(தோழர் தியாகு எழுதுகிறார்  105: ‘ஆளுநர் உரை’: ஓர் ஊடுநோக்கு (1)– தொடர்ச்சி)

‘ஆளுநர் உரை’: ஓர் ஊடுநோக்கு (2)

பொதுத்தேர்வு(நீட்டு ) விலக்கு: செய்வதறியாத் தவிப்பு

நலங்கிள்ளி எழுதுகிறார்

“தமிழை அழிக்கும் நடவடிக்கையால் திமுக அரசு தன்னைத்தான் நலிவுறுத்திக் கொள்கிறது, பாசிசத்தின் வேலையை எளிதாக்கிக் கொடுக்கிறது என்பதை திமுக நண்பர்கள் தமது   தலைமைக்கு  எடுத்துக்காட்ட வேண்டும்” என்று (தாழி மடல் 71இல்) நீங்கள் சொல்வது

எனக்கு உள்ளபடியே வேடிக்கையாக உள்ளது. தொலைக்காட்சி விவாதங்களில், சமூக வலைதளப் பதிவுகளில் திமுக உயர் மட்டத் தலைவர்களிடமிருந்து சாதாரணத் தொண்டர்கள் வரை ஆங்கிலத்துக்கு வரிந்து கட்டிக் கொண்டு நிற்கிறார்கள். இவர்கள் போய்த் தலைமைக்குத் தாய்மொழிக் கல்வியின் அருமை பெருமைகளை எடுத்துச் சொல்லி அவர்களை மாற்றப் போவதாக நீங்கள் எப்படி நம்புகிறீர்கள்? எனத் தெரியவில்லை. முழு திமுகவுக்கும் ஆங்கிலப் பித்து தலைக்கேறிப் போய்க் கிடக்கிறது.

“திமுகவின் பொதுத்தேர்வு(நீட்டு) எதிர்ப்பு நிலைப்பாடு சரியானது. பொதுத்தேர்வு(நீட்டு) ஒழிய வேண்டும் என்பதற்காக அது எடுத்துள்ள முயற்சிகள் வரவேற்கத்தக்கவை.”

இதுவும் எனக்கு வேடிக்கையாக உள்ளது. திமுக எங்கே பொதுத்தேர்வு(நீட்டு)ஐ எதிர்க்கிறது? எதிர்ப்பதாக ஊடங்களின் முன்னால் வேடம் போடுகிறது. ஆனால் அரசுப் பள்ளி மாணவர்களுக்கு பொதுத்தேர்வு(நீட்டு) பயிற்சி அளிக்கிறது. அதுவும் கட்டாயப் பொதுத்தேர்வு(நீட்டு)பயிற்சி. நன்றாகப் படிக்கும் மாணவர்களுக்குச் சிறப்பான பயிற்சி தருகிறேன் என்று ஓரிடத்தில் போய்பொதுத்தேர்வு(நீட்டு) சிறையில் அடைப்பது. அங்கு சென்று விட்டால் விடுதலை பெற வழியில்லை. ‘நீட் நீட் நீட்’டென்று காதில் ஓதிக் கொண்டே இருப்பார்கள். இந்தத் திமுக அரசுதான் நீட்டை ஒழிக்கப் போகிறதா? 

***

இன்றைய அரசியல் அணிவகுப்பில் திமுக பாசிச பாசகவுக்கு எதிர் அணியில் நிற்பதையும், அப்படியே தொடர்ந்து நிற்க வேண்டும் என்பதையும் அடிக்கோள்களாகக் கொண்டுதான் எந்தவொன்றிலும் திமுக பற்றிய நம் அணுகுமுறை அமைய வேண்டும் எனக் கருதுகிறேன். பெருங்கேடாகச் சூழ்ந்து நிற்கும் பார்ப்பன-பாசிச மோதி ஆட்சியை – தமிழ்நாட்டில் தமக்குள்ள தடைகளை எல்லா வழியிலும் வெல்லத் துடிக்கும் பாசிச ஆற்றலை — அலட்சியம் செய்வதாகவோ, சுற்றடியாக அதற்குத் துணை செய்வதாகவோ நம் அணுகுமுறை அமைந்து விடலாகாது.

