தோழர் தியாகு எழுதுகிறார் 103: ஆளுநர் இரவியா? மு.க. தாலினா?
(தோழர் தியாகு எழுதுகிறார் 102 : தமிழ்நாடா? தமிழகமா? தொடர்ச்சி)
ஆளுநர் இரவியா? மு.க. தாலினா?
இனிய அன்பர்களே!
ஆர்.என். இரவியா, மு.க. தாலினா என்ற கேள்வி எழுமானால் நாம் மு.க. தாலின் பக்கம்தான்! பா.ச.க.வா, தி.மு.க.வா என்ற கேள்வி எழுமானால் நாம் திமுக பக்கம்தான்! மு.க. தாலின் மீதும் தி.மு.க. மீதுமான நம் குற்றாய்வுகள் ஆர்.என். இரவியையோ பா.ச.க.வையோ ஞாயப்படுத்தும், அல்லது இரு தரப்புகளையும் நிகர்ப்படுத்தும் நிலைக்கு நம்மைத் தள்ளி விடலாகாது என்பதில் தெளிவாக இருக்கிறோம். அதே போது சிக்கல் முழுவதையும் ஆர்.என். இரவி – எதிர் – தாலின் என்பதாக மட்டும் சுருக்கிப் பார்ப்பதில் நமக்கு உடன்பாடில்லை.
இந்தச் சிக்கலில் மட்டுமன்று, ஆளுநராகப் பதவியேற்ற நாள் முதலே ஆர் என் ரவி சொன்னவையும் செய்தவையும் மட்டுமல்ல, செய்யத் தவறியவையும் கூட அவர் ஆர்.எசு.எசு. கையாள், இந்துத்துவ ஊதுகுழல் என்பதை ஐயந்திரிபறக் காட்டியுள்ளன. சிந்தனை, சொல், செயல் என்று எல்லா வகையிலும் அவர் பார்ப்பனிய-பாரதிய-பாசிச முகவர் என்பது மட்டுமல்ல, இந்திய அரசமைப்புச் சட்டத்தையும் குடியாட்சிய மரபுகளையும் துச்சமென மதிப்பவர் என்பதும் தெள்ளத் தெளிவாகத் தெரிந்து விட்டது.
சமயச் சார்பின்மை தேவையில்லை என்கிறார். ‘சனாதன’ மரபைப் போற்றுகிறார். சிறிராமனை நெஞ்சில் வைத்து வணங்குவதுதான் இந்திய மக்களின் அடையாளம் என்கிறார். வாயைத் திறந்தால் கெட்ட வார்த்தை என்று சிலரைப் பற்றிச் சொல்வதுண்டு. இரவி வாயைத் திறந்தால் நல்ல வார்த்தையே வராது என்றாகி விட்டது. இவரை எதிர்த்துப் பேசுகிறோம், முழக்கமிடுகிறோம், தீர்மானம் இயற்றுகிறோம், பிறகு? இரவியை வெளியேற்றத் தமிழ்நாடு அரசுக்கு, தமிழ்நாடு சட்டப் பேரவைக்கு இந்திய அரசமைப்புச் சட்டத்தில் ஏதாவது வழிவகையுண்டா?
ஆளுநர் பதவியே தேவையில்லை என்பதுதான் திமுகவின் கொள்கை. ஆட்டுக்குத் தாடியும் நாட்டுக்கு ஆளுநரும் தேவையில்லை. இந்தக் கொள்கையைச் செயலாக்க திமுக என்ன செய்யப் போகிறது? மற்றவர்கள் என்ன செய்யப் போகின்றார்கள்? நாம் என்ன செய்யப் போகின்றோம்? ஆளுநர் பதவியே கூடாது என்றால் இந்திய அரசமைப்புச் சட்டத்தைத் திருத்த வேண்டுமே, யார் திருத்துவது? எப்படித் திருத்துவது? தமிழ்நாடே ஒன்றுகூடினாலும் இதைச் செய்ய முடியுமா? நான் அடிக்கடி சொல்லி வருவது போல், இந்திய அரசமைப்பு ஒரு சிறைச்சாலை, அதிலும் கதவில்லாத சிறைச்சாலை! குறிப்பாக உள்ளிருந்து வெளியே போக வழி வைக்காமல் வெளியிலிருந்து உள்ளே வருவதற்கு மட்டும் வழிவிடும் அதரிக் கதவுடைய சிறைச்சாலை! அதரி என்றால் தெரியும்தானே? வால்வு (valve)! சட்டப்படி ஒரு சிறைச்சாலையைத் திறப்பதற்கு வழிவகை இல்லை என்றால் என்ன செய்யலாம்? எந்தத் திறப்புக்கும் (சாவிக்கும்) திறக்காத பூட்டை என்ன செய்வீர் அன்பரே?
