது 1789 பிரெஞ்சுப் புரட்சி தொடங்கி 1871 முடிய ஐரோப்பாவில் இந்த முற்போக்குப் பாத்திரம் இருக்கிறது எனத் தெளிவாகக் குறிப்பிடுகிறார். அவரைப் பொறுத்து ஐரோப்பாவைப் பொறுத்த அளவில் தேசிய இயக்கம் என்பது முடிந்து போய் விட்டது. சனநாயகப் புரட்சியின் ஒரு பகுதியாகத்தான் ஐரோப்பாவில் தேசிய அரசுகள் உருவாகின. அவ்வகையில் தேசியம் என்பது அங்கு முடிந்து போய் விட்டது. அதற்குப் பின்புதான் வல்லியம்(பாசிசம்) போன்றவை உருவாகின்றன. இந்தத் தேசியம் என்பது ஒடுக்கப்பட்ட இனத்தினது தேசியமாக இல்லாமல் ஓர் ஆதிக்கத் தேசியமாக இருக்கிறது. இது பழையதைப் பயன்படுத்திக் கொள்ளும், கற்பனையாக எதிரிகளைக் கூட உருவாக்கிக் கொள்ளும். நீங்கள் சொல்கிற தனித்துவம்( ‘எக்சுக்ளூசிவ்நெசு’ ) போன்ற தேசியத்தின் எதிர்மறைக் கூறுகள் அப்போது முன்னுக்கு வந்து விடுகின்றன. இவற்றை நாம் எதிர்க்கிறோம். முதல் செய்தி யாதெனில் ஐரோப்பாவில் தேசியம் என்பது ஒரு முற்போக்கான பாத்திரம் வகித்தது. அந்தக் கட்டத்திற்குப் போகாத நம்மைப் பொறுத்த வரைக்கும், ஆசிய ஆப்பிரிக்க நாடுகளைப் பொறுத்த வரைக்கும் – தமிழ்ச் சமுதாயத்தைப் பொறுத்த அளவில் ஒரு மாற்றம் வேண்டும்.
(தொடரும்)
தோழர் தியாகு
தரவு : தாழி மடல் 65
Leave a Reply