“முழு திமுகவுக்கும் ஆங்கிலப் பித்து தலைக்கேறிப் போய்க் கிடக்கிறது” என்பது மிகைக் கூற்று. தொலைக்காட்சி உரையாடல்களுக்கும் சமூக ஊடகங்களுக்கும் அப்பாலும் ஒரு திமுக உள்ளது என்று நம்புகிறேன். அந்த திமுக நோக்கிப் பேச வேண்டிய தேவை உள்ளது.    

எத்தனைக் குறைகள் இருப்பினும் தி.மு.கழகம் பாசிச எதிர்ப்பு அணியில் இருக்கின்ற — தொடர்ந்து இருக்க வேண்டிய — ஆற்றல், மக்கள் கையில் ஒரு கேடயம் போன்றது. கேடயத்தைக் காத்துக் கொள்வதற்கு நாம் கையாளும் உத்திகளில் ஒன்று அதன் தவறான நிலைப்பாடுகளை முறையாகக் குற்றாய்வு செய்வது. இந்தக் குற்றாய்வு முயற்சியில் இயன்ற வரை திமுக அணிகளையும் இணைத்துக் கொள்ள வேண்டும். அதன் ஒரு பகுதிதான் “தலைமைக்குச் சொல்லுங்கள்” எனும் என் விண்ணப்பம். ஒரு மனமாற்றம் திமுக தலைமையிடம் ஏற்பட்டாலும் சரி, அணிகளிடம் ஏற்பட்டாலும் சரி, நம் போராட்டத்துக்கு நன்மை உண்டாகுமே தவிர தீமையேதும் விளையாது. புறநிலையில் நம் அணியில் நிற்கும் ஓராற்றலை, அகநிலையிலும் அவ்வாறே நிற்க வேண்டிய பேராற்றலைப் பகையணிக்குத் தள்ளி விடுவது திறமான உத்தி ஆகாது. திமுக ஆட்சியின் சில கொள்கைகள் பைசா எதிர்ப்பு அணிக்கு உவப்பானவையாக இல்லா விட்டாலும் அதன் பொருள் திமுகவும் பாசகவும் ஒன்று என்பதாக இருக்க முடியாது. நாம் பேசிக் கொண்டிருப்பது ஏதோ ஓர் அரசியல் கூட்டணி சேர்ப்பது பற்றியல்ல, பாசிச எதிர்ப்பு ஐக்கிய முன்னணி கட்டுவதைப்  பற்றியே — அதற்கான கருத்தியல் அடிப்படையை வகுப்பது பற்றியே — என்பதைக் கருத்தில் கொண்டால், நமக்கு பாசக தொடர்பான அணுகுமுறையும் திமுக தொடர்பான அணுகுமுறையும் ஒன்றாக இருக்க முடியாது என்பது விளங்கும்.

திமுக பொதுத்தேர்வு(நீட்டு)ஐ எதிர்க்கிறது, மொத்தத்தில் எதிர்க்கத்தான் வேண்டும் என்பதில் ஐயமென்ன? திமுக பொதுத்தேர்வு(நீட்டு)ஐ எதிர்க்கும் நிலைப்பாடு சரி என்பதை அறிந்தேற்றால்தான் எதிர்ப்புக்கான வழிமுறைகளைக் குற்றாய்வு செய்ய இயலும். ஆட்சிக்கு வந்தால் உடனே பொதுத்தேர்வு(நீட்டு)ஐ ஒழித்து விடுவோம் என்று தேர்தல் நேரத்தில் திமுக கொடுத்த உறுதிமொழியை நாம் நம்பவில்லை. மாநில ஆட்சி மற்றும் மாநிலச் சட்டமன்றத்தின் வரம்புகள் தெரிந்த யாரும் இதை நம்பியிருக்க மாட்டார்கள். ஆட்சிக்கு வந்த பின் பொதுத்தேர்வு(நீட்டு) ஒழிப்புக்குத் தேவையான சட்ட அடிப்படையை உருவாக்கவும் தரவுத் தளம் அமைக்கவும் ஏகே இராசன் குழு அமைத்தனர். குழு தந்த அறிக்கையின் அடிப்படையில்தான் பொதுத்தேர்வு(நீட்டு)இலிருந்து தமிழ்நாட்டுக்கு விலக்குப் பெறுவதற்குரிய சட்ட முன்வடிவு இயற்றப்பட்டது. இதுதான் சட்டப்படி முறையான வழி. இயல்பான சூழலில் இந்தச் சட்ட முன்வடிவு இந்நேரம் சட்டமாகியிருக்க வேண்டும். ஆளுநரின் இழுத்தடிப்பையும் முடக்கத்தையும் திமுக எதிர்க்கிறது. இந்த எதிர்ப்பின் வீச்சும் வேகமும் போத மாட்டா என்று கருத நமக்கு உரிமையுண்டு. ஆனால் இந்த எதிர்ப்பே பொய் என்று மறுதலிப்பது தன்னோக்குதானே தவிர புறம்சார் சிந்தனை ஆகாது.

