(தோழர் தியாகு எழுதுகிறார்  106: ‘ஆளுநர் உரை’: ஓர் ஊடுநோக்கு (2)– தொடர்ச்சி)

தோழர் தியாகு எழுதுகிறார்  107: ‘ஆளுநர் உரை’: ஓர் ஊடுநோக்கு (3)

கண்டால் வரச் சொல்லுங்கள் – கல்விக் கொள்கையை!

இனிய அன்பர்களே!

‘ஆளுநர் உரை’ தொடர்பாக எழுந்த சிக்கல் ஆர்எசுஎசு ஆளுநர் ஆர்.என். இரவியின் அடாவடித்தனத்தால் மட்டுமல்ல, இந்திய வல்லரசியக் கொள்கைகளிலிருந்தும் விளைந்த ஒன்று என்பதுதான் நான் வலியுறுத்த முற்படும் செய்தி.

தமிழ்நாட்டரசு எழுதிக் கொடுத்ததை இரவி உள்ளவாறே படித்திருந்தால் அதிலிருந்து அரசின் கொள்கைகள் தெரிய வரும். ஆகவே ‘ஆளுநர் உரை’யைத் தமிழக அரசின் கொள்கை அறிவிப்பாகக் கொண்டு அதனை ஆய்வு செய்வதில் தவறில்லை எனக் கருதுகிறேன்.

பல்வேறு உயிர்நாடியான சிக்கல்களிலும் மாநில அரசின் இறைமையற்ற அவலநிலைதான் இந்த உரையின் சாறமாக வெளிப்படுகிறது.

மொழிச் சிக்கலை எடுத்துக்காட்டாகக் கொண்டால், ஆட்சிமொழி தொடர்பாக அரசமைப்பின் அறுதித் தடையை வென்று தமிழ் உள்ளிட்ட எல்லா மாநில மொழிகளையும் ஆட்சிமொழிகளாக்கும் இலக்கை அடைவதற்கு ஒரு சாலைவரை (roadmap)  தரப்படவில்லை. தமிழ்நாட்டில் கல்விமொழி என்ற தகுநிலையைத் தமிழ் இழந்து நிற்பதை அல்லது இழந்து கொண்டிருப்பதைப் பற்றிய கவலைக் குறிப்பு கூட இல்லை. பொதுத்தேர்வு(நீட்டு) விலக்கைப் பொறுத்த வரை மாநிலச் சட்டப் பேரவை இயற்றிய சட்ட முன்வடிவைச் சட்டமாக்க என்ன வழி? செய்வதறியாத் தவிப்புணர்வு புரிகிறது, ஆனால் அதுவே எப்படி வழியாகும்? தமிழ்நாட்டு மக்கள் என்ன செய்தால் பொதுத்தேர்வு(நீட்டு)இலிருந்து விலக்குப் பெற முடியும்? பொதுத்தேர்வு(நீட்டு) விலக்கு முயற்சியின் அடுத்தக் கட்டம் என்ன? அதில் அரசின் பங்கும் மக்களின் பங்கும் என்னென்ன?

இந்துத்துவ அரசினால் திணிக்கப்படும் தேசியக் கல்விக் கொள்கைக்கு எதிரான கொள்கை அறிவிப்பு ஏதும் ஆளுநர் உரையில் காணவில்லை. கல்வி தொடர்பான சமூகநீதிக் கொள்கை என்ன? காவிமயத்தையும் தனியார்மயத்தையும் இந்தியமயத்தையும் எதிர்த்து சமூகநீதிக் கல்விக் கொள்கையைச் செயலாக்க அரசு கூறும் வழி என்ன? கல்வித்துறையில் அரசு கொண்டுவரும் ‘நம்ம ஃச்கூல் பௌண்டேசன்’ போன்ற புதுமைத் திட்டங்களெல்லாம் பாசக அரசினது தேசியக்  கல்விக் கொள்கையின் கூறுகளே என்ற கல்வியாளர்களின் குற்றாய்வுக்குத் தமிழ்நாட்டரசின் விடை என்ன?

தமிழ்நாட்டுக்கென்று புதிய கல்விக் கொள்கை வகுக்கப் போவதாக 2020-21 இடைக்கால நிதிநிலை அறிக்கையின் போது அறிவித்ததாக ஒரு நினைவு வந்து வந்து போகிறது. எட்டு திங்கள் கழித்து அதற்கான ஒரு குழுவும் அமைக்கப்பட்டது. மாநில அரசின் புதிய கல்விக் கொள்கை எப்போது அறிவிக்கப்படும்? எப்போது செயலுக்கு வரும்? அதன் சாறம் என்னவாக இருக்கும்? இந்திய அரசின் தேசியக் கல்விக் கொள்கையிலிருந்து அது எவ்வகையில் மாறுபடும்? இந்த வினாக்களுக்குரிய விடைகள் ‘ஆளுநர் உரை’யில் குறிப்பால் கூட உணர்த்தப்படவில்லையே, ஏன்?

ஆளுநர் உரையில் பல கொள்கைகள் எடுத்துக்காட்டப்பட்டுள்ளன: தமிழ்நாடு உயர் அறிவியல் மேம்பாட்டுக் கொள்கை, தமிழ்நாடு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டுக் கொள்கை, தமிழ்நாடு காலணி, தோல்பொருட்கள் கொள்கை, தமிழ்நாடு விண்வெளி பாதுகாப்புத் தொழில் கொள்கை… இப்படிப் பல துறைசார் கொள்கைகள் 2022ஆம் ஆண்டில் அறிவிக்கப்பட்டிருப்பதாகச் சொல்லும் ‘ஆளுநர் உரை’ கல்வித்துறைசார் கொள்கை (கல்விக் கொள்கை) பற்றி மூச்சும் விடவில்லை.      

(தொடரும்)

(தொடரும்)
தோழர் தியாகு
தரவு : தாழி மடல் 74