1962 ஏப்பிரலில் அறிஞர் அண்ணா மாநிலங்களவையில் தன் கன்னிப் பேச்சில் சொன்னதை மீண்டும் கவனங்கொள்ளுங்கள்:
[“I claim Sir, to come from a country, a part in India now, but which I think is of a different stock, not necessarily antagonistic. I belong to the Dravidian stock. I am proud to call myself a Dravidian. That does not mean that I am against a Bengali or a Maharashtrian or a Gujarati. As Robert Burns has stated, ‘A man is a man for all that’. I say that I belong to the Dravidian stock and that is only because I consider that the Dravidians have got something concrete, something distinct, something different to offer to the nation at large. Therefore it is that we want self-determination.” (emphasis added.)]
[மொழிபெயர்ப்பில் ஆர்வமுள்ள அன்பர்கள் அண்ணாவின் இந்த உரையைத் தமிழாக்கம் செய்யலாமே?]
தமிழராகவோ, திராவிடராகவோ, திராவிடத் தமிழராகவோ எப்படி வேண்டுமானாலும் இருங்கள், இந்த நாட்டுக்கு (நம் தமிழ்நாட்டுக்கு) தன்-தீர்வு (சுய-நிர்ணயம்) கேட்பீர்களா? இப்போது இல்லையென்றால் எப்போது கேட்பீர்கள்? மாநிலங்களவையில் அண்ணா உரையாற்றிய போது அவரது தன்-தீர்வுக் கோரிக்கைக்குக் கடும் எதிர்ப்புத் தெரிவித்தவர் அடல்பிகாரி வாசுபாய்! அந்த வாசுபாயின் வழிவந்தவர்தான் இந்த இரவீந்திர நாராயண் இரவி (ஆர்.என். இரவி!) அவர் தமிழ்நாடு என்ற பெயரை எதிர்ப்பதற்கும் நீங்கள் தமிழ்நாடு வெல்க என முழங்குவதற்குமான நடுக்கோடு இந்தக் கோரிக்கைதான்! நீங்கள் எந்தப் பக்கம்?
தமிழக அரசு எழுதிக் கொடுத்த உரையை ஆளுநர் இரவி அப்படியே படிக்க மறுத்த செயல் தமிழ்நாட்டரசுக்கும் தமிழ்நாட்டுச் சட்டப் பேரவைக்கும் எதிரானது மட்டுமன்று, அது தமிழக மக்களுக்கும் எதிரானது, தமிழர் தேசத்தை அவமதிப்பது! இது குறித்து முதல்வரின் நிலைப்பாடும் சட்டப் பேரவையின் முடிவும் சரியானவை, ஞாயமானவை. இஃது ஒருபுறமிருக்க, அந்த உரையை அப்படியே ஆளுநர் படித்திருந்தால் எப்படி இருக்கும்? அது மாநில அரசின் கொள்கை அறிவிப்பாக அமைந்திருக்கும். அந்த உரை தமிழ்நாடு முகங்கொடுக்க வேண்டிய சிக்கல்களுக்குத் தரும் தீர்வுகள் என்ன?
(தொடரும்)
தோழர் தியாகு
தரவு : தாழி மடல் 68
Leave a Reply