பொதுத்தேர்வு(நீட்டு)இலிருந்து தமிழ்நாட்டுக்குச் சட்டப்படி விலக்கு பெறும் முயற்சியைத் தொடர்ந்து கொண்டே அரசுப் பள்ளி மாணவர்களுக்கு பொதுத்தேர்வு(நீட்டு) பயிற்சி அளிப்பது இந்தச் சிக்கலுக்கு உடனே தீர்வு காண முடியாது என்பதை அறிந்தேற்பதன் வெளிப்பாடுதான். இப்போதுள்ள அரசமைப்புத் திட்டத்தில் மாநில அரசுக்கு நாம் என்ன அறிவுரை சொல்ல முடியும்? அரசுப் பள்ளி மாணவர்களுக்கு பொதுத்தேர்வு(நீட்டு) பயிற்சி கொடுக்காதீர் என்றா? அரசுப் பள்ளி மாணவர்கள் பொதுத்தேர்வு(நீட்டு)ஐப் புறக்கணிப்பதும் கூட பொதுத்தேர்வு(நீட்டு) எதிர்ப்புப் போராட்டத்தின் ஒரு வழிமுறையாகப் பயன்படலாம்தான். ஆனால் அந்தப் புறக்கணிப்பு முயற்சி போதிய ஆதரவைப் பெறத் தவறினால் அதுவே பொதுத்தேர்வு(நீட்டு) விலக்கலுக்கான சட்டப் போராட்டத்தை நலிவுறச் செய்து விடாதா?         

சட்டப் போராட்டத்தின் முடிவு வரும் வரை இருக்கின்ற சட்ட திட்டங்களுக்கு உட்பட்டு நடக்கும் தேர்வுகளுக்குப் பயிற்சி கொடுப்பது தவிர அரசுக்கு வேறு வழி இல்லை என்றுதான் புரிந்து கொள்கிறேன்.

மாற்று வழிகளைக் கற்பனை செய்து பாருங்கள்: பொதுத்தேர்வு(நீட்டு) தேர்வுக்கு அரசுப் பள்ளி மாணவர்களை அனுப்பாமல் இருப்பது, அல்லது அனுப்பினாலும் பயிற்சி கொடுக்க மறுப்பது. இப்படிச் செய்வது சட்டப்படி செல்லுமா? செல்லும் என்றே வைத்துக் கொண்டாலும் என்ன விளைவுகளை ஏற்படுத்தும்? பொதுத்தேர்வு(நீட்டு) எதிர்ப்புப் போராட்டத்துக்கு அந்த விளைவுகள் உதவுமா? அல்லது மாநில ஆட்சியைத் தனிமைப்படுத்தி நலிவுறச் செய்யுமா? 

நாம் ‘ஆளுநர் உரை’ பற்றிய ஊடுநோக்குக்குத் திரும்பிச் செல்வோம். பொதுத்தேர்வு(நீட்டு) குறித்து இந்த உரையில் சொல்லப்படிருப்பதாவது:

“பொதுத்தேர்வு(நீட்டு) தேர்வு முறை வறிய ஊர்ப்புற மாணவர்களுக்கு மிகவும் பாதகமானது என்பதையும், மாநில அரசுகளின் உரிமைகளைப் பறிக்கக் கூடியது என்பதையும் கருத்தில் கொண்டு, இச்சிக்கல் குறித்து ஆய்வு செய்ய நீதியர் ஏ.கே. இராசன் தலைமையில் ஒரு குழு அமைக்கப்பட்டது.   அந்தக் குழு வழங்கிய பரிந்துரைகளின் அடிப்படையில் தமிழ்நாட்டில் மருத்துவ மாணவர்களுக்கு பொதுத்தேர்வு(நீட்டு)இலிருந்து விலக்களிப்பதற்கான வரைவுச் சட்டமுன்வடிவு சட்டப் பேரவையில் நிறைவேற்றப்பட்டு குடியரசுத் தலைவரின் ஒப்புதலுக்காக அனுப்பி வைக்கப்பட்டது. இந்தச் சட்ட முன்வடிவு தொடர்பாகக் கேட்கப்பட்ட விளக்கங்கள் யாவும் தரப்பட்டுள்ளன என்பதால் இந்த அரசு அதற்கு விரைவான ஒப்புதல் கேட்கிறது.”

[‘ஆளுநர் உரை’யின் ஆங்கில வடிவம்தான் எனக்குக் கிடைத்தது. இங்கு நான் தந்திருக்கும் தமிழாக்கம் எனது. இது அதிகாரமுறையில் அரசு வெளியிட்டதன்று. அதிகார முறைத் தமிழாக்கம் கிடைத்தால் உதவியாக இருக்கும்.]

ஆக இதுதான் நிலவரம்: சட்ட முன்வடிவு குடியரசுத் தலைவரின் ஒப்புதலுக்காகக் காத்துள்ளது, கேட்ட விளக்கமெல்லாம் தந்து விட்டோம். விரைவில் ஒப்புதல் தரக் கோருகிறோம். அவ்வளவுதான்.

ஆளுநர் காலங்கடத்தி வருவதைச் சொல்லிக் கண்டனம் தெரிவித்திருக்கலாம். இந்தக் கண்டனத்தையும் அவர் வாயாலேயே சொல்ல வைத்திருக்கலாம். ஆனால் கண்டனத்தோடு பொதுத்தேர்வு(நீட்டு)இன் கதை முடியாது. சட்டப்படி மாற்றுவழி என்ன? ஆளுநர் மீது அல்லது குடியரசுத் தலைவர் மீது வழக்குத் தொடரலாம் என்ற எண்ணம் உண்டா? அது பற்றி சட்ட வல்லுநர்களின் கருத்தறியப்பட்டதா? மாநில அரசு பொதுத்தேர்வு(நீட்டு) விலக்கிற்காக எடுக்கும் எல்லா முயற்சிகளுக்கும் தமிழ்நாட்டு மக்களின் ஆதரவு உண்டு. ஆனால் எதுவுமே செய்யாமல் விரைவான ஒப்புதலுக்காகக் காத்திருக்கிறோம் என்று சொல்லிக் கைகட்டியிருந்தால் மக்கள் ஐயுறுவார்களா? இல்லையா? உண்மையிலேயே நீங்கள் பொதுத்தேர்வு(நீட்டு)ஐ எதிர்க்கின்றீர்களா? என்று கேட்க மாட்டார்களா?

இப்படிச் சொல்லியே இந்த ஐந்தாண்டுப் பதவிக் காலமும்  கழிந்து விடும் என்றால் அது திமுகவிற்குப் பெருந்தோல்வியாக அமையும். 2024 பொதுத் தேர்தலிலேயே இது திமுகவுக்கு எதிராகப் பெரும் பரப்புரையாக அமையும். இதைப் புரட்டிப் போட்டு பாசகதான் குற்றவாளி என்பதை மக்களுக்கு உணர்த்த என்ன செய்வதாகத் திட்டம்?பொதுத்தேர்வு(நீட்டு) சிக்கலை மட்டுமல்ல, மாநில அரசின் சட்ட முன்வடிவுகளைக் காலவரம்பின்றிக்  கிடப்பில் போடும் ஆளுநர் நடவடிக்கையை (அவருக்குப் பின்னாலிருக்கும் மோதி அரசின் சூழ்ச்சியை) முன்னிறுத்திக் கடுமையான முடிவுகளை திமுக எடுக்குமா? நான் எதையும் குறிப்பிட்டுச் சொல்லவில்லை. என்ன செய்யலாம் என்பதை அன்பர்களே சொல்லுங்கள்.  

இந்த இடத்தில் ஒன்றை மட்டும் சொல்வேன்: ‘ஆளுநர் உரை’யில் பொதுத்தேர்வு(நீட்டு) தொடர்பாக வெளியிடப்பட்டிருப்பதுதான் மாநில அரசின் கொள்கை அறிவிப்பு என்றால், அது செய்வதறியாத் தவிப்பைத்தான் காட்டுகிறது.

‘ஆளுநர் உரை’யின் மற்ற சில முகன்மைக் கூறுகளை நாளை ஊடுநோக்குவோம்.

(தொடரும்)
தோழர் தியாகு
தரவு : தாழி மடல் 72